
அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 27
அந்த காலை வேளை வெயிலும் பனியும் கலந்து மனதிற்கும் மகிழ்ச்சியாகவும் உடலுக்கு இதமாகவும் இருந்தது. சற்று தள்ளி அமர்ந்திருந்த அந்த இளம் தம்பதிகள் இருவரும் சிரித்துக்கொண்டும் கொஞ்சிக் கொண்டும் இருந்தனர். அவனுக்கு 28 வயது , அவளுக்கு 25 வயது இருக்கும்.
இந்த நான்கு வருடங்களில் முதல் முறையாக நான் தனிமையை உணர்ந்தேன். சிறிது நேரம் கழித்து அவர்கள் கிளம்பினார்கள்.
“அங்கிள் நீங்கள் சாப்பிடக் கிளம்பவில்லையா” என்று அந்த இளைஞன் என்னைக் கேட்டான்.
“எங்களுடன் வாருங்கள். நீங்கள் போக வேண்டிய இடத்துக்குக் கொண்டு விடுகிறேன்” .
‘நான் ஹோட்டலில் தான் சாப்பிட வேண்டும்’ என்று சொல்ல அவன் ‘வாருங்கள் நாங்களும் அங்குதான் போகிறோம்’.
வழியிலும் ஹோட்டலிலும் பேசிக்கொண்டு இருந்தபோது ‘அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி 4 ஆண்டுகள் முடிந்தும் குழந்தை இன்னும் பிறக்கவில்லை என்று தெரிந்தது. மருத்துவரை அணுகி சிகிச்சை பெற விருப்பமில்லை என்றும் “நாங்களே ஒருவருக்கு மற்றவர் குழந்தை தான். மருத்துவரைப் பார்த்தால் யாராவது ஒருவருக்குக் குறை இருக்கிறது என்பார். யாரிடமும் குறை இருந்தாலும் இருவருக்கும் வருத்தமாக இருக்கும். அப்படி தேவையிருந்தால் ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக் கொள்வோம் என்று கூறினார்கள்’.
விடுதியில் அவளுக்கு எது பிடித்தமான உணவோ அதனைக் கேட்டு வாங்கிக் கொடுத்தான்.
என் மனைவிக்கு என்ன பிடிக்கும் என்று எனக்குத் தெரியாது. ஒரு நாளும் கேட்டு வாங்கிக் கொடுத்ததும் கிடையாது.
“அங்கிள் உங்களைப்பற்றி கூறுங்கள்.”
நான் மௌனம் சாதித்தேன்.
உண்மையைக் கூற தயக்கமாகவும் வெட்கமாகவும் இருந்தது.
“ஆண்டி ஊருக்குப் போயிருக்கிறார்களா.”
“ஆமாம்,” என்று பொய் சொன்னேன்.
‘2 வருடங்களுக்கு முன் குழந்தை இல்லை என்று நடந்த கருத்து வேறுபாட்டில் அவளைப் பிரிந்து இருப்பதை இவர்களிடம் எப்படிக் கூறுவது’ என்று தயக்கமாக இருந்தது.
காதலிக்கும் போது ஒருவருடைய எந்த குறை மற்றவர்க்குத் தெரிவதில்லை.
என் காதலுக்கு எளிதில் அவள் சம்மதம் தெரிவிக்கவில்லை.அவள் பொறுமைசாலி.எதையும் நன்கு யோசித்து விளைவுகளை ஆராய்ந்து செயல் படக்கூடியவள். வெளிப்படையாகப் பேசக்கூடியவள். கர்நாடக இசையில் ஆர்வம் அதிகம். நன்றாகச் சமைப்பாள்.சிவந்த நிறம். நல்ல அழகி. அப்பா இல்லை. வயதான அம்மா மட்டும் அவளுடன் இருந்தார். அம்மாவை யார் பார்த்துக் கொள்வதுஎன்ற பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் தான் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று முடிவு எடுத்தாள்.
அவன் குணம் நேர் எதிரானது. பார்ப்பதற்கு நன்றாக இருப்பான். எதையும் யோசிக்காமல் செயல்படுபவன். மனதில் இருப்பதை எளிதில் வெளியேசொல்ல மாட்டான். அவனுக்கும் அம்மா மட்டும்தான். கெட்ட பழக்கம் எதுவும் கிடையாது. எதிலும் நிலையான ஈடுபாடு கிடையாது. எளிதில் பிறர் மீது குற்றம் கண்டு பிடிப்பான். முதன் முதலாகப் பார்த்தவுடன் அவனுக்கு அவளைப் பிடித்து விட்டது.
நேரிடையாக காதலைத் தெரிவிக்க அவனுக்குத் தைரியம் இல்லை. ஆனாலும் அவனுக்கு தன் மீது ஒரு ஈர்ப்பு இருப்பதையும் அதனைச் சொல்லத் தயங்குவதையும் அவள் அறிவாள். அவன் தைரியமாக தன்னிடம் வந்து சொல்லும் வரை பொறுத்து இருக்கலாம். என்ன பதில் சொல்வது என்று அவன் சொன்ன பிறகு முடிவு செய்து கொள்ளலாம் என்று நினைத்தாள்.
அவள் எதிர் பார்த்ததற்கு மாறாக அவன் நேரில் தன் விருப்பத்தைத் தெரிவிக்காமல், தன் அம்மாவை அவள் அம்மாவை நேரில் பார்த்து சம்பந்தம் பேச அனுப்பி வைத்தான்.
அவளுடைய அம்மாவும் அன்று முதல் அவளை நச்சரிக்கத் தொடங்கினாள். திருமணத்திற்குப் பிறகு அவள் அம்மா தன் மகனுடன் தங்கிக் கொள்வதில் எந்த ஆட்சேபனையும் அவர்கள் தரப்பில் இல்லை என்று சொன்னார்.
அவளுக்குக் கடவுள் நம்பிக்கை அதிகம். அவனுக்குக் கடவுள் மீது நம்பிக்கை கிடையாது. அவள் எல்லோருடனும் நல்ல உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாள். அவன் தனிமை விரும்பியாக இருந்தான்.
இப்படி எதிர்மறை எண்ணங்கள் உள்ள அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் பிரச்சினை இல்லாமல் வாழ்க்கை இருக்குமா என்றசந்தேகம் அவளுக்கு வந்தது. அவள் தோழியிடம் சொன்னாள். எதிர் எதிர் துருவங்கள் தான் ஒன்றை ஒன்று ஈர்க்கும். இவனது குணமாவது உனக்குத் தெரியும். அதற்கு ஏற்றவாறு நீ நடந்து கொள்ளலாம். அல்லது அவனை நீ மாற்றி விடலாம். வேறு முகம் தெரியாதவனைத் திருமணம் செய்து கொண்டால் அவன் குணம் எப்படி இருக்கும் என்று தெரியாததால் இவனையே திருமணம் செய்து கொள் என்றாள் தோழி.
திருமணத்தை ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டும் என்று அவன் அம்மா விருப்பப் பட்டாள்.
ஆனால் கோவிலில் வைத்து திருமணத்தை நடத்தி விட்டு நல்ல உணவகத்தில் சாப்பாடு போட்டு விடலாம் என்றாள் அவள்.
கோவிலில் திருமணம் நடந்தது. இது அவன் அம்மா தன் தன்மானத்திற்குக் கிடைத்த அவமரியாதை என்று அவர் நினைத்தார்.
அவளுக்குக் குழந்தை என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் அவன் முதலிரவு அன்று “குழந்தை பெற்றுக் கொள்வதை சில வருடங்களுக்குத் தள்ளிப் போடலாம்” என்றான்.
“உங்கள் அம்மாவின் சம்மதம் வேண்டாமா” என்றாள்.
“அம்மாவிற்குத் தெரிய வேண்டாம்” என்றான்.
கருத்தடை மாத்திரைகளை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தான்.
அவள் சத்து மாத்திரைகளை அந்த குப்பியில் மாற்றி வைத்து விட்டு கருத்தடை மாத்திரைகளைக் குப்பையில் வீசி விட்டாள்.
அலுவலக செலவில் குலுமனாலி சென்று வரஏற்பாடு செய்தார்கள். அங்கு நிறையக் குளிர் இருக்கும் என்று வர மறுத்து விட்டான்.
இயற்கையை ரசிப்பது அவளுக்கு மிகவும் பிடித்தமான விஷயம்.
திருமணம் முடிந்து மூன்று மாதங்களில் அவன் அம்மா “பேரனோ பேத்தியோ பெற்றுக் கொடுத்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். பொழுது போகும்” என்றாள்.
“பொழுது போக வேண்டும் என்றால் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சுற்றுலா போய் வா,” என்று சொல்லி விட்டான் அவன் .
குழந்தை பெற்றுக் கொள்வதை அவள் தான் தள்ளிப் போடுகிறாள் என்று அவன் அம்மா நினைத்து அவள் மீது கோபப்பட்டாள்.
ஒரு வருடம் ஆகியும் குழந்தை பிறக்காததால் அவள் அவனிடம் மருத்துவரைச் சென்று பார்க்கலாம் என்றாள்.
” கருத்தடை மாத்திரை சாப்பிடுவதால் நீ கருத்தரிக்கவில்லை. மாத்திரை சாப்பிடுவதை நிறுத்தி விடு,”என்றான்.
அவள் உண்மையைச் சொன்னதும் மிகவும் கோபப்பட்டான். அவளுடன் ஒரு வாரம் பேசவில்லை.
என்ன நினைத்தானோ தெரியவில்லை. மருத்துவரைச் சந்திக்கச் சம்மதித்தான்.
பரிசோதனை முடிவு சோதனையாக இருந்தது.
அவனால் அவளைக் கருவுற வைக்க முடியாது என்று பரிசோதனையில் தெரியவந்தது.
“அம்மாவிடம் பரிசோதனை செய்து கொண்டதைச் சொல்ல வேண்டாம்,” என்றான்.
அவள் தன் அம்மாவிடம் உண்மையைச் சொல்லி விட்டாள். அந்த கவலையினாலேயே அவர்கள் திருமண ஆண்டு நிறைவு நாள் முடிந்ததும் இறந்து போனாள் அவள் அம்மா .
அம்மா தன் உடல் உறுப்புகளைத் தானமாகக் கொடுக்க விருப்பப் பட்டதால் மருத்துவமனையிலிருந்து அம்மா உடலை எடுத்துச் சென்றார்கள்.
உறுப்புகளை எடுத்த பிறகு அவர்களையே உடலைத் தகனம் செய்யச் சொல்லி விட்டாள் அவள்.
இல்லை. அவருக்கு உரியசடங்குகளை செய்து அதன் பிறகு நாம் தகனம் செய்வோம் என்று அவன் சொல்லவில்லை என்று அவளுக்கு வருத்தம்.
அவளுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைத்தது.
தன் மகனுக்கு முன்பு மருமகளுக்குப் பதவி உயர்வு கிடைத்தது அவன் அம்மாவிற்குப் பொறுக்க வில்லை. பதவி உயர்வை வேண்டாம் என்று சொல்லச் சொன்னாள்.
“குழந்தையும் இல்லை. அம்மாவும் இல்லை. எனக்கு வீட்டிற்கு வந்தால் பேச ஆள் இல்லை. ஆகையால் நான் பதவி உயர்வை ஏற்றுக்கொள்ளப் போகிறேன்” என்றாள்.
“குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று யார் சொன்னது. பெற்றுக் கொடு. நான் குழந்தையைப் பார்த்துக் கொள்கிறேன்” என்றார் அவன் அம்மா.
வாய் தவறி “எங்களுக்குக் குழந்தையே பிறக்காது” என்று சொல்லி விட்டாள்.
“எங்கள் பரம்பரையில் எல்லாருக்கும் நிறையக் குழந்தைகள் உண்டு. ஆகையால் அவள் மீதுதான் குறை இருக்கும்” என்று அவன் அம்மா முடிவு செய்து விட்டார்.
அந்த சம்பவம் அவன் நினைவுக்கு வந்தது. இருவரும் சேர்ந்து ஒரே அலுவலகத்தில் பணி புரிந்தோம்.காதலித்து திருமணம் செய்தோம். ஆனாலும் எங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இல்லை. எல்லா வசதிகளும் இருந்தும் எங்களுக்குக் குழந்தை இல்லாதது எங்களுக்குள் பெரிய பிளவை உண்டாக்கி இருந்தது.
மன்னிக்கவும். இந்த இளம் தம்பதிகள் போல் எனக்கு மனமுதிர்ச்சி இல்லை . என் மனைவி என்னிடம் பிரியமுடன் தான் இருந்தாள். நாங்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தாலும் அதிகம் பேசிக் கொள்வதில்லை.
என் அம்மா நாங்கள் இருவரும் பேசாமல் இருப்பது கண்டு என் மனைவியிடம் சண்டை போட்டாள். அவள் எதுவும் பேசாமல் அமைதியாகத்தான் இருந்தாள். “ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள வழியில்லை ”என்று ஏசினாள். என்னை “வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்” என்றார்.
வார்த்தைகள் தடித்து அவள் என் அம்மாவிற்குப் பதில் சொல்ல நான் அவளை அடித்து விட்டேன்.
அம்மா ஊருக்குப் போய்விட்டாள். ஏற்கனவே இருந்த கருத்து வேறுபாடு போதாது என்று நான் அவள் கண்ணத்தில் அடித்தது வேறு எங்களுக்குள் உள்ள உறவை மேலும் சிக்கலாக ஆக்கியது.
நான் அடித்திருக்கக் கூடாது.
ஆனால் மன்னிப்பு கேட்க என் வீம்பு கௌரவம் இடம் கொடுக்கவில்லை .
ஒரு மாதம் கழித்து ஒரு நாள் இரவு வரை என் மனைவி வீட்டிற்குத் திரும்பி வரவில்லை. அவள் அறையில் ஒரு கடிதம் இருந்தது.
என் கருத்துக்களை நீங்கள் மதிக்கவில்லை என நான் நினைப்பது தவறு. உங்களுக்கு என் மதிப்பு தெரியவில்லை என்பதே உண்மை.
வாழ்வின் ஒவ்வொரு நிராகரிப்பும், நீங்கள் யார் என்பதையும், மற்றவர்களிடம் உங்களுக்கான இடம் என்ன என்பதையும் புரிய வைக்க உதவும்.
வடகம் காயப்போடும் போது விரட்டி விடப்பட்ட காகம் இறந்தவர்களுக்குப் படையல் போடும் போது விரும்பி அழைக்கப்படுகிறது. தேவைப்பட்டால் நீங்களும் என்னைத் தேடுவீர்கள்.
எந்த இடத்தில் உங்களை வேண்டாம் என்று ஒதுக்கி வைக்கிறார்களோ அதே இடத்தில் இறைவன் உங்களைச் செதுக்கி உயர்த்தி வைப்பார் கவலை வேண்டாம். இந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது”. உங்களுக்குத்தான் இறைவன் மீதே நம்பிக்கை இல்லையே.
“நீங்கள் உங்கள் விருப்பப்படி யாராவது திருமணம் செய்து கொண்டு அவளுடனாவது மகிழ்ச்சியாக இருங்கள். என்னைத் தேட வேண்டாம்” என்று எழுதியிருந்தாள்.
நானும் அவளைத் தேட முயற்சிக்கவில்லை. என் மனைவி சென்னைக்கு மாற்றல் கேட்டு வாங்கிக் கொண்டு சென்று விட்டாள்.
இவர்களைப் பார்த்த பிறகு என் தவறு எனக்கு உறைத்தது. உடனே அவளைத் திரும்பக் கூட்டி வர வேண்டும் என்று மனம் விரும்பியது. வருவாளா என்று நிச்சயமாகத் தெரியாது. முயற்சி செய்து பார்க்க வேண்டும்.
என்ன மாமா “ஆண்டி ஞாபகம் வருதா ? ஊருக்குக் கிளம்பி விட்டீர்கள் ”என்று இரயில் நிலையத்தில் என்னைப் பார்த்துக் கேட்டான்.
“ஆமாம். ஆண்டியை கூட்டிக்கொண்டு வரத்தான் போகிறேன்” என்றேன். எனக்கு இந்த எண்ணம் தோன்றக் காரணமான அவர்களுக்கு மானசீகமாக நன்றி கூறி விடைபெற்றேன்.
ஆசிரியர் குறிப்பு
இந்தக் கதையை எழுதியவர் பெயர் திரு. சீனிவாசன் TV. மதுரையில் 1951ம் வருடம் பிறந்த இவர் மேல் பட்டப்படிப்பை முடித்த பின் ஒரு தேசீய மயமாக்கப்பட்ட வங்கியில் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்பொழுது தன் மனைவி மகனுடன் பெங்களூரு நகரத்தில் வசித்து வருகிறார். தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளை கற்றவர். நூற்றுக்கும் மேற்பட்ட கதைகள், பல கவிதைகள்
எழுதி இருந்தாலும் போட்டிகளில் பங்கு பெறுவது இதுவே முதல் முறை.
எழுதுவது, படிப்பது , ஓய்வு நேரங்களில் கால்பந்து, டென்னிஸ், சதுரங்கம் மற்றும் கிரிக்கெட் விளையாட்டுகளில் ஆர்வம் உண்டு.

One Comment on “சீனிவாசன் TV/மனமாற்றம்”
Comments are closed.