
அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 22
அருமையான இளம் காலைப் பொழுது. ஆதவன் தன் கண்களைத் திறந்து மெதுவாக உலகத்தில் உள்ள மக்களைப் பார்க்கலாம் என்று என்ன வைக்கும் சிலுசிலுப்பான காலைப்பொழுது.
சிவா நந்தினி இருவரின் ஒரே புதல்வன் குமார். சிவா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும் அவருக்கு வரும் வருமானம் இன்றைக்கு இருக்கும் விலைவாசியில் கொஞ்சம் திணறித் தான் போவார்.
குமார் எப்படியாவது படிக்க வைத்து நல்ல வேலைக்கு அனுப்பி விட்டால் நாம் தலை நிமிர்ந்து விடலாம் என்று சிவாவும் நந்தினியும் அவன் மீது மிகவும் அக்கறை கொண்டு அவனை பள்ளிக்கு அனுப்பினார்கள்.
ஆனால் குமார் நண்பர்களுடன் ஊர் சுற்றுவது சினிமா போவது என்று பொழுதுகள் தானே போவதுத் தவிரப் படிப்பில் கவனம் செலுத்த வில்லை .
இதனால் படிப்பில் மிகவும் சுமாராகவே இருந்தான்.. பாஸ் மார்க் வாங்குவது என்பது அவனுக்கு மிகவும் கடினமாக இருக்கும்.
ஒவ்வொரு வருடமும் எப்படியோ திக்கித் திணறி பார்டரில் மார்க் வாங்கி பாஸ் செய்து விடுவான்.
பத்தாம் வகுப்பிலும் திக்கித் திணறிப் படித்து முடித்து பாஸ் செய்து விட்டான். கோடை விடுமுறை துவங்கியது.
அப்பா அம்மாவிடம் “நாம் ஏதேனும் வெளியூர் செல்லலாம்?” என்று எவ்வளவோ கேட்டுப் பார்த்தான்.
ஆனால் அவர்களுக்குப் பொருளாதாரம் இடம் கொடுக்காததால் எப்படியோ மகன் குமாரைச் சமாளித்து வந்தனர்.
அம்மாவிடம் எப்படியோ பேசி காசு வாங்கிக்கொண்டு விடுமுறை நாளிலும் கோலி விளையாடுவது மட்டை அடிப்பது சினிமாவுக்கு போவது என்று அவன் ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தான்.
மேலே படிக்க வேண்டும் நன்றாக மார்க் வாங்க வேண்டும் என்று எண்ணமே இல்லாமல் அவன் இருப்பதைப் பார்த்து அம்மா மிகவும் வருந்தினாள்.
“கடவுளே என் மகனுக்கு நல்ல புத்தியைக் கொடு” என்று வேண்டுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.
அன்று விளையாட நண்பர்கள் யாரும் இல்லாததால் வீட்டில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான் குமார்.
சிவா வேலைக்குச் சென்றாலும் நந்தினி வீட்டில் சும்மா இருக்கக் கூடாது என்று தையல் மிஷினில் அக்கம் பக்கம் இருப்பவர்களுக்கெல்லாம் ரவிக்கை தைத்து ஏதோ கொஞ்சம் சம்பாதிப்பாள்.
அன்றும் நந்தினி தையல் மிஷினில் தைத்துக் கொண்டிருந்தாள்.
அப்போது அவளுடைய அலைபேசி அடிக்க அது ஏதோ தெரியாத நம்பராக இருக்கிறது என்று எடுத்துப் பேசினாள்.
“மேடம் உங்கள் கணவர் பெயர் சிவா வா” என்று கேட்டது அந்த குரல்.
“ஆமாம்” என்று பதட்டத்துடன் சொன்னாள் நந்தினி.
“மேடம் ஒரு முக்கியமான விஷயம்” என்று அவர் பீடிகை போடும்போது நந்தினிக்கு படபடவென்று வியர்த்துக் கொடுத்தது .
“உங்கள் கணவர் வண்டியில் வரும்போது கீழே விழுந்து தலையில் அடிபட்டு கிரீன்ஸ் ஹாஸ்பிடலில் சேர்த்திருக்கிறோம்” என்று அவர் சொன்னவுடன் நந்தினிக்குக் கண்ணில் கண்ணீர் கொட்டியது.
உடனே அவசர அவசரமாக அந்த கிரீன்ஸ் ஹாஸ்பிடல் எங்கே இருக்கிறது என்று அவரிடம் முகவரியை வாங்கிக் கொண்டு குமாரையும் அழைத்துக் கொண்டு ஆட்டோவில் வேக வேகமாகக் கிளம்பினாள்.
ஆட்டோ வேகமாகச் சென்றாலும் அவளுடைய மனம் அதைவிட வேகமாக கிரீன்ஸ் ஹாஸ்பிடல் அடைந்து விட்டது.
உள்ளே சென்று ரிசப்ஷனில் கணவரின் பெயரைச் சொல்லி விபத்து என்று சொன்னவுடன் அவர்கள் அந்த ஐ. சி யூ. வில் இருக்கிறார் என்று சொன்னார்கள்
நந்தினி வேகவேகமாக ஐ. சி யூ இருக்கும் இடத்திற்குச் செல்லும் போது அங்கு ஒருவர் வந்து ” மேடம்….” என்று கூப்பிட்டார்.
“என்ன?” என்பது போல் நிமிர்ந்து பார்த்தாள் நந்தினி
“நான்தான் உங்களுக்கு போன் செய்தேன்” என்று சொன்னார்.
“நான் நேற்று தான் உங்கள் கணவர் வேலை செய்யும் ஆபீஸில் சேர்ந்தேன். அவரும் நானும் தான் வண்டியில் வந்தோம்.” என்று விபத்து நடந்த விவரத்தை மெதுவாகச் சொன்னார்.
“எனக்கு அதிகம் அடிபடவில்லை ஆனால் உங்கள் கணவரின் தலையில் கல் நன்றாக முட்டி விடவே ரத்தம் கொட்டி இப்பொழுது அங்கே இருக்கிறோம்” என்று மெதுவாக விளக்கினார் .
அதற்குள் “ஐ சி யு வில் இருந்து டாக்டர் வெளியே வர நந்தினி ஓடிப்போய் “டாக்டர் அவர் எப்படி இருக்கிறார்?” என்று கேட்டாள்.
“ஓ அந்த விபத்தில் நடந்த அவருடைய மனைவியா நீங்கள் சாரிமா அவர் உயிர் பிரிந்து விட்டது ” என்று டாக்டர் சொன்னவுடன் நந்தினி ஆஸ்பத்திரி என்பது கூட மறந்து சத்தமாக வாய் விட்டு அழுதாள்.
ரொம்ப அழுததால் நந்தினி மயக்கம் போட்டு கீழே விழுந்து விட்டாள்.
உடனே நர்ஸ் அவளை உள்ளே தூக்கிக் கொண்டு சென்று பரிசோதனை செய்ததில் நந்தினியின் உயிரும் பிரிந்து விட்டது.
குமார் சின்ன பையன் என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் ஓவென்று அழுதான்.
கிராமத்தில் இருக்கும் நந்தினி அண்ணனுக்குச் செய்தி சொல்லப்பட அவர் உடனே கிளம்பி வந்தார்.
நந்தினி சிவா இருவரின் காரியங்களும் முடிந்தன.
வேறு வழி இல்லாமல் மாமாவுடன் குமார் அவர் இருக்கும் கிராமத்திற்குச் சென்றான்.
கிராமத்தில் மாமா வீட்டில் குமார் வளர தொடங்கினான்
அவனுக்குப் படிக்கும் ஆர்வமே இல்லை எப்போதும் அதேபோல் விளையாட்டு என்று கிராமத்தில் சுற்றிக் கொண்டிருந்தான்.
பிறகு வளர்ந்து ஒரு இளைஞன் ஆனான்.
மாமா பட்டணத்தில் இருப்பவர்களிடம் சொல்லி சிபாரிசு செய்து ஒரு வங்கியில் பியூனாக அவனுக்கு வேலை வாங்கி கொடுத்தார்.
வேலைக்குச் சேர்ந்து கையில் பணம் கிடைத்தவுடன் கொஞ்சம் பொறுப்புள்ள பையனாக குமார் மாறினான். மறுபடியும் சென்னையில் ஒரு புது வாழ்க்கையைத் தொடங்கினான்
அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய குமாரின் முகம் சோர்வாக இருந்தது. மனைவி சங்கரி அதைப் பார்த்து வருத்தமாக இருந்தாள். திருமணமாகி இரண்டு ஆண்டுகள் முடிந்தாலும் சங்கரியிடம் மனம் விட்டு அவன் பேசுவதே இல்லை. இதற்குக் காரணம் அவன் சங்கரியைக் கட்டாய கல்யாணம் செய்து கொண்டது தான் என்பது சங்கரிக்கு தெரியும்.
குமாரின் அம்மா அப்பா இறந்துவிட அவனுடைய தாய் மாமா தான் குமாரை வளர்த்து ஆளாக்கினார்.
அவன் மாமாவின் பொருளாதார நிலையில் சுமாராக இருந்ததால் மருமகன் படிக்காததைப் பற்றி அவர் கொஞ்சமும் கவலைப்படவில்லை. அதனால்
அவன் ஏதோ படித்து விட்டு ஒரு வங்கியில் பியூனாக வேலை பார்த்தான்.திடீரென்று மாமா காலமாகி விட அவருடைய பெண்ணான சங்கரியை இவன் கல்யாணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானான். சங்கரியைப் பார்த்துக் கொள்ள வேறு யாரும் இல்லாததால் குமார் அவளைத் திருமணம் செய்து கொள்வதுதான் மாமா தன்னை வளர்த்ததற்கு அவருக்கு நாம் காட்டும் நன்றிக் கடன் என்று உணர்ந்தான். வேலை பார்க்கும் மனைவியைத் திருமணம் செய்து கொண்டு வசதியாக வாழ வேண்டும் என்று அவனுடைய கனவு இடிந்து விழுந்தது. வங்கியில் இப்போது காசாளர் வேலை காலியாக உள்ளது. ஆனால் அதற்கு முன் பணமாக 3000 ரூபாய் கட்ட வேண்டும் அந்த பணத்திற்கு என்ன செய்வது என்ற கவலையில் தான் முகம் வாட்டமாக இருந்தது. இதை தனக்குப் பிடிக்காத மனைவியிடம் சொல்ல விரும்பவில்லை. மாலையில் குமாரின் நண்பர் சிவாவிடம் பேசுவது உள்ளேயிருந்த சங்கரியின் காதில் ஒலித்தது. தனக்குக் காசாளர் வேலை கிடைப்பதற்கான டெபாசிட் தொகை கணவருக்குத் தேவை என்பதைச் சங்கரி புரிந்து கொண்டாள். குமாரின் நண்பர் செல்லும் வரை காத்திருந்து அவர் சென்றவுடன் மெதுவாகக் கணவனிடம் பேசினாள். “உங்களுடைய டெபாசிட் தொகையை நான் கொடுக்கட்டுமா?” என்று மெதுவாகக் கணவனிடம் கேட்டாள். அவளுடைய வார்த்தையைக் கேட்டு அதிர்ந்து போன குமார் “உனக்கு எப்படிப் பணம் கிடைத்தது?’ என்று கேட்டான்.
“நீங்கள் மாலை தினமும் தாமதமாகத் தான் வருவீர்கள் நான் படித்த பத்தாம் வகுப்பு வைத்து அக்கம்பக்கம் இருக்கும் குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்து இரண்டு வருடமாகச் சேர்த்து வைத்திருக்கிறேன். இந்த பணத்தை நீங்கள் கொண்டு போய் கட்டி உங்களுடைய காசாளர் பதவியில் சேர்ந்து கொள்ளுங்கள்” என்று மனைவி சொல்ல குமாரின் கண்களில் கண்ணீர் பெருகியது.
“சங்கரி நான் உன்னைத் தவறாக நினைத்து விட்டேன் எனக்கு ஒரு கடின காலம் வந்த போது அதைக் கடக்க நீ உதவுவாய் என்று நான் நினைக்கவே இல்லை.என்னை மன்னித்துவிடு. இனி உன்னிடம் அப்படி பராமுகமாய் இருக்க மாட்டேன்” என்று கணவன் கண்களில் கண்ணீருடன் சங்கரின் கையை பிடித்துக் கொண்டு சொன்னான்.
“பரவாயில்லைங்க நீங்க என்னைக் கல்யாணம் செய்துகொண்டதே நான் செய்து வைத்த பாக்கியம். உங்களுக்குத் தேவையான போது என்னால் உதவ முடிகிறதே” என்று சொல்லிச் சேமித்து வைத்திருந்த 3,000 ரூபாயை அவனிடம் கொடுக்க மகிழ்ச்சியுடன் குமார் மனைவியின் கண்களைப் பார்க்க அங்கே ஒரு காதல் நதி சங்கமித்தது.
ஆசிரியர் குறிப்பு
தமிழ் இலக்கியத்தில் பட்டப் படிப்பு படித்தவர். கதை கவிதை கட்டுரை எழுதுவது விருப்பம் . சிறுகதைகள் கவிதைகள் பல வார மாத இதழ்களில் பிரசுரமாக உள்ளன. திருக்குறள் கதைகளை இரண்டு பாகமாக எழுதி குழந்தைகளுக்கு பயன்படுவது போல குட்டி புத்தகமாக இரண்டு புத்தகங்கள் வந்துள்ளன.
லக்ஷ்மி ஆத்ரேயீ /செவத்தம்மாவின் பாய்ச்சல் – விருட்சம் நாளிதழ்

One Comment on “உஷா முத்துராமன்/சங்கரியால் ஒலித்த சந்தோச சங்கு”
Comments are closed.