S. அர்ஜுனன் / சந்தேகக் கோடு

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 38

இறுக்கமான பணி முடித்துத் தளர்வாக மாலையில் வீடு திரும்பிய அருணா, வீட்டின் அழைப்பு மணியை அழுத்த..
“அம்..மா..” மகிழ்ச்சியாகக் கூவிக் கொண்டே அவளை கட்டிக் கொண்டான் மகன் ஆரவ்.
தன் மனதை ஒரே நிமிடத்தில் சந்தோஷ மனநிலைக்கு மாற்றியவள்..
“ஆரவ்.. நீ ஸ்கூல் விட்டு வரும்போது வேலைக்கார ஆன்ட்டி இருந்தாங்களா..? ஈவ்னிங் ஸ்நாக்ஸ் சாப்பிட்டியா..?” என்றாள்.
“ஓ.. ம்மா.. டன்..”
“சரி.. அம்மா ரெடியாகிட்டு வரேன்.. அதுக்கப்புறம் ஹோம் வர்க் பார்க்கலாம்..” என்று சொல்லி அவன் தலையைச் செல்லமாகக் கோதிவிட்டு படுக்கையறை நோக்கி நடந்தாள்.
பத்தாம் வகுப்பு படிக்கும் ஆரவ் அவளது ஒரே குழந்தை. அருணா அவனுக்கு ஒரே பெற்றோர். ஆமாம், அருணாவின் கணவன் அசோக் உயிரோடு இல்லை.


குளித்து இரவு உடைக்கு மாறிய அருணா..
“ஆரவ்.. இங்கே வா.. இன்னைக்கு ஸ்கூல்ல இன்ட்ரெஸ்டிங்கா என்ன நடந்தது?..” என்றாள்.
“அம்மா.. இன்னைக்கு சயின்ஸ் கிளாஸ்ல ஜெனடிக்ஸ்.. அதான்மா.. மரபியல்.. பத்தி சொல்லிக் கொடுத்தாங்க…”
“ஓ.. அப்படின்னா..?”
ஒன்றும் தெரியாதவள்போல கேட்டாள்.
“ம்ம்.. ஒரு குழந்தை எப்படி அப்பா, அம்மா ஜீன்ஸ்ல இருந்து உருவாகுதுனு சொன்னாங்க..” என்று அவன் சொன்னதும்..
‘பரவாயில்லையே.. இப்போது உள்ள பசங்களுக்கு ஸ்கூல்ல இதைப் பாடமா வைச்சு சொல்லிக் கொடுக்கிறாங்களே.. இதைக் கேட்க அசோக் மட்டும் உயிரோடு இருந்தால்?..’ என்று அவள் மனம் அசைபோட்டுக் கொண்டிருந்தது.
அம்மா ஏதோ சிந்தனையில் மூழ்கி விட்டாள் என்று புரிந்துகொண்ட ஆரவ், அவளைத் தொந்தரவு செய்யாமல், தனது பாடங்களை எடுத்துப் படிக்க ஆரம்பித்தான்.


அருணா – அசோக் திருமணம் பெற்றோர் பார்த்து நிச்சயித்ததுதான் என்றாலும், திருமணத்திற்கு முன்பே இருவரும் பேசிப் பழகி இருந்ததால், அவர்களது முதலிரவு வேளையில் தங்களது எதிர்காலத் திட்டம், குழந்தை வளர்ப்பு பற்றியெல்லாம் சகஜமாகப் பேச முடிந்தது.
“அசோக்.. நமக்கு ஒரேயொரு குழந்தை பிறந்தாலும், அதை நாம திட்டமிட்டு பெத்து, அருமையா வளர்க்கணும்..” என்றாள் அருணா.
“வளர்க்கிறதை வேணும்னா பிளான் பண்ணலாம்.. பெத்துக்கிறது கடவுள் கையில் தானே இருக்கு?..” இது அசோக்.
“இல்ல.. நான் என்ன சொல்ல வந்தேன்னா.. முதல்ல ரெண்டு, மூணு வருஷம் கேப் விட்டுட்டு, நல்லா என்ஜாய் செய்துகொண்டு, அப்புறமா குழந்தை பெத்துக்கலாம்..”
“அப்படினா முத ரெண்டு வருஷத்துக்குப் புருஷன், பெண்டாட்டியா பழகாம ஃப்ரெண்ட்ஸா இருக்கலாம்னு சொல்றியா அருணா..?”
உடனே அவன் மண்டையில் குட்டியவள்..
“அதுக்குன்னு ஸேஃப் டேஸ் இருக்கு.. அப்போ நோ ரெஸிட்ரிக்ஷன்..” என்றாள்.
“ஹே.. இதெல்லாமா தெரிஞ்சு வச்சிருக்க..?” என்றான் ஆச்சரியமாக.
“ஆமாம் அசோக்.. அதுக்கு காரணம் இருக்கு.. எனக்கு சின்னப் பிள்ளையா இருந்ததிலிருந்தே சினிமால வர்ற மாதிரி கணவனோடு ஜாலியா வெளிநாடு சுத்திப் பாக்கணும்னு ஆசை..”
“அதக்கு இப்பவே லோன் ஏதாவது போட்டுட்டு போய்ட்டு வரலாமே..? குழந்தைப் பிறப்பை ஏன் தள்ளிப் போடணும்..?”
“முதல்ல.. லோன் போட்டு கடனாளியா இருக்கிறது எனக்கு பிடிக்கல.. ரெண்டாவது.. நாம ரெண்டு பேரு மட்டும் ஒரு ரெண்டு வருஷமாவது இந்த லைஃபை என்ஜாய் பண்ணுவோமே..? உங்களுக்கு இதில சம்மதம் இல்லையா அசோக்..?”
“ஓகே.. உன்னுடைய கோரிக்கை ஏற்கப்பட்டது.. சரி.. இன்னைக்கு ஸேஃப் டேவா.. இல்லையா..?” என்றான் கண்களில் காதலுடன்.
“வா.. என் செல்லப் பிசாசே..” என்று அவனை வாரி அணைத்துக் கொண்டாள் அருணா.
அப்புறமென்ன.. அவர்கள் திட்டமிட்டபடி இரண்டு ஆண்டுகள் வாழ்வைக் கொண்டாடித் தீர்த்து, ‘இனி தடையின்றி குழந்தை பெற்று கொள்ளலாமென’ நினைத்தபோது இறைவன் கணக்கு வேறுவிதமாக இருந்தது.
அலுவலகம் சென்று திரும்பி வரும்வழியில் அசோக் ஒரு மிகப்பெரிய விபத்தைச் சந்தித்தான். அதில் அவனுக்கு ஏற்பட்ட காயம் உயிர்போகும் அபாய நிலைக்கும் அவனைக் கொண்டுசென்றது.

************

அம்மாவை தொந்தரவு செய்யாமல், தனது பாடங்களை படித்து முடித்த ஆரவ், அவளருகில் சென்று பார்த்தபோது அவள் கண்களில் இன்னும் கண்ணீர் நிற்கக் கண்டான்.

“அம்மா..” மெதுவாக தட்டி அழைத்தான்.

தனது நினைவுகளில் இருந்து மீண்ட அருணா, வேகமாக தன் கண்ணீரைத் துடைத்தபடியே.. 


“ஸாரிடா.. உங்க அப்பா நினைவில என்னை மறந்துட்டேன்..” என்றாள்.
“ஓகேம்மா.. நீங்க இன்னைக்கு வீட்டுக்கு வரும்போது நான் உங்க கிட்ட ஒரு சந்தேகம் கேட்கணும்னு நினைத்தேன்..”
“கேளுடா..”
“இன்னைக்கு வேண்டாம்..மா.. உங்க மூடை இதற்கு மேல ஸ்பாயில் பண்ண விரும்பல..”
“பெரிய மண்டை மனுஷன் மாதிரி பேசாதாடா.. என்ன சந்தேகம்?.. சந்தேகக் கோடு.. அது சந்தோஷக் கேடுனு சொல்லு‌‌வாங்க.. அது நம்ம மனசையும் உடம்பையும் அரிச்சிக்கிட்டே இருக்கும்…”
“அது.. வந்து..மா.. நான் உங்க வயித்துல இருந்து தானே.. பிறந்தேன்?..”
“இது என்ன புது சந்தேகம்..? நீ என் பிள்ளை தான்.. நான்தான் உன்னை பத்து மாசம் சுமந்து பெத்தேன்..”
“இல்லம்மா.. பெட் ரூம்ல இருக்கிற அப்பா ஃபோட்டோல அவங்க இறந்த தேதி.. 2004 நவம்பர் 10னு இருக்கு.. ஆனா என்னோட பிறந்த தேதி.. 2006 டிசம்பர் 15.. அம்மா வயித்துல ஒரு குழந்தை பத்து மாசம்தான் இருக்கும்னா இது எப்படி சாத்தியம்..? அப்போ அது என்னோடா அப்பா இல்லையா..?”
என்ற அவனது கேள்வி அருணாவை நிலைகுலையச் செய்தது.
கேள்வியின் வீரியம் புரியாமல் குழந்தை ஆரவ் எளிதாக அந்த கேள்வியைக் கேட்டுவிட்டாலும் அருணாவின் மனசை ரொம்பவே புண்படுத்தியது.
இதெல்லாம் எதிர்பார்த்துத்தான் கருவில் ஆரவ் உருவானதும் அசோக்குடன் அவள் வாழ்ந்த கோயம்புத்தூரை விட்டு, சென்னை குடி வந்தாள்..?
இப்போது ஆரவே கேட்டு விட்டதால் பதில் சொல்லியாக வேண்டிய கடமை அவளுக்கு வந்துவிட்டது.
சொல்ல ஆரம்பித்தாள்.


மருத்துவமனை ஐ.சி.யூ.வில் அசோக் அனுமதிக்க பட்டிருந்த அந்த நாளில், அவனது மூளை, இருதயம் போன்ற முக்கிய பாகங்கள் படிப்படியாக செயலிழந்து கொண்டு வந்தன.
அருணாவை அழைத்த தலைமை டாக்டர்..
“அருணா.. நாம கொடுக்கிற சிகிச்சை முறை தாண்டி அசோக்கின் நிலைமை மோசமாகிட்டு இருக்கு..”
……
ஐ.சி.யூல வைச்சு ட்ரீட்மென்ட் கொடுத்தா கூட இன்னும் ஒரு வாரத்துக்கு மேல என்ன நடக்கும்னு சொல்ல முடியாது.. உங்களை முன்னாடியே எச்சரிக்கை செய்யணும்னுதான் தனிப்பட்ட முறையில கூப்பிட்டு சொல்றேன்..”
“என்ன சொல்றீங்க.. டாக்டர்..? நாங்க மொத்தமே ரெண்டு வருஷம்தானே சேர்ந்து வாழ்ந்திருக்கோம்?.. எங்க வாழ்க்கையை சொல்லிக்கிறதுக்கு ஒரு குழந்தை கூட இல்லையே..?” என்று கதறி அழத் தொடங்கினாள்.
டாக்டர் ஒரு நர்ஸை அழைத்து அருணாவை சாந்தப்படுத்தச் சொல்லிவிட்டு வெளியே கிளம்பினார்.


தலைமை மருத்துவரை அருணா சந்தித்த மறுநாள், மருத்துவமனையின்“ அனுமதிக்கப்பட்ட நேரத்தில் அவளிடம் பேசிய அசோக் ‘தான் பிழைப்பது சந்தேகம் என்றும், அவனது இறப்புக்குப் பிறகு அவள் வேறொருவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும்’ என்று வற்புறுத்தினான்.
அவனிடமிருந்து விந்தணுக்களைப் பெற்று அதன்மூலம் தான் கருவுறப் போவதாகவும், அந்த குழந்தை மூலம் தன் காலம் முழுவதும் அசோக்கை நினைத்து வாழப் போவதாகவும் சொன்னாள் அருணா.
அப்படி ஒரு குழந்தை உருவாகி விட்டால் அவள் நிச்சயம் மறுமணம் செய்ய மாட்டாள் என்பதால் அதற்கு உடன்பட அசோக் மறுத்தான்.

**********


மறுவாரத்தில் ஒரு நாள் காலை..
ஐ.சி. யூ. நர்ஸ் தலைமை மருத்துவருக்கு அவசர தகவல் கொடுக்க, அவர் வந்து அசோக்கைப் பரிசோதித்து விட்டு மறுபடி அருணாவை தன் அறைக்கு அழைத்தார்.
அருணா உள்ளே நுழைந்து இருக்கையில் பதட்டமாக அமர..,
“அருணா.. உங்ககிட்ட சில முக்கிய தகவல்கள் சொல்லணும்.. உங்க உறவினர் யாரும் இப்போ இங்கே இருக்காங்களா..?” என்றார்.
“எங்கம்மா இங்க வந்திருக்கா.. ஆனால் இப்போ வெளியில் போயிருக்கா.. எதுவானாலும் என்கிட்ட சொல்லுங்க..” என்றாள் நெஞ்சில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.
ஒரு முன்னெச்சரிக்கையாக ஒரு பெண் நர்ஸை அவளருகில் உட்கார வைத்த மருத்துவர்..
“உங்ககிட்ட ஏற்கனவே எச்சரித்ததுதான். அசோக்குக்கு தலையில் அடிபட்டதால், மூளை விரிந்துகொண்டே வந்துச்சு… ஆனா கபாலம் கெட்டியானது என்பதால், மூளை ஓரளவுக்கு விரிய முடியாது. தற்போது அவர் மூளைச் சாவு நிலைக்கு வந்துட்டார். இதுவே இறப்பு நிலை தான். ஆனால் மருத்துவ காரணங்களுக்காக இருதய துடிப்பு நிற்கும் வரை அப்படி சொல்றதில்லை..”
கண்களில் நீர் கோர்த்துக் கொள்ள அருணா கண்மூடி, வாய்விட்டு அரற்றிக் கொண்டிருந்தாள்.
இரண்டு நிமிடங்கள் அவளைத் தொந்தரவு செய்யாத டாக்டர்..
“இது மாதிரி மூளைச் சாவு சமயங்களில் நீங்கள் விரும்பினால் அசோக்கின் கல்லீரல், கணையம் போன்ற பாதிக்காத பகுதிகளை தானம் செய்யலாம்.. அதுபற்றி சொல்றதுக்குத்தான் உங்களை கூப்பிட்டேன்..”
என்று மெதுவாகச் சொல்லி அவளது பதிலுக்காகப் பேச்சை நிறுத்தினார்.
சற்று யோசித்து ஒருமுறை ஆழமாக மூச்சு இழுத்துவிட்ட அருணா..
“உங்க இஷ்டப்படி செய்யுங்க டாக்டர்.. ஆனால் எனக்கு ஒரு வேண்டுகோள் இருக்கு..” என்றாள்.
“சொல்லுங்கள்..”
“எங்களுக்குக் குழந்தை இல்லைன்னு உங்களுக்குத் தெரியும்.. அவருடைய விந்தணுவை எடுத்து எனக்குக் கொடுக்க முடியுமா..?”
அவளது கேள்வி டாக்டரை ஒரு நிமிடம் திகைக்க வைத்தாலும்..
“உறுப்புகளைத் தான் எடுக்கலாம்.. விந்தணு எடுப்பதற்கு கோர்ட் உத்தரவு வேண்டும்.. அப்படித்தான் சட்டம் சொல்றது..” என்றார் சங்கடத்தோடு.
“பிளீஸ் டாக்டர்.. என்னை உங்கள் மகளாக நினைத்து இந்த உதவியை செஞ்சு கொடுங்க..” என்று அவள் அழ..
“பிளீஸ் அருணா.. எங்க நிலைமையும் நீங்க புரிஞ்சிக்குங்க.. நான் ஒரு வக்கீல் நண்பரை அறிமுகப் படுத்துறேன்.. இன்னைக்கே சென்னை உயர்நீதி மன்றத்தில் அவசர வழக்காகத் தாக்கல் பண்ணுங்கள்.. விந்தணு இன்னும் இருபத்தி நாலு மணி நேரத்துக்குள்ள எடுக்கணும்.. ஞாபகம் வச்சிக்குங்க..” என்றபடியே வக்கீல் நண்பரையும் மருத்துவமனைக்கு வரவைத்து விபரங்கள் சொன்னார்.
சென்னை உயர்நீதி மன்றம் அந்த அவசர வழக்கை விசாரித்து, அசோக்கின் விந்தணுவை எடுத்து அருணாவிடம் கொடுக்கலாமென ஒரே நாளில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.
அசோக் இறந்து ஒரு ஆண்டு கழித்தபிறகு அந்த விந்தணுவோடு தனது கருமுட்டையைப் பரிசோதனை சாலையில் வளர்த்து, பின் அதை வயிற்றில் சுமந்து ஆரவ்வை பெற்றெடுத்தாள் அருணா.


முழுவதும் கேட்டு சந்தேகம் தெளிந்தவனாய் ஆரவ் தூங்க, மனபாரம் நீங்கி நிம்மதியானாள் அருணா.

ஆசிரியர் குறிப்பு

வயது: 63
பொதுத்துறை நிறுவனத்தில் பணி ஓய்வு பெற்றபிறகு எழுத ஆரம்பித்து, இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட கதைகள் எழுதியுள்ளார்.
Galaxy books நிறுவனத்தினர் 2023 ம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பங்கு பெற்ற இவரது சிறுகதை, அவர்களது “தோப்பு” என்ற சிறுகதை தொகுப்பிலும் இடம்பெற்றது.
இவரது புத்தகங்கள் “வசந்தத்தில் ஓர் நாள்” (சிறுகதை தொகுப்பு), மற்றும் “அச்சம் தவிர்” (பாரதியின் புதிய ஆத்திசூடி – விளக்கம்) ஆகியவை Pustaka பதிப்புகளாக வெளிவந்துள்ளன.

அ. கௌரி சங்கர்/ ஏரிக்கரையும் 80 சவரன் நகையும் – விருட்சம் நாளிதழ்

One Comment on “S. அர்ஜுனன் / சந்தேகக் கோடு”

Comments are closed.