சுரேஷ் ராஜகோபால்/பரசுவின் ஆடம்பரம்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 36

வீட்டுத் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தான் பரசு என்ற பரசுராமன்.
அவன் கண்ணெதிரே கடந்த காலம் கடந்து போனது.
அந்தக் காலத்திலே, அம்பது வருடத்துக்கு முன்பு , அப்பாவுக்கு வருமானம் கம்மி. வீட்டிலேயோ ஏகப்பட்ட குழந்தைகள். அப்பாவின் அந்த குறைந்த வருமானத்திலேயும் குடும்பத்தை அழகாக, சாமர்த்தியமாக அம்மா நிர்வாகம் செய்ததால் குடும்ப மானம் தப்பியது.
சிறு வயதில் ஒண்டுக் குடித்தானத்தில் தான் வாழ்க்கை. இரண்டு அண்ணனுக்கு அடுத்தது பரசு . இவனுக்கு கீழே நான்கு தங்கைகள் ஐந்து தம்பிகள்.
பெரியவன் பாலு என்கிற பாலசுப்ரமணியன் அடுத்தவன் நட்டு என்கிற நடராஜன்..
அப்பாவுக்கு எப்போதும் சுர்ரென்று கோபம் கொப்பளிக்கும், வீட்டில் எப்போதும் அமைதி இருக்க வேண்டும் என்று நினைப்பவர் .
குழந்தைகள் வால்தனம் பண்ணினால், அப்பாவிடம் பெரியவங்களுக்கு கன்னத்தில் ஒரே அடி. சின்னப் பசங்களுக்கு முதுகில் வேகமாக ஒரு அடி.
சிறிய பெண் குழந்தைகள் அழுது கொண்டே அம்மாவிடம் ஓடுவார்கள்.
அம்மா ” ஏம்மா என்ன குறும்பு செய்தே?” அரவணைப்பார். அப்பாவுடன் ஒரு கருணை மனு கூட செல்லாது.
அப்போது அது கசக்கவில்லை.
“சாப்பிட வாங்க ” அம்மா கூப்பிட்டவுடன்
வரிசையாக தட்டு எடுத்துக் கொண்டு, பந்தி போட்ட மாதிரி வந்து உட்கார்ந்து சாப்பிடுவார்கள்.
சகோதர சகோதரிகளுடன் இதய பூர்வ தொடர்பும் உண்டு, அப்பப்ப பிணக்கும் உண்டு.
அப்பா வீட்டில் இருக்கும் போது எல்லோரும் கப்சிப். எதோ தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பார்கள்.
எல்லா குழந்தைகளும் அடங்கி போகும் சமயம், பரசு மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக அப்பாவை முறைக்க தொடங்கினான். அதற்கு உடனடியாக அப்பாவிடம் சன்மானம் கிடைத்துவிடும். ஒன்றோ இரண்டோ கன்னத்தில் அடிவிழும், கண்களில் நீர் வரும். ஆனால் கலங்கவே மாட்டான்.
“அப்பாவிடம் எதிர்த்து பேசாதே “என்று பரசுவிடம் முதலில் அம்மா கூறினாள்
பிறகு அவனிடம் “டேய் கெஞ்சிக் கேட்கிறேன் அப்பாவை மொறைக்காதேடா” என்றும் மன்றாடினாள்.
பெரியண்ணன் பாலு பரசுவை தனியாக அழைத்துப் போய் மனம் விட்டு பேசினான். பரசு கொஞ்சம் கொஞ்சமாக மாறத்தொடங்கினான் .
பெரியவன் பாலு சொன்னால் பரசு கொஞ்சம் கேட்பான்.
“தோளுக்கு மிஞ்சின குழந்தையை அடிக்க வேண்டாமே ” அம்மா அப்பாவிடம் தனிமையில் பேசி பார்த்தார். அதற்கு பிறகு அடிப்பதை அடியோடு நிறுத்திவிட்டார்.
அம்மா பேர் சொல்லிக் கூப்பிட்டாத்தான் தலை மெல்ல தூக்கிப் பார்ப்பார்கள். பாக்கறதுக்கு அவ்வளவு அடக்கமாகத் தெரியும். மற்ற சமயம் எதோ புத்தகத்தில் படிப்பது போல் கண்களை நோட்டம் விட்டுக்கொண்டு இருப்பார்கள்
மொத்தத்தில் எல்லா குழந்தைகளும் சமத்துத்தான். “அந்தந்த வயசுக்கு உள்ள வால்தனம் இருக்கத்தானே செய்யும் ” அம்மா சொல்லிக் கொண்டாள்
அந்த சின்ன வீட்டில் படிப்பு விளையாட்டு எல்லாம், அதுக்குள்ளதான்.
பெரியண்ணா பாலு வேலைக்கு வந்தவுடன் அப்பா கொஞ்சம் பெரு மூச்சு வீட்டுக் கொண்டார். பண நெருக்கடியிலிருந்து அவர் மீண்டது போலிருந்தது.
உடனே அம்மா பெருமாள் படத்துக்கு கற்பூரம் ஏற்றி “எல்லாம் வந்து கற்பூர ஆர்த்தி பாக்கலாம், கன்னத்தில் போட்டுக்கோங்கோ ” எல்லாம் வரிசையா வந்து கற்பூரம் தொட்டு ஒத்திக்கிட்டாங்க.
பெரிய அண்ணன் வேலைக்கு வந்த சில வருடங்களில் இரண்டாவது அண்ணன் அடுத்து பரசு எல்லாம் வேலைக்கு வந்தது குடுமபத்துக்கு பெரிய ஆறுதலாக இருந்தது.
அடுத்தடுத்து ஒவ்வொருவருக்காக திருமணமும் அழகாக நடந்தது கண்டு அனைவரும் மகிழ்ச்சியில் மிதந்தனர்.
பரசு டாடா நிறுவனத்தில் அதிகாரியாக இருந்தான். அவனுக்கு முப்பது வயதில் திருமணம் ஆனது.
நான் நீ என்று சில, பல பெண்கள் திருமணத்துக்குத் தேடி வந்தனர். எதையும் கண்டு கொள்ளவில்லை.
வீட்டில் பார்த்த வரனே, முடிவானது. பெண் வீட்டாரும் எளிய குடும்பத்தினர், எளிய முறையில் திருமணமும் நடந்தது.
பரசுவின் மனைவி லலிதா வந்த பிறகு அவன் பாரம் குறைந்தது. அவளும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தது குடும்பத்துக்கு சுகமாக இருந்தது.
பரசு தன் அலுவலகத்துக்கு அருகில் ஒரு வீடு பார்த்து குடி பெயர்ந்தான். அவன் மனைவி லலிதாவுக்கும் வீட்டுக்குப் பக்கத்திலேயே வேறு ஒரு அலுவலகத்தில் வேலை கிடைக்க, மாற்றிக் கொண்டாள்.
தம்பி தங்கைகளுக்கு எல்லாம் மூன்று அண்ணன்களும் எடுத்துப் போட்டு திருமணம் மற்ற ஏற்பாடுகள் செய்தனர்.
ஆன மட்டும் கூப்பிட்டும் அப்பாவும் அம்மாவும் அந்த பழைய வீட்டை விட்டு வரமுடியாது என்று பிடிவாதமாக இருந்தனர்.
அப்பா இறந்த செய்தி கேட்டவுடன் அத்தனை பேரும் தங்கள் குடும்ப சகிதம் வந்து சிலர் அழுது, சிலர் விம்மி தங்கள் சோகத்தை காட்டியபடி இறுதி காரியங்கள் செய்தனர்.
அப்பாவுக்கு ஒரு நோய் நொடி இல்லை. ஓய்வு பெற்ற ஒரு வருடத்திலேயே தனிமை அவரை வாட்டியது. ஒரு ஓட்டை ரேடியோ தான் அவர் பொழுது போக்கு.
ஒரு வியாழனன்று காலை காபி குடித்தார். மனைவியை, “அடியே ” கடைசி வரை இப்படியே தான் கூப்பிட்டார். “நெஞ்சு வலிக்குது, ஓமம் கொஞ்சம் கொடு ” கேட்டார். கொண்டு வரத்துக்குள்ளே அவர் உயிர் பிரிந்தது.
வந்து பார்த்த அம்மா அப்படியே “ஏங்க ஏங்க ” குரல் கேட்டு பக்கத்துக்கு வீட்டு மாமா ஓடி வந்தார். அப்படியே கூட்டம் சேர ஆரம்பித்தது.
அவர் கூப்பிட்ட “அடியே ” தான் கடைசி என்று அம்மாவுக்கும் தெரியாது. தூணில் சாய்ந்து விசும்பி விசும்பி அழுதாள் .
அப்பாவுக்கு பெரிசா சொத்து பத்து என்று ஒன்னும் கிடையாது. ஊரப்பாக்கத்தில் ஒரு 1800 சதுர அடியில் ஒரு நிலம் இருக்கு. வங்கியில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய், ஒய்வு பெற்ற போது வந்த பணம் மீதி இருந்தது. அவர் சம்பாத்தியம் எல்லாம் குடும்பத்தை நிர்வாகம் செய்யவே சரியா போச்சு. பெரிசா ஒன்னும் சேமிக்க முடியலை
அந்த நிலத்தை பெரியண்ணா எடுத்துண்டு அதுக்கு அன்னிக்கி கணக்குப்படி மூணு லட்சம் ரூபாய் அம்மா பேருக்கு வங்கியில் கட்டி விட்டான். தம்பி, தங்கைகள் எல்லாம் அதுக்கு ஒத்துண்டு, சரின்னு போய்ட்டாங்க.
பரசு மட்டும் கொஞ்சம் சண்டை போட்டான். எல்லார் கிட்டயும் கெட்ட பேர் வாங்கிண்டான் . அம்மா “வேண்டாம் பரசு விடு, பெரியவனே எடுத்துக்காட்டும் ” சொன்ன பிறகு அவனும் அரைமனதோடு சமாதானமாக போய்விட்டான்.
பரசுவின் மனைவி லலிதா “ஏன் எப்பப்பாரு ஏதாவது பேசி வாங்கி கட்டிக்கிறீங்க?”
அப்பா இறந்த பிறகு அம்மாவை பரசு தன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டான். அது அவங்களுக்கும் பாதுகாப்பு இவர்களுக்கும் உதவியாகி போச்சு.
பரசு தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்தன. அம்மா கூட இருந்ததால் ஒத்தாசையாக இருந்தது.
பரசு தம்பதியினர் அகலக்கால் வைத்து, அதிகம் செலவு செய்து டாம்பிக்கமாக வாழ்ந்தனர். அது அவர்கள் கையை கடித்தது. இருவரின் சம்பளம் போதுமானதாக இல்லை அதனால் அம்மாவின் வங்கிக் கணக்கிலிருந்து மாதா மாதம் ஒருதொகையை காசோலை மூலம் வாங்கி செலவு செய்ய ஆரம்பித்தனர்.
பணப் பிரச்சனை வந்தவுடன் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்தது. எதெற்கெடுத்தாலும் கோபம் வந்து குழந்தைகளை அடிக்க ஆரம்பித்தான்.
“என்னாலத் தான் உங்களுக்குள் சண்டை வருதா?” அம்மா கேட்டாள் “உங்களுக்கு பாரமா நான் இருக்கேன்னா , நான் வேணா பெரியவன் வீட்டுக்கு போய் தங்கிடுறேன் “
பரசுவுக்கு பெரிய இடியாக இருந்தது அம்மா அங்கே போய்ட்டா முதலல குழந்தைகளை பாத்துக்க ஆள் வேணும். பணப்பிரச்னைக்கு அம்மா கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியாது.
எங்கோ தப்பு நடந்து போச்சு . அது தெளிவா தெரிந்தது.
அம்மா பேசிய பிறகு பரசு லலிதா பேசுவதையே நிறுத்திக் கொண்டார்கள். போன வாரம் காலை முதல் சண்டையாவது இருந்தது. இப்போது அதுவும் நின்று போச்சு. வீட்டு நிர்வாகம் தலைகீழானது.
லலிதா குழந்தைகளிடம் தன் கோபத்தை காட்ட ஆரம்பித்தாள்.
லலிதாவின் அக்கா, அனுராதா , அந்த வாரம் வீட்டுக்கு வந்தாள். வீட்டில் யார் முகமும் தெளிவில்லாமல் சோகமாக இருப்பதை கண்டு கேட்டாள் “யாருக்காவது உடம்பு சரியில்லையா ?”
மூலையில் உட்கார்ந்திருந்த லலிதா, தலையை நிமிர்த்தி அக்காவை பார்த்து அழ ஆரம்பித்தாள்.
அனுராதா லலிதாவின் அருகில் அமர்ந்து, அவள் தலையை தடவி கொடுத்தபடி “என்ன ஆச்சு?”
லலிதா தன் கண்ணோட்டத்தில் நிகழ்ந்ததை தொகுத்து கூறினாள் . தன் கணவர் மொத்தமாக தன்னை உதாசீனப்படுத்திவிட்டார் என்று கூறினாள்
“சின்னக் குழந்தைமாதிரி இப்படி சண்டை போட்டு குடும்ப நிம்மதியை ஏன் தொலைக்கிரீங்க?”
லலிதா ஒரு “ஜ்ஜ் “கேவல் வந்தது.
ஆறுதல் வார்த்தை கூறினாள் .
அதற்குள்ளே பரசுவின் அம்மா அவர்கள் தொலைபேசி மூலம் பெரியண்ணாவிற்கு தொடர்பு கொண்டு அழ ஆரம்பித்தாள். தெளிவில்லாமல் விஷயம் கேட்ட பாலு உடனே பரசு வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
“அம்மா கணக்கிலேந்து ஏன் பணம் எடுத்த?” பாலு
“நான்தான் கேட்டேன், அம்மாதான் கொடுத்தாங்க ” பரசு
“அவங்க மருத்தவச் செலவுக்கு பயன்படட்டும் என்று எல்லோரும் பேசித்தானே, அதை தொடக்கூடாது என்று பேசி முடிவு பண்ணினோம் “
அதற்குள் லலிதா உள்ளே நுழைந்தாள் “எங்க சம்பாத்தியம் எங்களுக்குப் பத்தலை…”
வாதம் பிரதிவாதம் என்று கூடிக்கொண்டே போனது.
“வர சம்பளத்தில குடித்தனம் செய்யணும், அதுதான் சாமர்த்தியம் ” பாலு
அனுராதாவும் இதில் தன்னை இணைத்துக் கொண்டாள்
பரசு ஆடம்பர வாழ்வுதான் இத்தனை பிராச்சனைக்கும் காரணம் என்று புரிய வைத்த்தனர்.
பரசுவும் லலிதாவும் கைகட்டி வாய்பொத்தி எல்லாவற்றையும் கேட்டு தலையை ஆட்டினார்.
தோட்டத்தைப் பார்த்தபடி கண்ணீர் விட்டான், தாங்கள் வாழ்வில் மீண்டு வந்ததை எண்ணி நெகிழ்ந்தான்

ஆசிரியர் குறிப்பு

இந்த கதை எழுதிய சுரேஷ் ராஜகோபால் , பள்ளி நாட்களில் தொடங்கி கதை, புதுக் கவிதை, சிறுகதை, நாடகம், கட்டுரை மற்றும் ஓவியம் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர்.
ஆறு புதுக் கவிதைத் தொகுப்பு ஒரு சிறுகதை தொகுப்பு எழுதி வெளியிட்டுள்ளார். விருட்சம் குவிகம் போன்றவை கொடுத்த ஊக்கத்தினால் அவர் வளர்ச்சி மேம்பட்டது.
எழுதுவது சிறிதும் தடைபடாமல் இருப்பதற்கு சில நண்பர்களின் ஊக்கமே காரணம்.
இவரின் கதை கவிதைகள் சில வார இதழ்களிலும், பல மின்னிதழ்களிலும் வெளிவந்தன.

அ.மேரி சுரேஷ்/கனவை விழுங்கும் உறக்கம் – விருட்சம் நாளிதழ்

7 Comments on “சுரேஷ் ராஜகோபால்/பரசுவின் ஆடம்பரம்”

Comments are closed.