
அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 30
அந்தக் கம்பெனியின் கிளார்க் வேலைக்கு விண்ணப்பித்திருந்த செல்வராஜ் காத்திருந்தான்.
இண்டர்வ்யூ செய்யும் மூவர் குழு, நேர்காணலுக்கு அவனை உள்ளழைக்குமுன் அவன் ஃபைலைப் புரட்டியது.
அவனது கல்வித் தகுதிகளும், மார்க் ஸீட்களும், பிற எக்ஸ்ட்ரா ஆக்டிவிடீஸ்களுக்கான எக்கச்சக்கச் சான்றிதழ்களும் அவன் இந்தச் சாதாரண வேலைக்கானவனில்லை என்று சப்தித்தன.
அந்தக் கோரஸ் அவர்களைப் புருவமுயர்த்த வைத்தது. திகைப்பிலாழ்த்தியது.
அவர்களிலொருவர், அந் நிறுவனத் தலைவர்!
.*
உள்ளழைக்கப்பட்டவன், உட்காரச் சொல்லப்படவில்லை.
“என்ன வேலையென்று தெரிந்துதான் அப்ளை செய்தீர்களா?”
“யெஸ்.”
“இந்த வேலை உங்களுக்கானதல்ல. யூ ஆர் அன்ஃபிட்!”
“ஒய்…?”
“பூனையை மேய்க்க ஒரு யானைப் பாகனை அப்பாயிண்ட் செய்வது அபத்தம். மற்றும் வீண் விரயம்!”
“அந்தப் பூனைக்கோ, இந்தப் பாகனுக்கோ அதிலேதும் ஆட்சேபமில்லாத பட்சத்தில் தங்களுக்கு மறுகருத்தெதுவும் இருப்பதற்கான காரணங்களில்லை என்று நான் கருதலாமா?”
“சம்பளம்…”
“அதுகுறித்துப் பாகனுக்கெதுவும் கோரிக்கையில்லை!”
“உங்கள் தகுதிக்கு இதைவிட நல்ல சம்பளத்தில், வேறு எங்கு முயன்றாலும் உடனடியாக நல்ல வேலை கிடைக்குமே…?”
“நல்ல வேலை கிடைக்கலாம். நல்ல சம்பளம் கிடைக்கலாம்.
நல்ல கம்பெனி கிடைக்குமா?”
“இதை உங்கள் யுத்த தந்திரமென்று கொள்ளலாமா?”
“தோற்பதற்கா ஆயுதமெடுப்பது?”
இருவரும் நடுவரை நோக்க, அவர், “இண்டர்வ்யூ முடிந்தது!”
“இருந்து அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை வாங்கிக்கொள்ளலாமா?”
ஸீட்டில் அமரப்போனவனை இட, வலத் துவாரபாலகர்கள் முறைக்க, மூலவர், “இந்த வேலை உங்களுக்கில்லை. இப்போது நீங்கள் வெளியேறலாம்!”
“எதிர்பார்த்தேன். தேங்க்யூ ஸார். ஒரு நல்ல சான்ஸை மிஸ் செய்கிறீர்கள். உங்களுக்கென் ஆழ்ந்த அனுதாபங்கள்!”
சொல்லிவிட்டுச் சலனமற்ற முகத்தோடு வெளியேற முயன்றவனை, மூலவர், தமிழில், “தம்பி, ஒருநிமிஷம்!”
திரும்பினான்.
“இது என் விஸிட்டிங் கார்டு. வீட்டில் வந்து பார்.”
“எதற்காக என்று தெரிந்துகொள்ளலாமா?”
“தாராளமாக!
யூ ஆர் அப்பாயின்டட். பட், நாட் திஸ் ஆஃபீஸ்.”
“தென்…?”
“ப்ளீஸ், நாளைக்காலை எட்டுமணி வரை சர்ப்ரைஸ். பொறுத்திரு!”
“ஆகட்டும். சந்திப்போம்!”
“யூ ஆர் வெல்கம்!”
அந்தக் கோடீஸ்வரனின் வீடு, ஜடாயு சிறகை விரித்ததுபோலப் பரந்திருந்த காம்பவுண்டுக்குள் ஏராளமாக விரயத் தரைநடுவே உடல்சிறுத்துத் தபஸ்வி போலிருந்தது
இவ் வெற்றிடம் அத்தனையையும் மொத்தமாய்ப் பணம்பண்ணினால் ஒரு ‘கேட்டடு கம்யூனிட்டி’யையே உருவாக்கலாம்.
நுகரப்படாத அவ் விரயத்தைக்கூடப் புரிந்துகொள்ளமுடிந்த செல்வராஜால், அந்தவீட்டில் தனித்துவாழும் மிஸ்டர். முத்துராம் அவர்களின் பயன்பாட்டிற்காக வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த நான்கு கார்களைத்தான் ஜீரணிக்க முடியவில்லை.
ஒரு பி.எம்.டபிள்யூ, ஒரு இன்னோவா கிறிஸ்டா, ஒரு ஐ ட்வெண்ட்டி, கூடவே ஓரமாக நினைவுச்சின்னம்போல் ஓர் அரதப் பழைய அம்பாஸிடர்!
கார்ப் பைத்தியமோ…?
அந்த முத்துராம் அழைப்பதாக அவரது உதவியாளர் வந்து இவனை அழைத்தார். உள்ளறையில் அவரின் தரிசனத்திற்காக மேலும் மூவர் காத்திருந்தார்கள். அவர்களெல்லாமே அவரது செகரட்டரிகளாம்!
நுழைந்தான். சிங்கத்தை அதன்குகையில் சந்திக்கும் ஆடாக உணர்ந்தான்.
சஃபாரி துறந்து சட்டையிலிருந்தார். இன்ஸ்பெக்டர் மஃப்டியிலிருந்தது போலிருந்தது.
உடைபோலவே மொழியும். தமிழுக்கு மாறியிருந்தார்.
“வா செல்வராஜ், உட்கார். உன்னை என் பெர்சனல் டிரைவராக அப்பாயிண்ட் செய்ய விரும்புகிறேன். நேற்றே ரெஸ்யூம் பார்த்தேன். டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்கிறாய். எல்லாவகைக் கார்களும் ஓட்டுவாய்தானே?”
“ஓட்டுவேன்… அது, வயிற்றுக்கு! நான் விண்ணப்பித்திருந்தது வாழ்க்கைக்கு!”
“என்னிடம் ஒரு டிரைவராக உன் வாழ்க்கை துவங்கட்டும்.
துவங்குமிடம் இலக்காகாது. அடையுமிடத்தைக் குறிவை!”
“மனிதர் வேறுமாதிரி…” என்பது சட்டென்று மட்டுப்பட்டது.
புதிய திறப்பொன்று வலிய வழிதேடி வருகிறதோ…?
“எந்தக் காரை இப்போது எடுக்கவேண்டும்? அதற்கான சாவியைத் தாருங்கள்!”
“காத்திரு. என் செகரட்டரிகளுக்கு இன்றைய ஷெட்யூலைச் சொல்லிவிட்டுத் தயாராகிறேன். ஏர்போர்ட் போகவேண்டும். இந்தா சாவி. இன்னோவாவைக் கிளப்பு.”
மனிதர் தீயென்பது தெரிந்தது.
அந்த அரைமணி நேரத்தில், செகரட்டரிகளின் சம்பாஷணைகள் வழியாக செல்வராஜ் தெரிந்துகொண்டவை திகைப்பூட்டின.
மனிதருக்குச் சொந்தமாக இவன் முயன்ற கம்பெனி ஒன்று மட்டுமில்லை; இருநூறு பேர்களுக்குமேல் வேலைசெய்யும் ஃபேக்டரிகள் இரண்டு! ஒன்று நூற்பாலை. ஒன்று சர்க்கரை ஆலை. சில மெட்ரிகுலேஷன் பள்ளிகளும், ஒரு கல்லூரியும் இருக்கின்றன. கூடவே ரியல் எஸ்டேட், பில்டிங் ப்ரமோட்டர்ஸ் பிஸினஸ்!
அந்த ஒற்றைமூளையின் உத்தரவுகளை அவரது சாம்ராஜ்யமெங்கும் கொண்டுசேர்க்கும் நரம்புகளாக இந்த நான்கு செகரட்டரிகள்.
எல்லோரும் இயந்திர கதியில் இயங்கும் அவரின் உதவிக் கரங்கள்.
ஒரு சாம்ராஜ்யமே நடக்கிறது. ஒற்றை ஆளாக நடத்துகிறார்!
அவர்களை ஒவ்வொருவராய் உள்ளழைத்து மளமளவென அவரிடும் அன்றைக்கான கட்டளைகளும், சொல்லும் ஆலோசனைகளும், காட்டும் வழிமுறைகளும் செல்வராஜின் மூளையை உளிகொண்டு திறந்தன.
‘ஆக்டிவ்’ என்ற சொல்லுக்குப் பொருள்புரிந்தது.
மிஸ்டர். முத்துராம் அவர்கள், கோட்சூட், டையணிந்து, மினி சூட்கேஸேந்தி இன்னோவாவில் ஆரோகணித்தபோது, பிரதமரை ஏர்போர்டிற்கு இட்டுச்செல்லும் டிரைவராகத் தன்னையுணர்ந்தான்.
‘முதலாளி’யின் அன்றையப் பயணம் மும்பை! மறுநாளில் பெங்களூர்!
அந்த வாரத்திலேயே லண்டனுக்கும் ஒரு விஸிட்டடித்தார்!
இடையிடையே தன் நிறுவனங்களுக்குத் தரிசனமளித்தார். ஆலோசனைகள் அருளினார். கோடீஸ்வரர்களைக் குலவினார். அரசியல்வாதிகளோடு அளவளாவினார். ஒவ்வொரு பயணத்திற்கும், அதற்கேற்ற வாகனத்தைத் தேர்ந்தெடுத்துப் பயணித்தார்.
வேட்டைக்குக் கிளம்புகையில் வில். மீனுக்குக் கிளம்புகையில் தூண்டில்.
அப்படியானால், அந்த அரதப் பழைய அம்பாஸிடர்…?
அந்த ஞாயிறு விடைசொன்னது.
சனிக்கிழமை மாலையே, “செல்வராஜ், நாளைப் பயணம், அம்பாஸிடரில்! கிளம்புகை, அதிகாலை நான்கரை!”
அந்த ஞாயிற்றுக்கிழமை, செல்வராஜை வேறொருவனாக்கியது.
அரிசிச் சிப்பங்கலால் அம்பாஸிடர் டிக்கி பிதுங்கியது
பின்ஸீட்டு முழுவதும் மளிகைப் பொருள்களின் ஆக்கிரமிப்பு.
வழக்கத்திற்கு மாறாக முதலாளி நான்குமுழ வேட்டி-சட்டையில்!
“வண்டியைத் திருச்சிக்கு விடு. திருச்சி தாண்டி, மதுரை மெயின்ரோட்டில் ஐம்பதாவது கிலோமீட்டரில் துவரங்குறிச்சி. அங்கு நிறுத்து. என்னை எழுப்பு.”
கவனித்தான் : ‘முதலாளி’ கையில் செல்லில்லை! காரில் ஏ/ஸி. இல்லை. ஸீட்டில் குஷன் போதவில்லை. நிச்சயம் இது ‘முதலாளி’க்கான காரில்லை!
அதிசயித்தபடியே ஓட்டினான்.
அந்தத் துவரங்குறிச்சியை நெருங்கும்போதே விழித்துக்கொண்டார். உள்அலாரம் ஒலித்திருக்கும்!
அங்கேயே சாலையோரக் ‘கிளப்புக்கடை’யில் இரையெடுப்பு.
அங்கிருந்து பிரிந்த கிளைச்சாலையில் ஆறு கி.மீ. அதிலிருந்து பிரிந்த கப்பிச்சாலையில் நான்கு கி.மீ.
“இந்த ஊர்தான்! ரைட்டெடு.”
“ரைட்டில்” சாலையில்லை. மாட்டுவண்டித் தடந்தான்! அதிலொரு புளியமரம். “அதைத்தாண்டி ஓரங்கட்டு!”
கட்டினான். இறங்கி நடந்தார். அந்த ஒத்தையடிப் பாதை,
ஒரு பூவரச மரநிழலில் தனித்திருக்கும் ஓட்டுவில்லை வீட்டில்சென்று முடிந்தது.
திண்ணையில் உட்கார்ந்து, உரலில் வெற்றிலை இடித்துக்கொண்டிருந்த கிழவி பார்த்தாள். “வாடா முத்து…” என்று எழுந்தாள். இவர் ஓடிப்போய் “ஆத்தா” என்று கட்டிக்கொண்டார்.
“என்ன அப்பச்சி இப்படி எளச்சுப் போயிட்ட…?” என்று தழதழத்தாள். “ஒரு கல்யாணங் காச்சியில்லாம இப்புடியா டவுனப்பக்கம் போயி ஒத்தயாக் காச்சிக் குடிச்சுக்கிட்டுக் கெடப்ப?” என்று அங்கலாய்த்தாள். முகத்தை வருடி நெட்டிமுறித்தாள்.
பேச்சொலி கேட்டு உள்ளே கட்டிலில் படுத்திருந்த பெரியவர், எழுந்தமர்ந்து, தலைமாட்டுக் கண்ணாடியைத் துழவியெடுத்து மாட்டிக்கொண்டு, மகனைக் கண்டுபிடித்து, “வாடா ராமு, நல்லாருக்கியா? இப்பத்தான் அப்பனாத்தா ஞாபுகம் வந்துச்சா?”
அன்பெனும் பிடியுள் அகப்படு பொருளாய் அந்தத் தாய்-தகப்பனின் பிடியில்
கட்டுண்டு கிடந்த ‘முதலாளி’க்குப் பகலுணவு கிழவியின் ‘சுடுசோறும்’ – குழம்பும்! “நல்லா வவுத்துக்குச் சாப்புடு!” என்ற அதட்டல்தான் அறுசுவைச் சைடு-டிஸ்!
அந்த அம்பாஸிடர், தூரத்திலிருக்கும் ஊரார்களுக்கு இன்டிகேட்டர்! வந்து குவிந்துவிட்டார்கள். சிற்றூர்தானே? குறுங்குழுதான்!குடும்பதுக்கொரு சிப்பம் அரிசி, ஒரு மளிகைப்பொருட் பண்டல்!
கடைக்கு ஓடிக் கிழவி வாங்கிவந்து கிண்டித்தந்த ராத்திரிக்கான ரவா உப்புமாவுக்குப் பிறகு, ‘முதலாளி’ தகப்பனுக்குத் தரையிலமர்ந்து காலமுக்கிவிட்டார். தாய்க்கு உரலிலிடித்து வெற்றிலை ஊட்டினார். அவர்களுடன் இரவெல்லாம் கதைத்துக் கிடந்தார்.
காரிலிருந்து கவனித்தபடியே செல்வராஜ் தூங்கிப்போனான்.
விடிந்தது.
“செல்வராஜ், கிளம்பலாமா…?”
பக்கத்து நகரத்தின் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆண்டுவிழா.
“சிறப்பு விருந்தினர் : தொழிலதிபர். முத்துராம் அவர்கள்” என்று நுழைவாயில் ப்ளக்ஸ்.
முதலாளி இறங்கி, நடந்தார். செல்வராஜ் காரிலிருந்தான்.
ஒலிபெருக்கியில், “நம் சிறப்பு விருந்தினர் வந்துவிட்டார்…!”
மாறுவேட மாணவ-மாணவியர் காத்திருக்க, ‘முதலாளி’யின் சிறப்புரைக்குமுன், தலைமையாசிரியரின் அறிமுக உரை.
“ஐயா அவர்கள் நம் பள்ளியில் படித்த பழைய மாணவர்! சென்னையில் கொடிகட்டிப் பறந்தாலும், சொந்த மண்ணை மறக்காமல் கடந்த பத்தொன்பது ஆண்டுகளாக நம் ஆண்டுவிழாவைச் சிறப்பிக்கத் தவறாமல் வருகைதரும் ஐயாவை இந்த ஆண்டும் வருக! வருக!! என வரவேற்கிறோம். அதுமட்டுமல்ல; ஒவ்வோராண்டும் பத்தாம் வகுப்பிலும், பனிரெண்டாம் வகுப்பிலும் முதல் மூன்றிடங்களைப் பெறும் மாணவ, மாணவியர் அறுவரையும் அவர்கள் விரும்பும் கல்லூரிக் கல்வியைக் கற்பதற்கான முழுச்செலவையும் ஏற்றுக்கொண்டு, அவர்கள் விரும்பினால், தனது நிறுவனங்களிலேயே தக்க வேலைவாய்ப்பும் கொடுத்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வருகிறார். அந்தவகையில், முதல் தலைமுறைப் பட்டதாரிகளாக நூறுபேர்களுக்குமேல் உருவாக்கியிருக்கிறார். சென்ற ஆண்டு நம் பள்ளிக்கு பத்துக் கணினிகளை வழங்கி உதவிய ஐயா அவர்கள், இவ்வாண்டு நம் பள்ளிக்கான கூடுதல் கட்டடம் ஒன்றை 4000 சதுர அடியில் கட்டித் தந்திருக்கிறார். இப்போது அந்தக் கட்டடத்தைத் தனது திருக்கரத்தால் திறந்துவைத்துச் சிறப்புரையாற்றுவார்!”
ஆற்றினார். இரண்டே நிமிடங்கள்.
“இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன், இதே பள்ளியில், இதே ஆண்டுவிழாவில் என்னை ஒருவர் அடையாளம் கண்டார். பேச்சுப் போட்டியில் முதலிடத்திற்கான பரிசை வழங்கியபோது, “யார் எழுதிக்கொடுத்தது?” என்று கேட்டார். “அதெதற்கு? இப்போது ஏதாவது தலைப்புத் தாருங்கள்…” என்றேன். முதுகில் தட்டிக்கொடுத்து, “பொருளின் பொருள்” என்பது பற்றி ஏதாவது பேசு… முடியுமா?” என்றார். “அது, சவாலல்ல, எதிர்பார்ப்பு!” என்பது புரிந்தது. ஐந்து நிமிடங்கள் பேசினேன். விழாமுடியக் காத்திருந்து, என்வீட்டிற்கு வந்து, ஏழைப் பெற்றோரின் அனுமதியுடன் அன்றிரவே சென்னைக்கு என்னைக் கடத்திச் சென்றார். அந்த அம்பாஸிடர் கார், அதோ நிற்கிறது! ஐந்தாண்டுக் கல்வியும் அவரிட்ட பிச்சை. என்னை வளர்த்தவர், அவரது நிறுவனங்கள் ஆறில் ஒன்றை என்னிடம் ஒப்படைத்தார். அந்த ஆண்டிலிருந்தே இந்தத் திருப்பணியை என் தலைமேல் ஏற்றேன். இவ்வாண்டு, இங்கிருந்து நான் விடைபெற்றதன் வெள்ளிவிழா. அதன் நினைவாக இக் கட்டடம்.
“யாரோ ஏற்றிய ஒரு விளக்கு, இயன்றவரை இன்னும் ஆயிரம் விளக்குகளை ஏற்றட்டும்! என்று என்னைப் பணிக்குமாறு உங்களை விண்ணப்பித்துக்கொண்டு, இந்த ஆலயத்தைத் திறந்துவைக்கிறேன்…!”
மல்ட்டி மில்லினர், ‘முதலாளி’ முத்துராமின் மனக்குகையைப் ‘பார்த்த’ சாரதி செல்வராஜ், “வரலாறு திரும்புகிறது… ‘முதலாளி’, தன்னையும் அப்படித்தான் ஏதோ இனங்கண்டு தேர்ந்தெடுத்திருக்கிறார்!” என்று புரிந்து, புல்லரித்தான்.
ஆசிரியர் குறிப்பு
வயது : 64
பிறந்த ஊர் : சிறுகுடி, நத்தம் வட்டம், திண்டுக்கல் மாவட்டம்.
கவிதை, சிறுகதை, குறுநாவல், கட்டுரை… என இலக்கியத்தின் எல்லாத் தளங்களிலும் இயங்கி வருகிறவன்.
பல மேடைகளில் கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றங்களில் பங்கேற்றவர். பல விருதுகள் பெற்றிருக்கிறார்

One Comment on “அறிவுச்செல்வன்/ ‘பார்த்த’ சாரதி”
Comments are closed.