சு.சரத்குமார்/பெருநோய்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 20

பெரியக் கோயில் கோபுரம், வானத்தையே முட்டுவது போல இருந்தது. அதன் உச்சியை பார்த்துக் கொண்டிருந்தாள் ரீனா. பக்தியோடு சில முகங்கள், வெறுமையோடு சில முகங்கள், நம்பிக்கையோடு சில முகங்கள் என மாறி மாறி என்னைக் கடந்து சென்றன.
நந்தி சிலை மீது சன்னமாய் பரவிய சூரிய ஒளி, அதன் அருகிலேயே பாய் போல நிழலை விரித்திருந்தது. அதன் நடுவில் அமர்ந்து கொண்டோம்.
வாழ்க்கையில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிடித்தம் வேண்டும் என்கிறார்கள். இல்லையெனில் பைத்தியம் பிடித்துவிடுமாம். எனக்கு இப்போதிருக்கும் ஒரே பிடித்தம் ரீனா மட்டுமே.
தூரத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையின் கால்களைப் பார்க்கிறேன். எல்லா குழந்தைகளுக்கும் இருப்பதைப் போன்ற அதே சாதாரணமான கால்கள்!
அவை ஓடும். துள்ளி குதிக்கும். நடனமாடும். சூடு பட்டால் வலியை உணரும். ஆனால் ரீனாவின் கால்கள் அப்படி அல்ல.
கால்கள் பூமியோடு கொள்ளும் உறவு மகத்தானது. ரீனாவின் கால்கள் பூமியோடு அதிகம் உறவு கொண்டதில்லை. கொண்டால் மட்டும் என்ன ஆகப்போகிறது. சுட்டெரிக்கும் வெப்பத்தையும், ஊடுருவும் குளிரையும் அவள் பாதங்கள் உணருமா என்ன?
ரீனாவின் கால்களும் சில நேரங்களில் நடனமாடத் தான் செய்கின்றன. ஆனால் அதையும் கூட அவளால் உணர முடியாது. திடீரென,’அப்பா…’ என்று அலறுவாள். அந்த பேரொலியைக் கேட்டாலே புரிந்து விடும், நடனமாடப் போகிறாள் என. எனக்குக் கொஞ்சமும் பிடிக்காத நடனம்!
கண்களை மேலே உருட்டி, வாயில் வெண்ணுரை தள்ளி, நாக்கு அறுபட்டு, கீழே விழுந்து அவள் ஆடும் நடனத்தை எந்த அப்பாவுக்குத் தான் பிடிக்கும்?
*
அவளுக்கிருந்த பிரச்சினையை எட்டு வயது வரை நான் புரிந்துகொள்ளவே இல்லை. அம்மா இல்லாத பெண் என்பதால், அவளை உள்ளங்கையில் வைத்து பார்த்துக் கொண்டேன். அதுதான் நான் செய்த தவறோ என்னவோ இன்று எல்லாமே கை மீறி போய்விட்டது. என்ன செய்ய? காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தானே!
மூன்று வயதாகியும் ரீனா நடக்கமுடியாமல் இருந்தாள். பேச்சிலும் தெளிவில்லை. ‘அப்பா…அப்பா…அப்பா…’ என மூச்சுக்கு மூவாயிரம் முறை சொன்னதையே திரும்ப திரும்பச் சொல்வாள். எதிலும் கவனம் இருக்காது. தேவையில்லாமல் சிரிப்பாள். சிரிப்பு என்றால் சாதாரண சிரிப்பு இல்லை. விதவிதமான சிரிப்பு. விசித்திரமான சிரிப்பு. பொதுவாக குழந்தைகள் சிரித்தால், சுற்றியிருப்பவர்கள் அதை ரசிப்பார்கள் தானே? ரீனா சிரித்தால் முகம் சுளிப்பார்கள். பொறுக்கமுடியாமல் இறுதியில் மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன்.
‘உங்க பொண்ணுக்கு மூளை வளர்ச்சி கம்மியா இருக்கோனு சந்தேகமா இருக்கு…’
முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் அவர் சொல்லிய வார்த்தைகள் என்னை சிலையாக்கின.
‘மூணு வயசுல எப்படி சார் மூளை வளர்ச்சி தெரியும்? அவ வளர வளர சரி ஆகிடுவா…’
படபடவென பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.
ஆனால் சில வருடங்களிலேயே அவளுக்கு ஆரம்பித்த வலிப்பு நோய், எல்லாவற்றையும் புரட்டிப்போட்டது.
சாப்பிடும் போது வரும். முள் கரண்டியை முகத்தில் குத்திக் கெள்வாள். குளிக்கும் போது வரும். சுவாசக் குழாயில் நீர் நிரம்பி மூச்சிரைப்பாள். தூங்கும் போது வரும். போர்வைக்குள் மயங்கிக் கிடப்பாள். ஒவ்வொரு முறையும் உடலின் ஏதோவொரு பாகம் அடிபடும். ஆனால் முன்பே தேய்ந்து போயிருந்த மூளையில் அடிபட்ட போது தான், அவளுடைய கால்கள் உணர்ச்சிகளை உள்வாங்கும் திறனை முழுமையாக இழந்தன.
‘என் குழந்தைக்கு மட்டும் ஏன் இப்படி?’, ‘முப்பிறவியில் என்ன பாவம் செய்தேன்?’ போன்ற கேள்விகள் அன்றாடம் என்னை துரத்தும். பாவத்தைக் கழிக்கத்தான் இப்படி கோயில் கோயிலாக அலைகிறேன் போல!
*
சூரிய ஒளி முழுமையாக வற்றியிருந்தது. எல்லோருடைய புலம்பல்களையும் வேண்டுதல்களையும் கேட்டு, மங்களபுரீஸ்வரர் அலுத்துப் போயிருப்பார்.
மங்களபுரீஸ்வரருக்கு எத்தனை பிள்ளைகள்? அவருடைய பிள்ளைகள் நன்றாகத் தானே இருக்கிறார்கள். எனில் என்னுடைய கஷ்டங்களை அவர் எப்படி புரிந்து கொள்வார்?
கோயிலின் கருவறை போல சலனமற்றுக் கிடந்த மனது, இப்போது களங்கமுற்று சஞ்சரித்துக் கொண்டிருந்தது.
ரீனா இன்னமும் வேடிக்கை பார்ப்பதை நிறுத்தவில்லை. எப்போதாவது தான் இப்படி வெளியே அழைத்துவர சந்தர்ப்பம் அமையும்.
‘டயாப்பர்’ இந்நேரத்திற்கு ஈரமாகிவிட்டிருக்கும். எப்படியும் சற்று நேரத்தில் அசெளகரியத்துடன் நெளிவாள். என்ன செய்வது, கழிப்பறையில் கூட ‘வீல் சேர்’ வாசிகள் ஒதுக்கப்பட்டவர்களாகத் தானே இருக்கிறார்கள்!
பயனற்றுக் கிடந்த கிணற்றின் அருகே கோயில் பிரசாதம் வாங்க வேண்டி வரிசை நீண்டிருந்தது. ரீனாவுக்காக நானும் வரிசையில் போய் நின்றேன். மீண்டும் அதே மருத்துவரிடம் போய் நின்றது நினைவுக்கு வந்தது.
*
அதே உணர்ச்சிகள் நீர்த்துப்போயிருந்த முகம்!
ரீனாவை மேலும் கீழுமாக பார்த்தார். இந்நேரம் அவளுக்கு என்ன பிரச்சினை என்பதை மனதிற்குள் எடைபோட்டு முடித்திருப்பார். எங்களுக்குள் நடைபெற்ற உரையாடலை ரீனா கவனித்தது போன்று தெரியவில்லை.
‘மூணு வயசுலேயே ரீனாவ உங்க கிட்ட கூப்பிட்டு வந்திருக்கேன் சார்’
‘ஓ…இப்ப என்ன வயசு ஆகுது?’
‘எட்டு’
‘ம்..‌.இப்ப எப்படி இருக்காங்க?’
‘…’
என்னிடம் பதில் இல்லை.
‘புரியுது’
பழைய சந்திப்பு இப்போது அவர் நினைவுக்கு வந்திருக்கலாம். ஆனால் அதைப்பற்றி அவர் கேட்கவில்லை. நோய்கள் தான் மனிதர்களை மன்னிக்க மறுக்கிறது. மருத்துவர்கள் அல்ல.
‘சரி…ஒரு ஐக்யூ டெஸ்ட் எடுத்துடலாம்’
‘அவளுக்கு ஊசினா பயம் சார்’
உதடுகள் பிரியாத மெல்லிய சிரிப்பு.
‘இது ப்ளட் டெஸ்ட் இல்ல சார்…ரீனா கிட்ட சில கேள்விகள் கேப்பாங்க…’
‘கேள்விகளா?’
‘ஆமா…மூளைத் திறன் இப்ப எப்படி இருக்குனு பாக்கனும்’
‘…’
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடந்தது. ரீனா இவ்வளவு நேரம் யாருடனும் தனியா இருந்தது இல்லை.
ஆனால் நான் பயந்தது போல அல்ல. சிறிது நேரத்தில் சிரித்துக் கொண்டே வெளியே வந்தாள் ரீனா. அப்போதெல்லாம் அவளுக்கு வீல் சேர் தேவைப்படவில்லை. தடுக்கி விழும் நேரத்தில் தாங்கிப் பிடித்தால் போதும்!
‘அப்பா…எக்ஸாம் ஓவர்’
அவளுடன் வந்த நரஸ், தட்டச்சு செய்யப்பட்ட ரிப்போர்ட்டை என்னிடம் நீட்டினாள். நான் ஓரளவுக்கு எதையும் ஏற்றுக்கொள்ளும் நிலைமையில் தான் இருந்தேன். ஆனாலும் உள்ளுக்கு பதட்டமாக இருந்தது.
‘மூளை வளர்ச்சி குறைபாட்டுக்கு நிரந்தர தீர்வு ஏதேனும் இருக்கிறா?’
என்னுள் கேட்டுக்கொண்டேன்.
‘ஒருவேளை இப்போது மூளை வளர்ச்சி நன்றாக இருந்தால்?’
இப்படி, மாறி மாறி மண்டைக்குள் ஓடிய எண்ணங்கள் குற்றவுணர்ச்சியை வரவழைத்தன. மூன்று வயதிலேயே மருத்துவர் சொன்னதைக் கேட்டிருந்தால் இந்நிலை ரீனாவுக்கு வந்திருக்காது தானே?
பதட்டத்தின் நெருக்கடியில் இருக்கும்போது எழும் குற்றவுணர்வு ஒருவனை மொத்தமாக விழுங்கி விடுகிறது.
ரீனாவின் கைகளை அழுத்தமாக பிடித்துக் கொண்டேன்.
‘ரீனாவுக்கு வயசு எட்டு தானே?’
‘ஆமா சார்’
‘ம்…ஆனா மூணு வயசுக்குண்டான மூளை வளர்ச்சி தான் ரீனாவுக்கு இருக்கு’
‘…’
*
ஏழு ஆண்டுகள் ஓடி விட்டன. இப்போது ரீனாவுக்கு வயது பதினைந்து. சென்ற காலங்களை மனதுக்குள் உருட்டி அசைபோடுவது கோயிலில் மட்டுமே சாத்தியமாகிறது. மெல்லிய இருள், கோயில் மண்டபத்தின் தூண்களை ஊடுருவத் தொடங்கியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ரீனா உற்சாகமாக இருந்தாள். கிளம்ப ஆயத்தமானோம். வீல் சேரைத் தள்ளிக்கொண்டே நேற்று சிறப்புப் பள்ளியில் சொல்லிக் கொடுத்த ‘கை கழுவும் முறைகள்’ பற்றி ரீனாவிடம் கேட்டேன். சரியாக செய்து காண்பித்தாள்.
கோயிலுக்குள்ளேயே மாட்டுத் தொழுவம் ஒன்று இருந்தது‌. கொழுத்த பசு ஒன்றை கன்றுக்குட்டி சுற்றி சுற்றி வருவதை ஆர்வமாகப் பார்த்தாள் ரீனா.
சிரித்தாள். சிரித்துக் கொண்டே இருந்தாள். அதீத சிரிப்பு. அடங்காத சிரிப்பு. பசு மாடு தலையசைத்தது. கன்றுக்குட்டி வெறித்துப் பார்த்தது.
திடீரென ‘அப்பா…’ என்றாள். ஆம்…! கேட்க விரும்பாத அதே அலறல்.
இம்முறை, கால்கள் மட்டுமில்லாது மொத்த உடலும் குலுங்கியது. கையில் வைத்திருந்த கோயில் பிரசாதத்தை காற்றில் பறக்க விட்டாள். என் ஆள்காட்டி விரலை அவள் வாயினுள் திணித்தேன். பற்களுக்கு இரையாகாமல் அவளுடைய நாக்கை அது பாதுகாத்தது. பின்பக்கம் சுயேச்சையாக இழுத்துச் செல்லும் தலையை பிடித்துக் கொண்டேன். கண்கள் மேலே எழும்புவதைப் பார்த்தேன். ரீனாவை பிரசவித்து இரண்டு கண்களும் மேலேறிப் போயிருந்த என்னவளின் இறுதி முகச் சாயல். திரும்பிக் கொண்டேன்.
இருளிலும் சில நிமிடங்களில் எங்களைச் சுற்றி கூட்டம். பரபரப்பு.
இரும்பு சாவியைக் கையில் எடுத்தனர் சிலர். சிலர், தண்ணீர் பாட்டில்களை. இன்னும் சிலர் விபூதியைப் பிரித்தனர். ஆனால் எதைக் கொண்டும் இந்த ஆட்டத்தை இப்போது நிறுத்த முடியாதென்பது எனக்கு நன்கு தெரியும். என்னுடைய வேலை அவளைக் கீழே விழாமல் பார்த்து கொள்வது மட்டுமே.
பழகிப்போன நோயின் தன்மை பற்றி மருத்துவர்களை விட நோயாளிகளுக்கே சிலசமயம் அதிகம் தெரிகிறது.
வீல் சேரோடு சேர்த்து ரீனாவை இறுக்கமாக கட்டி அணைத்துக் கொண்டேன். சற்று நேரத்தில் ஆட்டம் நின்றது. இன்று வழக்கத்தைவிட அதிகம் ஆட்டம் தான்!
வீல் சேரிலிருந்து பிய்த்தெடுத்து ரீனாவை தோளில் போட்டுக் கொண்டேன். கோயிலின் முகப்பில் நிற்கும் டாக்ஸியில் அவளைக் கிடத்திவிட்டு, சீட் பெல்ட் போட்டுவிட்டு, மீண்டும் கோயிலுக்குள் சென்று, வீல் சேரை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு…!?
‘கேள்வி கேட்டதற்கு மங்களபுரீஸ்வரர் சிறப்பான முறையில் பழி வாங்கியுள்ளார்…’
கோயில் தேங்காயைப் போல உடைந்து சிதறிக் கிடந்தாள் ரீனா. சுயநினைவை எட்டும் முன் வீடு போய்விடலாம்.‌அன்று மருத்துவர் சொன்னது மீண்டும் நினைவில்…
‘இந்தப் பிரச்சினை கடைசி வர சரி ஆகாதா சார்?’
‘வலிப்பு நோய கண்டிப்பா நம்ம கட்டுப்பாட்டுக்குள்ள வச்சுக்கலாம். ஆனா…’
‘எதுவா இருந்தாலும் சொல்லிடுங்க சார்…’
‘ஐ ம் ஸாரி…மூளை வளர்ச்சி குன்றியதை நூறு சதவீதம் சரி செய்யுறது கஷ்டம்…சில பயிற்சிகள் இருக்கு…அதெல்லாம் ரீனாவோட எதிர்காலத்துக்கு உதவும்…’
இறுதியாக அவர் சொன்னது தான் வார்த்தைகள் மாறாமல் இன்றும் என் நினைவில் இருக்கிறது.
‘கடைசி வர ரீனாவ ஒரு மூணு வயசு குழந்தை மாதிரி தான் நீங்க பாத்துக்கணும்…’
ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தோம். நாளை மருத்துவமனைக்கு ரீனாவை அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
ரீனாவுக்கு உடைகளை மாற்றி விட்டேன்.
‘இன்று மாத்திரை உட்கொண்டாள் தானே? பிறகேன் வந்தது…?’
யோசித்தவாறே ரீனாவின் டயாப்பரைக் கழற்றினேன். அதில் முதல் முறையாக சிறுநீரோடு சேர்ந்து உதிரமும் கலந்திருந்தது.
மெல்லிய துணியால் சுற்றப்பட்டு,’உங்களுக்குப் பெண் குழந்தை பிறந்து இருக்கு சார்…’ என புதிதாகப் பறிக்கப்பட்ட ரோஜாவை கொடுப்பது போல, மருத்துவமனையில் ரீனாவை என்னிடம் கொடுத்த அந்த தருணம் ஏனோ நினைவுக்கு வந்து சென்றது.

ஆசிரியர் குறிப்பு

இக்கதையின் ஆசிரியர் பெயர் எஸ்‌.சரத்குமார். புதுவையில் எம்.பி.பி.எஸ் முடித்த இவர், கோவையில் எம்.டி உளவியல் மேற்படிப்பு முடித்தார். தற்போது மாவட்ட அரசு மனநல மருத்துவராக பணியாற்றி வருகிறார். தமிழ் மீதுள்ள காதலால் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதி வருகிறார். இவர் எழுதிய சிறுகதைகள், ஆனந்த விகடன் இணையதளத்தில் வெளியாகி உள்ளன. சமீபத்தில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சார்பில் விருதுநகரில் நடைபெற்ற சிறுகதை போட்டி ஒன்றில் முதல் பரிசினை வென்றார். தற்போது ‘கிழக்கு டுடே’ இணையதளத்தில், ‘பிரபலங்களின் உளவியல்’ என்ற தலைப்பில் தொடர் எழுதி வருகிறார்.

பத்மினி பட்டாபிராமன்/ரெங்கம்மா – விருட்சம் நாளிதழ்

2 Comments on “சு.சரத்குமார்/பெருநோய்”

Comments are closed.