
அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 32
ஒன்று
“பொழுதன்னிக்கும் செல்லு, அப்படி என்னதான் இருக்கோ அதுல… கொஞ்சமாவது இந்த உலகத்துக்கு வரானா பாரு” என்று எப்போதும் போல ஆரம்பித்தார் செல்வராஜ்.
“எல்லாம் படிச்சு மார்க் வாங்கறான், நல்லபிள்ளையா இருக்கான், வம்புதும்புக்கு போறதில்ல… ஏன் அவனை திட்டிட்டே இருங்கீங்க?” என்று பாதுகாப்புக்கு வந்தார் சுமித்ரா.
“உனக்கு புரியாது, அதில் என்ன எழவெல்லாம் வருது தெரியுமா உனக்கு?”
“எல்லாம் அவன் நல்லதைத்தான் பார்ப்பான். எந்த அப்பாதான் தன் பையனை நல்லவன்னு ஒத்துக்கறீங்க? உங்க அப்பா எப்படி இருந்தாரோ என்னவோ? உங்க வேலையைப்பாருங்க”
சுமித்ராவின் காதருகே குனிந்து மெதுவாகச்சொன்னார் செல்வராஜ், “கீர்த்தினு ஒரு பொண்ணுகூட ரொம்ப கடலை போடறாண்டி அவன்”
“அச்சோ, இப்படி வேவுவேற பாக்கறீங்களா, கடவுளே” என்று தலையில் அடித்துக்கொண்டு கிச்சனுக்குள் சென்றார் சுமித்ரா.
எதையும் கண்டுகொள்ளாமல் காதில் மாட்டிய ஹெட்செட்டில் பாட்டு கேட்டபடி செல்லை நோண்டிக்கொண்டிருந்தான் விஸ்வா. அவன் தோளைத்தட்டி “வா, கடைவீதி வரை போயிட்டு வரலாம்” என்றார் செல்வராஜ். தான் ஓட்டுகிறேன் என்றவனை மறுத்து பின்னால் அமரச்சொல்லி பைக்கை கிளப்பினார்.

“ஏன் விஸ்வா, ஒழுங்கா படிக்கறயா?”
“ஆங்பா”
“பொதுவான புக்செல்லாம் படி. ஜெயகாந்தன், சுந்தரராமசாமி இப்படி”
“சேத்தன்பகத் படிக்கிறேன்பா”
“நீ எப்பவும் செல்லுதானே பாக்கற”
“இல்லபா, பிடிஎஃப் டௌன்லோட் பண்ணி படிப்பேன்”
“என்ன ரசனையோ, அதெப்படி மனசுல ஒட்டும். என்ன இருந்தாலும் காகித புக்ஸ்க்கு ஈடாகுமா?”
விஸ்வா பேசவில்லை. ஒத்துக்கொள்ளமாட்டார்.
“என்ன படம் உனக்கு பிடிக்கும்? ஃபாரஸ்ட்கம்ப், ஷிண்ட்ல்ர்லிஸ்ட்னு ஒரு லிஸ்டே இருக்கு. கலக்கியிருப்பாங்க”
“எனக்கு கொரியன் சீரிஸ்தான் பிடிக்குதுபா. ரொம்ப டச்சிங்கா இருக்கு”
“எதைத்தான் ஒத்துக்கற, நல்லது எதுவுமே உனக்கு ஏறாதா?”
“நல்லதுதான்பா, நீங்ககூட பார்க்கலாம்.”
“வேணாம்யா, நான் பழையா ஆளாவே இருந்துட்டுப்போறேன். பசங்களோட அதிகமா சுத்தாதே, யார்ட்டயும் பகையாவும் இருக்காதே. முக்கியமா இந்த செல்லுலயே மூழ்கிக்கிடக்காதே”
“சரிங்கபா”
“ஏன்னா, வெளிய என்ன நடக்குதுன்னு கவனம் வைக்கிறயா, முக்கியமா நாட்டு நடப்பெல்லாம் தெரிஞ்சுக்கறயானு கவலையா இருக்குபா”
“தெரிஞ்சுக்கறேன்பா. நேத்துகூட இன்ஸ்டாவில…”
அப்போதுதான் அது நடந்தது. வேகமாக வந்த ஆட்டோ நடந்துசென்ற அந்த முதியவரை மோதி சாலையின் ஓரமாக தூக்கி வீசியது.
“அப்பா, வண்டியை நிறுத்துங்க… அங்க…”
“எல்லாம் பார்த்தேன். கம்முனு வா, ஊர்வம்பு “ வண்டியை நிறுத்தாமல் ஓட்டி கடைவீதியின் ஒரு கடைமுன் நிறுத்தினார் செல்வராஜ். சட்டென்று இறங்கி அந்த முதியவர் விழுந்த இடத்தை நோக்கி ஓடினான் விஸ்வா.
இரண்டு
“பொழுதன்னிக்கும் டிவி, அப்படி என்னதான் இருக்கோ அதுல… கொஞ்சமாவது இந்த உலகத்துக்கு வரானா பாரு” என்று எப்போதும் போல ஆரம்பித்தார் ராமனாதன்.
“எல்லாம் படிச்சு மார்க் வாங்கறான், நல்லபிள்ளையா இருக்கான், வம்புதும்புக்கு போறதில்ல… ஏன் அவனை திட்டிட்டே இருங்கீங்க?” என்று பாதுகாப்புக்கு வந்தார் லட்சுமி.
“உனக்கு புரியாது, அதில் என்ன எழவெல்லாம் ஓடுது தெரியுமா உனக்கு?”
“எல்லாம் அவன் நல்லதைத்தான் பார்ப்பான். எந்த அப்பாதான் தன் பையனை நல்லவன்னு ஒத்துக்கறீங்க? உங்க அப்பா எப்படி இருந்தாரோ என்னவோ? உங்க வேலையைப்பாருங்க”
லட்சுமியின் காதருகே குனிந்து மெதுவாகச்சொன்னார் ராமனாதன், “சுமித்ரானு ஒரு பொண்ணு பின்னாடி ரொம்ப சுத்தறாண்டி அவன்”
“அச்சோ, இப்படி வேவுவேற பாக்கறீங்களா, கடவுளே” என்று தலையில் அடித்துக்கொண்டு கிச்சனுக்குள் சென்றார் லட்சுமி.
எதையும் கண்டுகொள்ளாமல் டிவியில் ஒரு ஆங்கில படத்தை பார்த்துக்கொண்டிருந்தான் செல்வராஜ். அவன் தோளைத்தட்டி “வா, கடைவீதி வரை போயிட்டு வரலாம்” என்றார் ராமனாதன். தான் ஓட்டுகிறேன் என்றவனை மறுத்து பின்னால் அமரச்சொல்லி சைக்கிளை எடுத்தார்.
“ஏன் செல்வா, ஒழுங்கா படிக்கறயா?”
“ஆங்பா”
“பொதுவான புக்செல்லாம் படி. கல்கி, புதுமைப்பித்தன் இப்படி”
“சுஜாதா, ஜெயகாந்தன் படிக்கிறேன்பா”
“நீ எப்பவும் டிவிதானே பாக்கற”
“இல்லபா, காலேஜ் லைப்ரரியில படிப்பேன்”
“என்ன ரசனையோ, அதெல்லாம் கதையா. என்ன இருந்தாலும் கல்கிக்கு ஈடாகுமா?”
செல்வராஜ் பேசவில்லை. ஒத்துக்கொள்ளமாட்டார்.
“என்ன படம் உனக்கு பிடிக்கும்? அகிராகுரோசோவா, டேவிட்லீன்னு ஒரு லிஸ்டே இருக்கு. கலக்கியிருப்பாங்க”
“எனக்கு ஸ்பீல்ஃபெர்க் பிடிக்குதுபா. ஒரே ஒரு லாரி டிரைவரை வில்லனா வச்சு…”
“எதைத்தான் ஒத்துக்கற, நல்லது எதுவுமே உனக்கு ஏறாதா?”
“நல்லதுதான்பா, நீங்ககூட பார்க்கலாம்.”
“வேணாம்யா, நான் பழையா ஆளாவே இருந்துட்டுப்போறேன். பசங்களோட அதிகமா சுத்தாதே, யார்ட்டயும் பகையாவும் இருக்காதே. முக்கியமா இந்த டிவிலயே மூழ்கிக்கிடக்காதே”
“சரிங்கபா”
“ஏன்னா, வெளிய என்ன நடக்குதுன்னு கவனம் வைக்கிறயா, முக்கியமா நாட்டு நடப்பெல்லாம் தெரிஞ்சுக்கறயானு கவலையா இருக்குபா”
“தெரிஞ்சுக்கறேன்பா. நேத்துகூட ஸ்டார்டிவியில…”
அப்போதுதான் அது நடந்தது. வேகமாக வந்த ஆட்டோ நடந்துசென்ற அந்த முதியவரை மோதி சாலையின் ஓரமாக தூக்கி வீசியது.
“அப்பா, சைக்கிளை நிறுத்துங்க… அங்க…”
“எல்லாம் பார்த்தேன். கம்முனு வா, ஊர்வம்பு“ சைக்கிளை நிறுத்தாமல் ஓட்டி கடைவீதியின் ஒரு கடைமுன் நிறுத்தினார் ராமனாதன். சட்டென்று இறங்கி அந்த முதியவர் விழுந்த இடத்தை நோக்கி ஓடினான் செல்வராஜ்.
மூன்று
“பொழுதன்னிக்கும் சினிமா, அப்படி என்னதான் இருக்கோ அதுல… கொஞ்சமாவது இந்த உலகத்துக்கு வரானா பாரு” என்று எப்போதும் போல ஆரம்பித்தார் வேதநாயகம்.
“எல்லாம் படிச்சு மார்க் வாங்கறான், நல்லபிள்ளையா இருக்கான், வம்புதும்புக்கு போறதில்ல… ஏன் அவனை திட்டிட்டே இருங்கீங்க?” என்று பாதுகாப்புக்கு வந்தார் மீனாட்சி.
“உனக்கு புரியாது, அதில் என்ன எழவெல்லாம் காட்றாங்க தெரியுமா உனக்கு?”
“எல்லாம் அவன் நல்லதைத்தான் பார்ப்பான். எந்த அப்பாதான் தன் பையனை நல்லவன்னு ஒத்துக்கறீங்க? உங்க அப்பா எப்படி இருந்தாரோ என்னவோ? உங்க வேலையைப்பாருங்க”
மீனாட்சியின் காதருகே குனிந்து மெதுவாகச்சொன்னார் வேதநாயகம், “லட்சுமின்னு ஒரு பொண்ணு பின்னாடி ரொம்ப சுத்தறாண்டி அவன்”
“அச்சோ, இப்படி வேவுவேற பாக்கறீங்களா, கடவுளே” என்று தலையில் அடித்துக்கொண்டு கிச்சனுக்குள் சென்றார் மீனாட்சி.
எதையும் கண்டுகொள்ளாமல் நாளிதழில் அன்றைய சினிமா செய்திகளை படித்துக்கொண்டிருந்தான் ராமனாதன். அவன் தோளைத்தட்டி “வா, கடைவீதி வரை போயிட்டு வரலாம்” என்றார் வேதநாயகம். ஜட்கா வண்டியில் ஏறினார்கள்.
“ஏன் ராமா, ஒழுங்கா படிக்கறயா?”
“ஆங்பா”
“பொதுவான புக்செல்லாம் படி. திருக்குறள், சீவகசிந்தாமணி இப்படி”
“கல்கி, பாரதியார் படிக்கிறேன்பா”
“நீ எப்பவும் சினிமாதானே பாக்கற”
“இல்லபா, லைப்ரரியில படிப்பேன்”
“என்ன ரசனையோ, அதெல்லாம் கதையா. என்ன இருந்தாலும் மணிமேகலைக்கு ஈடாகுமா?”
ராமனாதன் பேசவில்லை. ஒத்துக்கொள்ளமாட்டார்.
“என்ன படம் உனக்கு பிடிக்கும்? அவ்வையார், அசோக்குமார்னு ஒரு லிஸ்டே இருக்கு. கலக்கியிருப்பாங்க”
“எனக்கு பைஸைக்கிள் தீவ்ஸ் பிடிக்கும்பா. ஒரே ஒரு சைக்கிளை வச்சு…”
“எதைத்தான் ஒத்துக்கற, நல்லது எதுவுமே உனக்கு ஏறாதா?”
“நல்லதுதான்பா, நீங்ககூட பார்க்கலாம்.”
“வேணாம்யா, நான் பழையா ஆளாவே இருந்துட்டுப்போறேன். பசங்களோட அதிகமா சுத்தாதே, யார்ட்டயும் பகையாவும் இருக்காதே. முக்கியமா இந்த சினிமாலயே மூழ்கிக்கிடக்காதே”
“சரிங்கபா”
“ஏன்னா, வெளிய என்ன நடக்குதுன்னு கவனம் வைக்கிறயா, முக்கியமா நாட்டு நடப்பெல்லாம் தெரிஞ்சுக்கறயானு கவலையா இருக்குபா”
“தெரிஞ்சுக்கறேன்பா. நேத்துகூட பேப்பர்ல…”
அப்போதுதான் அது நடந்தது. வேகமாக வந்த ஒரு குதிரைவண்டி நடந்துசென்ற அந்த முதியவரை மோதி சாலையின் ஓரமாக தூக்கி வீசியது.
“அப்பா, ஜட்காவை நிறுத்தச்சொல்லுங்க… அங்க…”
“எல்லாம் பார்த்தேன். கம்முனு வா, ஊர்வம்பு “ நிறுத்தாமல் சென்று கடைவீதியின் ஒரு கடைமுன் இறங்கினார் வேதநாயகம்.. சட்டென்று இறங்கி அந்த முதியவர் விழுந்த இடத்தை நோக்கி ஓடினான் ராமனாதன்.
ஒன்று, இரண்டு மற்றும் மூன்றுக்குமான கடைசி பாரா
முதியவர் அருகில் யாரும் இல்லை. அசந்து உட்கார்ந்திருந்தார். லேசான சிராய்ப்புகாயம்தான். அவரைத்தூக்கி உட்காரவைத்து ஆறுதலாக தடவிக்கொடுத்தான். அருகில் இருந்த கடையில் தண்ணீர் வாங்கி வந்து குடிக்கச்செய்தான். ஆதரவாக அருகில் அமர்ந்தான். கண்ணீர் மல்க அவனை ஆசீர்வதித்தார் அந்தப் பெரியவர். தூரத்தே இருந்து பார்த்த அப்பா ‘இது திருந்தாது’ என்பது போல தலையில் அடித்துக்கொள்வதையும் கவனித்தான்.
ஆசிரியர் குறிப்பு
இந்த சிறுகதையின் ஆசிரியர் எழுத்தாளரும் ஓவியருமான அப்புசிவா. இயற்பெயர் சிவகுமார்.
இதுவரை நான்கு நாவல்கள், இரண்டு சிறார் நூல்கள் அத்துடன் தமிழக அரசின் வாசிப்பு இயக்கம் சார்பாக ஒரு சிறார் படைப்பு ஆகியவை புத்தகமாக வந்துள்ளன. அறுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள இவரின் கதைகள், பல அமைப்புகளின் சிறுகதை போட்டிகளில் பரிசுகளும் பெற்றுள்ளன. “பூஞ்சிட்டு” (www.poonchittu.com) எனும் சிறார் இணைய இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர். நூல்களுக்கு அட்டைப்படங்கள், ஓவியங்கள் என இவரது ஆர்வம் தொடர்கிறது. தமிழில் சிறார் இலக்கியம் வளரவேண்டும் என்பதில் விருப்பமுடையவர்.

Super sir, vaazhththukkal.
நன்றி மேடம்