ஜெ.பாஸ்கரன்/சின்ன அண்ணாமலை என்னும் “உற்சாக எரிமலை”

பேராசிரியர் வ.வே.சு.வின் தமிழ் வளர்த்த சான்றோர் தொடரின் 79 வது நிகழ்வில், திரு சின்ன அண்ணாமலை பற்றி வ.வே.சு.வுடன் உரையாடியவர் திரு நல்லி குப்புசாமிச் செட்டியார்! பதிப்பாளர், எழுத்தாளர், பேச்சாளர், விடுதலைப் போரில் துப்பாக்கி சூடு கண்ட தியாகி, பத்திரிகை ஆசிரியர், சிவாஜி ரசிகர் மன்றத் தலைவர், சினிமா கதாசிரியர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட சின்ன அண்ணாமலை அவர்களின் நகைச்சுவை ஊரறிந்த ஒன்று! அன்று மயிலை ஆர் ஆர் சபா அரங்கு, பதிப்பாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், வாசகர்கள், அவருடன் பழகியவர்கள், அவர்களின் சந்ததிகள் என நிறைந்து வழிந்தது!

அவரது புத்தகங்கள், எழுத்துகள், நகைச்சுவை, பதிப்புகள், வாழ்க்கையில் சில நிகழ்வுகள் எனப் பேராசிரியர் வ.வே.சு. சிறப்பான தகவல்களைக் கூறினார். தி நகரில், சின்ன அண்ணாமலையின் வீட்டுக்கு அடுத்த வீட்டில் வசித்த நல்லி செட்டியார் தன் நினைவிலிருந்து பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

நிகழ்விலிருந்து சில தெறிப்புகள்: (சின்ன அண்ணாமலை அவர்களின் ‘சொன்னால் நம்ப மாட்டீர்கள்’ – சுய வரலாற்று நூல் அனைவரும் வாசிக்க வேண்டிய ஆவணப் பதிவு).

சின்ன அண்ணாமலை அவர்களின் இயற்பெயர் நாகப்பன்.

ஜூன் 18, 1920 ல் பிறந்து, ஜூன் 18, 1980 ல் – 60 வருடங்கள் வாழ்ந்து – மறைந்தார்.

தன்னுடைய அறுபதாவது ஆண்டு விழாவின் போது புனித நீரில் அபிஷேகம் செய்யும் போது மயங்கி விழுந்து, இயற்கை எய்தினார் – சரியாக 60 ஆண்டுகள் வாழ்ந்து, பிறந்த அதே நாளில் இயற்கை எய்தியதைப் பலரும் சிறப்பாகக் குறிப்பிடுவார்கள்.

1944 ஆம் ஆண்டு, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு, 20 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டிக்கொடுத்தார் சின்ன அண்ணாமலை. “அந்தக் காலத்தில் அது பெரிய பணம், இப்போது அதன் மதிப்பு 20 கோடிக்கு வரும்!” என்றார் நல்லி.

நிதி திரட்டி விழா எடுப்பவர் அண்ணாமலை. அந்த விழாவிற்கு, ராஜா சார் அண்ணாமலை செட்டியார், கோவை அண்ணாமலை பிள்ளை போன்ற பெரிய மனிதர்கள் வந்திருந்தார்கள். மேடையில் பேசிய ராஜாஜி, அருகிலே அமர்ந்துள்ள அண்ணாமலையைக் குறிப்பிடும்பொழுது, குழப்பமில்லாமல் இருக்க, ‘சின்ன அண்ணாமலை’ என்று குறிப்பிட்டார். அந்தப் பெயரே அவருக்கு நிலைத்து விட்டது! ராஜாஜி அவர்களுக்கு சின்ன அண்ணாமலை மீது மிகுந்த அன்பும், மதிப்பும் உண்டு. அவரை, “உற்சாக எரிமலை” என்று குறிப்பிடுவார். நகைச்சுவை ததும்பப் பேசுவார் – ஆனால் போராட்டங்களையே வாழ்க்கையாகக் கொண்டவரை, வேறு எப்படி அழைக்க முடியும்?

போகின்ற இடமெல்லாம் போராட்டமே வாழ்க்கையாக கொண்டவர் சின்னமலை. கமலா நேரு மறைந்தபோது, அவருக்கு அஞ்சலி செலுத்த மறுத்த பள்ளிக்கு எதிராக, தேவகோட்டையில் போராட்டம் நடத்தினார்! அதனால் பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவர் எப்படியாவது படிக்க வேண்டும் என்று, அவருடைய தந்தையார் கோபிசெட்டிபாளையத்திலிருந்த ‘டைமண்ட் ஜூபிளி’ பள்ளிக்கு அனுப்பி வைத்தார். அந்தக் கல்லூரி விழாவிற்குத் ‘தீரர்’ திரு சத்யமூர்த்தி அவர்களை அழைத்து வந்தார் சின்ன அண்ணாமலை. அவருடைய உரைக்குப் பிறகு, சின்ன அண்ணாமலை பேசினார். அவரது பேச்சில் மகிழ்ந்த சத்தியமூர்த்தி, அன்று மாலையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் அவரைப் பேசச் சொல்கிறார். அன்று முதல், சத்தியமூர்த்தி அவர்களின் ஆணையை ஏற்று, வாழ்நாள் முழுவதும் கதர் ஆடையையே அணிந்தார் சின்ன அண்ணாமலை!

மலேயாவுக்கு படிப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்டார் சின்ன அண்ணாமலை. ஆங்கிலோ சைனீஸ் பள்ளியில் படித்தார். அங்கும் மதுவுக்கு எதிரான போராட்டங்களை நடத்தினார்! போராட்டங்களில், கள்ளுக்கடைகளுக்குத் தீ வைக்கப்பட்டன. சின்ன அண்ணாமலை கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு வந்த மலேயா கவர்னர், 17 வயதே ஆன சின்ன அண்ணாமலையைப் பார்த்து,” Who is this boy?” என்று கேட்க, “I am father of a boy” என்று பதில் சொல்லியிருக்கிறார்! கவர்னர் “What is your age?” என்று கேட்க, சி.அ.,”17 – செவண்டீன்” என்றாராம். கவர்னரும் அவர் மனைவியும் சிரிக்க, சி.அ., “Yes, I got married when I was 13” என்றாராம். உடனே கவர்னர், “Why do people get married?” என்று கேட்க, அதற்கு சி.அ. “To get children” என்று பதில் கொடுத்தாராம்! தன் நகைச்சுவைத் திறத்தால் எந்த ஒரு சிக்கலான சூழ்நிலையிலும், நிமிர்ந்து நின்றவர் சின்ன அண்ணாமலை! அத்துடன் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படார் சின்ன அண்ணாமலை!

ஏ.கே.செட்டியார் போன்றோரின் தூண்டுதலால் ‘தமிழ்ப் பண்ணை’ பதிப்பகத்தைத் தி நகரில் தொடங்குகிறார் சின்ன அண்ணாமலை. தொடங்கி வைத்தவர் திரு ராஜாஜி. வெவ்வேறு தலைப்புகளிலான, சின்னஞ்சிறு புத்தகங்களை நேர்த்தியாக அச்சிட்டு, மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்தார் சின்ன அண்ணாமலை. வாசலில் கரும்பலகை ஒன்றை வைத்து, அதில் புத்தகங்களைப் பற்றியும் அந்த புத்தகங்களில் உள்ள செய்திகளைப் பற்றியும் எழுதி வைப்பாராம். ‘அந்தக் காலத்தில் இது ஒரு வித்தியாசமான விளம்பர உத்தியாக இருந்தது’ என்றார் நல்லி செட்டியார். இவரது ஊக்கத்தின் பேரில் பலர் சென்னையில் பதிப்பகங்களைத் தொடங்கினர். தேவக்கோட்டையிலிருந்துதான் பல பதிப்பாளர்கள் தோன்றினர். ‘பதிப்பகங்களின் பிதாமகன்’ என்றே சிலர் குறிப்பிடுகிறார்கள்.

டிகேசி, கலீல், டி.எஸ்.சொக்கலிங்கம், மகாகவி பாரதி, கல்கி (பாரதி பிறந்தார்), ம.பொ.சி.(வி.ஓ.சிதம்பரனார் – கப்பலோட்டிய தமிழன் எனப் பெயர் மாற்றம் கண்டது), வெ.ராமலிங்கம் பிள்ளை, சத்தியமூர்த்தி போன்ற பிரபலங்களின் புத்தகங்களைப் பதிப்பித்துள்ளார் சின்ன அண்ணாமலை.

‘சீனத்து சிங்காரி’ அவர் எழுதிய முதல் சிறுகதை. ‘சொன்னால் நம்ப மாட்டீர்கள்’ (தன் வரலாறு), ‘சிந்திக்க வைக்கும் சிரிப்பு கதைகள்’, ‘கண்டறியாதன கண்டேன்’, ‘தலையெழுத்து’, ‘சர்க்கரைப் பந்தல்’, ‘ராஜாஜியின் உவமைகள்’ போன்ற பல புத்தகங்களை எழுதி, வெளியிட்டுள்ளார். இவருடைய படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு உள்ளன.

1942 இல் இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்டு, காவல்துறை கட்டுப்பாட்டை மீறியதற்காக இவர் கைது செய்யப்பட்டு தேவகோட்டையில் இருந்து 22 மைல் தொலைவில் உள்ள ‘திருவாடனை’ சிறையில் அடைக்கப்பட்டார். கொதித்து எழுந்த பொதுமக்கள், 24 மணி நேரத்தில் பெரும் ஆர்ப்பாட்டம் செய்து, காவல் நிலையத்தில் இருந்து சிறையை உடைத்து அவரை மீட்ட வரலாறு, உலக சரித்திரத்திலேயே முதல் முறையாக நடந்தது. மக்களின் கோபத்தையும், ஆவேசத்தையும் கண்டு மிரண்டு போன போலீஸார், சிறையின் சாவியை கொடுத்து, சின்ன அண்ணாமலையை அழைத்துச் சொல்லச் சொன்னார்கள்! அதை மறுத்து, பூட்டை உடைத்து தான் அழைத்துச் சென்றார்கள் போராளிகள்!

இந்த வழக்கில், சின்ன அண்ணாமலைக்கு நான்கரை ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், ராஜாஜியினுடைய வாதத்திறமையால், தண்டனை 6 மாதமாகக் குறைக்கப் பட்டது!

தமிழ் ஹரிஜன், சிவாஜி ரசிகன், குமரிமலர், வெள்ளிமணி( 1946) போன்ற இதழ்களை நடத்தினார் சின்ன அண்ணாமலை.

அவரைப் பற்றி, ராஜாஜி காந்திஜியிடம் சொல்ல, மிகவும் மகிழ்ந்து, ஹரிஜன் பத்திரிகையைத் தமிழில் நடத்த அனுமதியும் ஆசிகளையும் வழங்கினார் காந்திஜி. அப்படிப் பிறந்தது தான் ‘தமிழ் ஹரிஜன்’ பத்திரிக்கை.

நாமக்கல் கவிஞர், சா கணேசன், சத்தியமூர்த்தி, கல்கி, ராஜாஜி இவர்களால் தேசபக்தியும், நாட்டுப்பற்றும், விடுதலை வேட்கையும் கொண்டார் அண்ணாமலை.

இவரது ‘பூட்டை உடையுங்கள்’ புத்தகம் குறித்து எழும்பூர் மேஜிஸ்டரேட் கோர்ட்டில் ஒரு வழக்கு வந்தது. அப்போது மாஜிஸ்ட்ரேட் ஆக இருந்தவர் கோடீஸ்வர ராவ் என்கிற தெலுங்கர். அவருக்குத் தமிழ் தெரியாது. கேஸை மொழிபெயர்த்துச் சொன்னவர்கள் ‘பூட்டை உடையுங்கள்’ என்பதற்கு ‘பிரேக் ஓபன் தி லாக்’ என்று சொல்லிவிட்டார்கள்

“எதுக்கு மேன் ஜெயில் பூட்டை உடைக்க சொன்னே?’ மேஜிஸ்ட்ரேட்என்று கேட்க, அதற்கு சின்ன அண்ணாமலை, ”இதன் அர்த்தம் ‘ரிசால்வ் தி டெட் லாக்’ என்பதாகும்’ என்றார்.

‘லாக்’ என்றால் ‘பூட்டு’, ‘உடை’ என்றால் ‘பிரேக்’ – ‘ பூட்டை உடை’ என்று தான் பொருள், என்று மேஜிஸ்ட்ரேட் சொல்ல, சர்க்கார் வக்கீல், இவரைக் கைது செய்த இன்ஸ்பெக்டர் அனைவரும் தலையாட்டினர்! அப்போது சின்ன அண்ணாமலை, “கிக் த பக்கெட்” என்றால் ‘இறந்து போனான்’ என்ற பொருள்; அதனை ‘பக்கட்டை உதைத்தான்’ என்றா சொல்வது?” என்றார். கோர்ட் சிரித்தது.

“வேறு ஏதாவது சொல்ல வேண்டுமா?” – மேஜிஸ்ட்ரேட் கேட்டார்.

“நீங்கள் தெலுங்கர்; சரியாக தமிழ் தெரியவில்லை. என்னைக் கைது செய்த இன்ஸ்பெக்டரோ கன்னடக்காரர். அவருக்கும் தமிழ் தெரியாது. கேஸ் நடத்த வந்த சர்க்கார் வக்கீலோ மலையாளி. நான் வெளியிட்டிருக்கும் புத்தகமோ ‘தமிழ்’ புத்தகம். ஆகவே தமிழ் தெரிந்தவர் இந்த வழக்கை நடத்த வேண்டும் என விரும்புகிறேன்” என்று கேட்டுக்கொண்டார் சின்ன அண்ணாமலை.

மேஜிஸ்ட்ரேட்டுக்குக் கோபம் வந்து, ”வாட் ‘டமில்’ ‘டமில்’ என்று கூறி, ஆறு மாத சிறை தண்டனை என்று தீர்ப்பு வழங்கினார்! கைது செய்த இன்ஸ்பெக்டர், சின்ன அண்ணாமலையிடம் வந்து, ”காரியத்தையே கெடுத்து விட்டீர்களே; மாஜிஸ்ட்ரேட் மூன்று மாதம் தான் தண்டனை கொடுப்பதாக இருந்தார், ஆனால் நீங்கள் தமிழ் கிமிழ் என்று பேசி ‘ஆறு மாதம்’ சிறைத் தண்டனை வாங்கிக் கொண்டீர்களே” என்று அனுதாப பட்டார்!

திரு. நல்லி செட்டியார் தன்னுடைய நினைவுகளில் இருந்து ஏராளமான செய்திகளை, இயல்பான பேச்சுத்தமிழில் சொல்லிச் சென்றார். இராமகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியில், சின்ன அண்ணாமலையின் புதல்வர் கருணாநிதி, நல்லியின் வகுப்பு தோழர்; பாண்டி பஜாரில், அடுத்த வீடு தமிழ் பண்ணை. சின்ன அண்ணாமலை அவர்களைப் பார்க்கப் பெரும் தலைவர்கள் ராஜாஜி, பெரியசாமி தூரன், மீ.ப.சோமு போன்றோர் வந்து உரையாடிக் கொண்டிருப்பார்களாம். பின்னர் எல்லோரும், அப்போது உஸ்மான் ரோட்டில் வசித்து வந்த வெ.சாமிநாத சர்மா அவர்களின் வீட்டுக்குச் செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்களாம். தான் நேரடியாகப் பேசியதில்லை என்றாலும், அவரைப் பற்றி பல சுவாரசியமான விஷயங்களைச் செட்டியார் கூறினார்கள். (அரங்கில் அமர்ந்திருந்த ‘திரு சீனி விஸ்வநாதன்(93 வயது) அவர்கள்தான், சின்ன அண்ணாமலை அவர்களுடன் நெருங்கிப் பழகியவர். அவரால் மேடைக்கு வரமுடியாததால், நான் பேசுகிறேன்’ என்று நல்லி செட்டியார் கூறினார் – அவரது அவையடக்கம் பிரமிக்க வைப்பது!)

சின்ன அண்ணாமலையின் முயற்சியாலேயே, பனகல் பார்க்கின் மேற்கு பக்கம் அமைந்திருக்கும் கறிகாய் மார்க்கெட் காமராஜர் ஆட்சியில், சென்னை கார்ப்பரேஷனால் கட்டப்பட்டது. அந்த விபரங்களை நல்லி செட்டியார் சுவாரசியமாகக் கூறினார். பின்னர், தன்னுடைய கடைக்கு வந்திருந்த ஒரு வெளிநாட்டுப் பெண்மணி, அந்தக் கறிகாய் மார்க்கெட்டுக்குச் சென்று, எல்லாவற்றையும் பார்த்து, மகிழ்ந்து, வியந்ததையும் கூறினார், அந்தப் பெண்மணி ‘ஜாக்குலின் கென்னடி’!

காங்கிரஸ் தொண்டர்களை ஒருங்கிணைக்கும் வகையில், சிவாஜி ரசிகர் மன்றத்தைத் தொடங்கினார் சின்ன அண்ணாமலை. ஒரு கதாசிரியராக, ஒரு தயாரிப்பாளராக, பல படங்களை தயாரித்திருக்கிறார். தங்க மலை ரகசியம், நான் யார் தெரியுமா, தர்மராஜா போன்ற படங்களின் கதாசிரியர் இவர்தான். பிரசிடெண்ட் பஞ்சாட்சரம், ஆயிரம் ரூபாய், ஜெனரல் சக்கரவர்த்தி, தர்மராஜா, கடவுளின் குழந்தை போன்ற படங்களை தயாரித்துள்ளார்!

வரலாற்றுப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த எம்ஜிஆரை, தான் தயாரித்த ‘திருடாதே’ படத்தின் மூலம் சமூகப் படங்களுக்கு மடை மாற்றியவர் சின்ன அண்ணாமலை. திருடாதே படம் எடுத்துக் கொண்டிருக்கும் போது எம்ஜிஆர் காலில் அடிபட்டு மூன்று மாதங்கள் நடிக்க இயலாமல் போகும்போது, சின்ன அண்ணாமலையைக் கூப்பிட்டு, ‘வட்டிக்கு நீ பணம் கொடுத்து கஷ்டப்பட வேண்டாம்’ என்று சொல்லி, படத்தை ஏஎல்எஸ் அவர்களுக்கு மாற்றிக் கொடுத்தாராம். (அந்தப் படத்திற்குத் ‘திருடாதே’ என்று நல்ல அறிவுரை சொல்லும் தலைப்பாகக் கொடுத்த மா.லட்சுமணன் அவர்களுக்கு 500 ரூபாய் பரிசு வழங்கினார் எம் ஜி ஆர் என்பது உபரித் தகவல்).

ம.பொ.சி. எழுதிய வ. உ. சி. வரலாறு ‘கப்பலோட்டிய தமிழன்’ ஆனது; ராமலிங்கம் பிள்ளையின் புத்தகம் ‘மலைக்கள்ளன்’ படமானது! இரண்டு புத்தகங்களையும் பதிப்பித்தவர் சின்ன அண்ணாமலை!

.