
அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 29
" என்னம்மா, நீ !, சின்னக் குழந்தை மாதிரி பிடிவாதம் ? '2 மாதமாவது தங்கியிருப்பேன்' என்று சொல்லித் தானே மும்பை வந்தே ? 10 நாள் கூட ஆகல்லை, ,சென்னை சென்னை என்கிறாயே ! " என்று அம்மாவைக் கடிந்து கொண்டாள் சாந்தி.
"இல்லம்மா ! குழந்தைகள் ஸ்கூலிலிருந்து வந்தால் திண்டாடும். அதுதான் சொன்னேன்." என்றாள் தேவானை.
" அதெல்லாம் அவங்கம்மா பாத்துக்க மாட்டாங்களாம்மா ? உனக்கு அப்பா ஞாபகம். கவலை. அதுவும் அண்ணி நல்லாத்தான் பாத்துக்குவாங்க !"
" அப்பிடி இல்லை, அவருக்குப் பசிகூட சொல்லத் தெரியாது. சரியா சாப்பிடமாட்டாரு. வெயிலில் வெளியே போவாரு. மருமக எவ்வளவு சொல்ல முடியும் ?"
உள்ளே இருந்து விசிலில் கூப்பிட்டான் அவள் கணவன் கணேஷ். ஆம், அவளைக் கூப்பிடுவது, பேசுவது எல்லாமே விசில் தான். ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு விதமாக விசிலடிப்பான். பெரியவர்கள் முன் அப்பட்டமாக அடிக்க மாட்டான்.. காதில் விழுந்தாலும் தேவானை கண்டுகொள்ளமாட்டாள்.
" சாந்தி, எதுக்கு அத்தையைக் கோவிச்சுக்கறே ? அப்படியே உங்கப்பாவை விட்டுட்டு இருக்க முடியல்லைன்னே வைச்சுக்கோ என்ன தப்பு ? என் மாமா அத்தையை எனக்குத் தெரியாதா ? எப்படியும் அடுத்த வாரம் நான் சென்னை போகவேண்டுமாம்,. ஆபீசில இன்னிக்கு சொன்னாங்க. நான் கொண்டு போய் விட்டுடறேன். " என்றான்.
சொன்னபடி அடுத்த வாரம் தேவானையும் கணேஷும் சென்னைக்குப் புறப்பட்டாயிற்று. ரயில் இவளைச் சுமந்து செல்ல, இவள் மனதென்னமோ எண்ணங்களைச் சுமந்து கொண்டு இவள் பிறந்து வளர்ந்த ஜயமங்கலம் கிராமத்திற்கு வினாடியில் சென்றுவிட்டது.
இவள் கணவர் மயில்வாகனனும் அதே கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் தான். பிறந்த நாள் தொட்டே இருவரும் ஒருவருக்கொருவர் என்றே பிறந்ததாக இரு வீட்டினருக்கும் எண்ணம் அத்தனை சிநேகிதம் இருந்தது அந்த இரண்டு குடும்பங்களுக்குள்.
ஜயமங்கலம் கொடைக்கானல் மலையின் கீழேயுள்ள எத்தனையோ அழகிய கிராமங்களில் ஒன்று. ஒரு ஏரி, ஒரு சிறு நதி, ஒரு கோவில் 4 தெருக்கள், அவை நிறைய நல்ல மனமுள்ள கள்ளமறியா மக்கள். அவன் அப்பா ரேடியோ சிலோன் மயில்வாகனனின் விசிறி. அதனால்தான் இவனுக்கு இந்தப் பெயர். அதனாலேயே இவளுக்கு தேவானை என்று பெயர்.
மிகச் சின்னவயதில் இவள் மயில்வாகனனுடன் ( இவளுக்கு அவன் ' மயில்' ) சகஜமாகத்தான் பேசி பழகி வந்தாள். 9ம் வகுப்பு வந்து, பெரிய மனுஷியும் ஆனதிலிருந்து எந்த வெளி ஆண்களுடனும் பேசுவதில்லை, அதில் மயிலும் அடக்கம். ஆனால் அவன் சும்மாவே இருக்க மாட்டான். பள்ளிக்கூடம் போகும் போதும் வரும் போதும் பள்ளியை நிறுத்திய பின் ஆற்றங்கரைக்கு நீர் எடுக்கப் போகும் போதும் பின்னாலேயே கொஞ்ச தூரத்திலேயே சைக்கிளில் விசிலத்தபடி தொடர்ந்து வருவான். அவனுக்கென்றே பாட்டுக்களும் கிடைக்கும். நடையா, இது நடையா, ஹலோ மிஸ் ஹலோமிஸ், எங்கே போறீங்க, மெல்லப்போ மெல்லப் போ, போறவளே போறவளே என்று பட்டியல் நீளும். தினம் மாறுபடும். பாக்கிப் பெண்களெல்லாம் 'தேவானை மாப்பிள்ளை வந்தாச்சு' என்று கிண்டலடித்துச் சிரிப்பார்கள் இவளுக்குக் கோபமாக வந்தாலும் மனது சிலிர்த்துக் கொள்ளும்.
இருவருக்கும் கல்யாணம் நடந்தது. மயில்வாகனனுக்கு சென்னையில் வேலை கிடைக்க, . திகட்டத் திகட்ட வாழ்கையை அனுபவித்தார்கள். இரணடு வருடத்தில் பையன் பிறந்தான். பிள்ளை பிறந்து 3 மாதம் கழித்து, தானே இவளைக் கூட்டிப் போக வந்திருந்தான் மயில். ஒரு வாரம் ஜயமங்லத்தில் தங்கிவிட்டு. இவளைக் கூட்டிப் போகும் எண்ணம். ஆ.னால் அவனுக்குப் போரடித்தது. காலையிலும், மாலையிலும் ஊரைச் சுற்றி வருவான்.
அவன் வந்து 4 நாள் இருக்கும். தேவானையின் சிநேகிதி கண்ணம்மா வந்திருந்தாள். "என்னடி, தேவானை, இப்படி உடம்பு வச்சிட்டே ! நானும் பிள்ளை பெற்ற புதிசில அம்மா சொல்றாங்களேனு நல்லா சாப்பிட்டுத்தான் இப்பிடி குண்டாயிட்டேன். பொறந்தா ஆம்பிள்ளையாகப் பொறக்கணும்டி. இப்பத்தான் ஒன் புருஷன ஏரிக்கரையில விசிலடிச்சிகிட்டே போறதைப் பார்த்தேன். அன்னிகண்ட மேனிக்கு அழிவில்லை. இப்பவும் பந்தல்ல உட்காரவைக்கலாம். என் புருஷனும் அப்பிடியே தான் இருக்கிறார். நாம் தாண்டி இப்படி ஆயிட்டோம். " என்றவள் பொதுப்படையாகச் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுப் புறப்பட்டாள்.
ஊருக்குப் போவதற்கு முதல் நாள் இவள் கூடப் படித்த பொற்கொடி வந்திருந்தாள். அவள் பள்ளி நாட்களில் ரொம்ப அழகாக இருப்பாள். இப்போது பெயருக்கேற்றபடி சிக்கென்று சிலை மாதிரி அழகு இன்னும் கூடித் தெரிந்தது. இன்னும் கல்யாணம் ஆகவில்லையாம். " அதானே" என்று நினைத்துக் கொண்டாள், தேவானை. " என்னடி தேவானை, நீ உனக்கே அக்கா மாதிரி ஆகிவிட்டாய். ? உன் புருஷனை காலையில் மாந்தோப்பு பக்கம் பார்த்தேன். விசிலடித்துக் கொண்டு உல்லாசமாய் அவருக்கே தம்பி மாதிரி தெரிகிறார். ஜாக்கிரதையடி !. எங்கேயாவது அவருக்கே அக்கா மாதிரி ஆகிடப் போறே. அப்புறம் மயிவாகனனுக்கு ஒரு வள்ளிமயிலும் வந்துடுவா " என்றெல்லாம் ஏதோ பேசி இவளைக் குழப்பி விட்டுப் போய்விட்டாள்.
கொஞ்சநாழியில் வீட்டிற்குள் நுழைந்த மயில்வாகனனை தேவானை ஏற இறங்கப் பார்த்தாள். ' எந்த மனைவியும் பெருமைப்படக்கூடிய அழகன் தான் அவன். ஆனாலும் கண்டவர்களெல்லாம் என்ன அவளுக்குச் சொந்தமானவனை ரசிப்பது ?" அவளுக்குப் பற்றிகொண்டு வந்தது. " என்ன, இன்னும் கல்யாணமாகாத சின்ன வயசு என்று நினைப்பா ? வாயில் விசிலடித்துப் பாடிக்கிட்டே ஊர் சுற்றுவது நல்லாவா இருக்கு ? " என்று ஆத்திரமாகக் கேட்டாள். சாதாரணமாக ஏதோ கேலி பேசுகிறாள் என்று நினைத்து இவளைப் பார்த்த மயில் இவள் முகத்தில் தெரிந்த ரௌத்திரத்தைப் பார்த்துத் திகைத்துவிட்டான்.
"இதோ என் தலைமேலடித்து சத்தியம் பண்ணுங்க, இனிமேல் விசிலடிப்பதில்லைன்னு " என்று சொல்லி அவன் கையை எடுத்துத் தன் தலைமேல் வைத்துக்கொண்டாள். " இதோபார் ! எதுக்கு இத்தனை கோபம் ? விசிலடிக்காமல் நான் இருந்துவிடுவேன், விசிலில் பாட்டுக் கேட்காமல் நீ இருப்பியா ? " என்று கேட்டான்.
"என்னைப்பத்தி நீங்க ஒண்ணும் கவலைப் பட வேண்டாம் சத்தியம் செய்யப் போறீங்களா, இல்லையா ?" என்று அவள் குரலை உயர்த்தவும் அவளுடைய பெற்றோர்கள் வந்து விடப் போகிறார்களே என்று பயந்து, " இனி நான் விசிலடிப்பதில்லை. உன் மேல் சத்தியம் " என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டான்.
மறு நாள் புறப்பட்டு சென்னை வந்தார்கள். இருவருக்குமே ஒருவர்மேல் ஒருவர்க்கு அன்பு உண்டு ! நல்ல சுபாவமுடயவர்களும் கூட. ஆதலால் நடுவில் வந்த சின்ன தகராறை மறந்து வாழ்க்கையை நல்ல விதமாகக் கழித்தனர். கொஞ்ச நாள் கழித்து சாந்தி பிறந்தாள். இப்போது குழந்தைகள் இருவருமே பெரியவர்களாகி விட்டனர்., இருவருக்கும் கல்யாணமாகி பிள்ளைக்கு இரண்டு ஆண்குழந்தைகள் பிறந்து 3வது, 1வது படிக்கிறார்கள். மருமகள் இவள் அண்ணா பெண்---. இப்படி எண்ண அலைகளில் புரண்டு கொண்டிருந்த அவள் எப்போது தூங்கினாளோ, அவளுக்கே தெரியாது.. மூன்றாம் நாள் காலையில் இரயில் சென்னை வந்தடைந்தது.
இவளைப் பார்த்ததும் எல்லோருக்கும் ஒரே சிரிப்பு. மருமகள் வாய்விட்டே சொல்லி விட்டாள் " மாமாவைவிட்டுட்டு அத்தையால் இருக்க முடியல்லை அதுதான் சீக்கிரமாவே வந்துவிட்டாங்க " என்று, தேவானைக்கு ஒரே வெட்கமாகப் போய் விட்டது. கணேஷ், " நான் ஆபீஸ் வேலையாகப் போகிறேன். நாளை மாலைதான் வருவேன்." என்று சொல்லி புறப்பட்டுப் போனான்.
அன்று குழந்தைகளின் பள்ளி ஆண்டு விழா. குழந்தைகள் இவளையும் வருமாறு அழைத்தனர். இவள் களைப்பாக இருக்கிறது என்று சொல்லி வர மறுத்துவிட்டாள்.. மருமகள் " அவங்க கொஞ்ச நாழி தனியே பேசிக்கணுமாம், இல்லை, அத்தை ?" என்று சிரித்துவிட்டுக் கிளம்பினாள். அவர்கள் வெளியே போனதும் கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்தனர் மயிலும் தேவானையும்.
அந்தி மயங்கும் நேரம். " என்னங்க ! மொட்டைமாடியில் போய் சற்று நேரம் உட்காரலாமா ? " என்று கேட்டாள் தேவானை. சிரித்துக் கொண்டே அவள் கையைப் பிடித்து மொட்டை மாடிக்கு அழைத்துப் போனான் மயில். அங்கு ஒரு நாற்காலிதான் இருந்தது. மற்றொரு நாற்காலியை எடுக்கப் போன மயிலைத் தடுத்து, " பரவாயில்லை, நான் தரையிலேயே உட்கார்ந்துக்கறேன்” என்றாள் தேவானை.
" நம்ம பொண்ணும் மாப்பிள்ளையும் சந்தோஷமாக இருக்காங்களா, தேவா ? மாப்பிள்ளை நல்லவர் தானே ?" என்று விசாரித்தார் மயில்வாகனன்.
" ரொம்ப நல்லவருங்க, நம்ப மாப்பிள்ளை. நம்ம பெண்ணை ரொம்ப நல்லா, சந்தோஷமா வெச்சுருக்காருங்க ! "
"அங்கே ஒண்ணும் பிரச்னை இல்லையே ? "
"ஏன் உங்களுக்கு இந்த சந்தேகம் ? "
" நீ 2 மாதம்ன்னு போயிட்டு 10 நாள்லே திரும்பிட்டியேன்னு தான் கேட்டேன் "
அவரையே கண் கொட்டாமல் பார்த்த தேவானை, நாற்காலியில் உட்கார்ந்திருந்த அவர் மடி மேல் சாய்ந்து கொண்டாள். " ஏங்க, உங்களைப் பார்க்காம என்னால இருக்க முடியல்லைங்கறது கூட காரணமா இருக்கலாம், இல்லையா ? தவிர உங்க மருமகப்பிள்ள அந்த நாள்ல நீங்க பண்ண மாதிரியே விசில்ல பாடறதும் பேசறதும்தான் இன்னும் என் ஏக்கத்தைத் தூண்டி விட்டிடுச்சி. வயசானால் அன்பு மாறிடுமா ?." என்றவள் தொடர்ந்து, " எனக்குள்ள ஒரு கோரிக்கைங்க, செய்வீங்களா ? " என்றாள்.
மயில்வாகனனுக்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது. " சொல்லு, சொல்லு என்ன செய்யணும் ? " என்றார்.
" நான் வெச்ச சத்தியத்தை நானே வாபஸ் வாங்கிகறேங்க ! நீங்க விசிலில் எனக்காக ஒரு பாட்டுப் பாடுங்களேன் !"
" நீ தான் அன்னிக்கு அத்தனை கோபப்பட்டியே தவிர, நான் அதை சீரியஸா எடுத்துக்கவேஇல்லை. இருந்தாலும் உனக்குக் கொடுத்த சத்தியத்திற்குக் கட்டுப்பட்டு இத்தனை வருஷமா விசிலடிக்காம கழிச்சேன். சரி, சொல்லும்மா,
என்ன பாட்டு பாடணும்?”
‘ஏரிக்கரையின் மேலே’ பாடுங்களேன் ” என்றாள் கண்களில் நீர் மல்க.
மயில்வாகனன். வாயைக் குவித்து காற்றை வெளியே ஊதினால் காற்றாகவே வந்தது.. அடப் பரிதாபமே ! எத்தனை முயற்சி செய்தாலும் காற்று தான் வந்தது. ” சாரிம்மா எனக்கு முன் பல் போயிருச்சில்லே ! விசிலடிக்க வரலேம்மா ! என்று சொல்லும்போது அவருக்கே குரல் தழுதழுத்து விட்டது.
“நான் பாவிங்க, பாவி ! அவலை நினைச்சு உரலை இடிச்சுட்டேன்.” என்று அழுகையினூடே புலம்பும் தேவானையை எப்படி சமாதானப் படுத்துவதென்று தெரியாமல் தவித்தார் மயில் வாகனன்.
ஆசிரியர் குறிப்பு
திருமதி.மைதிலி சம்பத் செகந்திராபாத்தில் வசிக்கும் ஒரு எழுத்தாளர்.இவருடைய புத்தகங்கள் 30 இதுவரை வெளிவந்துள்ளன. அவற்றில் 17 புதினங்கள், 5 சிறுகதை தன் தொகுப்புகள், 5கட்டுரைத்தொகுப்புகள், 3 மொழி பெயர்ப்பு நூல்கள் ஆகியவை அடக்கம்.எழுத்தாளர் என்பது தவிர, இவர் ஒரு சங்கீத ஆசிரியை. மேடைப் பேச்சாளர். 78 வயதாகும் இவர் தன் பணிகளை சிறப்பாக தொடர இவர் குடும்பத்தினர் உறுதுணையாக இருக்கிறார்கள்.

One Comment on “மைதிலி சம்பத்/விசில்”
Comments are closed.