ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் /தீர்வு


.
அசோகமித்திரன் நினைவாக மின் நூலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் வரிசை – 31

      குடியிருப்புக்குள் குப்பைகளை போடுவதற்கு சரியான இடம் இல்லாமல் எங்கே போடுவது என்கிற பிரச்சனை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இதனால் கண்ட இடங்களிலும் குப்பைகளை வீசிவிட்டு செல்வதும் மக்கள் நடக்கும் பொதுத்தடம் என்றுகூட பாராமல் குப்பைகளை சாலையோரத்திலும் சில சமயம் நடுச்சாலையிலும் போட்டுவிட்டு செல்வதுமாகவே இருந்தார்கள். ஆற்றின் கரை ஓரப்பகுதியில் வசிப்பவர்களுக்கு பிரச்சனை இல்லை. தண்ணீர் வராத சாக்கடையாக சுருங்கிக் கிடக்கும் நொய்யல் ஆற்றில் இரவு நேரங்களில் குப்பைகளை ஆற்றுக்குள் வீசியெறிவதை அந்தப் பகுதிகளில் வசிப்பவர்கள்  வழக்கமாக்கிக் கொண்டார்கள். 
     மற்ற பகுதிகளில் வசிப்பவர்கள் வண்டியில் வெளியே செல்லும் போதும் இரவு நேரங்களிலும் பாலிதீன் கவர்களில் குப்பைகளை போட்டு எடுத்து வந்து கண்ட இடங்களிலும் கொட்டி கொட்டி ஊரையே அசிங்கமாக்கி நாறடித்துக்கொண்டிருந்தார்கள். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவது பற்றி யாருக்கும் எந்தவித அக்கறையும் இல்லை. இந்தப் பிரச்சனை ஊருக்குள் அடிக்கடி பேசு பொருளாகும். பிறகு அப்படியே விட்டுவிடுவார்கள். கண்ட இடங்களில் குப்பைகளைக் கொட்டாதீர்கள் என்று சொன்னாலும் யாரும் கேட்பதே இல்லை. 
    நகராட்சி மூலம் இரண்டு மூன்று வாரங்களுக்கு ஒருமுறை லாரியில் வந்து குப்பைகளை அகற்றிச் செல்வார்கள். மறுபடியும் குப்பைகள் குவியும். சரியான தீர்வு மட்டும் கிடைக்காது. குடியிருப்போர் நல்வாழ்வு சங்கத்தினருக்கு இதுபற்றியெல்லாம் அக்கறையும் கவலையும் இருப்பதாகவே தெரியவில்லை. பொதுச்சேவை செய்வதில் விருப்பம் இல்லாது சும்மா பெயரளவுக்கு சங்கம் வைத்துக்கொண்டு வெட்டி பந்தவுக்காக பொறுப்பு வகிப்பவர்களுக்கு ஊரின் இந்த பிரச்சனை பற்றியெல்லாம் அக்கறையே இல்லை. கண்டும் காணாமல் இருந்தார்கள். 
    மழைக்காலங்களில் நசநசவென்று அந்தப் பகுதியே நாறிப்போய் நடக்கவே மக்கள் சிரமப்படுவார்கள். ஆனாலும் குப்பைகளை கண்ட இடங்களில் போடுவதை மட்டும் நிறுத்தமாட்டார்கள்.  
    ‘இங்கு குப்பைகளைக் கொட்டாதீர்கள்..’ என்று எழுதி வைத்தால் அங்குதான் குப்பைகளைக்கொட்டி மலைபோல குவிப்பார்கள்.
     ஊரின் ஒரு முக்கியஸ்தர் வீட்டின் அருகே இருக்கும் காலியிடம் இப்படியாக குப்பை மேடாகிப்போனது. அந்த இடமே அசிங்கமாகி கொசுத்தொல்லை, நாற்றம் என இது அவருக்கு பெரிய இடைஞ்சலாகியது. உடனே அவர் “இங்கே குப்பை கொட்டுபவர் வீட்டில் தரித்திரம் பிடிக்கும்” என  பெரிய தட்டி எழுதி வைத்தார். அதைப் பார்த்து எல்லோரும் சிரியொ சிரியென சிரித்தார்கள்.   
    ‘இங்கு கொட்டினால்தானே தரித்திரம் பிடிக்கும்‘ என்று கொஞ்சம் தள்ளிப்போய் கொட்டிவிட்டுச் சென்றார்கள். இன்னும் சிலர் “தரித்திரம் புடிச்சா புடிக்கட்டும்.” என்று அங்கேயே கொட்டினார்கள். வீட்டின் முன்பு நின்றபடி “அறிவு கெட்டவனுங்களா இருக்காணுங்க. அவுங்கவுங்க ஊட்டு முன்னாடி குப்பய கொட்டி வைக்க வேண்டியதுதானே. இங்க வந்து என் ஊட்டு முன்னாடி ஏண்டா குப்பய கொட்டுறீங்க. இதென்ன குப்ப மேடா?” என்று அவர் கண்டபடி திட்ட ஆரம்பித்தார்
   இரவு நேரங்களில் வீட்டின் முன்பு  நின்று கண்காணிக்க ஆரம்பித்தார். வண்டியில் குப்பையுடன் வருபவர்கள் அப்படியே நேராகச் சென்று மெயின் ரோடு சந்திப்பில் முக்கு திரும்பும் இடத்தில் குப்பையை வீசி விட்டுச் செல்ல, ஆரம்பித்தார்கள். கொஞ்சம் குப்பை அங்கு கிடப்பதைக்கண்டு  எல்லோரும் அங்கு போய் போட ஆரம்பித்தார்கள். 
    ஊரின் நுழைவாயிலே இப்படி அசுத்தமாவது பற்றி யாரும் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. என்ன சொல்லியும், எவ்வளவு சொன்னாலும் மக்கள் கேட்பதாக இல்லை  இதனால் குடியிருப்பு பகுதிக்குள் நாய்களின் தொல்லை அதிகமானது. இரவு நேரங்களில் வீடு திரும்புவோரை  குரைத்துக்கொண்டு நாய்கள் துரத்த ஆரம்பித்தன. எங்கிருந்தோ மாடுகளும் குடியிருப்புக்குள் வலம் வர ஆரம்பித்தன. இது மக்களுக்கு பெரும் அவஸ்தையானது. 
    இதுபற்றி அடிக்கடி நண்பர்கள் கூடும்போது பெரிய விவாதம் நடக்கும்.
    ”நம்ம குடியிருப்புக்கு எதுக்குடா குடியிருப்போர் நல சங்கம் வச்சிருக்கானுங்க.?” என்று நிஜாம்தான் கோபத்துடன் கேள்வி எழுப்புவான்.
    “என்னடா புதுசா கேக்குறே?” என்று கேட்டு நண்பர்கள் பலமாக் சிரித்துக்கொள்வார்கள்.  
    “ஒருவாரத்துக்கும் மேலா தண்ணி வரலேன்னாலும் கண்டுக்க மாட்டேங்கிறாங்க. ஒவ்வொரு தடவையும் நாமதான் பிளம்பருக்கு போன் பண்ணி மெனக்கெட வேண்டியிருக்கு. இதா இந்த குப்பை கொட்டுறதுக்கு எடம் இல்லாத பிரச்சன எப்ப இருந்து இருக்குது. நம்ம பகுதிக்குள் வீதிகள் முழுக்க குப்ப மேடா கெடக்கு. இவுனுங்க ஏதாச்சும் ஸ்டெப் எடுத்திருக்கானுங்களா? சொன்னாலும் காதுல வாங்க மாட்டேங்கிறாணுங்க. அப்பறம் எதுக்கு சங்கம் .ஆளாளுக்கு பொறுப்பு?”
   “அதான் நீயே சொல்லிட்டியே ஆளாளுக்கு பொறுப்புனு..அதுக்குத்தான் சங்கமே.” கேக்கெக்கே என சத்தமாக சிரித்தான் குமார். 
    “நம்ம பகுதி மக்கள் யாருமே அவுனுங்ககிட்டப் போயி ஒரு புகார்  கூட சொல்ல மாட்டேங்கிறாங்களேனுதா எனக்கு சரியான கோபம்.” என்றான் நிஜாம். 
    “நம்ம மக்களுக்கு இதுக்கெல்லாம் எங்க நேரம் இருக்கு சொல்லு?”
    “ஆமா, குமார்,  இந்த மாதிரி பொதுக்காரியங்களுக்கெல்லாம் நம்ம மக்களுக்கு நேரமே இருக்காதுதான். சரியாச் சொன்னே.” 
    “நாலுபேரு போயி சங்கத்துக்காரங்கிட்ட அப்பப்ப இப்படி ஏதாச்சும் புகார் சொன்னத்தானே அவுனுங்களும்  பாக்க வேண்டியவங்களப் பாத்து அதுக்குண்டான முயற்சி செய்வாங்க.”
   “ஆமா அவுனுங்க செஞ்சுட்டாலும்” என்று சிரித்தான் ராஜா.  
   “நாமதாண்டா இதுக்கு ஏதாச்சும் ஸ்டெப் எடுக்கணும்.” என்றான் நிஜாம்.     
    ஒருகட்டத்தில் இந்தப் பிரச்சனை .பெரிய அளவில் வெடித்து மக்கள் குப்பைத் தொட்டி வைக்கச் சொன்னதை நகராட்சி நிர்வாகம் செவி மடுக்காமல் நகராட்சி மூலம் குப்பை வண்டி வந்து வீடு தோறும் குப்பைகளை சேகரிக்க ஆரம்பித்தது. எல்லா இடங்களுக்கும் ஒரே ஒரு குப்பை வண்டியை வைத்துக்கொண்டு செயல்பட்டதில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறைதான் ஊருக்குள் குப்பை எடுக்க வண்டி வரும். நாறிப்போன உணவுக் கழிவுகளையும் குப்பைகளையும் வீட்டில் மூன்று நாட்களுக்கு வைத்துக்கொண்டிருப்பதா என்று பழையபடியே மக்கள் குப்பைகளை வீதிகளில் ஆங்காங்கே கொட்ட ஆரம்பித்தனர் 
     திடுமென ஒருநாள் குப்பைகள் மட்கும் குப்பை, மட்காத குப்பை, பிற குப்பைகள் என தனித்தனியாக பிரித்து வைக்கவேண்டும் என நகராட்சி மூலம் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இப்படி பிரித்து கொடுத்தால்தான்  இனி குப்பைகளை வாங்குவோம் என தூய்மைப் பணியாளர்கள் சொல்ல “ஆமா எங்களுக்கு குப்பைகளை ரகம் வாரியாக தனித்தனியா பிரிச்சுப் பிரிச்சு வைய்கிறதுதா வேலை?’’ என்று மக்கள் யாரும் குப்பை வண்டிக்கு காத்திருக்காமல் பழையபடியே குப்பைகளை தெருவெங்கும் குவிக்க ஆரம்பித்தார்கள்.                                
    பல முறை நகராட்சி அலுவலகம் சென்று புகார் செய்த பிறகு  நகராட்சி நிர்வாகம் ஊருக்குள் இரண்டு இடங்களில் குப்பைத் தொட்டிகளை வைத்தது. குப்பைத்தொட்டிகள் நிறைந்து வழிந்தாலும் நகராட்சி நிர்வாகம் குப்பைத் தொட்டியிலிருந்து குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யாததால் வேறு வழியின்றி மக்கள் அந்த பகுதி சாலையெங்கும் குப்பைகளை வீசிச்செல்ல, குப்பைகளும் பிற கழிவுகளும் தெரு முழுக்க சிதறி வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு வழியை அடைத்துக்கொள்ளும். நகராட்சிக்கு எப்போது தோணுதோ அப்போது வந்து லாரியில் குப்பைகளை அள்ளிச்செல்லும். திடீரென ஒருநாள் குப்பைத்தொட்டிகள் அங்கிருந்து அகற்றப்பட்டது. 
   இப்படித்தான் ஒருநாள் இரவு குப்பையைப் போட நிஜாம் வண்டியில் வந்த போது குப்பைகள் போட்டுப் போட்டு குப்பைமேடாகிப் போயிருந்த அந்தப் பகுதிக்கு அருகே  குடிசையில் வசிக்கும் பெண்ணொருத்தி அவள் வீட்டு வாசலில் நின்றிருந்தாள். அந்தப் பெண் அங்கே நிற்பதைப் பார்த்ததுமே குப்பை கவரை அங்கு வீசியெறிய நிஜாமுக்கு கொஞ்சம் தயக்கம் ஏற்பட்டது. அந்தப் பெண் ஏதாவது சொல்லி விடுவாளோ என பயந்தான். வண்டியை ஓரம் கட்டி நிறுத்தி குப்பைக் கவரை வீசலாமா வேண்டாமா என யோசித்தபடியே  நின்றிருந்தான் நிஜாம். 
    வண்டியில் வந்த ஒருவர் படாரென்று குப்பைக் கவரை வீசிவிட்டு அவர்பாட்டுக்கு வண்டியில் வேகமாகச் சென்றுவிட, தயக்கத்தை உதறி நிஜாமும் குப்பைக் கவரை வீசிவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்ய முற்பட்டான். ”ஏங்க உங்களுக்கெல்லாம் கொஞ்சமாச்சும் அறிவிருக்கா?” என்று அந்தப் பெண் கத்திக்கொண்டே நிஜாமை நோக்கி வர, திடுக்கிட்டுப் போனான் நிஜாம். ‘இப்ப ஒருத்தர் குப்பையை வீசிட்டுப் போறாரே இந்தப் பொம்பளைக்கு அது கண்ணுக்குத் தெரியல. நா வீசுறதக் கண்டு கத்திக்கிட்டு வருதே. அந்தாளயும் திட்டியிருக்கணுமல்ல.’ அவனுக்குள் கொஞ்சம் கோபமும் எழுந்தது. 
    “இது என்னங்க குப்ப மேடா என்ன. நாங்க இங்க குடியிரிக்க வேண்டாமாக்கும். கொசுக்கடி தாங்கல. நாத்தம் கொடலப் புடுங்குது. நாய்ங்க தொல்ல வேற நீங்கபாட்டுக்கு வந்து குப்பய வீசிட்டுப் போயிர்றீங்க. நாங்கல்ல ராத்திரில தூங்க முடியாமா அவதிப்படுறம்.” நிஜாமின் பக்கத்தில் வந்து நின்று அந்தப் பெண் வேதனையும் கோபமுமாக கத்தியது. நடந்து சென்ற இரண்டொருவர்  நிஜாமை திரும்பிப் பார்த்தபடியே செல்ல, தான் ஏதோ குற்றம் செய்து மாட்டிக்கொண்டவன் போல அவமானமாக உணர்ந்தான் நிஜாம். சுர்ரென்று கோபம் தலைக்கேறியது. பேசாமல் போக மனம் வரவில்லை. 
   “ஏம்மா, இத்தன பேரு குப்பையப் போட்டு நெறச்சு வச்சிருக்காங்க. நா மட்டுந்தா குப்பய போடுறமாரி திட்டிட்டு வர்றீங்க. அறிவிருக்கானு வேற கேக்குறீங்க. இதா இப்ப ஒருத்தர் குப்பய வீசிட்டுப் போனாரே அது கண்ணு தெரியலயாக்கும்?” நிஜாமும் பதிலுக்கு கத்தினான். 
    “எல்லாத்தயும்தாங்க சொல்றன். தெனமும் எனக்கு குப்ப கொண்டு வந்து போடுறவங்களப் பாத்துட்டே இருக்குறதுதா வேலயா. தெனமும் நின்னு சொல்லிட்டேதா இரிக்கேன். அப்பவும் போட்டுட்டேதானே இரிக்கீங்க. கத்திக் கத்தி தொண்டையே போச்சு. ஒருவாட்டி சொன்னா தெரியாதாக்கும். பக்கத்துல குடியிருக்காங்களேணு ஒங்களுக்கு தெரிய வேண்டாமாக்கும். ஏன் ஒங்க ஊட்டுக்கு முன்னாடி போட்டு வக்கிறதுதானே.. நாங்க குடியிரிக்கிற எடத்துலதா கொண்டாந்து கொட்டணுமாக்கும். அந்தாளு குப்பய போட்டுட்டு சல்லுனு போயிட்டாரு. நீங்கதா நிக்கிறீங்க. அப்ப ஓங்ககிட்டத்தானே சொல்லமுடியும்?”
    அந்தப் பெண் சொல்வதிலும் நியாயம் இருப்பதை உணர்ந்து பதிலேதும் சொல்ல முடியாமல் நிஜாம் பேசாமல் நின்றிருந்தான். இருந்தாலும் அவனுக்கு கோபம் தீரவில்லை. பேசினால் பேச்சு வளர்ந்து கொண்டே போகும். அந்தப் பெண்ணும் வேறு எதுவும் பேசாமல் திரும்பிப் போனது. குப்பையை இனி எங்கே கொண்டுபோய் போடுவது என்கிற யோசனையுடனே வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பினான் நிஜாம்.  
   வீடு வந்து ஜாஸ்மியிடம் நடந்தவைகளை கோபத்துடன் கொட்டினான் நிஜாம். “அப்ப எங்கதா குப்பய கொண்டு போயி போடுறதாம?” ஜாஸ்மினின் கேள்விக்கு நிஜாமிடம் மட்டுமல்ல, ஊருக்குள் யாரிடமும் பதில் இல்லை.        
    ஒருகட்டத்தில் ஊரின் நுழைவுப் பகுதியில் சாலையோரத்தில் தினமும் குப்பைகள் குவிந்து அதுதான் குடியிருப்புவாசிகளுக்கு குப்பை போடும் இடமாகி நாளடைவில் அந்த இடம் குப்பைமேடாகிப் போனது.          

ஆசிரியர் குறிப்பு

இயற்பெயர் H. நஸீர். (H.NAZEER) தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் (TWAD Board) வரைவு அலுவலராக ( Draughting Officer ) பணி புரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.
ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் என்கிற பெயரில் கணையாழியில் 1988 ம் ஆண்டில் எழுத ஆரம்பித்து 35 ஆண்டுகளாக எழுதி வருகிறார்..
இதுவரை வார , மாத இதழ்களிலும் , இலக்கிய இதழ்களிலும், இணைய இதழ்களிலும் 125 க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், ஆறு குறுநாவல்களும், மூன்று நாவல்களும், இரண்டு நாவல் தொடர்களும் அவ்வப்போது கவிதைகளும் , மற்றும் இஸ்லாமிய இதழ்களில் தொடர் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
பல விருதுகள் பெற்றிருக்கிறார்.

அறிவுச்செல்வன்/ ‘பார்த்த’ சாரதி – விருட்சம் நாளிதழ்

One Comment on “ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் /தீர்வு”

Comments are closed.