
(20.05.2025 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்வில் வாசித்த கவிதைகள்)
காலையில் விழித்ததும்
காண்பதெல்லாம்
ஓயாமல் சத்தமிடும் மின்விசிறி
ஒட்டடைப் படிந்து
எங்களைச் சுற்றி
வளர்ந்து இருக்கும் அறை
எங்கள் அசைவுகளைப் பிரதிபலிக்கும்
இரும்புக் கட்டில்
ஓரத்தில் சாய்ந்து நிற்கும் விளக்குமார்
பாழடைந்துபோன புத்தகங்கள்
என்றோ நடந்த திருமணத்திற்கு
அச்சடித்துத் தந்த வாழ்த்துப் பத்திரம்
சாத்த முடியாத சன்னல் சட்டம்
பக்கத்து வீட்டுக் கறுப்பு நாய்
மொட்டையாய் நிற்கும் மரம்
துருப்பிடித்த டிவி ஆன்டனா
கறுப்பு நிற மதில்சுவர்
வாசலில் சாணம் தெளித்து
கோலம் போடும் பெண்கள்
அரைத் தூக்கத்தில்
பால் வாங்கிக்கொண்டு வரும்
எதிர்வீட்டு நபரின் தாய்
கம்பளிப் பூச்சிகள்
கொசுக்கள்
குஞ்சுகளுடன் கோழிகள்
சேவல்கள்
சாக்கடைகள்
புழுதி நிறைந்த தெரு
பெயர் தெரியாத
பழக்கமில்லா நபர்களின் முகங்கள்
தூரத்தில் முனகலுடன் ஓடுகின்ற பேருந்துகள்
இத்தனையும் ஒரே சமயத்தில்
பார்க்கவில்லை
உனக்குப் பார்க்க
கற்றுக்கொடுக்க ஆரம்பித்த நாளிலிருந்து.
(அர்ச்னாவிற்கு) 1990
