அ.மேரி சுரேஷ்/கனவை விழுங்கும் உறக்கம்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 35

அக்கக்கா குருவியின் விசில் சத்த ஓசை கேட்டதும் விழித்தாள். அந்த ஒலியில் உறக்கத்தில் உள்ளவர்களை கயிறு போட்டு இழுக்கும் யுக்தி இருக்கும். கரிச்சான் குருவிகள் விட்டுவிட்டு கூவிக் கொண்டிருந்தன. அவளின் தோட்டத்தில் இவைகளின் கச்சேரி களைகட்ட ஆரம்பித்தது.
வழக்கமாக விடிகாலையில் அம்மா எழுந்து ஜெபிக்கும் சத்தம் கேட்டவுடனே நான்சி அனிச்சையாக முட்டியிட்டு ஜெபித்து விட்டு பின் உறங்கி போவாள். ஆனால் இன்றோ கண்கள் இரண்டையும் உயர்த்தி அம்மா ஜெபிப்பதை பார்த்தவள் திடீரென தான் எதிர்பார்த்த நாள் இன்று தான் என யோசித்தவளாய் படுக்கையை விட்டு எழுந்து மறு கணமே இயல்புக்கு மீறிய உற்சாகத்தில் துள்ளிக் குதித்து அரக்கப்பரக்க பாயைச் சுருட்டி மூலையில் எறிந்து விட்டு தன்னோடு ஆறாம் வகுப்பு பயிலும் மாணவி செல்வி வீட்டுக்கு ஓடினாள் நான்சி. செல்வி தெருவிலும் பள்ளியிலும் உயிர்த் தோழிகள். ஒருவரை ஒருவர் பிரிந்திருந்தது இல்லை. ஒட்டி பிறந்த சகோதரி போல இருப்பார்கள் என ஊரார் கிண்டல் செய்வர்.
செல்வி, செல்வி அப்பா ஊருக்கு போய்ட்டாங்க . அம்மா எனக்கு அனுமதி கொடுத்துட்டாங்க. நான் உன்னோட வாரேன் நீ என்னை அழைத்துக் கொண்டு போவென
செல்வி வீட்டுவாசலில் நின்று கொண்டு சொல்லத் துடித்தாள், எட்டி எட்டி பார்த்தாள். இன்னும் அவள் வீட்டில் யாரும் எழுந்திருக்கவில்லை போலும் வாசலில் தண்ணீர் தெளிக்கவும் இல்லை கோலமும் போடவில்லை செல்வி..செல்வி..என மீண்டும் மெல்லிய குரலில் அழைத்தாள். வீட்டினுள்ளே இருந்து சத்தம் வரவில்லை. செல்வி வீட்டு வாசலிலுள்ள அரசமரமும் தூங்குமூஞ்சி மரமும் விழித்து நான்சியை பழிப்பு காட்டின.
இன்று பார்த்து அவளுக்கு தூக்கமென்ன தூக்கம். அவளுக்கு அங்கே தனியாக நிற்க்க வெட்கமாக இருந்தது. மெதுவாக அவ்விடம் விட்டு கிளம்பினாள்.
ஏனோ தான் வீட்டுக்கு போக விருப்பமில்லாமல் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டே அவள் அங்கும் இங்குமாக தெருவிலேயே நடந்தாள். “நான்சி வா வந்து பால் அருந்தி பல்ல விளக்கினாயா?. குளித்துவிட்டு காலை சாப்பாடு சாப்பிட்டுட்டு போலாம்ல.
இப்ப எதுக்கு தெருவுல சுத்திகிட்டு இருக்க. உன் வயசு பொண்ணுங்க யாருமே எழுந்திருக்கல. நீ எதுக்கு இப்ப
வெளியில நின்னு அல்லாடுற.” நான்சியின் அம்மா சில்வியா அழைத்தாள்.
சுற்றியிருக்கும் நான்கு தெருக்களில் நான்சி குடும்பம் மட்டுமே ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பம். அப்பா சார்லஸ் அம்மா சில்வியா. சார்லஸ் பேசினால் அதிரும் தோரணை. ஆனால் அவரைப் பொறுத்தவரை பேசுவது கடைசி பட்சம். தானுண்டு தன் வேலை உண்டு என இருப்பார்.
தெருநாடகம் பற்றி செல்வி சொல்லும்பொழுது ஆசையாக இருக்கும் நான்சிக்கு. இந்த முறை எப்படியாவது அப்பாவிடம் அடம்பிடித்து அனுமதி பெற்று செல்வியோடு சேர்ந்து நாடகம் பார்த்துவிடவேண்டுமென ஒரு வாரமாக திட்டம் போட்டுக் கொண்டிருந்தாள் எப்படி அப்பாவிடம் கேட்க சரியான நேரம் எதுவென? யோசனை எதுவுமின்றி தலையில் கைவைத்து விட்டாள்.
அம்மாவிடம் சொல்லி பார்த்தால் அம்மா எனக்கு தெரியாது என்று சொல்வாள் அப்பா சொன்னால் நீ போவென சொல்லிவிடுவார். அம்மாவும் அப்பாவுக்கு பயப்படுவது நான்சிக்கு தீரா பிரச்சினை. அடுத்தநாள் நான்சி தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்க வேண்டுமென தீர்க்கமாக முடிவெடுத்து தூங்கி விட்டாள்.
ஒருவாரமாக நான்சியும் செல்வியும் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தனர் அடுத்த வாரம் முதல் புரட்டாசி சனிக்கிழமை கம்ப சேவை.
வருடா வருடம் நடைபெறும் அன்று இவர்கள் வசிக்கும் ராஜா தெருவெல்லாம் கோலாகலமாக இருக்கும் தீபாவளிக்கும் மேலாக கொண்டாட்டமாக இருக்கும்.
நான்சிக்கு ஏனென்று பெயர் காரணம் தெரியாது . தெரிந்து கொள்ளவும் அவள் நினைத்ததில்லை.
தெரு முனையில் பெருமாள் கோவிலும் அதை ஒட்டி விண்ணைத் தொடும் அரசமரமும் அதற்கடுத்து. நிலா நீச்சலடிக்கும் தாமரைக் குளமும் அங்கே வருவோர் போவோரை வசீகரக்கும்.
அரசமரம் குடையெனில், குளம் மழை, குளத்தை சுற்றிலும் நீர் பூக்கள் செடிகள், இலவ மரங்கள், தென்னை மரங்களென வரிசைக்கட்டி அழகு கொட்டிக்கிடக்கும்.பல வருட நினைவுகளோடு நின்று கொண்டிருக்கும் மரங்களின் நிழல்களில் உட்கார்ந்து கொண்டு பார்த்தால் மடம் மற்றும் இரண்டு தெருக்களின் முனை வரை நன்றாகவே தெரியும். அந்த நிழல்கள் அண்ணன்மார்களுக்கே சொந்தம். எல்லா புரட்டாசி சனிக்கிழமைகளிலும் இவர்கள் போவதற்கு முன்னமே யாசகர்கள் வந்து இடத்தை நிரப்பி விடுவார்கள்
அவர்களை வைத்த கண் வாங்காமல் வேடிக்கை பார்ப்பார்கள் சிறுவர் சிறுமிகள்.
உயிர்ப்பும் உணர்ச்சியும் எல்லோர் மனங்களிலும் திருவிழா காலங்களில் ஒட்டிக் கொள்ளும். குறிப்பாக சிறுவர் சிறுமிகளின் முகங்கள் அதிக வண்ணங்கள் கொண்ட மலரை போல மலர்ந்திடும்.
அனைத்து வீடுகளிலும் குறைந்தபட்சம் வெளிப்புறம் சுண்ணாம்பு பூச்சி புதிதாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் மாவிலையில் தோரணம் கட்டி தெருவில் கோலங்கள் இட்டிருக்கும். அலங்கார விளக்குகள் மின்னிக் கொண்டிருக்கும்.
துளசி வாசம் வீசும். சாலையோரங்களில் பீளிச்சிங் பவுடர் போட்டு ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் தற்காலிக மின் விளக்குகளும் ஐந்து வீட்டுக்கு ஒரு ஒலிப்பெருக்கி கட்டப்பட்டிருக்கும்.
பஜனை பாடல்கள், பக்தி பாடல்கள், திரையிசை பாடல்கள் என மாறி மாறி ஒலித்துக் கொண்டிருக்கும்.
சுற்றியுள்ள நான்கு தெருவிலுள்ள பெரியவர்கள் சிறியவர்கள் எல்லோரும் ஒன்று கூடுவர். பிள்ளைகள் எல்லோரும் ஆட்டம் பாட்டம் என தெருவில் விளையாடி மகிழ்வார்கள்
ஏழை பணக்காரர் வித்தியாசமின்றி, வயது வித்தியாசமின்றி யாவரும் சமமாய்…சிறகு முளைத்து பறப்பார்கள். முதல் புரட்டாசி சனி இரவு போடப்படும் தெரு நாடகத்தை
பார்க்க சுற்றி இருக்கின்ற பத்து தெருக்களிலிருந்தும் கூட்டம் வரும்.
தன் தோழி செல்விக்காக கோவிலில் நடைபெறும் பூஜைகளில் கலந்து கொள்வாள் விபூதியும் குங்குமம் தன் நெற்றியிலோ கைகளிலோ அனுமதிக்கமாட்டாள்
அங்கே கொடுக்கும் உணவுகளையும் வாயில் வைக்க மாட்டாள். யார் தந்தாலும் தவிர்த்து விடுவாள் ஒற்றை புன்னகை உதிர்த்து. செல்வி தந்தால் பேசாமல் இருப்பாள்.
மேலும் செல்வியோடு அந்த கோவிலையே சுற்றிச்சுற்றி வருவாள்.அங்கு சொல்லப்படுகின்ற சிறு சிறு வேலைகளை செல்வியோடு சேர்ந்து செய்வாள். அதில் அவளுக்கு ஒரு ஆனந்தம்.
நான்சியும் செல்வியும் தூங்குகிற நேரம் போக எல்லா நேரங்களிலும் ஒன்றாகவே இருந்தார்கள்.
செல்வி நீச்சலடிப்பதையும் துணி துவைப்பதையும் படித்துறையில் உட்கார்ந்து ஆச்சரியம் தெறிக்க கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருப்பாள் அவளுக்கு பெருமிதமாகவும், பொறாமையாகவும் இருக்கும்
செல்வியின் தெற்றுப்பல் அழகாக இருக்கும். சிரிக்கும்போது கன்னத்தில் விழுகிற குழி பேரழகு. நான்சி இவைகளையெல்லாம் கண்டு ரசிப்பாள்.
அவ்வபோது நான்சி செல்வியிடம் சொல்வாள் பார்த்து கவனமா போ செல்வி மீன்கள், பாம்பு வந்து கடிச்சிட போகுது செல்வியின் மீது மிகுந்த அக்கறை கொண்டவள். ஒரே வயதுதான் என்றாலும் பக்குவமாக பேசுவாள்.
நான்சியின் அப்பா ஊரில் இல்லாத விடுமுறை நாட்களில், விஷேச தினங்களில் இலக்கு புரியாமல் வீடு, கோவில், மரம், குளம் பெட்டிக்கடை என சுற்றி திரிந்துக் கொண்டிருப்பார்கள்.
ஒரு வாரம் முன்பதாகவே புரட்டாசி முதல் சனிக்கிழமை காரியங்களுக்கு நிதி திரட்டுவது என்ன நாடகம் போடுவது, எவ்வளவு யாசகர்களுக்கு சமைப்பது பணம் எவ்வளவு செலவு ஆகுமென விடிய விடிய கலந்தாலோசிக்கும்
பெருந்தலையின் வாயை பார்த்துக் கொண்டிருப்பாள்.
முன்பெல்லாம் ஐந்து நாட்கள் நடைபெற்ற நாடகம் மூன்று நாட்களாகி இந்த வருடம் ஒரு நாள் மட்டுமென முடிவெடுக்கப்பட்டது.
நான்சிக்கு நாடகம் பார்க்க ரொம்ப பிடிக்கும் அவளை வீட்டிலேயே அடைத்து விடுவார் மிகவும் கண்டிப்பான நான்சியின் அப்பா. வெளியவே விடமாட்டார் குறிப்பாக இதுபோன்று நடைபெறும் கோவில் விழாக்களில் குறிப்பாக புரட்டாசி மாதங்களில் கூட்டம் அதிகமிருக்கும் என்பதாலும் அவளை கவனித்துக் கொள்ள இவர்கள் அவளோடு இருக்க மாட்டார்கள் என்பதாலும். என்ன வேணாலும்
வீட்டில் பண்ணு ஆனால் படியை விட்டு இறங்கக்கூடாது. விளையாடுவதென்றால் வீட்டிற்குள்ளேயே விளையாட வேண்டும். வெளியில் சென்றால் காணாமல் போய்விடுவாய். பூச்சாண்டி சாக்குப் பையில் பிடித்து கொண்டு போய் விடுவானெ பேசியே பயமுறுத்தி மிரட்டிவைப்பார். இதற்கு முன்பெல்லாம் கம்பசேவையின் போது வெளியே செல்ல , நாடகம் பார்க்க
அப்பாவின் அனுமதி கிடைக்காமல் அழுதுகொண்டே தெருவில் நடக்கக்கூடிய நிகழ்வுகளை ஜன்னலோர வழியாக வேடிக்கை பார்ப்பதே நான்சியின் வாடிக்கையாக இருந்தது.
நான்சியின் அம்மாவும் எத்தனையோ முறை அப்பாவிடம் சொல்வாள் அவர்களோடு தான் நாமும் வசிக்கிறோம். அவள் எங்கு போய் விளையாடுவாள் ஆறாவது தானே படிக்கிறாள். இன்னும் கொஞ்சம் வயதானபிறகு புரியும் அவளுக்கு. அப்பொழுது அவளாகவே வெளியில் போக மாட்டாள் விளையாடிவிட்டு வரட்டும். இப்படியாக நான்சிக்காக அவள் அம்மா பரிந்து பேசுவாள் அப்பாவிடம். ஆனால் ஒரு பிரயோஜனமும் இல்லை.
அவளுக்கு ரொம்ப செல்லம் கொடுக்கிற இதெல்லாம் நல்லதுக்கு இல்லை. நான்சி அம்மாவை அசை மடக்குவார். சின்னப் பிள்ளைகளுக்கு புரியாது நாமதான் காரணம் சொல்லி விளக்கனும். அவளை வெளியில அனுப்பிவிட்டு வீட்ல நீ நிம்மதியாக இருக்க பார்க்கிறாய் இந்த வார்த்தையை சொல்லும்போது சில்வியா அமைதியாகி விடுவாள்.
இந்த முறை எப்படியாவது நாடகத்தைப் பார்த்து விடவேண்டும். அவள் அதிர்ஷ்டம். நேற்றிரவு திடீரென அப்பா வெளியூர் போனவுடன் அம்மாவிடம் கெஞ்சி கூத்தாடி அனுமதிக்க வைத்துவிட்டாள்.
என்ன செய்கிறோம் என்ற நினைப்பின்றி அவசர அவசரமாக அம்மா சொன்ன வேலையெல்லாம் செய்து முடித்து விட்டாள். அவள் நினைவெல்லாம் ச செல்வியிடம் சொல்ல வேண்டும். ஜாலிய சுத்த வேண்டுமென்பதே.
மணி எட்டானது. ஒரு வழியாக ராஜா தெரு கலைகட்ட ஆரம்பித்தது. மடம் முழுவதும் செயற்கை சிரிப்புகளும், குதூகலமும் நிறைந்திருந்தது.
செல்வி இவளை நோக்கி வருவதை கண்டு வாசலில் காத்திருந்த நான்சி தான் அனுமதி வாங்கியதை அருவியின் ஆர்ப்பரிப்போடு சொன்னாள். நாடகம் பார்க்கும் பொழுது தின்பதற்குரிய தின்பண்டங்களை
வாங்க தன் உண்டியலில் இருந்த சில்லறை காசுகளை அவளிடம் எடுத்துக்காட்டி அருகில் உள்ள பெட்டி கடைக்கு செல்வியை அழைத்து கொண்டு போனாள்.
வருடத்திற்கு ஒருமுறை வரும் மைக் செட்டை, கரகாட்டகாரர்களை, நாடகக் கலைஞர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
பின்பு குளக்கரையில் உட்காருவது கோவில் வாசலில் உட்காருவது அங்கேயும் இங்கேயும் வருவோர் போவோரை வேடிக்கை பார்ப்பது அன்றைய மாலை பொழுது முடிந்தது. சந்தோஷத்தோடு இருந்தாள். அச்சமயம் இன்று எப்படியும் வள்ளிதிருமணம் நாடகத்தை பார்த்து விட வேண்டும் செல்வியிடம் சொன்னாள். நாடகம் முடியும் வரை பார்க்கலாம் என்பதை நினைத்து மகிழ்ந்தாள். வந்திருந்தவர்களுக்கு பாராட்டு வார்த்தைகள் ஒலிபேசி வழியே கூட்டத்துக்குள் பாய்ந்து சென்றன.
பசியை மட்டும் அழைப்பாக ஏற்று கம்ப சேவைக்கு கூட்டமாக வந்து அன்னதான பந்தியில் வெவ்வேறு ஊர்களிலிருந்து ராஜாத் தெருவுக்கு காலையிலேயே வரத் தொடங்கிய யாசகர்கள்
அமர்ந்திருந்தனர்.
மணி சாயங்காலம் ஆறு ஆனது. உள்ளே வா ஜெபம் சொல்லனும் நைட் சாப்பாடு சாப்பிட்டு போலாம் வெளியில ஒரே கூட்டமா இருக்கு நைட்டு நாடகத்திற்கு தான் பர்மிஷன் கேட்ட இப்ப எங்க சுத்துற.
செல்வி வந்து உன்னை கூப்பிட பிறகு அவளோட போ. அதுக்கு முன்னாடி வெளியில போக கூடாது. மனப்பாட செய்யுளை ஒப்பிவிப்பது போல ஒப்பித்தாள் ஒரே மூச்சில்.
அம்மா வேற படுத்துறாங்க அப்பாதான் இல்லைல. என்னை இன்று ஒருநாள் மகிழ்ச்சி யா இருக்க விட்டாதான் என்ன இன்னைக்கு ஒரு நாளுதான. மனசுக்குள் சொல்லிக் கொண்டே உள்ளே போனாள்.ஜெபித்து விட்டு அவசர அவசரமாக டிபன் சாப்பிட்டு விட்டு சுவற்றின் கடிகாரத்தை வெறித்தபடி பார்த்தாள். நான்சி வீட்டில் உள்ள சுவர் கடிகாரம் மணற் கடிகாரம் மாதிரி சொட்டு சொட்டாக நேரத்தை தள்ளியது.
மணி எட்டாகிறது.
செல்வி வேற இன்னும் கூப்பிடவரல ப்ச். நான்சிக்கு இருப்புக் கொள்ளவில்லை. வாசலை பார்த்துக்கொண்டே இருந்தாள்.
வெளி திண்ணைக்கு போகலாம்னு பார்த்தா வீதியை பார்த்தவாறு நான்கு யாசகர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். எட்டிப்பார்க்கவே வெட்கமாக இருந்தது.
தெருவில் ஒரே கூட்டம்.
சுவர்கடிகாரம் மணி ஒன்பதை காட்டியது. நான்சி இரவு உணவு அருந்தி விட்டு காத்திருந்தாள்.
மெதுவாக கேட்டாள் அம்மா நான் போகட்டுமா? நான்சியின் அம்மா கண்டிப்பாக சொல்லிவிட்டாள் செல்வி வந்து அழைத்தால் மட்டுமே போக வேண்டுமென்று.
இரண்டு கோமாளி வருவாங்களாம் இன்னைக்கி நாடகத்துல நாடகம் ஆரம்பிச்ச உடனே அவரை வந்து பாக்கலாம்னு ஒரு அண்ணன் எங்கிட்ட சொன்னாரு. நீயும் வரியா போய் பாக்கலாமுனு செல்வி
சொன்னதெல்லாம் நினைத்துக் கொண்டே ஜன்னலோரமாக கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தாள். காலையிலிருந்து அலைந்த அசதியின் மிகுதியால் கண்ணின் இமைகள் தன்னையறியாமல் மூட அப்படியே உறங்கிப் போனாள்.

ஆசிரியர் குறிப்பு

வயது 49.
ஆசிரியர், கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், கட்டுரையாளர்
படைப்புகள்:

  1. Mary’s voice splashes as verse – poetry book
    2.Inner Light – 365 inspirational Quotes book
    3.Surviving soul – poetry book
  2. Your quotes my thoughts – quote book
  3. Poetry writing for everyone – A guidebook
  4. நித்திரை நினைவுகள்- கவிதை தொகுப்பு
  5. மனச்சிப்பாயின் நகர்வு-
    கவிதை தொகுப்பு
  6. அந்தரத்தில் நீர் மலர் ஹைக்கூ தொகுப்பு
  7. நூலோடு உறவாடு – சிறார் மலர்
  8. கூழாங்கற்கள் பூக்கும் மரம்

பல விருதுகள் பெற்றிருக்கிறார்.

டி வி ராதாகிருஷ்ணன்/கடவுளின் குழந்தை – விருட்சம் நாளிதழ்

3 Comments on “அ.மேரி சுரேஷ்/கனவை விழுங்கும் உறக்கம்”

Comments are closed.