
அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 24
“ப்ரியா ! என்னுடைய நிலைமையை கொஞ்சம் புரிஞ்சுக்கோ. உனக்கு பத்து வயசு ஆகும் போது உன் அப்பா நம்மை விட்டுட்டுப் போய் சேர்ந்துட்டார். வாய்க்கும் வயித்துக்குமே போராட்டம். வயித்தை கழுவ நான் செய்யாத வேலையில்லை. சித்தாள் வேலைக்குப் போனேன். நாலுவீட்டில் பத்துப் பாத்திரம் தேய்த்தேன். கஷ்டப்பட்டு உன்னை டிகிரி படிக்க வைச்சேன் ”.
“ நானும் நல்லா படிச்சு டிகிரி முடிச்சேன். சுருக்கெழுத்து எல்லாம் பழகிட்டு இங்கிட்டு ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து மாசம் நாலாயிரம் சம்பளம் வாங்கிக் கொடுக்கிறேன். அதையும் சொல்லும்மா” என்றாள் ப்ரியா.
“ ஒத்துக்கிறேன். அதனால்தான் இப்போ வாழ்க்கை சிரமமில்லாமல் போயிட்டிருக்கு. கல், மண் சுமந்ததாலே இப்போ எனக்கு அடிக்கடி தலைவலி வருது. வயதும் ஆகிட்டுப் போகுது. எவ்வளவு காலம் இருக்கப் போகிறேன் என்று சொல்ல முடியாது. எனக்கு ஏதாவது ஆகறதுக்குள்ளே உன்னை ஒருத்தன் கையில் பிடிச்சுக் குடுக்கனும்னு நினைக்கிறேன். வசதியான இடத்துக்கு ஆசைப்படறஅளவுக்கு நாம் இல்லை.இப்ப வந்திருக்கிற வரன் நல்ல பையன்.வயசு 33. கெட்ட பழக்கம் எதுவும் கிடையாது. வசதியில்லாவிட்டாலும் வயித்துக்குப் பஞ்சம் கிடையாது. அவனுடைய அம்மா புண்ணியவதி. நீ அங்கே மகாராணி மாதிரி இருக்கலாம்.
“ஆனா அடிப்படையிலேயேஒரு குறை இருக்கே அம்மா” என்று சொல்லி விட்டு அம்மாவின் பதிலுக்குக் கூடக் காத்திராமல் விருட்டென்று வெளியேறினாள் ப்ரியா.
* * *
ஒரு வாரம் கழித்து சரோஜா அத்தை வந்திருந்தாள். அம்மா கூப்பிட்டு இருப்பாள். இவள் அப்பாவின் தங்கச்சி. அவளுடைய கணவன் போய்ச் சேர்ந்து விட்டான். பக்கத்து ஊரில்தான் ஜாகை . இருபக்கமும் போக்குவரத்து உண்டு.
“ என்ன ப்ரியா! இந்தப் பக்கம் அந்தப் பக்கம் பறந்துட்டே இருக்கே. அத்தைகிட்டே பத்து நிமிஷம் பேசமாட்டியா? ”
“ம்……. சொல்லுங்க அத்தை”.
அத்தை அருகில் வந்து அமர்ந்தாள் ப்ரியா.
“ எனக்கு கணேசன்னு ஒரு பையன் இருக்கான்னு உனக்குத் தெரியும். கல்யாண வயசு. பொண்ணு தேடிக்கொண்டு இருக்கேன். “ பேசாம அவனைக் கட்டிக்கோ” அப்படின்னு நான் சொல்லுவேன்னு நெனக்காதே.நீ கேட்டாலும் உன் அம்மா கேட்டாலும் நான் அதுக்கு ஒத்துக்க மாட்டேன். ஏன்னா! அவன் இருபத்து நாலு மணிநேரமும் தண்ணியிலே மிதக்கிறான். நீ வாழ வேண்டிய பொண்ணு. இப்ப உங்க அம்மா சொல்ற வரன் சொக்கத் தங்கம். அவங்க அம்மா மகராசி.அந்தக் குடும்பத்தைப் பத்தி எனக்குத் தெரியும். என்ன அவங்க போதாத காலம் அந்த பையனோட முதல் தாரம் பஸ் விபத்தில் போய்ச் சேர்ந்துட்டா. தாயில்லாதஇரண்டரை வயது பெண் குழந்தை தவிக்குது. அந்தக் குழந்தையை நீதான் வளர்க்கனும். அந்தப் பையன் சங்கர் இரண்டாம் கல்யாணம் வேணாம்னு ஒரேயடியாக மறுக்கிறான்.
“ எனக்கோ வயசாயிட்டுப் போகுது. அது பெண் பிள்ளையா வேறஇருக்கு. எனக்குப் பிறகு எப்பிடிடா காப்பாத்துவே ” என்று மன்றாடி அவனை இரண்டாம் கல்யாணத்துக்கு சம்மதிக்க வைச்சிருக்கா அவங்க அம்மா”
அசப்பிலே நீ முதல் சம்சாரம் மாதிரி இருக்கியாம். அதனாலே ரொம்ப பிரியப்படறாங்க. இரண்டாம் தாரமாப் போனாலும் முதல்தரமான மரியாதை கிடைக்கும். “இரண்டாம் தாரம்” என்பதை ஒரு குறையாக நினைக்காதே. முதல் தாரமா வாழ்க்கைப் பட்டவங்க எல்லோருமே சந்தோஷமா இருக்காங்களா என்ன,” என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் “அத்தை ஆபீசுக்கு நேரமாச்சு” என்று சொல்லி விட்டு அவசரமாக் கிளம்பி விட்டாள் ப்ரியா.
- * *
காலை பதினோரு மணி.முதலாளியின் அறையில் டிக்டேஷன் எடுத்துக் கொண்டிருந்த போது முதலாளியுடைய நண்பர் நல்லசிவம் வருகை தந்தார்.
“ குமாரசாமி ! நான் ஒரு கார் வாங்கியிருக்கேன்டா.வெளியிலே நிறுத்தியிருக்கேன். வா ! வந்து பார் !” என்று கூட்டிக்கொண்டு போனார். ஒரு ரவுண்டு காரில் சுற்றிவிட்டு பத்து நிமிடத்தில் திரும்பி வந்தார்கள்.
“விலை? ”
“ பதினோரு லட்சம்”.
“என்னுடைய புது காரே எட்டரை லட்சம் தான்டா ”
“2024 ம் வருஷ மாடல். இரண்டாயிரம் கிலோமீட்டர் தான் ஓடியிருக்கு. ஓனர் ஒரு டாக்டர்.வெளிநாட்டில் செட்டிலாகிறதாலேவித்துட்டார். கியர் முதற் கொண்டு எல்லாமே ஆட்டோமெடிக். புதுசா ஷோரூமில் வாங்கினா பதினஞ்சு லட்சத்துக்குப் பக்கமா வந்துடும்”.
என்னஇருந்தாலும் “செகண்ட் ஹாண்ட், செகண்ட் ஹாண்ட் தானே ”
இதைக் கேட்டதும் நல்லசிவத்தின் முகம் இருண்டது.
கைக்கடிகாரத்தைப் பர்த்துக் கொண்டே “அப்பாயிண்ட்மென்ட் ஒன்று இருக்கு. சாயங்காலம் கிளப்பில் மீட் பண்ணலாம் ” என்று சொல்லிக் கிளம்பி விட்டார்.
நல்லசிவத்தின் மனைவி பணக்காரி. முதல் கணவரை விவாகரத்து செய்தவர்.நல்லசிவம் அவளுடைய இரண்டாவது கணவர். அதனால் தான் “செகண்ட் ஹாண்ட்” என்கிற வார்த்தை அவரை காயப்படுத்திவிட்டது.
அம்மா சொல்கிறமாப்பிள்ளையை கட்டிக் கொண்டாளல் “செகண்ட் ஹாண்ட் செகண்ட் ஹாண்ட் தான்” என்பது தனக்கும் பொருந்தும் என்று எண்ணிக் கொண்டாள் ப்ரியா. - * *
அந்த ஊர் கோவில் திருவிழா அடுத்த வாரம் இருந்தது. ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்.
ப்ரியாவின் தோழி சினேகா வாண வேடிக்கையை பார்ப்பதற்கு வந்து இருந்தாள். அவளுக்கு பக்கத்து ஊர். அரைமணி நேரப் பயணம். அவ்வப்போது விடுமுறை, விசேஷ நாட்களில் காலையில் வந்து விட்டு இருவரும் சேர்ந்து பொழுது போக்கிவிட்டு மாலை அவள் வீட்டிற்கு திரும்புவது வழக்கம். சினேகா சிறிது நேரம் ப்ரியா அம்மாவுடன் அடுப்படியில் பேசிக் கொண்டு இருந்தாள். மத்தியான சாப்பாட்டிற்குப் பிறகு இருவரும் கோவிலிக்குப் போய் சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்தார்கள்.
“அவள் அப்படி ஒன்றும் அழகில்லை, அவளுக்கு யாரும் இணையில்லை ” என்று ஒலிபெருக்கி பாடிக்கொண்டிருந்தது.
வேடிக்கை பார்த்துக் கொண்டே பேசிக்கொண்டு வீதிகளில் நடந்தார்கள்.
பேச்சுவாக்கில் சினேகா “ஏண்டி உங்கம்மா சொல்ற வரனை நீ கட்டிக்கடி. கொஞ்சம் பிராக்டிகலா இரு” என்றாள்.
சமையலறையில் அம்மா இவள் காதை கடித்திருப்பாள் போலிருக்கிறது.
“ வகுப்பில் முதலா இருந்த என்னை வாழ்க்கையில் ஒருத்தனுக்கு இரண்டாம் தாரமாப் போகச் சொல்ல உனக்கு எப்படிடி மனசு வந்திச்சி ? ” என்று வெடித்தாள் ப்ரியா.
நிலைமையை உணர்ந்த சினேகா பேச்சை திசை திருப்பினாள்.
“ சில்க் பேலஸ்ல் நல்ல நல்ல சுடிதார் வந்திருக்காம். வா! போய் பார்க்கலாம் என்றாள் சினேகா.
“ஈவனிங் பஜாரிலும் நிறைய டிசைன்ஸ் கிடைக்குது. விலையும் கொஞ்சம் குறைவு. அங்கே போய் பார்க்கலாமே? ”
“வேண்டாமடி. அங்கே பெரும்பாலும் செகண்ட்ஸ் தான் இருக்கும்” என்று இயல்பாகச் சொன்னாள் சினேகா.
ப்ரியாவின் முகம் கோபத்தில் சிவந்தது. “போடுகிற சுடிதார் கூட உனக்கு செகண்ட்ஸ் வேணாம்.ஆனால் என்னை செகண்ட்ஸ் மாப்பிள்ளையை கட்டிக்கச் சொல்றே ” என்றாள்.
“சாரிடி. இனிமேல் இது சம்பந்தமாக உன்னிடம் பேச மாட்டேன்” என்றாள் சினேகா.
அதற்குப் பிறகு அவர்களிடையே இருந்தகலகலப்பு மறைந்து விட்டது. ஏழுமணி வாக்கில் சினேகா அவள் ஊருக்கு கிளம்பி விட்டாள். - * *
ஒரு மாதம் உருண்டோடியது. ப்ரியாவின் தாய் மாமன் வீட்டில் கல்யாணம். பக்கத்து ஊர். ப்ரியாவும் அம்மாவும் முதல் நாள் மதியமே சென்று விட்டார்கள்.
வயதானவர்கள் பழங்கதை பேசிக்கொண்டு இருக்க சிறுவயதினர் நடுத்தரவயதினர் ஓடியாடி கல்யாண வேலைகளைசெய்வதில் சுறுசுறுப்பாக இருந்தார்கள். அதிலும் ப்ரியா பம்பரம் போல் சுழன்று கல்யாண வேலையில் லயித்திருந்த போது யாரோ பின்னால் இருந்து சேலைத் தலைப்பை இழுப்பது போல இருந்தது. திரும்பிப் பார்த்தாள். ஒரு சிறிய பெண் குழந்தை. “அம்மா ” என்றது.அதுசாதாரணக் குரலாகத் தெரியவில்லை.அன்பு, பாசம், ஏக்கம், தவிப்பு எல்லாம் கலந்த குரல்.
“அம்மா! ஏம்மா ஏன்னை விட்டுட்டுப் போயிட்டே ? நீ இல்லாமல் இந்தப் பாப்பா எப்படி அழுதேன் தெரியுமா? எல்லோரும் நீ கடவுள்கிட்டேபோயிட்டேன்னு சொன்னாங்க. நான் நம்பலே.நீ போற எல்லா இடத்துக்கும் என்னை கூட்டிட்டு போவியே! இப்ப ஏம்மா விட்டுட்டுப் போனே ? பாப்பாவுக்கு மனசு கஷ்டமாயிடுச்சி” என்று தன் இதயத்தை சின்னக்கையால் தொட்டு சொன்னது. அதன் கண்களிலிருந்து தாரை தாரையாக் கண்ணீர். ப்ரியாவின் மனதைப் பிசைந்தது. குழந்தையை அப்படியே எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டாள். குழந்தையின் இதயத்துடிப்பு வேகமாகவும் சப்தமாகவும் அடித்து கொண்டிருப்பது தெரிந்தது. பெண்மைக்குரிய தாய்ப்பாசம் ப்ரியாவை குழந்தையின் வசப்படுத்தியது. அவளைச்சுற்றி சிறு கூட்டம் சேர்ந்து விட்டது.
அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி ப்ரியாவை நெருங்கி “ தப்பா எடுத்துக்காதே பாப்பா. இந்தக் குழந்தை என் பேத்திதான். இவளோட அம்மா பஸ் விபத்தில் செத்துப் போயிட்டா. அதை இந்தக் குழந்தையாலே தாங்கிக்க முடியலே. அம்மாவை அவளால் மறக்க முடியலே. உன்னைப் பார்த்தா அசப்பில் அவ அம்மா மாதிரி இருக்கறதாலே உன் கிட்டே ஒட்டிக்கிட்டா” என்று சொல்லி ப்ரியாவிடமிருந்து குழந்தையை வாங்க முயன்றாள். அது ப்ரியாவை கட்டிப்பிடித்துக் கொண்டு வரமாட்டேன் என்று அடம் பிடித்தது.
“பரவாயில்லை அம்மா! கொஞ்ச நேரம் என் கிட்டேயே இருக்கட்டும்” என்று சொல்லி குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டே அங்குமிங்கும் ஓடினாள்.
அந்தக் குழந்தையின் முகத்தில் ஒரு நிம்மதி. அந்தக் குழந்தை யாரென்பது இப்போது ப்ரியாவுக்கு தெளிவாக புரிந்தது. அவர்களும் அந்தக் கல்யாணத்திற்கு வந்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டாள்.
இரவு வந்தது. கல்யாண விருந்துக்குப்பின் அனைவரும் ஹாலில் பாயில் உருண்டனர். வேலை செய்த களைப்பில் ப்ரியா நன்றாகத் தூங்கி விட்டாள்.நடுஇரவில் கண்விழித்துப் பார்த்தபோது அவளுக்கு பக்கத்தில் அந்தக் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. தேடிப்பிடித்து அவள் பக்கத்தில் வந்து படுத்துக் கொண்டது போலும். அதன் கைகள் இவள் முந்தானையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு இருந்தது.
தூக்கத்திலும் அதன் கண்களின் ஓரத்தில் கண்ணீர் துளிகள். சில துளிகள் படுக்கையை நனைத்திருந்தன. ப்ரியா தன்னுடைய கையை எடுத்து அந்தக் குழந்தையை அணைத்துக் கொண்டு மீண்டும் தூங்கி விட்டாள்.
அடுத்த நாள் விடியற்காலை எல்லோரும் முகூர்த்தத்திற்கு தயாராகிக் கொண்டு இருந்தார்கள். ப்ரியாவும் அவள் அம்மாவும் அருகருகில் அமர்ந்து காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். குழந்தை இன்னமும் தூங்கிக் கொண்டிருந்தது. குழந்தையைப் பார்த்தவாறே , ப்ரியா அவள் அம்மாவிடம் சொன்னாள். “நீ சொன்ன வரனை சீக்கிரம் முடிச்சிடு. லேட் பண்ண வேண்டாம்”. ப்ரியாவின் அம்மாவுக்கும் அவர்களுக்குப் பின்னால் உட்கார்ந்து காப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தையின் பாட்டிக்கும் இநதச் செய்தி தேனாக காதில் பாய்ந்தது.
பெரியவர்களால் சாதிக்க முடியாததை ஒரு குழந்தையின் அன்பு சாதித்து விட்டது.
ஆசிரியர் குறிப்பு
நாட்டுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பின் படிப்பதிலும், எழுதுவதிலும் நேரத்தைச் செலவிடுகிறார்.
வயது 74.
ப்ரஸன்னா வெங்கடேஷ்/வாழ்க்கை என்னும் வரம் – விருட்சம் நாளிதழ்

One Comment on “நாராயணசாமி/அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ?”
Comments are closed.