லக்ஷ்மி ஆத்ரேயீ /செவத்தம்மாவின் பாய்ச்சல்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 21

“ம்மா,”என்ற குரல் கேட்டு முத்து கண்விழித்தான்.பொழுது விடிந்து விட்டதை அறிந்து படுக்கையைச் சுற்றி வைத்து விட்டு வெளியில் வந்தான்.இவனை எதிர்பார்த்துக் காத்திருந்தது செவத்தம்மா என்ற கன்றுக்குட்டி.அதன் கழுத்தைத் தடவிக் கொடுத்து சற்று நேரம் அதனுடன் விளையாடினான்.பின்னர் குளிக்கப் போனான்.
‌‌குளித்து முடித்து வேலைக்குக் கிளம்பினான். ”டேய், முத்து,இந்தக் கஞ்சியைக் குடிச்சிட்டு போ. ஒரு 200 ரூபா வேணும்டா, இருக்குமா?’என்றாள் பொன்னி.”என் கிட்ட இப்ப இல்ல.நான் முதலாளிய கேட்டு வாங்கிட்டு வரேன்.போற வழிலே குடுத்திட்டு போறேன் இப்போ கெளம்பறேன்.இன்னிக்கு சீக்கிரம் போவணும்.வறேன்,” பொறுப்புடன் பேசி விட்டுப்போகும் மகனைப் பெருமையுடன் பார்த்தாள்.
“ம்மா….”என்று குரல் கொடுத்தன கருத்தம்மாவும் வெளுத்தம்மாவும். அவளும் அவள் கணவன் பழனியும்ஆசையுடன்வளர்க்கும் இரு பசுக்கள். அவற்றோடு துள்ளிக்குதித்தோடும் கன்றுக்குட்டி செவத்தம்மாவும் அவர்களின் சொத்து.இரு பசுக்களைக் கறந்து பக்கத்திலிருந்த சொசைடிக்கு தினமும் பால் சப்ளை செய்து அந்த வரும்படியில் குடும்பம் நடத்திவந்தனர்.மகன் முத்து மாடுகளை நன்றாகப் பார்த்துக் கொள்வான்.வைக்கோல் வைத்துத் தண்ணீர் வைப்பான்.மேய்ச்சலுக்கு ஓட்டிக்கொண்டு‌போவான்.ஆனால் பால் வியாபாரம் செய்வது மட்டும் போதாது என்பது அவன் எண்ணம். பத்தாவது முடித்தான்.வேலை தேடினான்.உணவு சப்ளை செய்யும் வேலையை மனமுவந்து ஏற்றான். கள்ளம் கபடு இல்லாதவன், உண்மை பேசவேண்டும்,உழைத்துப் பிழைக்க வேண்டும் என்ற கொள்கையை உடையவன்.கடன் வாங்கி ஒரு பைக் வாங்கி விட்டான்.
பைக்கை ஓட்டியபடி ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டிருந்தான் முத்து.அன்று முக்கியமான நாள். புதிய வகை பிரியாணி அன்று அறிமுகமாகிறது.பத்து நாட்களாக ஊரே அமர்க்களப் படுகிறது.எங்கு பார்த்தாலும் போஸ்டர்கள், மக்கள் கூடும் இடங்களில் அது பற்றிய பேச்சு தான்.இன்று நிறைய ஆர்டர் சப்ளை செய்யவேண்டும் என்று முதலாளிநேற்றேசொல்லியிருந்தார். வேகமாக வண்டியை ஓட்டினான். .
டெலிவரி பாய்ஸ் பலரும் அங்கு காத்திருந்தனர்.ஒவ்வொருவராகக் கூப்பிட்டு முதலாளி உணவுப் பெட்டிகளைக் கொடுத்தார். நேரத்தை வீணாக்காமல் உடனடியாக அவற்றை கஸ்டமர்களிடம் சேர்ப்பிக்கச் சொன்னார்.முத்து அவரை நெருங்கி வணக்கம் தெரிவித்தான்.அவனைப்பார்த்துச் சிரித்தவாறே அவனிடம் பெட்டிகளை கொடுத்தார். “உன் ஏரியாவில் தான் இந்தப் புது பிரியாணி ஆர்டர் நிறையஉண்டு.அதனாலே நீ சீக்கிரமே சப்ளை செஞ்சிடு”,என்று முதலாளி சொன்னார்.அவற்றைப் பெற்றுக்கொண்ட முத்து, அம்மா கேட்ட பணத்தை அவரிடம் கேட்டு பெற்றுக்கொண்டான்.உணவுப் பெட்டிகளைப்பத்திரமாகப் பைக்கில் உள்ள பைகளில் வைத்துக் கட்டினான்.
தெருமுனையில் ஒரு காலி மனையில் அவன் வீடு உள்ளது. அருகில் ஒரு பெரிய தூங்குமூஞ்சி மரம் நிறைய நிழல் தந்து கிளைகளோடு இருந்தது.மாடுகளை அங்கே கட்டிப் பார்த்துக்கொள்ள வசதியாக இருந்தது.செவத்தம்மா நினைவில் தோன்ற மகிழ்ச்சியுடன் வண்டியை ஓட்டினான்.தூரத்தில் வருபவனைப் பார்த்தால் கந்தன் போல் இருந்தது.உடனே கவலைப்பட ஆரம்பித்தான்.எல்லோருடனும் நட்பு அன்போடு பழகும் முத்துவுக்குக் கந்தனைக் கண்டால் கதி கலங்கும். அவன் சரியான அராத்துப் பேர்வழி. தான் நினைப்பது தான் சரியானது என்று வீண் வாதம் செய்வான்.தான் கேட்டதைக் கட்டாயம் முத்து கொடுக்க வேண்டும் என்று பிடிவாதம் செய்வான். எல்லாவற்றையும் விட, சரியான தீனிப்பண்டாரம். இன்று புதிய உணவு அறிமுகம் ஆவது தெரிந்து ஊரிலிருந்து தன்னைத் தேடி வருவானோ என்று நினைத்தான்.
கந்தன் ஒரு அனாதை.தூரத்து உறவினர் வீட்டில் தங்கி எடுபிடி வேலைசெய்துவந்தான். அவ்வப்போது முத்துவைத் தேடி வந்து விடுவான். இது வழக்கமாக நடக்கும்.ஒரு மாதம் முன்பு பக்கத்து ஊருக்குக் கந்தனையும் கூட்டிக் கொண்டு அவர்சென்றுள்ளார் என்று முத்து கேள்விப்பட்டான்.ஒரு மாதமாக அவன் தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருந்தான் முத்து.இந்தப் புது உணவு விளம்பரத்தைப் பார்த்துவிட்டு கந்தன் வரலாம் வந்தால் அவனை எப்படிச் சமாளிப்பது என்ற யோசனையில் ஆழ்ந்தான்.
வண்டியைத் திருப்பி வீட்டிற்குச் சென்றான்.அதே நேரத்தில் வேகமாக ஓடி வந்த கந்தன் அவனை நெருங்கி “முத்து,நல்லாயிருக்கியா?உன்னைப்பாக்கத்தான் ஓடி வந்தேன்,” என்றான் வண்டியை நிறுத்தி விட்டு,”ஓ,நல்லா இருக்கேன்.இப்போ உன் கூட பேச எனக்கு நேரமில்லே.அவசரமா போகணும்” என்றவனைத் தடுத்தான்.”உன் அவசரம் எனக்குநல்லாவே தெரியும்.ஆனா,நான் இன்னிக்கு விடப்போறதில்லே. ஊரு பூரா இதே பேச்சு.அந்த புது பிரியாணியை எனக்குக் காட்டு.நான் கொஞ்சம் எடுத்துவாயில் போட்டு டேஸ்ட் பண்றேன்.அது கூட தர மாட்டியா?”
“கந்தா,உன்னைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும்.துளி குடுன்னு கேப்பே.அப்பறம் மொத்தமா காலி பண்ணுவே.நீ சாப்பிட்ட மிச்சத்தை காசு கொடுத்து வாங்கறவங்களுக்கு நான் குடுக்கமாட்டேன்.நீ வண்டி கிட்ட வராதே.அவசரமா நான் போகணும்,” என்று சொல்லி அவனைத் தடுத்தான்.அம்மாவிடம் பணத்தைக் கொடுக்க வீட்டினுள் சென்றான்.
முத்து அம்மாவிடம் பணத்தைக் கொடுத்தான்.அப்போது அவன் போன் அடித்தது.முதலாளியின் அழைப்பு.உடனே எடுத்துப் பேசினான்.அவர் பதட்டமாக,”முத்து எங்க இருக்கே? டெலிவரி தொடங்கிட்டியா?…..”இல்ல சார் இதோ …..”அவன் முடிப்பதற்குள் வெளியில் தடால் என்று பெரிய சத்தம் கேட்டது.
ஃபோனில் பேசியவாறு வெளியே வந்த முத்து பேரதிர்ச்சி அடைந்தான்.போனைப் பாக்கெட்டில் வைத்து விட்டு கீழே கிடந்த கந்தனிடம் சென்றான்.”காப்பாத்துடா முத்து,”என்ற கத்தினான் கந்தன். அவன் மீது பைக் சரிந்து கிடந்தது. உணவுப் பெட்டிகள் தாறுமாறாகக் கிடந்தன.அவை பாதி திறந்த நிலையில் அங்குமிங்குமாக உணவு சிதறிக் கிடந்தது.பயந்து போய் முத்து கந்தனிடம் ஓடினான்.”டேய், முத்து, வண்டியைத் தூக்குடா. காலிலே நல்ல அடி பட்டிருக்குடா.நீ மட்டும் நல்லவன் இல்லடா,உன் மாடும் நல்லது.”மெதுவாக வண்டியைத் தூக்கி ஓரமாக நிறுத்திய பிறகு,சுற்று முற்றும் பார்த்தான்.பெருமூச்சோடு,தலையை ஆட்டியவாறு கோபமாகக் கந்தனைப் பார்த்துக் கொண்டிருந்த செவத்தம்மாவைக் கண்டான்.ஏன் செவத்தம்மா இவ்வளவு வெறியோடு இருக்கிறது என்று எண்ணினான்.
கீழே கிடந்த கந்தனிடம் சென்றான். இவன் கையைப் பிடித்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்தான் கந்தன். “என்ன ஆச்சுடா?”என்றவனிடம் வலி
தாங்காமல் அழுது கொண்டே கந்தன் நடந்ததைச் சொன்னான். முத்து உள்ளே போனவுடன் அவன் பைக்கில் இருந்த உணவை எடுக்கப் போனான்.அவனையே பார்த்துக் கொண்டிருந்த செவத்தம்மா, திடீரென அவன் மீது பாய்ந்தது. இதை எதிர்பார்க்காத கந்தன் தன்னை சுதாரித்துக் கொள்வதற்குள் வண்டி அவன் மீது சாய்ந்து கீழே தள்ளியது.விழுந்தவன் மீது வண்டி சரிந்து உணவுப் பெட்டிகள் தாறுமாறாகக் கீழே சிதறி விட்டன.
தலை சுற்றியது முத்துவுக்கு. கந்தனைக் கவனிப்பதா அல்லது சிதறிக் கிடப்பவற்றை எடுப்பதா என்று புரியவில்லை.சத்தம் கேட்டு வெளியே வந்த பொன்னி,கந்தனைத் தூக்கினாள்.”இப்போ இவனை உள்ளே கொண்டு போ,அம்மா.நான் அப்பறமா ஆசுபத்திரிக்குக் கூட்டிட்டு போறேன்,”என்றான்.பாக்கெட்டில் போட்ட போனை எடுத்தபோது மணி அடித்தது.திரும்பவும் முதலாளியின் அழைப்பு.”முத்து, என்னாச்சு?ஏன் பேசமாட்டேங்கறே?நான்‌இங்க தவிச்சுகிட்டு இருக்கேன்.என்னாச்சு, சப்ளை பண்ணத் தொடங்கிட்டியா?”
“ இல்ல சார்….. இங்க கொஞ்சம் பிரச்சினை சார்…” “சப்ளை பண்ணலியா?அப்பாடா,ஆள் விடு சாமி”‌,என்ற முதலாளியின் மகிழ்ச்சியான குரலைக் கேட்டு குழம்பிப் போனான் முத்து.”என்ன சார்,நீங்க பேசறது புரில்லீங்களே. என் வண்டி விழுந்து பொட்டி சிதறி பொருள் எல்லாம் கீழ கொட்டிடிச்சு சார்.இப்போ‌என்ன செய்யறது ,சார்,”என்று குரல் தழதழக்க அழுதுகொண்டே முத்து அவரிடம் கேட்டான்.
“முத்து,கவலைப்படாதே. எல்லாம் சரியாத்தான் நடக்குது.நாம கும்புடுற கடவுள் நம்மள கைவிடல்லே.கீழே சிதறியதை கூட்டிப்‌பெருக்கி குழி தோண்டி கொட்டி மூடிவிடு.காக்கா குருவி கூட தின்ன வேண்டாம்.மீதி இருப்பதை எடுத்துக் கிட்டு இங்க வா”,என்றவர் போனை வைத்து விட்டார்.கண்டபடி திட்டுவார்,வேலை போய்விடும்,காசுக்கு என்ன செய்வது,கந்தனை ஆசுபத்திரிக்குக் கூட்டிப் போகணும் இப்படியாகப் பல எண்ணக் குமுறல்கள் அவன் மனதில் குழப்பியடித்துக் கொண்டு இருந்தன.இவற்றினூடே முதலாளியின்‌‌‌கனிவான குரல், பேச்சு மேலும் குழப்பியது.நேரில் போய் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் என்று தீர்மானித்தான். அவர் சொன்ன மாதிரி கீழே கிடந்த உணவுப் பெட்டிகளைத் திரட்டி குழி தோண்டி புதைத்தான்.பைக்கில் கடையை நோக்கிப் போனான்.
கடையை அடைந்தான்.கூட்டம் கூடியிருந்தது.சிலர் கூட்டத்தைக் கண்டிரோல் செய்து கொண்டிருந்தனர்.கடை ஊழியன் என்று சொன்னதால் இவனை உள்ளேஅனுமதித்தனர்.”முத்து,வா,வா”, என்று முதலாளி உள்ளே கூப்பிட்டார்.அரசாங்க அதிகாரிகள் பலர் இருந்தனர்.உணவுப் பெட்டிகள் திறந்து கிடந்தன.உணவு பாதுகாப்பு அதிகாரிகள் என்பது புரிந்தது. அன்றைக்குப் புதிதாக அறிமுகமாக இருந்த உணவில் கலப்படம் செய்த மசாலாக் கலவை சேர்க்கப்பட்டிருக்கிறது என்று இந்த அதிகாரிகளுக்குத்தகவல் வந்தது. அதை விசாரிக்க அவர்கள் வந்துள்ளனர் என்று முதலாளி இவனிடம் விளக்கினார்.இவன் கைகளைப் பிடித்துத் தன் கண்களில் ஒத்திக் கொண்டார். “ சாமி,என்ன காப்பாத்திட்டே..உன் கிட்ட தான் நெறய பொட்டி கொடுத்தேன். தினமும் நீதான் நேரங்காலத்திலே சப்ளை பண்ணிருவே.எல்லாம் சரியா இருந்திருந்தா நெறய பேர் சாப்பிட்டிருப்பாங்க.பாவம்,அவங்க கதி என்னவாயிருக்கும்? நெனச்சாலே பகீருங்குது. எப்படியோ எல்லாம் சரியாகிவிட்டது.சரி,இப்போ சொல்லு ஓங்கதையை”,என்றார்.
நடந்தவற்றை விவரித்தான் . கன்றுக்குட்டி செய்த சாகசத்தைப் பெருமையுடன் சொன்னான். “உன்ன மாதிரி உன் செவத்தம்மாவும் நல்ல குட்டியா.உன்னையும் என்னையும் தவிர நெறய பேர்களையும் காப்பாத்திருச்சு.கடவுள் அருளாலே நீயும் செவத்தம்மாவும் உன்னைப் பெத்தவங்களும் நல்லா இருக்கணும்.உன் சம்பளத்த கூட்டப் போறேன். கந்தனை ஆசுபத்திரிக்குக் கூட்டிட்டு போ.அந்த செலவே நான் குடுக்கறேன்,”என்றமுதலாளியின் கைகளைப் பிடித்துக்கண்களில் ஒற்றிக் கொண்டான்.
செவத்தம்மாவின் பாய்ச்சல் நல்ல படியாக முடிந்ததில் முத்து பரம திருப்தி அடைந்தான்.

ஆசிரியர் குறிப்பு

“செவத்தம்மாவின் பாய்ச்சல்” என்ற இக்கதையை லக்ஷ்மி ஆத்ரேயீ என்ற பெயரில் எழுதியவர் Dr.லக்ஷ்மி விஸ்வநாதன்.வயது 82.ஓய்வு பெற்ற ஆசிரியை.35 புத்தகங்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
தவிர,ஆன்மீக தளத்தில் 5,சிறுவர்களுக்கு 3, வாழ்க்கை வரலாறு நூல்கள் 2 எழுதியுள்ளார்.

சு.சரத்குமார்/பெருநோய் – விருட்சம் நாளிதழ்

One Comment on “லக்ஷ்மி ஆத்ரேயீ /செவத்தம்மாவின் பாய்ச்சல்”

Comments are closed.