பா. ஸ்ரீராம்/எங்கேயும் மனிதர்கள்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்கதைகளின் வரிசை 26

நினைத்தபடியே ஆனது.
சென்றமுறை சரியாக வந்தானே என்று ஜி ஹெச்சில் அட்மிட் ஆகியிருக்கும் மாமாவுக்குத் துணையாய் இருக்கும் அத்தைக்கு இப்போதும் ஸ்விக்கி போட்டால் அத்தையால் வந்து வாங்கி கொள்ள முடியாமல் போக, ஸ்விக்கிக் காரரும் உள்ளே செல்ல முடியாமலும், எந்த இடம் என்று தெரியாமலும் குமாரிடம் போன் செய்து சண்டை போட்டுச் சென்றார். உணவும் நஷ்டம். அத்தைக்கும் வேலை ஆகவில்லை.
ஸ்விக்கியுடனான அனுபவங்கள் அவ்வளவு சிலாக்கியமாக இருந்ததில்லைதான்.
ஒருமுறை லதாவும் ஒருமுறை குமாரும் G H சென்று பார்த்து, உணவு கொடுத்து வந்தார்கள். வயதான காலத்தில் கீழே விழுந்து காலை ஒடித்துக்கொண்டு சர்ஜரி செய்துகொண்டிருக்கும் மாமாவுக்கு வயது 80. துணையாய் இருக்கும் அத்தைக்கே வயது 72. முடியாத நேரத்திலும் மாமாவுக்காக அலைந்தாள். இருவரும் அடித்துக் கொள்வதும் வேடிக்கையாக இருக்கும். ஆனாலும் அத்தை விட்டுக்கொடுக்காமல் சிரமம் பார்க்காமல் சேவை செய்வாள்.
இருந்த ஒரு மகனும் பத்துநாள் மலேரியாவில் 19 வயதில் அல்பாயுசில் போய்விட, சரியான வேலையும் இல்லாமல், உதவிக்கு ஆளும் இல்லாமல் கஷ்டப்படும் ஏழ்மைக் குடும்பம்.
பத்தாயிரம் சம்பளத்துக்கு வேலை பார்த்த மாமாவும் வயது, உடல்நிலை காரணமாக வேலைக்குச் செல்வதில்லை. சேமிப்பு என்றும் ஒன்றும் கிடையாது. அத்தையின் வயதைக் கணக்கில் கொள்ளாமல், அவள் குடும்ப நிலையை மனதில் கொண்டு ஒரு புண்ணியவான் அத்தைக்கு அவர் நடத்தும் நிறுவனத்தில் உதவியாளர் என்கிற பெயரில் வேலைக்கு வைத்திருந்தார். அங்கு வேலை செய்யும் பெண்களுக்கு ஊசி எடுத்துக் கொடுப்பது, துணி எடுத்துக் கொடுப்பது போன்ற வேலைகள். பத்தாயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்தார். அத்தை குடியிருக்கும் ஒண்டு குடித்தனத்துக்கே ஐந்தாயிரம் ரூபாய் வாடகை. ஏதோ வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. கொஞ்சம் வசதியான பக்கத்து வீட்டு ஆசிரியை ஒருவர் இருவர் மீதும் அனுதாபம் கொண்டு மாசாமாசம் அரிசி, பருப்பு, எண்ணெய வாங்கி கொடுத்து விடுவாள்.
“காசு இருந்திருந்தா வீட்டுக்கு பக்கத்தில தனியார் ஆஸ்பத்திரி போயிருப்பேன். நாலரை லட்சம் கேட்கறாங்க.. முடியாமத்தான் இங்க இவ்ளோ தூரம் ஜி ஹெச்சுக்கு வரவேண்டியிருந்ததது” – அத்தை புலம்புவாள். அத்தை, மாமா இருவருக்குமே GH என்றால் இளப்பம். இப்போது வேறு வழியில்லை.
பார்வையாளர் நேரம் பார்த்து இரண்டு மூன்று முறை பார்த்து வந்தாயிற்று. அவ்வப்போது அத்தைக்கு கைச்செலவுக்கு காசும் கொடுத்து வந்தாள் லதா.
அத்தை இன்று காலை லதாவுக்கு போன்செய்து கெஞ்சலாய் ஸ்விக்கி போடச்சொன்னாள். அதுதான் லதா மகனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள். வேறு வழியின்றி குமாரும் ஸ்விக்கியில் ஆர்டர் செய்தான்.
“ஸார்.. ஸ்விக்கி”
“இன்னொரு நம்பர் கொடுத்திருக்கேனே.. அதுல பேசுங்க.. அவங்கதான் அங்க இருக்காங்க”
“கால் போகலை ஸார்” சென்னை ஆஸ்பத்திரிகளில் இது ஒரு கஷ்டம்.
“வார்டுக்கே போய்க்கொடுக்கலாமே.. நேற்று அப்படிதான் கொடுத்தாங்க”
“தெரியல ஸார்.. இவங்களோட நித்யப்படி ரோதனை. இன்னிக்கி இங்க உள்ளேயே விட மாட்டேங்கறாங்க”
அத்தைக்கு போன் அடித்தான்.
“ஆங்.. குமார்.. மாமா ரிப்போர்ட் வாங்க லேபுக்கு வந்திருக்கேன். என்ன விஷயம்?”
“ஸ்விக்கி வந்துடுச்சு அத்தை”
“அச்சச்சோ.. இதோ போறேன்”
குமார் ஸ்விக்கிக்காரருக்கு பேசி அவரைக் கொஞ்சம் காத்திருக்கச் சொன்னான்.
“அட என்னங்க.. இன்னும் நிறைய இடத்துக்கு போகணும்.. சீக்கிரம் வரச்சொல்லுங்க..”
“இருப்பா.. மூணாவது மாடில இருக்காங்க….”
லிப்ட் உபயோகிக்கத்தெரியாது, படியில்தான் இறங்கி வருவாள் என்று அவனிடம் சொல்லவில்லை ,குமார்.
கொஞ்ச நேரம் சென்றது.
அத்தைக்கு போன் செய்தால் அவள் பதட்டத்திலிருந்தாள். “எங்கே வந்திருக்கேன்னே தெரியல குமார். சுத்திச் சுத்தி வரேன். ஒரே இடத்தையே சுத்தற மாதிரியும் இருக்கு.. அவர் இருக்கற வார்டு நம்பரும் தெரியலை…”
“காலுக்கு சர்ஜரி நடந்து எங்கே இருப்பாங்கன்னு விசாரிச்சுட்டு அங்க போங்க அத்தை”
கொஞ்ச நேரம் கழித்து போன் செய்தால் விசாரித்து சென்று கொண்டிருப்பதாக சொன்னாள். லிப்டுகளில் ஏறவே முடியாத அளவு கூட்டம் என்றாள். படியேறி படியேறிதான் செல்ல முடிகிறது என்றாள். மாமா வார்டுக்கு சென்று ரிசல்ட் கொடுத்து விட்டு உணவு வாங்க வரவேண்டும். குமாருக்கும் பதட்டமானது.
‘என்ன சொல்லி ஸ்விக்கியை சமாளிக்க’
எதிர்பார்த்தபடியே ஸ்விக்கி பொறுமை இல்லாமல் சத்தம் போட்டான். “உங்க ஒருத்தருக்காக எவ்வளவு நேரம் நான் லோல் படறது? வீட்ல உட்கார்ந்துகிட்டு எங்க கஷ்டம் தெரியாம விளையாடறீங்களே..”
குமாருக்கும் கோபம் வந்தது. காட்டிக் கொள்ள முடியவில்லை. காரியம் முக்கியம்.
“ஸார்.. கீழே ரிஸப்ஷன் மாதிரி இருக்கற இடத்துல பேர், வார்டு சொல்லி கொடுத்துட்டு போயிடுங்க.. நான் அத்தையை வந்து வாங்கிக்க சொல்றேன்.. பாவம் அவங்களுக்கு 72 வயசு.. காலைலேருந்து ஒண்ணும் சாப்பிடலை. ..”
“இதையே சொல்லுங்க… இதற்கெல்லாம் நான் என்ன செய்ய முடியும் சார்.. சீக்கிரம் வந்து வாங்கிக்க சொல்லுங்க…”
கொஞ்சநேரம் கழித்து மறுபடி ஸ்விக்க்காரனிடமிருந்து போன் வந்தது.
“சார்… ரிஸப்ஷன்ல கொடுத்திருக்கேன்.. சொல்லி வாங்கிக்குங்க”
அப்பாடி..
பத்து நிமிடத்தில் மறுபடி போன்.
“ஸார்.. நான்தான். ரிஸப்ஷன்ல வாங்கி வைக்க மாட்டார்களாம்… கூப்பிட்டு திருப்பி கொடுத்துட்டாங்க”
அய்யய்யோ…
அத்தைக்கு போன் செய்தால் காலே போகவில்லை. மறுபடி இவனுக்கே போன் செய்தான் குமார்.
“அங்க யாராவது பேஸிக் சர்வன்ட்ஸ் இருந்தால் அவங்க கிட்ட கொடுத்து கொடுக்கச் சொல்லுங்க.. அவங்க கிட்ட போனைக் கொடுங்க நான் பேசறேன். இடம் சொல்லி கொடுக்கச் சொல்றேன். காசு கொடுக்கறேன்னு பேசிப் பார்க்கறேன்.”
ஸ்விக்கிக்காரர் சிலரை அணுகுவது போனில் கேட்டது.
“ஸார்.. யாருமே வாங்க மாட்டேங்கறாங்க.. எனக்குதான் லேட்டாகுது.. இன்னிக்கி இப்படி ஒரு ஆர்டரை எடுத்து நான் லோல்படறேன்.. ச்சே…”
குமாருக்கு சங்கடமாயிருந்தது.
அம்மா வேற, ‘என்ன ஆச்சு, என்ன ஆச்சு, அத்தை கைக்கு சேர்ந்துடுச்சா’ என்று கேட்டு நச்சரித்துக் கொண்டிருந்தாள்.
“பக்கத்துல இருக்கும் டீக்கடைல, பிஸ்கட் கடைலயாவது பேர் சொல்லி கொடுத்துட்டு போங்க ப்ரதர்…. அவங்களை வந்து வாங்கிக்க சொல்றேன். அவங்களுக்கு போனும் போகமாட்டேங்குது… எனக்கும் சங்கடமா இருக்கு “
கொஞ்ச நேரம் கழித்து போன் வந்தது. “ஒரே ஒரு கடைதான் இருக்கு. அங்கேயும் யாரும் வாங்க மாட்டேங்கறாங்க… நான் என்ன சார் செய்யட்டும்”
“ரோட்ல இருக்கும் கடைல கொடுக்க முடியுமா?”
“விளையாடறீங்களா… எந்தக் கடைன்னு கொடுத்து என்ன அடையாளம் சொல்ல? அவங்கதான் எப்படி வருவாங்க?”
வேறு வழியில்லை. குமார் ஒரு முடிவுக்கு வந்தான்.
“ஓகே பரவாயில்லை. நீங்க போங்க ப்ரதர்.. உங்களுக்கும் தொந்தரவு. நான் மறுபடி வேற போட்டுப் பார்க்கறேன். கொஞ்ச நேரம் கழித்தாவது அங்க நிலைமை சரியாகுதான்னு பார்த்துக்கறேன். வேறென்ன செய்ய?” காசு போனாலும் இந்த சங்கடத்திலிருந்து விடுபட்டால் போதும் என்று தோன்றியது.
எதிர்முனை போன் வைக்கப்பட்டு விட்டது.
லதா புலம்பினாள். “என்னடா… காசும் வேஸ்ட்.. அத்தைக்கு இவ்வளவு பக்கத்துல சாப்பாடு வந்தும் கைல சேர்க்க முடியலை…”
“நான் என்னம்மா செய்ய.. உங்க அத்தை படுத்தறது அப்படி இருக்கு” காரணம் இல்லாமல் குமாருக்கு அத்தை மேல் கோபம் வந்தது.
“அப்படி சொல்லாதடா.. பசியில இருக்கற அத்தையை நெனச்சா பாவமா இருக்கு.. அவங்க வயசு என்ன? நம்மள மாதிரி சின்ன வயசா? பசி தாங்க மாட்டா… மாமாவை பார்த்துக்கற அலைச்சல் வேற.. பக்கத்திலயா இருக்கு ஜி ஹெச்? நம்மளாலும் உடனே உடனே போக முடியல.. ஏதோ நம்மளால ஆன உதவியை செய்யலாம்னு பார்த்தா..”
அத்தைக்கு பேச லதா முயற்சித்துக் கொண்டேயிருந்தாள். லைன் போகாமல் கீழே வைத்தாள். மறுபடி முயன்றாள்.
“அவன் போயிருப்பானாடா? கேட்டுப்பாரேன்.. பக்கத்துல அடுத்த ஆளுக்கு கொடுத்துட்டு திரும்ப வரும்போது ட்ரை பண்ணுன்னு சொல்லிப் பார்க்கலாமா?”
“போம்மா… போகாத ஊருக்கு வழி தேடிட்டு.. அவன் கத்து கத்துன்னு கத்தறான்”
லதா மறுபடி முயன்றுகொண்டே இருந்தாள்.
“கேட்டுப்பாருடா”
“நமக்கே மனசாட்சி இல்லையாம்மா?”
கொஞ்ச நேரம் கழித்து லைன் கிடைத்தது. அவள் பேசுவதைக் கேட்ட குமார் அம்மாவிடம், “அம்மா.. அத்தை எப்போ ஃப்ரீ ன்னு கேளு.. இல்லை, கீழயே வெயிட் பண்றாளான்னு கேளு.. நான் புதுசா ஒண்ணு போடறேன். இருந்து வாங்கிட்டு போகச்சொல்லு.. ஏதாவது அடையாளம் சொல்லி அங்க நிக்கறேன்னு சொல்லச் சொல்லு..”
“அத்தையே உன்கிட்ட பேசணும்ங்கறா..”
குமார் போனை வாங்கினான்.
“குமார்.. இங்க ஒரு ஸ்விக்கிகாரர் நிக்கறார். அவர்தானா?”
“சரியாப்போச்சு… அவர்லாம் இல்லை. அவர் அப்பவே போயிருப்பார் அத்தை… . முக்கால் மணி நேரம் ஆகுது..”
“இல்லப்பா.. என்னையே பார்க்கறாரு..”
“இப்போ யார் போட்டிருக்கங்களோ.. பாவம் அவர் கஸ்டமர் நீங்களான்னு பார்ப்பார். சொல்லுங்க அத்தை. எந்த இடத்துல நிக்கறீங்கன்னு ஒரு அடையாளம் சொல்லுங்க.. நான் புதுசா ஒண்ணு போடறேன். பத்து அல்லது பதினைந்து நிமிழத்துல வந்துடும்”
குமாரின் தொலைபேசி ஒலித்தது. எடுத்தான். ஸ்விக்கி!
“சார்… என் எதிர்ல ஒரு அம்மா நிக்கறாங்க… பச்சை புடவை கட்டி இருக்காங்க.. அவங்களான்னு கேளுங்க…”
“அடப்பாவி.. இன்னுமா இங்க இருக்கீங்க?”
“அந்த அம்மாவுக்கு 72 வயசு, கால் சரி இல்லன்னீங்க.. காலைலேருந்து ஒண்ணும் சாப்பிடலை, பசிங்கறீங்க.. எப்படி சார் போறது? மனசு வரமாட்டேங்குது.. கஷ்டமா இருக்கு. எனக்கும் நேரம் ஆவுது.. போகவும் முடியல, இருக்கவும் முடியல.. அவஸ்தையா இருக்கு.. இப்பவாவது முடிஞ்சா நிம்மதி”
பேசிக்கொண்டே ஸ்விக்கிகாரன் இல்லை, ஸ்விக்கிக்காரர் அந்தப் பெண்ணிடம் நெருங்கி இருக்க வேண்டும். அத்தையின் போனிலும் அவன் இல்லை, அவர் குரல் கேட்டது. “நீங்க வித்யாங்களா?” அத்தையின் ‘ஆமாம்’ என்னும் குரலும் கேட்டது.
குமார் பேச்சிழந்து நெகிழ்ந்து போனான்.
ஸ்விக்கியில் டெலிவரி ஆள் பெயர் என்ன பார்த்தோம் என்று சட்டென்று தேடிப்பார்த்தான்.
“ரொம்பத் தேங்க்ஸ் மாரி.. ரொம்பத் தேங்க்ஸ். நீங்க இவ்வளவு நேரம் இருப்பீங்கன்னு எதிர்பார்க்கலை. அப்பவே போயிருப்பீங்கன்னு நெனச்சேன். தப்பா நெனச்சுக்காதீங்க.. உங்க ஜி பே நம்பர் சொல்லுங்க..”
“அதெல்லாம் வேணாம்ங்க.. செஞ்சா நல்லவன், இல்லன்னா கெட்டவனா.. நானும் போயிருப்பேன். ஏதோ மனசு கேட்கலை.. இனிமேதான் மத்தவங்களை பார்க்கணும். அவங்கள்லாம் வீட்டு அட்ரஸ்தான்.. இவ்வளவு கஷ்டத்துல இருக்க மாட்டாங்க..”
போன் கட் ஆனது.
அங்கு அத்தை, கையிலிருந்து ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினாள். அவன் லட்சியம் செய்யாமல் கிளம்பிச் செல்ல, அத்தை சொன்ன “நல்லாயிருக்கணும் தம்பி” அவன் காதில் கூட விழுந்திருக்காது.

ஆசிரியர் குறிப்பு

செங்கல்பட்டில் பிறந்து குடந்தை, தஞ்சை, மதுரை என்று வளர்ந்ததற்கு அப்பாவின் அரசாங்க வேலை காரணம். 1991 முதல் சென்னையில் செட்டிலானது என் வேலை காரணமாக. தொழில்முறைக் கல்வி படித்து, அரசாங்க வேலை ஒன்றில் இணைந்து, 35 ஆண்டு பணி நிறைவுக்குப் பின் சென்ற ஆண்டு ஓய்வு பெற்றேன்.
எனது கவிதை ஒன்று 90 களின் பிற்பகுதியில் கல்கியில் வெளிவந்தது. அச்சுப் புத்தகத்துக்கு நான் அதற்குப் பின் படைப்பு எதுவும் அனுப்ப ஏனோ முயற்சிக்கவில்லை . இருபது வயதில் ஒருமுறை மதுரை வானொலி நிலையத்தில் இளையபாரதம் நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ளேன்.
நிறையபேர்களைப் போல நானும் ஒரு கையெழுத்துப் பத்திரிகை என் பதின்ம பருவத்தில் நடத்தியிருக்கிறேன். நூலகத்தில் சுற்றுக்கு விடுவேன்.
எனது முதல் கதை ‘எங்கள் Blog’ எனும் எங்கள் வலைப்பக்கத்தில்தான் இடம் பெற்றது. கடந்த தீபாவளிக்கு என் கதை ஒன்று மின்புத்தகமான தேன்சிட்டு தீபாவளி மலரில் வெளிவந்தது. என் பாட்டி, அப்பா ஆகியோர் வீட்டில் புத்தகங்கள் பல்வேறு தலைப்புகளிலும் பைண்ட் செய்து வைத்திருந்ததாலும், நூலகங்களாலும் என் படிக்கும் பழக்கம் சிறுவயது முதலே வலுவாயிருந்தது.
நான் கலந்துகொண்ட முதல் போட்டி ராய செல்லப்பா ஸார் நடத்திய அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டி.. போட்டிக்கு வந்திருந்த அத்துணை படைப்புகளின் தெரிவில் என் படைப்பும் இடம்பெற்றது எனக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தந்தது..

வசந்தா கோவிந்தராஜன்/தேரோடும் வீதியில் – விருட்சம் நாளிதழ்

17 Comments on “பா. ஸ்ரீராம்/எங்கேயும் மனிதர்கள்”

  1. நல்ல கதை. மிக சின்ன விஷயம்.அதை சுற்றி கற்பனையோடு கதை பின்னப் பட்டு இருக்கிறது.கையில் எடுத்தா படிக்காமல் கீழே.வைக்க முடியாது. நல்ல ரசனை.

  2. நன்றாக இருக்கிறது, கதை. ஒவ்வொருவர் பக்க நியாயமும் ஏற்கத்தக்கதே….!! அந்த நியாயத்தையும் மிஞ்சிய ஸ்விக்கி பணியாளரின் மனித நேயம்…. கண் கலங்கவைத்து விட்டது. அருமை….

  3. தினசரி வாழ்க்கையில் நாம் படும் பாட்டில் சட்டென புலப்படும் மனிதம் கதையில் ஒரு பிடிப்பை ஏற்படுத்துகிறது. பாராட்டுகள் ஸ்ரீராம்.

  4. சிறிய நிகழ்வு அழகாக எழுதப்பட்ட கதை. ஸ்விக்கி பணியாளர்களைப் பற்றி பொதுவான எண்ணத்திலிருந்து, இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று எண்ண வைத்த கதை.

    பாராட்டுகள், வாழ்த்துகள் ! ஸ்ரீராம்.

    கீதா

  5. அரசு மருத்துவமனையை கண்முன் நிறுத்திவிட்டீர்கள். ஸ்விக்கி பணியாளரின் நிலையையும், அத்தையின் நிலையையும் விவரித்த விதம் அருமை. சுற்றி இருப்பவர்களின் மனிதநேயம் படிப்பவர்களின் மனதில் நேர்மறை எண்ணத்தை விதைக்கும் என்பதில் சந்தேகமில்லை. 👏👏👏
    வாழ்த்துகள்💐💐💐

  6. கதை படிக்கும் போதே மருத்துவமனையில் நானே இருப்பது போல் ஒரு பரபரப்பு என்னை தொற்றி கொண்டது. கதை படிக்க ஆரம்பித்தபின் அதை பாதியில் நிறுத்த முடியவில்லை. சுவிக்கி பணியாளரின் மனத நேயம் மனதில் நிற்கிறது. வாழ்த்துக்கள் சார்!

Comments are closed.