
அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 25
‘கோவிந்தா, கோவிந்தா’ சத்தம் தெருவெங்கும் இடிபோல் எதிரொலித்தாலும் சண்டிக்குதிரை மாதிரி தேர் ஓரங்குலம் நகர்ந்து நின்றது. பாளையங்கோட்டைக் கல்லூரியில் படிக்கும்போது இந்தத் தேரை வடம்பிடித்திருக்கிறேன். பதினெட்டு வருடங்களுக்குப் பின் இன்றுதான் மீண்டும் வடம்பிடிக்கிறேன். வியர்வை பெருகப் பெருமுச்சுடன் தேரை நிமிர்ந்து பார்த்தேன். புதிதாக வர்ணம் பூசிக்கொண்டு பாய்ச்சலுக்குத் தயாராய் நிற்கும் குதிரைகள்! கூட்டத்தை எட்டிப்பார்க்கும் பொம்மைகள்! அலங்காரத் தோரணங்கள், குலையுடன் வாழை, வண்ணவண்ண மாலைகள் என அலங்கரிக்கப்பட்ட சின்னக்குன்று போல் கம்பீரமாய் நின்றது.
தேரினுள்ளே பட்டுப் பீதாம்பரமும், ஜொலிக்கும் நகைகளும், அடர்ந்த ரோஜா மாலைகளும் சாற்றிக்கொண்டு பேரழகு பொங்கும் பெருமாளையும், அவருக்குச் சற்றும் குறையாமல் சர்வாலங்கார பூஷிதையாய்ப் புன்னகை மிளிரும் தாயாரையும் பார்க்கவே பரவசமாக இருந்தது. இத்தனை நேரம் மளமளவென நகர்ந்த தேர் ஏனோ சண்டித்தனம் செய்கிறது.
ஒடிசலாய், ஒரு நரைத்த தலை மனிதர் கண்ணீர்மல்கக் கைகூப்பிக்கொண்டே தேர்ச் சக்கரத்தின் கீழே உப்பையும், மிளகையும் அள்ளி அள்ளி வீசினார். “சாமீ, என் குடும்பத்தை மன்னிச்சிடுய்யா” என்று கதறலுடன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். “கோவிந்தா, கோவிந்தா” என்று கோஷமிட்டார். கூட்டமும் பெருங்கோஷமிட்டது.
பின்னால் ஒரு பெரிய தடியை முட்டுக்கொடுத்தார்கள். திடீரென்று பரபரவென நகர ஆரம்பித்து விட்டது. கோவிந்தா கோஷம் விண்ணை முட்டியது. பெருமாளும், தாயாரும் உற்சாகமாக ஆடியாடி வந்தார்கள்.
வடம்பிடித்த அரை மணிநேரத்தில் அசந்து போயிருந்தேன். சொகுசாய்க் குளிர்சாதன அறையில் உட்கார்ந்தே உடம்பைப் பூஞ்சையாக்கி விட்டேன். கூட்டத்திலிருந்து விலகி ஓரமாக நகர்ந்தேன். அந்தப் பெரியவரும் ஓரமாக நின்று கொண்டிருந்தார். நெற்றி நிறையத் திருநீற்றுப் பட்டையுடன் குச்சி குச்சியான கைகளைத் தலைக்குமேல் கூப்பிக்கொண்டு கண்ணீர் மல்க நிற்கும் அவரை எங்கோ பார்த்த உணர்வு. தேர் இப்போது குலுங்கிக்கொண்டு எங்களைக் கடந்து விட்டது. அவர் தேர் நகர்ந்த பின்னும் அழிந்த கோலத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
இப்போது பளிச்சென்று நினைவு வந்துவிட்டது. வேலுச்சாமி! அருவா மீசையும், விரல் பருமன் சங்கிலியுமாய் புல்லட்டில் வலம் வருவார். அவரைப் பார்த்தால் ஊரே நடுங்கும். எனக்கு அவர் கம்பீரம் பிடிக்கும். டபடபவென அதிரும் அந்த புல்லட்டை ஓட்டிப் பார்க்க வேண்டுமென்று ஆசையாயிருக்கும். அவரது இளைய மகன் முனியாண்டி என்னுடன்தான் ஒன்பதாம் வகுப்பு படித்தான். நான் பனிரெண்டாம் வகுப்பு வரும்வரை அவன் ஒன்பதாம் வகுப்பைவிட்டு நகரவேயில்லை.
முனியாண்டி வீட்டுக்கு ஒருதடவை அவனைப் பார்க்கப் போயிருந்தேன். அவனைப் பார்க்க என்பது ஒரு சாக்கு. எப்படியாவது அந்த புல்லட்டில் ஒரு ரவுண்டு வரணும். அவன் அப்பா ஊரில் இல்லாத நாட்களில் அவன் அதையெடுத்துக் கொண்டு கெத்தாக தெருவுக்குள் சுற்றிச் சுற்றி வருவான். அன்றும் அவன் அப்பா ஊரில் இல்லை. எப்படியாவது ஒரு ரவுண்டு புல்லட்டை ஓட்டியே தீருவது என்ற சங்கல்பத்துடன் போனேன்.
“என்ன தம்பி, ஊருக்குப் புதுசா?” அவரையே வெறித்ததை அப்போதுதான் உணர்ந்தேன்.
“இல்லை அய்யா! இந்த ஊர்லதான் படிச்சேன். முனியாண்டியோட ஃப்ரெண்டு ராஜாமணி ! என்னய்யா, நீங்க இப்படி ஆயிட்டீங்க?”
தூரத்தே நகரும் தேரைப் பார்த்துக்கொண்டே பெருமூச்சுடன் சொன்னார். “என் உடம்புக்கென்ன, நல்லாத்தான் இருக்கு! இந்த எடத்துல நின்னாலே மனசு பக்குனு ஆயிடுது! எத்தனை வருஷமானாலும் அது மறக்க மாட்டேங்குது!” குரல் தழுதழுத்தது.
அடுத்த நிமிடம் சுதாரித்துக் கொண்டு “ஏன் தம்பி, இத்தனை வருஷமா இந்த ஊருக்கே வரலையா? உங்களைப் பாக்கவேயில்லையே!”
இரண்டு மூன்றுமுறை இங்கே வந்தேன்தான்.
முனியாண்டி விஷயம் கேள்விப்பட்டு அதிர்ந்து போனேன்! சட்டென்று நினைவு வந்தது. இந்த இடத்தில்தான் அந்த சம்பவம் நடந்தது என்று சொன்னார்கள். அதன்பின் அந்தக் குடும்பத்தைப் போய்ப் பார்க்கும் மனவலிமை எனக்கில்லை. இத்தனை வருடங்களில் ஊர்மக்கள் கூட அதை மறந்து விட்டார்கள் போல. இவரை யாரும் சட்டை செய்ததாகத் தெரியவில்லை.
“என்ன தம்பி, திகைச்சுப் போய் நிக்கறீங்க? முனியாண்டி பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க! ஒரு கேடுகெட்ட தகப்பனுக்குப் பொறந்ததால அவன் நெலமை அப்படி ஆயிடுச்சு!”
மெதுவாக நடந்தார். ஊர்க்காரர்களிடம் நிறையக் கேள்விப் பட்டிருந்தாலும் உண்மையில் என்னதான் நடந்தது எனத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் எனக்குள் ஒட்டிக் கொண்டிருந்தது. அவருடன் மெதுவாக நடந்தேன். தேர் சன்னதித் தெருவைக் கடந்து விட்டதால் சத்தம் தேய்ந்திருந்தது.
“அம்மா எப்படி இருக்காங்க?” சொர்ணத்தம்மாள் காதில் பெரிய கல் தோடும், இரட்டை மூக்குத்தியும், கழுத்து நிறைய பதக்கம் வைத்த ஒரு பிடி சங்கிலிகளும், கை நிறைய வளையல்களும், பெரிய குங்குமப் பொட்டும் கண்டாங்கிச் சேலையுமாய் ஒரு ஜமீன்தாரணி மாதிரி இருப்பார்.
“முனியாண்டி செத்ததுக்கப்புறம் அவளே பொணம் மாதிரித்தான் நடமாடிக்கிட்டிருந்தா! தன்னோட பேராசையே அவனுக்கு எமனாயிடுச்சுன்னு வேதனைப்பட்டா!”
இரண்டுபேரும் நடந்துகொண்டே குளத்துப்பக்கம் வந்து விட்டோம். குளம் பாசிபிடித்திருந்தது. நாலைந்து எருமை மாடுகள் தலையை மட்டும் நீட்டிக்கொண்டு கண்ணை மூடி தியானத்தில் இருந்தன. அவரே சொல்லட்டும் என்று காத்திருந்தேன். அரசமரப் பிள்ளையாரைப் பார்த்துக் குட்டிக்கொண்டேன். அவர் தோப்புக்கரணம் போட்டுவிட்டு மேடையில் உட்கார்ந்தார்.
“உனக்கு அவசர வேலை எதுவும் இருக்கா?”
தன் பாரத்தை இறக்கி வைக்கத் தயாரானார். நான் ஏற்றிக்கொள்ளத் தயாரானேன்.
“எந்த வேலையும் இல்லை. முனியாண்டிக்கு என்னதான் நடந்தது? ஊர்ல ஒவ்வொருத்தரும் ஒவ்வொண்ணு சொல்றாங்க!”
“என்னோட மொதப் பொண்டாட்டிக்குப் பொறந்தவன் வெள்ளச்சாமி! அவனுக்கு நாலு வயசாகும்போதே அவனோட அம்மா செத்துப்போச்சு. அவ செத்த நாலே மாசத்துல சொர்ணத்தைக் கட்டிக்கிட்டேன். அவளும் வெள்ளச்சாமிய நல்லாத்தான் பாத்துக்கிட்டா. வெள்ளச்சாமிக்கும் படிப்பு ஏறலை. ஆனா நெலத்து மேல அப்படியொரு பிரியம். பொழுதன்னிக்கும் வயலுக்குள்ளயே கெடப்பான். அவனால எங்க வயல்ல எப்பவுமே அமோக வெளைச்சல் தான். முனியாண்டி வளர வளர சொர்ணத்தோட கொணம் மாறிப் போச்சு. அவனைத் தலைக்கு மேல தூக்கி வைச்சா. அதுனால அவன் தறுதலையா வளந்தான்.
நான் ஏதாவது சொன்னாக்கூட அவ “உங்களுக்கு மூத்தவ மகன்தான் ஒசத்தி”ன்னு பிலாக்கணம் வைக்க ஆரம்பிச்சுடுவா! நானும் வயசு ஏற ஏறப் புரிஞ்சுக்கிடுவான்னு விட்டுட்டேன்.
வெள்ளச்சாமிக்குப் பொண்ணு வீட்டுக்காரங்க வர ஆரம்பிச்சவுடன்தான் பிரச்சனை ஆரம்பிச்சுது. அவன் பேர்ல சொத்து ஏதாவது இருக்கான்னு கேட்டாங்க. பொண்ணக் குடுக்கறவங்க மருமகன் படிக்கவும் இல்லை, சொத்தும் இல்லைன்னா எப்படி நம்பிப் பொண்ணைக் குடுப்பாங்க? அவங்க யோசிக்கறது நியாயம் தானே? நான் நெலத்தை மூணு பங்காப் பிரிச்சு எனக்கு ஒரு பங்கு வைச்சுக்கிட்டு அவங்க இரண்டு பேருக்கும் தனித்தனியா எழுதலாம்னு சொன்னேன். சொர்ணமும் முனியாண்டியும் ஒத்துக்க மாட்டேன்னு ஒத்தைக்கால்ல நின்னாங்க. போனாப் போகுதுன்னு ஊருக்கு வெளிய தரிசாய்க் கெடந்த அஞ்சு ஏக்கரை மட்டும் குடுக்கலாம்னு சொன்னாங்க. வெள்ளச்சாமி உயிரைக் கொடுத்து வளர்த்து அறுவடைக்கு நிக்கும் இருபத்தைஞ்சு ஏக்கர் நெலம், முப்பது ஏக்கர் தென்னந்தோப்பு, பதினைஞ்சு ஏக்கர் வாழைத் தோட்டம் எதையும் அவனுக்குக் குடுக்கக் கூடாதுன்னு தாயும் மகனும் சேர்ந்து சண்டை போட்டாங்க.
வெவசாயம் பண்ணினாலே நகைய அப்பப்ப அடகு வைக்கறதும் மீட்றதும் சகசம் தான? அவ நகைய இரண்டு முணு தடவை அடகு வைச்சு திரும்ப மீட்டுக் குடுத்திருக்கேன். அதைச் சொல்லிக் காம்பிச்சா. முத சம்சாரம் கொஞ்சம் கஷ்டப்பட்ட இடம். அதுனால இவங்களுக்கு வெள்ளச்சாமி எளக்காரமாப் போயிட்டான்.
வெள்ளச்சாமிக்கு ஒரு பெண்ணை பிடிச்சு எல்லாம் கூடிவந்த வேளைல முனியாண்டி அவனுக்கு சொத்துல ஏதாவது எழுதிக் குடுத்தா வெட்டிப்புடுவேன்னு குடிச்சுட்டு கலாட்டா பண்ணினான். என்னை ஊர்க்காரங்க தான் வீரன் சூரன்னு நெனைச்சாங்க. ஆனா சொர்ணத்தின் தலையாட்டி பொம்மையாத் தானிருந்தேன். நானும் அப்ப நல்லாக் குடிப்பேன். நான் போதைல இருக்கும்போது சொர்ணம் எங்கிட்ட எல்லாத்தையும் தம்மகன் பேருக்கு எழுதி வாங்கலாம்னு தயார் பண்ணிட்டா.
இதைக் கேள்விப்பட்ட வெள்ளச்சாமி கொதிச்சுப் போய் வீட்டுக்குள்ள வந்து சண்டை போட்டிருக்கான். முனியாண்டி அரிவாளைத் தூக்கிட்டு ஓடி வந்திருக்கான். வெள்ளச்சாமி தெருவுக்கு வந்தாத் துரத்த மாட்டான்னு நெனைச்சு தெருவுல ஓடியிருக்கான். அப்பவும் முனியாண்டி “நீ உயிரோட இருந்தாத்தான சொத்துல பங்கு கேப்ப?” ன்னு வெட்டப் போயிட்டான். இரண்டு பேரும் சண்டைல தெருவுல உருண்டிருக்காங்க. வெள்ளச்சாமி தடுக்கும்போது அருவா முனியாண்டி கழுத்துலயே எறங்கிடுச்சு. வீச்சருவா புதுசாத் தீட்டி எடுத்துட்டு வந்தது அவனுக்கே எமனாப் போச்சு. அவ அம்மா விஷயம் கேள்விப்பட்டு ஓடி வரும்போது முனியாண்டி கழுத்து அறுபட்டுத் துடிச்சிருக்கான்.
பதறிப்போன வெள்ளச்சாமி அவனைத் தூக்கிட்டு ஆஸ்பத்திரி போறதுக்குள்ள அவன் உயிரே போயிடுச்சு. நான் ஒரு வேலையா பாளையங்கோட்டை போயிட்டு வரதுக்குள்ள எல்லாமே முடிஞ்சு போச்சு. ஊர்க்காரங்க எல்லாரும் பார்த்துக்கிட்டிருந்தாலும் யாருக்கும் தடுக்கற துணிச்சல் இல்லை. அதுக்கப்புறம் ஊர்ல எல்லாரும் எங்ககிட்டப் பேசறதையே விட்டுட்டாங்க! இது நடந்து பதினாலு வருஷம் ஆயிடுச்சு. இப்பதான் கொஞ்ச நாளா என்னைப் பார்த்துச் சிரிக்கறாங்க!” அவர் குரல் வறண்டிருந்தது.
அவர் குடும்பத்தில் நடந்த இந்த அசம்பாவிதம் அவரை எந்தளவு பாதித்திருக்கும் என்பதை என்னால் உணர முடிந்தது. நடுங்கும் அவர் கைகளை ஆதரவாகப் பற்றினேன். “சில விஷயங்கள் நம்ம கையில இல்லை. அவனது இறப்பு இப்படித்தான் ஏற்படணும்னு எழுதியிருக்கு போல. அம்மா இப்ப எப்படி இருக்காங்க?” ஆரம்ப கேள்விக்கே இப்போது வந்தேன்.
அவர் முகத்தில் லேசான மலர்ச்சி. “அவளுக்கென்ன, மருமவளோட சண்டை போட்டுக்கிட்டு பேரன் பேத்திகளைக் கொஞ்சிக்கிட்டு வக்கணையா சாப்பிட்டுக்கிட்டு இருக்கா!” என்று சிரித்தார்.
“பேரப் பிள்ளைங்களா?” வியந்தேன்.
“அதையேன் கேக்கறீங்க? வெள்ளச்சாமி தப்பை ஒத்துக்கிட்டு தானே போலீஸ்ல சரண்டர் ஆயிட்டான். அவனுக்கு ஆயுள் தண்டனை விதிச்சாங்க. ஆனா அவன் தண்டனையக் குறைக்கச் சொல்லி மனுப்போட்டு எட்டு வருஷத்துல வெளிய வந்துட்டான். கருணை மனு போட்டது யாருங்கறே?” என்னை நிமிர்ந்து பார்த்தார்.
“நீங்க தானே?” என்றேன். தலையாட்டினார். “சொர்ணம்! என் புள்ளை செத்ததுக்கு யாரும் பொறுப்பில்லை, அவனேதான் காரணம். அவன் அருவாளத் தூக்கினதால தான் அவன் உயிரே போச்சு. அதுக்கு நானும் ஒரு காரணம்! நான் பெத்த புள்ளைக்காக பெறாத இந்தப் புள்ளைக்குத் துரோகம் நெனைச்சேன்! அதுனால சாமி எம்புள்ளையத் தண்டிச்சுடுச்சு! காலம் கெட்டப்புறம் அவளுக்கு புத்தி வந்தது. அவன் வெளிய வந்தப்புறம் அவனுக்குப் பொண்ணு பாத்துக் கட்டி வைச்சோம். மருமக வெள்ளச்சாமிக்கேத்த தங்கமான புள்ள. இப்ப எல்லாரும் ஒண்ணாத்தான் இருக்கோம். வீட்டுக்கு வாங்க தம்பி. உங்களைப் பார்த்ததுல எம்மவனப் பாத்த திருப்தி. சொர்ணமும் உங்களப் பாத்தா சந்தோசப்படுவா!”
அவர் முகத்தில் இப்போது அமைதி.
தேர் நிலைக்கு வந்துவிட்டதுபோல. வெடி வெடிக்க ஆரம்பத்திருந்தார்கள். சொர்ணத்தம்மாளைப் பார்க்க அவருடன் கிளம்பினேன்.
ஆசிரியர் குறிப்பு
என் பெயர் வசந்தா கோவிந்தராஜன். சொந்த ஊர் நெல்லை மாவட்டம், நான்குனேரி. தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறையில் பணிபுரிந்து விருப்பார்ந்த ஓய்வு பெற்றபின் மூன்று ஆண்டுகளாக என் எழுத்துப் பயணம் தொடர்கிறது. இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்று அவை பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. புஸ்தகாவில் எனது நான்கு புத்தகங்கள் (சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் நாவல்) வெளியாகியுள்ளது.
நாராயணசாமி/அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ? – விருட்சம் நாளிதழ்

பகிர்தல் என்பதே ஒரு ஆறுதல்தான். அதுவும் மறைந்தவனின் நண்பனிடத்தில் பகிர்ந்ததில் இன்னும் பாரம் இறங்கி இருக்கும் அந்த மீசைக்கார வேலுச்சாமிக்கு.
உண்மையில் ஊர்க்காரர்கள் தான் வெட்க்கபப்ட வேண்டும், நடந்த தவறை தடுக்காமல் இருந்ததற்காக. அவர்கள் இவர்மேல் கோபமாயிருப்பது நியாயமே இல்லை.
நன்றி சகோ. என் தோழி வீட்டில் தடுக்கப் போனவர் வெட்டு வாங்கிக் கொண்டார். அதனால் நிறையப்பேர் ஒதுங்கி விடுவார்கள்