நா.கிருஷ்ணமூர்த்தி/காணாமல் போகிறவர்களும் மறக்கப்படுபவர்களும்

ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை

வயதானவர்களைக் காணோம் என
அங்க அடையாளங்கள் அணிந்திருந்த
ஆடை விபரங்கள் தரப்படுகின்றன
காணாமல் போனதற்குச் சொல்லப்படுவது
மறதி அல்லது மனவியாதி
உண்மையான காரணம் அரண்மனை ரகசியம்
காணாமல் போனவர்கள்
கிடைத்த விவரமும் தெரியவராது
எது எப்படியோ காணாமல் போகிறவர்கள்
போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள்
இதனூடே சமகாலத்தில் பலரால்
பாராட்டப்பட்டவர்களுள் ஒரு சிலரும்
பேசப்பட்டவர்களுள் ஒரு சிலரும்
காணாமல் போகாமலும்
தொலைந்து போகாமலும்
எதனாலோ மறக்கப்படுகிறார்கள்
காலப் போக்கில் அவர்கள்
முழுவதும் மறக்கப்பட்டவர்களாகவே
ஆகிவிடுகிறார்கள்
எவர் நினைவிலும் இல்லாமல்