
அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 28
அந்த இலக்கியக் கூட்டத்துக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தவர் சுமார் ஆறடி உயரம் நீண்டிருந்தார். மாநிறம். லேசாக முதுகில் தட்டினால்கூட இரண்டாக உடைந்து விழக்கூடிய மெலிதான தேகம். ஓரிறு வெள்ளிக் கம்பிகள் ஒட்டிக் கொண்டிருக்கும் வழுக்கைத் தலை. சுமாரான வீரியம் உடைய மூக்குக் கண்ணாடி. உதட்டில் எப்போதும் தவழும் சிரிப்பு. கை முட்டிவரை மடித்து விடப்பட்டிருந்த வெளிர் நீல நிறத்தில் முழுக்கை சட்டை. கருப்பு நிற பேண்ட். காலில் ஹவாய் செருப்பு. தோளில் பல யுகங்கள் கடந்திருக்கும் ஜோல்னாப் பை. மேடையில் அமர்ந்திருக்கும்போது கூட அந்த ஜோல்னாப் பை அவர் தோளைவிட்டு இறங்கவில்லை. கவசகுண்டலம்போல் தன்னோடு இணைத்துக் கொண்டிருந்தார்.
கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்த இலக்கிய மன்றத்தின் தலைவி தமிழ்ச்செல்வி ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தார்.
“பெண்களைக் கொச்சைப்படுத்தி எழுதுவதே இலக்கியம் என்ற எண்ணம் தற்போது பரவலாக இருப்பது பெரிதும் கண்டிக்கத்தக்கது. இது ரொம்பவும் அருவருக்கத்தக்க போக்கு. இந்தப் போக்கை எதிர்த்து பெண் எழுத்தாளர்கள் குரல் கொடுக்காத இந்தத் தருணத்தில் நமது நண்பரும் தலை சிறந்த எழுத்தாளருமான ”இலக்கியச் செம்மல்” ஆர்.கே. அவர்கள் தொடர்ந்து தன்னுடைய எழுத்துக்களின் மூலம் குரல் எழுப்பிக் கொண்டே இருக்கிறார். அதுவும் அவருடைய சமீபத்திய நாவலான “அரசாட்சி”யில் இந்த பாழ்பட்ட சமூகத்தில் பெண்கள் படும் அவலங்களையும் அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளையும் மிக அருமையாக விவரித்துள்ளார். நமது வை.மு.கோ. மகளிர் இலக்கிய மன்றத்தின் ஆண்டு விழாவில் தலைமை தாங்க திரு. ஆர்.கே. அவர்களைத் தவிர வேறு யாருக்கும் தகுதி கிடையாது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். புதுமைப் பெண்ணை பாரதி கனவு கண்டான். அந்தப் புதுமைப் பெண்ணை மெய்ப் பொருளாக்குவதற்காக இந்த ஆர்.கே. அவதறித்திருக்கிறார்”
தமிழ்ச்செல்வி பேசப் பேச நிறைந்திருந்த அரங்கம் கரகோஷத்தில் அதிர்ந்தது.
இறுதியாக ஆர்.கே. உரையாற்ற எழுந்தார்.
“நான் ஏதோ எழுதறேன். ஆனா அந்தளவுக்குப் பேசத் தெரியாது. பாரதின்னு சொன்னாங்க.. பாரதி மலை.. நான் அந்த மலையடிவாரத்துல சின்ன தூசி.. அவ்வளவுதான்.. வந்து.. நான் மேல பேசறதைவிட நீங்க கேள்வி கேளுங்க.. எனக்குத் தெரிஞ்ச பதிலைச் சொல்றேன்”
இதைக்கேட்டு கூட்டத்தில் சலசலப்பு.
தமிழ்ச்செல்வி சைகை காட்டியவுடன் அரங்கத்தைச் சேர்ந்தவர் “ஹேண்ட் மைக்” ஒன்றை எடுத்து வந்து அவளிடம் நீட்டினார்.
முதல் கேள்வியை தமிழ்ச்செல்வியே ஆரம்பித்தாள்.
“நீங்க சின்ன வயசுலேர்ந்தே எழுதுவீங்களா?”
ஆர்.கே. தன்னுடைய வழக்கமான புன்னகையை உதிர்த்தார்.
“நிச்சயமா இல்லை. சொல்லப்போனா நான் கல்லூரில ரெண்டாவது வருஷம் படிக்கிறவரை எழுத்தைப் பத்தி நினைச்சதுகூடக் கிடையாது.”
“அப்புறம் எப்படி எழுத ஆரம்பிச்சீங்க?”
“எல்லாரும் தான் எழுத வந்தது ஒரு விபத்துன்னு சொல்லுவாங்க. ஆனா நான் ஒரு விபத்துனாலதான் எழுத ஆரம்பிச்சேன்.”
ஆர்.கே. சொன்னவுடன் எல்லோரும் புரியாமல் பார்த்தார்கள். அவர்கள் முகத்தில் ஆர்வம்.
ஆர்.கே, தொடர்ந்தார்..
”ஒரு நாளைக்கு கல்லூரிலேர்ந்து வீட்டுக்கு பஸ்ஸுல போயிட்டிருந்தேன். வழில ஒரு விபத்து.. ஒரு ஆளு தெருவுல அடிபட்டு ரத்த வெள்ளத்துல கிடந்தாரு.. பக்கத்துல அவரோட ஸ்கூட்டர்.. அதுக்குப் பக்கத்துல ஒரு பெண்.. அவர் மனைவியா இருக்கணும்.. ரொம்பவே தவிப்போட.. சுத்தி இருந்தவங்க அடிபட்டவரை ஆட்டோவுல ஏத்த முயற்சி பண்ணிட்டிருந்தாங்க.. இதை நான் பார்த்திட்டிருந்தபோதே பஸ் அந்த இடத்தைக் கடந்து போயிருந்த்து. ஆனா நான் பார்த்த அந்தக் காட்சி என் மனசுலயே நின்னுது. என்னால வேற எதையுமே யோசிக்க முடியலை.. தனியா தவிப்போட நின்னுட்டிருந்த அந்தப் பொண்ணு என்னை ரொம்பவே டிஸ்டர்ப் பண்ணினா. அவளுக்கு உதவ வேற யாருமே இல்லாம அவ தனி ஆளா இருந்தா எப்படி நிலமையை சமாளிப்பான்னு என் மனசு யோசிக்க ஆரம்பிச்சது.. பொறுக்க முடியாம அன்னிக்கு ராத்திரி என் மனசுல தோணின உணர்வுகளையெல்லாம் பேப்பர்ல கொட்டினேன்.. அடுத்த நாள் என் நண்பர்கள்கிட்ட நடந்ததைச் சொல்லி நான் எழுதினதைப் படிக்கச் சொன்னேன்.. அவங்க படிச்சிட்டு பிரமாதமா இருக்கு.. ஏதாவது பத்திரிகைக்கு அனுப்புன்னு கட்டாயப் படுத்தினாங்க. “தனிமை” அப்படின்னு தலைப்பு கொடுத்து நான் எழுதினதை கலைமகள் பத்திரிகைக்கு அனுப்பி வெச்சேன். நம்பிக்கை இல்லாமத்தான் அனுப்பினேன். ஆனா அடுத்த இஷ்யுவுலயே என் கதை பிரசுரமாச்சு.. எழுத்து நடை நல்லா இருக்கு.. தொடர்ந்து எழுதுங்கன்னு கலைமகள் ஆசிரியர்கிட்டேர்ந்து ஊக்கப்படுத்தி லெட்டர் வந்தது”
“அதுலேர்ந்து விடாம எழுதறீங்கன்னு சொல்லுங்க”
“நான் எப்பவுமே டார்கெட் வெச்சு எழுதறதில்லை. என் மனசுக்குப் பிடிச்சு வரணும்.. பிடிக்கலைன்னா நிறுத்திருவேன்.. மொதல்ல எனக்குப் பிடிச்சிருந்தாத்தானே மத்தவங்களுக்கு பிடிக்குமாம்னு நான் யோசிக்க முடியும்.. அதனாலதான் என் எழுத்துக்கள் எல்லாமே கொஞ்சம் இடைவெளி விட்டுத்தான் வரும்”
இப்போது முதல் வரிசையில் அமர்ந்திருந்த பெண்ணின் கையில் மைக்..
“நீங்க ஏன் ஜனரஞ்சக பத்திரிகைகள்ள எழுதறதில்லை/”
இதற்கு ஆர்.கே.விடமிருந்து மீண்டும் சிரிப்பு.
“உண்மையைச் சொல்லப்போனா ஜனரஞ்சகமா எழுதறதுங்கறது ஒரு கலை. அது கண்டிப்பா எனக்கு வராது.. தெரியாது. நான் என் மனசுல தோணறதை எழுதறேன்.. ரொம்ப சீரியஸா இருக்கும். அது நீங்க சொல்ற ஜனரஞ்சக பத்திரிகைகளுக்கு சரிப்பட்டு வராது.. அதனால அந்தப்பக்கம் நான் காலெடுத்து வெக்கறதில்லை”
நான்காவது வரிசையில் ஒரு பெண்மணி எழுந்து..
“உங்களைப்பத்தி.. உங்க குடும்பத்தைப் பத்திக் கொஞ்சம் சொல்லுங்களேன்..”
ஆர்,கே, பட்டென்று சொன்னார்..
”பெரிசா சொல்லிக்கும்படி ஒண்ணுமில்லை. நான் எப்பவுமே படிப்புல சுமார்தான், அதுக்கு ஏத்தமாதிரிதான் ஒரு பிரைவேட் கம்பெனில வேலை கிடைச்சு அங்கயே முப்பது வருஷ சர்வீஸ் போட்டு ரிடையர் ஆயாச்சு. என் மனைவி பிரைவேட் ஸ்கூல்ல டீச்சர். ஒரே பொண்ணு.. கல்யாணமாகி மும்பைல இருக்கா.. அவ்வளவுதான்”
மறுபடியும் தமிழ்ச்செல்வி மைக்கை எடுத்துக் கொண்டாள்.
“சார் உங்க எழுத்து எல்லாமே பெண்மையை சார்ந்தே இருக்கு. சொல்லப்போனா உங்களை பெண்களுக்காக வாதாடற வக்கீல்னுகூடச் சொல்றாங்க.. இப்படி பெண்களுக்கு சாதகமா சிந்திக்கணும்.. எழுதணுங்கற எண்ணம் உங்களுக்கு முதல்லேர்ந்தே எப்படி வந்தது?”
இந்தக் கேள்விக்கு ஆர்.கே. உடனே பதில் சொல்லவில்லை. சில விநாடிகள் மௌனமாக இருந்தார். அவர் முகத்தில் வேதனை படர்ந்ததுபோலிருந்தது. ஆனால் உடனே சுதாரித்துக் கொண்டு..
“அதுக்கு எங்கம்மாதான் காரணம். அம்மா அப்பாகிட்ட மனரீதியாவும் உடல்ரீதியாவும் பட்ட கொடுமைகள்.. அதையெல்லாம் பார்த்தும் சின்ன பையனா அப்பாவை எதிர்க்கமுடியாத இயலாமை.. இதெல்லாம் என் மனசுல ஆழமாப் பதிஞ்சு போச்சு. அப்பலேர்ந்தே பெண்கள் பேருல ஒரு கரிசனம்.. சாப்ட்கார்னர்.. அது என்னையுமறியாம என் சிந்தனையிலயும் எழுத்துலயும் பிரதிபலிக்கிறது. சொல்லப்போனா நான் எந்தக் காட்சியைப் பார்த்தாலும் அதுல பெண்களுக்கு சாதகமான விஷயங்கள்தான் என் மனசுல பதியறது.. இது சரியா தப்பான்னு தெரியலை.. என்னோட இந்தக் கண்ணோட்டத்துனால என்னால பெண்மைல நெகடிவ் விஷயங்களையேப் பார்க்க முடியறதில்லை.. அதுதான் நான் உருவாக்கற பாத்திரங்கள்ளயும் வெளிப்படறது”
ஆர்.கே. சொல்லி முடித்தவுடன் பெண்கள் நிரம்பியிருந்த அந்த அரங்கத்தில் கரவொலி.
ஏழாவது வரிசையில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணி எழுந்து நின்று மைக் இல்லாமலே எட்டுக் கட்டை குரலில் பேசினாள்.
“சார்.. இதைக் கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. சொல்லப்போனா உங்க மனைவி பேருல பொறாமையாக் கூட இருக்கு.. பெண்கள் மேல இப்படிக் கரிசனம் காட்டற கணவர் கிடைக்க அவங்க ரொம்பக் கொடுத்து வெச்சிருக்கணும்”
உடனே “உண்மை உண்மை” என்று பல குரல்கள் ஆமோதித்தன.
கூட்டம் முடிந்தது.
ஆர்.கே.வுடன் செல்பி எடுத்துக் கொண்டார்கள். க்ரூப் போட்டோ எடுத்துக் கொண்டார்கள்.
இந்த கட்டாய சாங்கியங்கள் முடிந்து ஆர்.கே. கிளம்பும்போது தமிழ்ழ்செல்வி அவரிடம்..
“சார் எப்படி வந்திருக்கீங்க.. நான் வேணா ட்ரைவரை உங்க வீட்டுல ட்ராப் பண்ணச் சொல்லவா?”
“அதெல்லாம் வேண்டாம்மா.. நான் பார்த்துக்கறேன்.. இங்க பக்கத்துல ஷேர் ஆட்டோ கிடைக்கும்.. வாய்ப்புக்கு நன்றிம்மா.. வரேன்”
அரங்கத்திலிருந்து கிளம்பியவர் நிதானமாக தெருவில் நடந்தார்.
எதிர்காற்று உடம்பை வருடிச் சென்றது.
ரொம்பவே இதமாக இருந்தது.
ஸ்டாண்டில் ஷேர் ஆட்டோ காத்துக் கொண்டிருந்தாலும் அவருக்குக் கொஞ்ச தூரம் தொடர்ந்து நடக்க வேண்டும் போலிருந்தது.
அன்று ஞாயிற்றுக்கிழமை. அந்த நேரத்தில் தெருவில் அதிக நடமாட்டம் இருக்கவில்லை.
மெதுவாக நடந்தார்.
“சார்.. இதைக் கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. சொல்லப்போனா உங்க மனைவி பேருல பொறாமையாக் கூட இருக்கு.. பெண்கள் மேல இப்படிக் கரிசனம் காட்டற கணவர் கிடைக்க அவங்க ரொம்பக் கொடுத்து வெச்சிருக்கணும்”
அந்தப் பெண்மணியின் குரல் கணீரென்று அவர் செவிகளில் எதிரொலித்தது.
”வெட்டி மீட்டிங்குக்குப் போயிட்டு வாய் கிழியப் பேசிட்டு நேரங்கெட்ட நேரத்துல வர வேண்டியது.. பைசா பிரயோஜனம் கிடையாது.. இதுவே பொழப்பாப் போச்சு”
இது அவர் மனைவி ரேணுகாவின் குரல்.
ரேணுகா கத்தினாலும் அவள் சொல்வது யதார்த்த உண்மை என்று அவர் மனசாட்சி ஒப்புக்கொண்டது.
”கடைக்குப் போய் காய் வாங்கிட்டு வாங்க”
“ரேணு.. நாவலோட முக்கியமான கட்டம் எழுதிட்டிருக்கேன்.. விட்டா ப்ளோ போயிரும்.. அதனால..”
“பெரிய நாவல்.. எனக்குப் பத்திட்டு வரது.. வீட்டு வேலை எதுவும் பண்றது கிடையாது.. எப்பப்பாரு மோட்டுவளையைப் பார்த்து சிந்திக்க வேண்டியது.. அப்புறம் காசு கொடுத்து கட்டு கட்டாப் பேப்பர் வாங்கி, பக்கம் பக்கமா எழுதி எவங்கிட்டயோ கொடுக்க வேண்டியது.. அவன் அதை புஸ்தகமாப் போட்டு லைப்ரரிக்கு வித்து காசு பண்ணறான்.. உங்களுக்கு என்ன கிடைக்கறது?”
“வந்து.. பேர்.. புகழ்..”
“அதை வெச்சுக்கிட்டு நாக்கை வடிக்கவா? ஆபீஸ்ல வந்த பணத்தையெல்லாம் பொண்ணு கல்யாணத்துக்கு செலவு பண்ணியாச்சு.. என் டீச்சர் வேலை இருக்கோ பிழைப்பு ஓடுது.. இல்லைன்னா..”
“வந்து..”
“கதையைக் கொடுக்கும்போது இவ்வளவு பணம் வேணும்னு கேட்க சாமர்த்தியம் இல்லை.. நீங்கள்ளாம்..”
உண்மை. ரேணுகா சொல்வது அப்பட்டமான உண்மை.
”உங்க மனைவி பேருல பொறாமையாக் கூட இருக்கு.. பெண்கள் மேல இப்படிக் கரிசனம் காட்டற கணவர் கிடைக்க அவங்க ரொம்பக் கொடுத்து வெச்சிருக்கணும்”
அரங்கில் அந்தப் பெண்மணி சொன்னது மீண்டும் எதிரொலித்தது..
”இல்லை.. என் மனைவி கொடுத்து வெக்கலை.. நான் அவளுக்கு ஏற்ற கணவனில்லை.. அவள் சொல்றதெல்லாமே நியாயமான பேச்சுதான்.. எனக்கு சாமர்த்தியம் இல்லை.. வேண்டாம்.. இப்படி இருக்கறதுனால என்ன சாதிச்சுட்டேன்.. வேண்டாம்.. இனிமே எழுத்து வேண்டாம்.. ரேணு சொல்ற மாதிரி எதுக்குமே லாயக்கில்லாத இலக்கிய கூட்டங்கள் வேண்டாம்.. இனி ஒரு நல்ல கணவனா வீட்டோட இருக்கலாம்.. ரேணு விரும்பற மாதிரி கடைக்குப் போயிட்டு வரலாம்.. மார்கெட்டுக்குப் போயிட்டு வரலாம். வீட்டுல மத்த வேலைகளைக் கவனிக்கலாம்.. வேண்டாம்,, இனிமே எழுத வேண்டாம்.. எழுத்தே வேண்டாம்.. நானும் ஒரு சாதாரண கணவனா இருக்கப் போறேன்.. இது நிச்சயம்..”
மனதில் ஏறிய தீர்மானத்துடன் பின்னால் வந்த ஷேர்-ஆட்டோவில் ஆர்.கே. ஏறினார்.
எதிர் சீட்டில் ஒரு இளம்பெண் மொபைலில் விசும்பிக் கொண்டிருந்தது பார்வையில் பட்டு அவர் மனதை ரொம்பவே பாதித்தது.
ஆசிரியர் குறிப்பு
வயது 63.
எழுத்தாளர், நாடகாசிரியர், இயக்குநர், நடிகர். இருபத்தியொன்பது மேடை நாடகங்களும், பல வானொலி தொலைக்காட்சி நாடகங்களும், சில தொலைக்காட்சித் தொடர்களும், குறும்படங்களும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் மூன்று நாவல்களும், பல குறுநாவல்களும் படைத்தவர்.இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்புகள், மூன்று நாவல்கள், நான்கு நாடகத் தொகுப்புகள், ஒரு நகைச்சுவைத் தொடர், அனுபவத் தொடர் ஆகியவை புத்தகமாக வெளி வந்திருக்கின்றன. நாடகத்தில் சிறந்த கதாசிரியர், சிறந்த வசனகர்த்தா, சிறந்த குணச்சித்திர நடிகர், சிறந்த இயக்குநர் என்று பல பரிசுகளை பலமுறை பெற்றிருக்கிறார். “நாடக சூடாமணி”, ”நாடக மாமணி” உட்பட நாடகத்துக்கான பல உயர்ந்த விருதுகளையும் சிறுகதை குறுநாவல்களுக்காக கலைமகள், சங்கப்பலகை உட்பட பல இலக்கிய விருதுகளையும் பெற்றவர்.

One Comment on “எஸ்.எல். நாணு/எழுத்தாளன்”
Comments are closed.