ஒரு மாலை நேர நெரிசலில்/ஜெ.பாஸ்கரன்

மாலை 6.38.

அவசரமாகக் காரை ஓட்டிக்கொண்டிருந்தேன். எண்பத்தைந்து வயதுக் கிழவர் பாத்ரூமில் மயங்கி விழுந்துவிட்டார். பார்க்க வேண்டும்; மெடிகல் எமர்ஜென்ஸி. விழுந்தவருக்கு சென்னை நகர மாலை நேர போக்குவரத்து நெரிசல் குறித்த கவலை ஒன்றும் கிடையாது, விழுந்துவிட்டார். மிகவும் வேண்டப்பட்டவர், தவிர்க்க முடியாது! இதோ போக்குவரத்து நெரிசலில் நான்…

இரண்டு கார்கள் செல்லும் அளவுக்கு அகலமாக இருக்கும் சாலை; திடீரென்று ஆக்கிரமிப்புக் கடைகளால், ஒன்றரை கார் மட்டும் செல்லக்கூடிய குறுகலான தெருவாக மாறி, வாகன நெரிசலை அதிகப்படுத்திக் கொண்டிருந்தது! இடது பக்கம் மின்னலென முந்தும் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள்… கட்சிக் கொடியுடன் வலதுபுறம் மிக அருகில் டயனோசர் போல மூக்கை நீட்டி முந்தத் துடிக்கும் பெரிய இனோவாக்கள்! சாலையின் நடுவில், மீடியன் என்ற பெயரில் பெரிய மதில்சுவர்; இவற்றால் நன்மைகளுடன், உபத்திரவங்களே அதிகம். இதில் பதற்றமின்றி காரைச் செலுத்த, தேர்ந்த சர்கஸ் சாகஸக்காரனாக இருக்க வேண்டும். நான் சாகசங்கள் தெரியாத மருத்துவன்!

கைக் கடிகாரத்தைப் பார்த்தேன் 6.47. கிழவருக்கு என்ன ஆயிற்றோ?

ஒரு மாதிரி சிறிது அகலமான சாலை. சரக்கு ஒன்றுமில்லாத டெம்போ ஒன்று, என் முன்னால் நிதானமாகச் சென்றுகொண்டிருந்தது; சரக்கு டெலிவரி செய்துவிட்ட ஆசுவாசம் அதன் வேகத்தில் தெரிந்தது. சிறிது சாலையின் இடது பக்கமாகச் சென்றால், அவசரமாகச் செல்லும் வாகனங்கள் வலதுபுறம் முந்திச் செல்லலாம்.

ஹார்ன் அடித்தேன். அதே வேகத்தில் மெதுவாகச் சென்றுகொண்டிருந்தது டெம்போ. அதற்கு முன்னால் ஒரு முப்பதடிக்கு ஒரு வாகனமும் இல்லை.

மீண்டும் ஹார்ன் அடித்தேன், கொஞ்சம் தொடர்ச்சியாக. டெம்போ, அடத்துடன், இன்னும் வேகம் குறைந்தாற்போல் ஊர்ந்தது. சிலருக்கு பின்னால் வரும் வண்டிகள் ஹார்ன் அடித்தால் பிடிப்பதில்லை!

என அவசரத்திற்கு, முந்திச்செல்லலாம் என்று டெம்போவின் வலது புறம் முந்த முயற்சித்தேன். டெம்போவும் வலது புறம் வந்தது. எதிர்த் திசையில் வரும் வண்டிகளால் அதற்கு மேல் வலதுபுறம் செல்ல முடியாது. டெம்போ டிரைவர் கையை வெளியே நீட்டி, ஒரு மாதிரி ஆட்டினார். ‘முடிந்தால் போ’, ‘மவனே, இன்னா அவசரம், பொறுமையா வா’ என்கிறாரா தெரியவில்லை!

சிறிது வண்டியின் வேகம் குறைத்து, டெம்போவை இடது புறம் முந்த முயற்சிக்க, டெம்போவும் இடது பக்கம் வந்து என் வழி மறைத்தது… வேண்டுமென்றே செய்யப்படும் நடுத் தெரு அயோக்கியத்தனம் என்று தோன்றியது. மீண்டும் மீண்டும் நான் வலது, இடது என முந்த முயற்சிக்க, டெம்போ எனக்கு வழிவிடாமல், என் முன் சாமியாடியபடி சென்றுகொண்டிருந்தது! இதற்குள் சாலையின் மீடியன் வேறு வந்துவிட, பின்னாலேயே ஊர்வலமாகச் செல்லவேண்டியிருந்தது.

செல்லில் கிழவர் வீட்டு எண் ஒளிர்ந்த வண்ணம் இருந்தது; கிழவர் என்ன நிலையில் இருக்கிறாரோ?

இப்படி வழி மறைப்பதில் என்ன ஒரு அற்ப சந்தோஷம் இருக்க முடியும்? பின்னால் ஹார்ன் அடித்தால் அவசரம் என்று கூடத் தெரியாதா? இந்தத் திமிருக்கெல்லாம் எங்கயாவது நல்லா மாட்டுவான்… மனது கொந்தளித்தது.

ஒரு திருப்பம் தாண்டி சப்வே வந்தது. வலது புறம் முந்துவதுபோல் வந்து, ‘டக்’ கென்று இடதுபுறம் காரைத் திருப்பி, விரைவாக டெம்போவை முந்தினேன்.

வாயில் பீடியுடன், அருகில் நண்பனுடன் சிரித்தவாறு ஒரு வெற்றிப் பார்வை பார்த்தவனைப் பற்றி எனக்கு அக்கரை இல்லை; நேரமும் இல்லை. கிழவர் என்ன ஆனாரோ?

கொஞ்ச தூரம் சென்று, ரியர் மிர்ரரில் பார்த்தேன். டெம்போ என்னை மறிக்க வலது புறம் திரும்பியபோது, அதை முந்த வந்த ஆட்டொவில் உரசி, இரண்டும் நடு ரோட்டில் நின்றுகொண்டிருந்தன! தகராறு, வாக்குவாதம், மத்தியஸ்தம்..கூட்டம்!

2 Comments on “ஒரு மாலை நேர நெரிசலில்/ஜெ.பாஸ்கரன்”

Comments are closed.