
அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 33
டாக்டர் பிரகாஷ்…
அந்த கார்ப்பரேட் மருத்துவமனையில் இதய நோய் நிபுணர்.
நல்ல கைராசியான மருத்துவர் என பெயர் எடுத்தவர்.வயது 35 க்குள் தான்
இருக்கும்.அவருக்கு கீழே மூன்று மருத்துவர்கள்.மூன்று செவிலியர் என ஒரு
குழுவே உண்டு..
செவிலியரில் ஒருவரான ஃபெலோமினா அழகான இளம்பெண் மட்டுமல்ல..திறமையான
நர்ஸும் கூட.அவளைப் பார்த்தாலே,அவள் அன்பு வார்த்தைகளைக்
கேட்டாலே..நோயாளிகளின் நோய் பாதி குணமாகி விடும்.
எந்த ஒரு அறுவை சிகிச்சை என்றாலும்..சிகிச்சை ஆரம்பிக்கும் முன் அந்த
டீம் ஒன்றாக உட்கார்ந்து விவாதிக்கும் அறுவை சிகிச்சையின் ஆரம்பம் முதல்..இறுதி வரை பிரகாஷின் அருகிலேயே
இருந்து, தேவைப்படும் உபகரணங்களை, அறிந்து எடுத்து கொடுத்து, பிரகாஷின்
நெற்றியில் அரும்பும் வியர்வை முத்துகளை ஒற்றி எடுத்து..சிகிச்சை
முடிந்ததும்..அவனுக்கு தேவைப்படும் சூடான காஃபியை கோப்பையில் ஊற்றி
கொடுத்து..என அனைத்து விஷயங்களையும் சுறுசுறுவென செய்பவள் ஃபெலோமினா
பிரகாஷ் யாருடனும் ..குறிப்பாக பெண்களிடம் நெருங்கி பழக
மாட்டான்.ஃபெலோமினா மட்டும் விதி விலக்கு.
ஒருநாள் பிரகாஷ் ஒரு அறுவை சிகிச்சை முடிந்து சோர்வுடன் வந்து அமர்ந்த
போது அவள் அவன் மீது காட்டிய அக்கறை அவனைக் கவர்ந்த்து.
திடீரென இப்படிப்பட்ட ஒருத்தி தன் வாழ்நாள் முழுதும் தன்னுடனே இருந்தால்
எப்படி இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது.
ஆண்-பெண் உறவுகள் சேர்வது எளிமையாய் இருக்கும் காலம் இது..
ஒரு இனிமையான மாலைப் பொழுதில் தன் மனதில் இருக்கும் எண்ணத்தை அவளிடம்
சொன்னான்………..
ஏற்கனவே சிவந்த நிறம் அவள்.இப்போது அந்த செம்மை மேலும் செம்மையானது.”சார்
நான் கிறித்துவ மதத்தை சேர்ந்தவள்..என்னை நீங்கள் ஏற்றுக் கொள்வதாய்
இருந்தாலும்..உங்கள் வீட்டில் சம்மதிப்பார்களா?” என்றாள்
@@@@@@@@@@@@@@@@@@@
மருத்தவமனையில்..இதய அறுவை சிகிச்சைக்காக..முதியோர் இல்லமொன்றில் இருந்து
வந்திருந்த அந்த முதியவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்..அறுவை சிகிச்சைக்கு
தயார் நிலையில் இருந்தவரிடம் வந்த நர்ஸ், “அப்பா..இப்ப ஒரு ஊசிப் போடப்
போறோம்” என்றவள் உடன் இருந்த மருத்துவரைக் காட்டி .”.இவர் செடடிவ்…ஊசி
போட்டதும்..உங்களுக்கு மயக்கம் வந்துடும்.அதற்கு பிறகு..ஆபரேஷன் டாக்டர்
வந்து ஆபரேஷன் பண்ணுவார்.வலியே தெரியாது.” என்றாள்.
முதியவர் அவளை ஏறிட்டு பார்த்தார்..கருணை நிறைந்த கண்கள்.தெய்வீக
முகம்..மகாலட்சுமியைப் போல அவருக்கு தெரிந்தாள்.
அவள்..அவரை..”அப்பா” என்ற போது..இதுவரை இல்லாத ஒரு உறவு ஒன்று ஏற்பட்டது
போலவே இருந்தது அவருக்கு
அறுவை சிகிச்சை முடிந்து ஆறு மணி நேரம் கழித்து கண்களை விழித்தவர்..தான்
ஐ சி யூ வில் இருப்பதை உணர்ந்தார். உடலின் எந்த பகுதியையும் அவரால்
அசைக்க முடியவில்லை.
.அப்போது அவர் கண் விழித்து விட்டதைப் பார்த்த நர்ஸ்.. அவர் செவியின்
அருகில் குனிந்து ,அப்பா..எப்படி இருக்கீங்க?ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சு
போச்சு..அமைதியா படுத்துக்கோங்க..வென்டிலேட்டர் வைச்சு இருக்கோம்..”
என்றாள்.
வெண்டிலேட்டரை வாயில் இணைந்திருக்க,மூக்கிலும் ஒரு டியூப் செருகப்பட்டு
இருந்தது.அதன் குழாய்கள் தொண்டைப் பகுதியில் குத்திக் கொண்டு வலித்தது.
அவர் முகம் சிணுங்குவதைப் பார்த்த நர்ஸ், “என்னப்பா..வலிக்குதா? ஒருநாள்
பொறுத்துக்கங்க.நாளைக்கு டாக்டர் சொன்னதும் எடுத்திடலாம்” என்றாள்.
வலி பொறுக்க முடியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தது.நர்ஸ் அவரது கண்களை
துடைத்து விட்டாள்.”அப்பா..அழாதீங்க..ஒருநாள் தானே..நாளைக்கே
சரியாயிடும்” என்றாள்.
@@@@@@@@@@@@@@@@@@
பிரகாஷ் சொன்னதைக் கேட்ட அப்பா கோபத்தில் குதித்தார்.அம்மாவோ என்ன
செய்வது எனத் தெரியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாய் நின்று
கொண்டிருந்தாள்.
“இதோ பாருடா..இந்த காலத்துல ஒருத்தரை டாக்டருக்கு படிக்க வைக்கணும்னா
எவ்வளவு பணம் செலவாகும் தெரியுமா? நீ ஆசைப்பட்டியேன்னு என் வாழ்நாள்
உழைப்பு ,சேமிப்பை எல்லாம் கொட்டி உன்னை படிக்க வைச்சேன்.பிறகு
எங்களுக்கு சேமிப்புன்னு ஒண்ணும் இல்லாட்டியும்..கடைசி வரைக்கும் எங்களை
நீ காப்பாத்துவேன்னு நினைச்சோம்..
ஆனா…இன்னிகு எல்லாமே விழலுக்கு இரைச்ச நீராய்ப் போச்சு.
நீ ஒரு டாக்டர்..உன் அந்தஸ்துக்கு ஏற்ப ஒரு டாக்டர் பொண்ணா பார்த்துதான்
கல்யாணம் பண்ணிப்பேன்னு நினைச்சோம்.ஆனா…நீ ஒரு நர்ஸை..அதுவும் வேற
மதத்துப் பொண்ணை லவ் பண்றேன்..அவளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்றதை
நினைச்சா..
இதோ பாருடா…நாங்க உனக்கு முக்கியம்னு நினச்சா..நாங்க சொல்ற
பொண்ணைத்தான் நீ கல்யாணம் பண்ணிக்கணும்..இல்ல..உன் இஷ்டப்படிதான்
நடந்துப்பேன்னும் சொன்னா..நாங்க இன்னிக்கே உன்னை தலைமுழுகிடறோம்.”
இந்த வயதானர்வர்களின் அசட்டு பிடிவாதம் இருக்கிறதே…அது என்றுமே
மாறாததாய் இருக்கிறது.
சர்ச்சை வளர..பிரகாஷ் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டான்.
ஆதரவற்ற பெற்றோர்..அவர்களது நண்பர் ஒருவர் மூலம் முதியோர் இல்லம் ஒன்றில்
போய்ச் சேர்ந்தனர்
@@@@@@@@@@@@@@@@
முதியவரின் நெஞ்சிற்கு நடுவிலும்.சற்று அதன் கீழேயும் துளையிட்டு
நிணநீர் சேகரிக்கும் பொருட்டுபடுக்கையின் இரு புறமும் பைகள் தொங்கிக்
கொண்டிருந்தன.
மேலும் சிறுநீருக்கான பை ஒன்றும் தொங்கிக்கொண்டிருந்தது.
கழுத்து பகுதியிலும் துளையிட்டு மருந்து செல்ல ஒரு டியூப் இணைத்திருந்தனர்
சிறிது நேரத்தில் அங்கு வந்த நர்ஸ்..நிரம்பி இருந்த நிணநீர் பைகள்
இரண்டையும் எடுத்து விட்டு வேறு இரண்டினை இணைத்தாள்.அதேபோன்று
நிரம்பியிருந்த சிறுநீர் பையை சற்றும் அருவருப்பின்றி
அகற்றிவிட்டு..புதிதாக ஒன்றை மாட்டினாள்.
அவள் கண்களைப் பார்த்தார் முதியவர்.
அந்த கண்களில் கருணை..
அவளை அருகே வருமாறு கண்களால் அழைத்தார்..அவளது கரங்களை ஆறுதலோடு சற்று பற்றினார்..
“அப்பா..நாளைக்கு வேண்டுமானால் பாருங்கள்..நீங்கள் ஒரு இளைஞனைப் போல ஆயிடுவீங்க..?”
@@@@@@@@@@@@@@@@
முதியோர் இல்லத்தில் சேர்ந்த அவர்கள் காதுகளில்..பிரகாஷ் ஃபெலோமினாவை
திருமணம் செய்து கொண்டு விட்டதாகவும்..அந்த கார்ப்பரேட் மருத்துவமனையின்
தில்லி கிளைக்கு சென்று விட்டதாகவும் செய்தி விழுந்தது.
பெற்ற மனம்…அவர்கள் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும் என்று வாழ்த்தியது.
சில ஆண்டுகள் கழிந்தது.அம்மாவின் உடல்நலம். மோசமாக..ஒரு நாள்
இவ்வுலகிலில் இருந்து விடை பெற்றாள் அவள்.
தந்தை தனியன் ஆனார்..
அப்போதும் வறட்டு பிடிவாதம்..மகன் எங்கிருக்கிறான்..என்று அறிந்து
கொள்ளவும் ஆசைப்படவில்லை.தான் இறந்த பிறகு தனக்கு என்று யாருமில்லாததால்
தன் உடலை சென்னை மருத்துவ கல்லூரிக்கு தானமாக கொடுத்து விட வேண்டும் என
இல்ல அதிகாரிகளிடம் சொல்லிவிட்டு..அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும்
செய்தார்.
இந்நிலையில்..சில நாட்களாக சோர்வு அதிகமாக..அவரால் முன்பு போல தினசரி
வேலைகளை கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இல்லத்திற்கு வருகை தரும் மருத்துவர் அவரை பரிசோதித்து விட்டு..அவருக்கு
இதயக் கோளாறு இருக்கக் கூடும் என்றும்..ஒரு மருத்துவ மனையில் சேர்க்கும்
படியும் சொன்னார்.
அவர் சொல்லி சென்ற அடுத்த நாள் பாத்ரூமில் வழுக்கி விழுந்து நினவை இழந்தார் அவர்
@@@@@@@@
தில்லிக்கு சென்ற பிரகாஷும், ஃபெலோமினாவும் மீண்டும் சென்னை
மருத்துமனைக்கு மாற்றப்பட்டனர்.
சென்னைக்கு வந்த பின்னர் பிரகாஷிற்கு தன் பெற்றோரைப் பார்க்க வேண்டும் என
தோன்றியது.ஆனால் அவர்களைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.
தான் அவர்களுக்கு அநீதி இழைத்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சியில்
தவித்தார்.கடைசியில்..மாதம் பத்து முதியோருக்கு இதயக்கோளாறு சிகிச்சையை
இலவசமாக தன் செலவில் செய்து..தனது தவறுக்கு பரிகாரத்தை தானே தேடிக்
கொண்டார்
ஒருநாள் அவர் மருத்துவமனையில் தனது அறையில் அமர்ந்திருந்த போது..ஒரு அவசர
கேஸ் மயங்கிய நிலையில் வந்திருப்பதாக செய்தி வர..அவசர சிகிச்சை
பிரிவிற்கு விரைந்தார்.
அங்கு நினைவின்றி படுத்திருந்த முதியவரைப் பார்த்தார்..
விரைவாக..அறுவை சிகிச்சைக்கு எடுத்துச் செல்லச் சொல்லி..தானும் தயாராய் ஆனார்
@@@@@@@@@@@@@@@@@@@
காலையில் கண்விழித்த முதியவரைப் பார்த்ததும் நர்ஸ் ஓடி வந்தாள்.
“அப்பா..எப்படி இருக்கீங்க?”
அவள் கண்களில் கருணை கலந்த ஒரு பாசம்.செவிலியர்கள் எல்லாம் கண்டிப்பாக
கடவுளின் குழந்தைகளாகத்தான் இருக்க வேண்டும் என எண்ணினார்.
கண்களால்..”வென்டிலேட்டரை எப்ப எடுப்பீங்க? ” என்றார்
“உங்களுக்கு மூச்சு சரியா வர வரைக்கும் எடுக்க மாட்டோம்.நீங்க நீண்ட
மூச்சு விட்டு பயிற்சி பண்ணுங்க. மூச்சு விடறது சரியானா பெரிய டாக்டர்
வந்து பார்த்து வென்டிலேட்டரை எடுக்கச் சொல்வார்”
முதியவர் சற்று தூங்க ஆரம்பிக்கும் நேரம்..மருத்துவர் வந்து
பார்த்தார்.”நல்ல முன்னேற்றம்..வென்டிலேட்டரை எடுத்துடலாம்” என்றார்.
@@@@@
அன்று முதியவர் டிஸ்சார்ஜ் ஆகி மீண்டும் முதியோர் இல்லம் செல்லலாம் என
மருத்துவமனை அறிவித்தது.
அவருக்கான மருத்துவ செலவு முழுவதும் மருத்துவமனையே ஏற்றுக் கொண்டு
விட்டது என்றனர் அவரிடம்
முதியவர் நர்ஸை அழைத்தார்..
“சொல்லுங்கப்பா என்ன வேணும்?”
தனது வலது கையை நீட்டினார்..டிரிப்ஸ் ஏற்றப்பட்டு எடுக்கப்பட்ட இடம்
நன்கு வீங்கி இருந்தது.அதைப் பார்த்த நர்ஸ் தன் மென்மையான கைகளால்
தேய்த்து விட்டாள்.சில நிமிடங்களில் வீக்கம் குறைய..”இப்ப சரியாய்
போச்சுப்பா..” என்றாள்.
“நான் இதுக்கு கூப்பிடலைம்மா..பெத்த பெண்ணைப் போல என்னை கவனிச்ச்ண்ட..நீ
யாரு..உன் பேரு என்னன்னு கூட நான் கேட்கல..உனக்கு கல்யாணம்
ஆயிடுச்சாம்மா? உன் கணவன் உன்னைப் போல ஒரு மனைவி கிடைக்க ரொம்ப கொடுத்து
வச்சிருக்கணும்”
“அப்பா..என் பேரு ஃபெலோமினா..உங்களுக்கு அறுவை சிகிச்சை செஞ்ச டாக்டர்
பிரகாஷ் என்னோட கணவர்”
முதியவரின் கண்களில் கண்ணீர்..
“அப்பா எல்லாம் தான் சரியாய் போச்சே..ஏன் அழறீங்க” என்ற நர்ஸ் அவர்
கண்களை துடைத்து விட்டார்.
ஆசிரியர் குறிப்பு
78 வயது இளைஞர்.36 ஆண்டுகள் பொதுத்துறை வங்கி ஒன்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
நடிகர்,நாடகத் தயாரிப்பாளர் இயக்குநர்,எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்டவர்.இதுவரை 32 க்கும் மேற்பட்ட, நாடகங்கள் எழுதித் தயாரித்து மேடையேற்றியுள்ளார்.
இவற்றில் பல நாடகங்கள் விருது பெற்றுள்ளன.
நாடகத்திற்காக “வாழ்நாள் சாதனையாளர் விருது,””நாடகக் கலா சிரோமணி” விருது,”நாடகச் செல்வம்” விருது ‘வெடரன் விருது,””ஆல் ரவுண்டர்” விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார்
“பாரத ரத்னா” என்ற இவரது நாடகத்திற்கு இலக்கியச் சிந்தனை விருது கிடைத்துள்ளது
தவிர்த்து பல பத்திரிகைகளில் வெளியான இவரது 70க்கும் மேற்பட்ட சிறுகதைகள் இரு சிறுகதைகள் தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளது.எட்டு குறு நாவல்கள்,ஐந்து நாடக நூல்கள்,ஐந்து சினிமா நூல்கள்,பத்திற்கும் மேற்பட்ட ஆன்மிக நூல்கள் என இதுவரை 40 நூல்கள் வெளியாகியுள்ளது.
“பட்டடைக்கல்” என்ற நாவலும், “நெஞ்சில் தைத்த முள்” என்ற சிறுகதை தொகுப்பும் கவிதை உறவு பரிசு பெற்றுள்ளது.

2 Comments on “டி வி ராதாகிருஷ்ணன்/கடவுளின் குழந்தை”
Comments are closed.