ப்ரஸன்னா வெங்கடேஷ்/வாழ்க்கை என்னும் வரம்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 23

“இது என்ன எப்போது பார்த்தாலும் நாய் குரைக்கும் சத்தம் கேட்டபடியே இருக்கிறது” என்று எரிச்சலுடன் எதிர் ப்ளாட்டுக்குப் போய் அவர்கள் காலிங்பெல்லை அழுத்தினார் நமசிவாயம். இந்த எழுபது வயதில் வேகமாய் நடந்தாலோ சத்தமாய் பேசினாலோ , ஒரு படபடப்பு வந்து விடுகிறது. சுமார் இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, கிட்டத்தட்ட அவருடைய வயதையொத்தவர் தான் கதவைத் திறந்தார். பைஜாமா குர்தா அணிந்து , முகத்தில் நட்பான புன்முறுவலோடு காட்சி அளித்தார். “ யெஸ், ப்ளீஸ் கம் இன். நீங்க எதிர் ப்ளாட் டி2 வில் தானே இருக்கீங்க ?” என்று கேட்டார்.
அப்போது வள்வள்ளென்று குரைத்துக் கொண்டு ஒரு நாய் வாலை வேகமாய் ஆட்டியபடி அந்த பைஜாமா ஆசாமி அருகே வந்து நின்றது. “ சார், ப்ளீஸ், உங்க நாயைக் கத்த விடாதீங்க. ரொம்ப தலவேதனையா இருக்கு. நாலு நாளா, தூங்க முடியல, டிவி பாக்க முடியல.. சரியா பூசை கூட செய்ய முடியலை. இப்படி மத்தவங்களுக்கு தொந்திரவா நாள் பூரா உங்க நாய் குலைச்சுகிட்டே இருந்தா, நான் அஸோசியேஷன்ல கம்ப்ளெயிண்ட் பண்ண வேண்டி வரும்” என்று கடுகடுப்புடன் நமசிவாயம் சொன்னார். “ஸார், ஐ ஆம் திலீப். தனியா இருக்கிறதால போர் அடிக்குதேன்னு போன வாரம் தான் இந்த க்யூட் பயல் டிட்டுவை வாங்கினேன். இன்னும் புது இடத்துக்கு அவன் பழகலை. போகப் போக சரியாயிடும். குலைக்கிறது தானே நாயோட மொழி. டிட்டு, மீட் அங்கிள். ஸாரி, உங்க பேர் என்ன ? உள்ள வந்து டீ குடிக்கிறீங்களா? “ என்று உற்சாகமாய் கேட்டார் பைஜாமா. “ சார், நான் இந்த தொந்திரவைப் பத்தி சொல்லத் தான் இங்க வந்தேன். கொஞ்சம் பாத்துக்குங்க” என்று சொல்லி விட்டு நமசிவாயம் தன் ப்ளாட்டுக்குத் திரும்பினார்.
என்ன மனுஷன் இவர்? இவ்வளவு கோவத்தோட பெல்லை அடிச்சு என் ப்ரச்சனையைச் சொல்றேன். கூலா, சிரிச்சுகிட்டு டீ குடிக்கச் சொல்றாரே என்று எரிச்சலுடன் ஜில்லென்று ப்ரிட்ஜிலிருந்து தண்ணீரைக் குடித்து விட்டு டிவி பார்க்கத் தொடங்கினார். “ மாசிலா நிலவே உன் காதலை மகிழ்வோடு” என்று சிவாஜி பாட, பக்கவாத்தியமாய் “லொள் லொள்” என்று டிட்டு குலைக்க ஆரம்பித்தது . சே என்று அலுப்புடன் சொல்லியபடி தன் பெட்ரூமுக்குச் சென்றார் நமசிவாயம். அவர் மகள் ஷாலினியிடமிருந்து செய்தி வந்திருந்தது. “ அப்பா, எவ்வளவோ ட்ரை பண்ணியும் எங்களால ஒண்ணா வாழ முடியல. அதனால, அடுத்த வாரம் கோர்ட்ல டைவர்ஸ் கிடைச்சுடும். இந்த உறவை என்னால தொடர முடியலை. ஐ ஆம் ஸாரிப்பா” என்று அனுப்பியிருந்தாள். நமசிவாயம் பதட்டத்துடன் போனை எடுத்து ஷாலினியோடு பேச முயன்றார். ஊஹூம்… பெல் அடித்தபடியே இருந்தது. அவளும் மௌனமாகி மொபைலையும் மௌனப்படுத்தியிருப்பாள். இதற்குத் தானா அப்பா அம்மாவாகிய எங்களின் பேச்சைக் கேட்காமல் அவசர அவசரமாய் கல்யாணம் செய்து கொண்டாள்? எத்தனை அருமையாய் ஷாலினியை வளர்த்தோம்? இருபத்தியாறு வயதில் திருமணம், இரண்டே வருடத்தில் விவாகரத்து. இனிமேல் , ஷாலினியின் வாழ்க்கை என்னவாகும்? வைதேகி.. நீ இதையெல்லாம் பார்க்காம போய் சேர்ந்துட்ட..
ஷாலினியின் திருமணம் முடிந்த ஆறு மாதங்களில் , வைதேகிக்கு கடுமையான வயிற்று வலி தொடங்கியது. எத்தனையோ சிகிச்சைகள் செய்தும் காரணம் சரியாகப் பிடிபடவில்லை. சரியாகச் சாப்பிடாமல், தூங்காமல் , உடமும் மனமும் பலவீனமடைந்து வைதேகி மூன்றே மாதத்தில் இறந்து விட்டாள். அப்போது கூட ஷாலினி மட்டும் தான் வந்தாள். “ என் கணவர் அவசர வேலையாய் வெளியூர் சென்றிருக்கிறார்” என்று சொன்னாள். அப்போது ஷாலினி மிகவும் இளைத்து, சோர்வாக இருந்தாள். அபார்ஷன் ஆகி இரண்டு வாரங்கள் ஆகியிருந்தது என்று அவளே நமசிவாயத்திடம் சொன்னாள். பத்து நாட்கள் இருந்து விட்டு , டில்லிக்குச் சென்று விட்டாள்.
ஆனால், அந்த பத்து நாட்களும் பரமசிவத்துடன் நிறைய பேசினாள். வைதேகியை நினைத்து இருவரும் அழுவார்கள். “ என்னால தான் அம்மாவுக்கு இப்படி ஒரு நிலைமை ஆயிடுச்சுப்பா” என்று புலம்பினாள். “ நம்ம கைல எதுவும் இல்லைமா. அவ வலியில அழுது கஷ்டப்படறதை பார்க்கிறதை விட எங்கியோ நிம்மதியா , வலியில்லாம இருக்கான்னு நினைச்சிக்கலாம் “ என்று அவர் ஷாலினிக்கு ஆறுதல் சொன்னாலும், அவர் தலையணை தான் அவர் துக்கத்தை வாங்கிக் கொண்டது. பத்து நாட்கள் மகளின் அருகாமை நமசிவாயத்துக்கு பெரிய ஆறுதலைத் தந்தது.
“ உங்க ரெண்டு பேரோட மனசும் நான் செஞ்ச செயலால புண்பட்டிருக்கும். என்னை மன்னிச்சிடுங்க “ என்று கிளம்பும் போது ஷாலினி சொன்னாள். அப்போது கூட தன் திருமண வாழ்வில் ப்ரச்சனை இருப்பதாய் சொல்லவில்லை. அதற்குப் பிறகு தான் ஒரு நாள் இரவு பத்து மணிக்கு, ஷாலினியிடமிருந்து போன் வந்தது. “ அப்பா, வருணோட என்னோட வாழ்க்கை அவ்வளவு நல்லா இல்லை. ரொம்ப சண்டை வருது. வேலையை விடச் சொல்றார். அபார்ஷன் ஆனதுக்கு நான் வேலைக்குப் போறது தான் காரணம்னு தினம் தினம் குத்திக் காட்டறார். ஈகோ ப்ராப்ளம் வேற இருக்கு. எனக்கு ப்ரமோஷன் கிடைச்சது அவருக்குப் பிடிக்கலை” என்று கம்மிய குரலில் சொன்னாள்.
நமசிவாயத்துக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. “ ஏம்மா ஷாலு, நீங்க ரெண்டு பேரும் நல்லா பேசி பழகி தானே கல்யாணம் பண்ணிகிட்டீங்க? அப்படி இருந்துமா இந்த நிலைமை?” என்று கொஞ்சம் காட்டமாகவே கேட்டார். அவ்வளவு தான் . போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதற்கப்புறம் ஷாலினியிடமிருந்து போன் வரவில்லை. நமசிவாயம் தான் மனம் தாளாமல் ஒரு தடவை போன் செய்து, “ என்னம்மா ஆச்சு? திருமண வாழ்க்கைன்னா ப்ரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். விட்டுக் கொடுத்து போனா சரியாயிடும்” என்று கொஞ்சம் தணிந்த குரலில் சொன்னார். ஷாலினி, “ தேங்க்யூ பா. அன்னிக்கு நீங்க கோவமா இருந்தீங்க. தப்பு என் மேல மட்டும் இல்லப்பா. விட்டுக் கொடுத்து போயிட்டே இருந்தா , நான் என்னையே தொலைச்சிடுவேன் போல இருக்கு. நான் உழைக்கிறேன் , எனக்கு ப்ரமோஷன் வருது. அதுல என் தப்பு என்னப்பா இருக்கு? இது சரிப்பட்டு வரும்னு தோணலை. அவர் டைவர்ஸ் கேட்டிருக்கார். கோர்ட்ல கேஸ் நடந்துகிட்டிருக்கு, பார்க்கலாம் . அப்பா, நீங்க கவலைப்படாதீங்க. உங்க உடம்பைப் பாத்துக்குங்க” என்று சொன்னாள்.
அதற்குப் பிறகு, கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு விவாகரத்து ஆகி விட்டதென்ற செய்தி வந்திருக்கிறது. இரண்டு நாட்கள் நமசிவாயத்துக்கு மனம் பாரமாய் இருந்தது. அவ்வப்போது நாயின் குரைப்பு வேறு தலைவலியைத் தந்தது. தன் மனைவியின் போட்டோவின் முன் நின்று கொண்டு மானசீகமாக அவளுடன் பேசினார். தூக்கமில்லாத இரவுகள் நமசிவாயத்தை மேலும் பலவீனமாக்கியது. பூங்காவுக்கு நடக்கப் போகும் போது, எதிர் ப்ளாட் திலீப் , “ ஹலோ நமசிவாயம் சார். எப்பிடி கண்டுபிடிச்சேன் பாருங்க உங்க பேரை? “ என்று உற்சாகமாய் கேட்க, டிட்டு நமசிவாயத்தின் கால்களை முகர்ந்து பார்த்தபடி வாலை ஆட்டியது. சட்டென்று நகர்ந்து கொண்ட நமசிவாயம் முகத்தைத் திருப்பிக் கொண்டு நகர்ந்தார்.
அடுத்த நாள் பால் வாங்கச் சென்றவர் , தன் வீட்டுக் கதவைத் திறக்க முயல்கையில் திடீரென்று தலைசுற்ற, நிலைதடுமாறி விழுந்தார். எதிர் ப்ளாட் ஹாலில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த டிட்டு விடாமல் குரைக்கவே, திலீப் வெளியே வந்து பார்த்தார். உடனடியாக , நமசிவாயத்தைக் கைத்தாங்கலாய் கூட்டிக் கொண்டு உள்ளே சென்றார். அவரை சோபாவில் படுக்க வைத்து, கொஞ்சம் குளிர்ந்த நீரை அவர் முகத்தில் தெளித்தார். அவர் லேசாய் கண் விழித்ததும் சூடான தேநீர் தயாரித்து அவருக்குக் கொடுத்தார். “ சாரி, கொஞ்ச நாளாய் சரியான தூக்கம் இல்லை. அதான், கொஞ்சம் தலைசுத்தி..” என்று சொல்லியபடி நமசிவாயம் எழுந்து கொள்ள முயன்றார். “ பரவாயில்ல சார், நீங்க இங்கயே கொஞ்ச நேரம் இருங்க. என்னோட டிபன் சாப்ட்டுட்டு போகலாம்” என்று வற்புறுத்தி நமசிவாயத்தை அமர வைத்தார்.
டிட்டு மிகவும் பாசமாக நமசிவாயத்திடம் வந்து அமர்ந்து கொண்டு அவரையே பார்த்தது. அதன் கண்களில் தெரிந்த பாசமும் நட்பும் நமசிவாயத்தின் உள்ளத்தை நெகிழ வைத்தது. திலீப்பும் ப்ரெட் டோஸ்ட் செய்து கொடுத்து நமசிவாயத்தோடு பேசினார். ரொம்ப நாளைக்குப் பிறகு இப்படி ஒரு அன்பான சூழலில் இருப்பது நமசிவாயத்துக்கு தெம்பாய் இருந்தது. “ ரொம்ப தாங்க்ஸ் திலீப். நீங்களும் என்னை பேர் சொல்லியே கூப்பிடுங்க. டிட்டுவை ரொம்ப திட்டிட்டேன். அவன் தான் இன்னிக்கு என்னைக் காப்பாத்தினான்” என்று சொல்லி விட்டுத் தன் வீட்டுக்குச் சென்றார். அன்று இரவு கொஞ்சம் நிம்மதியாகத் தூங்கினார்.
அன்றிலிருந்து திலீப் மற்றும் டிட்டுவோடு நமசிவாயம் வாக்கிங் செல்ல ஆரம்பித்தார். “ இன்னிக்கு லஞ்ச் உங்களுக்கு என் வீட்ல தான்” என்று நமசிவாயம் தானே சமைத்து , திலீப்போடு சேர்ந்து சாப்பிட்டார். நடுவில் மகள் ஷாலினிக்கும் , “ ஷாலு, கடவுள் தந்த பெரிய வரம் தாம்மா வாழ்க்கை. கஷ்டத்தைக் கடந்து போக அன்பு, நட்பு எல்லாமே நம்மள சுத்தி இருக்கு. உனக்காக இந்த அப்பா இருக்கேன்மா ” என்று செய்தி அனுப்பினார். உடனேயே, “தேங்க்யூ பா. நான் உங்களைப் பார்க்க சீக்கிரம் வரேன்” என்று பதில் அனுப்பினாள். அன்று மாலை திலீப் தன் கதையைப் பகிர்ந்து கொண்டார். “காதல் தோல்வியில் என் பெண் தற்கொலை செய்து கொண்டு விட்டாள். என் மனைவி அந்த சோகத்தில் இறந்து விட்டாள். ஆனால், எஞ்சிய வாழ்க்கையை நான் வாழ்ந்து தானே ஆக வேண்டும். டிட்டுவும் நானும் ஒரு அன்பு உலகத்தில் இணைந்து வாழ்கிறோம்” என்று சொல்ல, நமசிவாயம் “ இப்போது நானும் உங்கள் உலகத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்” என்று திலீப்பின் கைகளைப் பிடித்துக் கொண்டு சொல்ல, அதைப் புரிந்து கொண்டது போல் டிட்டு குரைத்தது.

ஆசிரியர் குறிப்பு

திருமதி. ப்ரசன்னா வெங்கடேஷ் , வயது 56
இவர் வாஷி, நவிமும்பையில் வசிக்கும் ஒரு பெண் கவிஞர் மற்றும் தமிழ் எழுத்தாளர்.
இவரது பல சிறுகதைகள் தமிழ் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. பல சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார். . இவர் எழுதிய தமிழ் நாடகஙகள் மும்பை நாடக விழாவில் பங்கேற்றுள்ளன

உஷா முத்துராமன்/சங்கரியால் ஒலித்த சந்தோச சங்கு – விருட்சம் நாளிதழ்

One Comment on “ப்ரஸன்னா வெங்கடேஷ்/வாழ்க்கை என்னும் வரம்”

Comments are closed.