அ. கௌரி சங்கர்/ ஏரிக்கரையும் 80 சவரன் நகையும்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 37

சென்னை, வேளச்சேரி ஏரிக்கரை.
இரவு மணி 1.00 என்பதால், மனிதர்கள் நடமாட்டம் அறவே இல்லை. ஏரியின் பாதி பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு பல வீடுகள் தங்களை காண்பித்துக்கொண்டு இருந்தன. இருளில் ஒரு வேம்பு மரத்தின் கீழே அமர்ந்து கொண்டு இருவர் பேசிக்கொண்டு இருந்தனர்.
ஏரிக்கரையில் இருந்து மூன்றாவது தெருவில் ஒரு நாய் ஊளையிட அதனை தொடர்ந்து பல நாய்கள் ஊளையிட ஆரம்பித்தன. ஊளையிட நாய்களுக்கு காரணம் தேவையிருக்கவில்லை. மனிதர்களுக்கு தங்கள் இருப்பை காட்டிக்கொள்ள அந்த ஊளையிடல்கள் அந்த நாய்களுக்கு எப்போதும் தேவைப்பட்டன.
அரை பாட்டில் மதுவை காகித டம்ளர்களில் மாற்றி மாற்றி இருவரும் ஊற்றி குடித்துக்கொண்டு அமர்ந்து கொண்டு இருந்தனர். ஒருவன் அணிந்திருந்தது அழுக்கான ஜீன்ஸ் பாண்ட். . தலையில் தொப்பி. கருப்பு நிறத்தில் ஒரு டீ சர்ட். அவன் ஜேம்ஸ். அடுத்தவன் – மில்டன் – கருப்பு கலர் பேண்ட் அணிந்து அதன் மேல் ஊதா கலரில் ஒரு டி சர்ட் அணிந்து இருந்தான். இவன் தலையிலும் ஒரு தொப்பி.
என்ன தான் மது வயிறுகளை நிரப்பிக்கொண்டு இருந்தாலும், அவர்கள் தெளிவாகவே இருந்தார்கள்.
மில்டன் ஆரம்பித்தான்.
“டேய் – ஜேம்ஸ் நல்லா கேட்டுக்கோ. இன்னெக்கி மாதிரி சந்தர்ப்பம் கிடைக்கிறது அபூர்வம். கொஞ்சம் புத்திசாலித்தனமா நடந்து கொண்டோம்ன்னா போதும். ஜென்மத்துக்கும் ராஜா தான். நல்லா பார்த்துக்கோ. இந்த ஏரியோட வலது மூலையில ஒரு தெரு விளக்கு முணுக் முணுக்ன்னு எரிஞ்சிக்கிட்டு இருக்குது பாரு- அதே தெரு தான். தெரு ஆரம்பத்திலே ஒரு வீடு இருக்குது. ஒரு வருசத்துக்கு முன்னால தான் குடி வந்து இருக்காங்க. மொத்தமே ஐந்து நபர்கள் தான் அந்த வீட்டுல. வீட்டுக்கு சொந்தக்காரன் – கண்ணாயிரம் – ஒரு கசாப்புக்கடை வைத்திருக்கிறான். அவன், அவன் மனைவி, அவனுடைய இரண்டு பிள்ளைகள் – இந்த நான்கு நபர்கள் தவிர ஒரு வயதான கிழவி – கண்ணையிரத்தோட அம்மா – வயது 75 இருக்கும் – ஆக ஐந்தே நபர்கள் தான் அந்த வீட்டில்.
குழந்தைகள் இருவருக்கும் ஒரு படுக்கையறை; தம்பதிகளுக்கு ஒரு படுக்கையறை; கிழவிக்கு ஒரு படுக்கையறை. இந்த மூன்று அறைகள் தவிர்த்து ஒரு ஹால், ஒரு கிச்சன் மற்றும் இரண்டு டாய்லெட்டுகள் தான் அந்த வீட்டில். கிழவியோட அறை கிச்சனுக்கு நேர் எதிரில் இருக்கும். கிச்சனுக்கு கதவு கிடையாது. எனவே எதிரில் இருக்கும் கிழவியின் அறையில் இருந்து கிச்சனில் நடக்கும் சம்பவங்களை நன்றாக பார்க்கமுடியும். இரண்டு வாரத்துக்கு முன்பு சாக்கடை அடைச்சிருச்சின்னு சொன்னாங்க. எனக்கு ஒரு வாரம் அந்த வீட்டில வேலை இருந்திச்சி. வேலையை செஞ்சிகிட்டே வீட்டை நான் நோட்டம் விட்டேன். ஒரு நாள் மதியம் மூணு மணிக்கு மாஸ்டர் பெட் ரூமில் உள்ள ஒரு பீரோவில் இருந்து கண்ணாயிரத்தோட மனைவி நகைகளை எடுத்து அடுக்கி வைச்சிகிட்டு ஒரு புத்தகத்துல எழுதிக்கிட்டு இருந்தாங்க. போன்ல அவுங்க அம்மாவோட பேசியதும் கேட்டது. “அம்மா, இப்போதைக்கு 80 சவரன் தேறும்.”
“பதிலுக்கு அந்த பெண்ணோடு அம்மா என்ன சொன்னாங்கன்னு எனக்கு தெரியாது. ஆனால் இந்த அம்மா பேசியது கேட்டது”.
“ஆமாம்மா நீ சொல்றது சரி தான். திருட்டு பயம் அதிகம் இருக்குற ஏரியா அது. திருடர்கள் பெட் ரூமை குறி வச்சுதான் வருவாங்க. நான் ஒன்னு செய்றேன். இந்த நகைகளை பழைய சேலையில் வைத்து மூட்டை மாதிரி இறுகக்கட்டி கிச்சன்ல இருக்குற லாஃப்டுல வச்சிடுறேன். யாருக்கும் சந்தேகம் வராது.”
“டேய் ஜேம்ஸ், 80 சவரன் – இன்னெக்கி விலை ரூபாய் 60 லட்சமடா. தூக்கிட்டோம்னா பத்து வருசத்துக்கு சாப்பிடலாம். டெல்லி போய் செட்டில் ஆகிடலாம்.”
“பத்து நாட்களாக சாக்கடையை செக் பண்ணுறமாதிரி சொல்லிக்கிட்டே நோட்டம் உட்டுக்கிட்டு இருந்தேன்.”.
“கேட்டுக்கோ. இன்னிக்கு சரியா 2 மணிக்கு அங்கெ போய் சேர்றோம். இந்த ஐந்து பேர்களையும் சமாளிச்சுட்டோம்னா காரியம் முடிஞ்சிடும். பசங்க நல்லா உறங்கிடுவாங்க. கசாப்புக்கடை கண்ணாயிரமும் பகலில் வேலை செஞ்ச களைப்புல உறங்கிடுவாரு. அவரு பொஞ்சாதி. உறங்கத்தொடங்கினால் கும்பகர்ணி தான். நமக்கு விவகாரமே – அந்த வயசான கிழவி தான். அந்த கிழவி எத்தனை மணிக்கு உறங்குது; எத்தனை மணிக்கு முழிக்குதுன்னு சொல்லமுடியாது. சரி இப்ப சொல்லு உன்னோட பிளானை.”
ஜேம்ஸ் பேசினான்.
“டேய் மில்டன் – உனக்கு தான் வீட்டோட ரூட் முழுசும் தெரியுது. என்னோட வேலை – உன் கூட வர்றது. பூட்டை திறக்குறதுல நான் புலி. எனக்கு மூணு நிமிஷம் கிடைச்சால் போதும். எந்த பூட்டையும் திறந்துடுவேன். வீட்டோட கதவை முதல்ல திறக்கிறோம்; கிச்சனை கண்டுபிடிக்கிறோம்; தேடுறோம்; துணி மூட்டையை; தூக்குறோம். அப்படியே வெளியே வந்து ஏரியில் குதிச்சி அடுத்த கரைக்கு போயிடுறோம். பத்தே நிமிசத்துல காரியத்தை முடிச்சிடலாம்.”
மணி 02.00.
தனி வீடு. இருவரும் வீட்டு தோட்டத்துல நுழைஞ்சி, பின்பக்க வாசல் அருகில் வந்து சேர்ந்தனர். குழந்தைகள் அறையில் சிறு இரவு விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. தம்பதிகள் அறையில் இருவரும் நன்றாக உறங்கிக்கொண்டு இருந்தனர். கிழவி படுத்து இருந்த அறையில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. அறையின் கதவும் திறந்து இருந்தது.
கிழவி இருக்கும் அறையின் ஜன்னல் திறந்து இருந்தது. அதன் வழியாக உருவத்தை நன்றாக மறைத்துக்கொண்டு ஒளிந்திருந்து மில்டன் கிழவியின் நடமாட்டங்களை நோட்டம் விட்டான். அறையின் உள்ளே LED விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. கிழவி படுக்கையில் ஜன்னலை பார்த்து அமர்ந்து இருந்தாள். ஜன்னலையொட்டி இருந்த டெலிவிஷனில் ஒரு படம் ஓடிக்கொண்டு இருந்தது. அவனால் டெலிவிஷனின் பின்பக்கத்தை மட்டுமே பார்க்க முடிந்திருந்தது.
ஜேம்ஸ் வீட்டின் பின்பக்க கதவின் தாழ்ப்பாளை திறப்பதில் கவனம் செலுத்தினான். நொடிக்கு ஒரு முறை அவன் மில்டனை பார்க்க தவறவில்லை. இவனும் அவனுக்கு சைகைகள் கொடுத்துக்கொண்டு இருந்தான்.
ஜேம்ஸ் கதவை திறந்து விட்டு, கிச்சனை நோக்கி நகர்ந்தான். இனி கிச்சன் கதவை திறந்து துணி மூட்டையை தேட வேண்டியது தான் பாக்கி. மில்டன் கிழவியை நோட்டம் விட்டான்.

கிழவிக்கு மிகவும் பிடித்தமானது கால் பந்து விளையாட்டு. சிறு வயது முதலே அவளுக்கு அந்த விளையாட்டில் அதிக ஆர்வம் இருந்தது. உறக்கம் வராமல் இருந்த நிலையில், கிழவி சமீபத்தில் நடந்து முடிந்த கால் பந்து விளையாட்டின் இறுதி ஆட்டத்தை டெலிவிஷன் திரையில் பார்த்துக்கொண்டு இருந்தாள். அவளுக்கு பிடித்தமான விளையாட்டு வீரர் எம்பாபே. அன்றைய ஆட்டத்தில் பிரபல விளையாட்டு வீரர் மெஸ்ஸி மற்றும் எம்பாபே எதிர் எதிர் அணிகளில் விளையாடிக்கொண்டு இருந்தனர். போட்டி கடுமையாக இருந்தது. ரசிகர்களின் ஆரவாரம் விண்ணை தொட்டது என்றால் கண்டிப்பாக அது பொய் இல்லை.
விளையாட்டு நடந்து கொண்டு இருக்கிறது. எதிர் எதிர் அணிகளை சார்ந்த வீரர்கள் பந்தை டமால் டுமீல் என்று எட்டி உதைக்கும் சத்தங்கள் கேட்டுக்கொண்டு இருந்தன. ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் ஒலிகளும் காதுகளை பிளந்து கொண்டு இருந்தன.
டெலிவிஷனில் படம் பார்க்கும்போது கிழவி ரன்னிங் காமெண்டரி கொடுப்பது வழக்கம். அவளின் வாயை மூடவைப்பது மிக மிக கடினம்.
மெஸ்ஸி பந்தை கால்களுக்கு இடையில் நுழைத்துக்கொண்டு எதிரில் வரும் வீரர்களை சமாளித்துக்கொண்டு எதிர் அணியின் கோல் போஸ்டை நோக்கி அசுர வேகத்தில் வந்து கொண்டு இருக்கிறான். இருபது அடிகள் மட்டுமே இருந்தன. “டேய், விவஸ்தை இருக்கா உனக்கு. இப்ப அவன் வந்தா என்ன நடக்கும் தெரியுமா?” (மெஸ்ஸியை பார்த்து கிழவி கேள்வி கேட்கிறாள். பதினைந்து அடி தூரத்தில் எம்பாபே புயல் வேகத்தில் ஓடி வருவது நன்றாகவே தெரிகிறது.)
….
மில்டன் – “டேய் ஜேம்சு – காரியம் கெட்டுடும் போல இருக்குது. என்னிய பார்த்து கிழவி கேக்குது. விவஸ்தை இருக்கா உனக்குன்னு. இப்ப அவன் வந்தா என்ன நடக்கும் தெரியுமானு வேற கேக்குது. நிச்சயம் கண்ணாயிரம் வந்தாலும் வந்துடுவாரு. போயிரலாம்டா; மாட்டிக்கிட்டோம்னா, உடம்புல சொட்டு தோல் இருக்காது. நாளைக்கு கசாப்பு கடையில விட்டத்துல இருந்து தொங்குற இரும்பு கொக்கியில் நம்ம சதை தான் மாட்டியிருக்கும். .
ஜேம்ஸ் – “டேய் மில்டன், கொஞ்சம் வெயிட் பண்ணுடா. வேலை அநேகமா முடிஞ்ச மாதிரி தான். பொட்டணம் அநேகமா எடுத்துட்டேன். கிழவியை கவனமா பார்த்துக்கிட்டே இரு.”. ஜேம்ஸ் கிச்சனில் இருந்து பேசினான்.
….
திரையில் கால் பந்து விளையாட்டு நடந்து கொண்டு இருக்கிறது. எம்பாபே நெருங்கி வந்து மெஸ்ஸியின் கால்களுக்கு இடையில் திணறிக்கொண்டு இருந்த பந்தை பிடுங்க முயல, மெஸ்ஸி பந்தை அவனுடைய அணி வீரனுக்கு நகர்த்தி விடுகிறான். “டேய் உனக்கு அறிவே கிடையாதா?” (மெஸ்ஸியை பார்த்து ஏசுகிறாள் கிழவி.)
திரையில் படம் ஓடிக்கொண்டு இருக்கிறது. மெஸ்ஸி நகர்த்திவிட்ட பந்தை எம்பாபே கால்களால் பிடித்து தனது வசம் கொண்டு வருகிறான். “டேய் தெரியும்டா; நீ இப்படி ஏடாகூடமா எதாவது பண்ணுவேன்னு. இப்ப வந்துட்டான் பாரு எங்காளு. இனி அவன் கவனிச்சிக்குவான்.” (கிழவி மெஸ்ஸியை பார்த்து ஏசுகிறாள். )
….
மில்டனுக்கு முகத்தில் அடித்தாற்போல இருந்தது.
“ஜேம்சு – கசாப்புக்கடை வந்திருச்சுடா” ஒருபுறம் நகைகளின் நினைப்பு ஆசையை தூண்ட, இன்னொருபுறம் உயிர் மீதுள்ள ஆசை ஓடிப்போக சொல்ல மில்டன் இருதலைக்கொள்ளியாக மாறினான்.
பதறிப்போன ஜேம்சு கிச்சனில் தரையில் பம்மிக்கொண்டு பார்க்க கிழவி இறைந்து பேசுவது அவனுக்கு தெளிவாக கேட்டது. ” கிழவி பார்த்துட்டா – இப்ப இரண்டுல ஒன்னு முடிவு எடுத்தாகணும். உயிரா – நகையா? “
பதற்றத்தில், ஜேம்சு கையில் அகப்பட்ட பொட்டணம் அவிழ, நகைகள் அத்தனையும் தரையில் விழுந்து நகைகள் ஜல்னு சிதற ஆரம்பித்தன.
….
“டேய் அடிச்சி உள்ளே தள்ளுடா. இதுக்கு மேல விட்டு வைக்காதே.” – (உணர்ச்சி வேகத்தில் கிழவி எம்பாபேவை பார்த்து கத்துகிறாள்.)
….
“டேய் மில்டன், ஓடிருவோம்டா. மாட்டிகிட்டோம்டா” – கிழவியின் அறை மீது வைத்திருந்த பார்வையை நீக்கிய ஜேம்ஸ், இருளில் மில்டனை தேட அவன் கண்களில் ஏரியின் நடுப்பரப்பில் தொப்பி அணிந்த உருவம் ஒன்று வேகமாக நீந்தி எதிர் கரையை நோக்கி சென்று கொண்டு இருப்பது குத்து மதிப்பாக தெரிந்தது.

ஆசிரியர் குறிப்பு

இவருடைய வயது 73
திரு அ. கௌரி சங்கர் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் 39 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிவிட்டு 2011ல் ஓய்வு பெற்ற பின்னர், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் போன்றவற்றை எழுதி வருகிறார். அமேசான் தளத்தில், 260க்கும் அதிகமான புத்தகங்களை கிண்டில் (Kindle) வடிவத்தில் மின்புத்தகங்களாக வெளியுட்டுள்ளார். பல போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றுள்ளார்.

சுரேஷ் ராஜகோபால்/பரசுவின் ஆடம்பரம் – விருட்சம் நாளிதழ்

One Comment on “அ. கௌரி சங்கர்/ ஏரிக்கரையும் 80 சவரன் நகையும்”

Comments are closed.