
அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 19
கட்டி முடிக்கப் பட்டு பூச்சு வேலைகள் நடந்து கொண்டிருந்த மருத்துவமனையின் முன்
அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.
“இன்னும் ஒரு மாசத்துல முடிஞ்சிரும் இல்லே டாக்டரம்மா..?”
ஊர்ப் பெருந்தலையான ஊராட்சித் தலைவர் சௌந்தரராஜன் கேட்டார்.
அவரோடு இன்னும் சில உள்ளூர்ப் பெரிய மனிதர்கள்.
“முடியணும்..”
டாக்டர் அம்புஜம் யோசனையாக ஆமோதித்தார்.
“திறப்பு விழாவுக்கு கலெக்டரைக் கூப்புடணும்..”
கவுன்சிலரின் கோரிக்கை.
“கூப்டுரலாம்..”
“ஏன்.. நம்ம கோவிந்துவுக்கு சுகாதாரத்துறை அமைச்சரை நல்லாத் தெரியுமாமே….அவரக் கூப்பிட்டா நாலு சேனல்ல போடுவாங்க.. இல்லீங்களா அய்யா..?”
“ஆமாமா.. “ டாக்டர் ராமபத்ரன் தலையாட்டினார்.
மருத்துவ தம்பதிகள் உள்ளூர சிரித்துக் கொண்டார்கள்.
இந்த சின்ன டவுனில் அம்புஜத்தின் பூர்வீக வீட்டை இடித்து, ஓரளவு வசதிகளுடன்,
மகப்பேறு மருத்துவ மனையாகக் கட்ட அனுமதி வாங்கவே அவர்கள் என்ன பாடுபட்டார்கள்..
முதலில் இந்தப் பெருந்தலைகளே என்னமாக எதிர்த்தார்கள்.?
அப்புறமும் கடந்த மூன்று ஆண்டுகளில் டாக்குமென்ட் சரியில்லை அது இது என்று
எத்தனை பிரச்னைகள்..
அம்புஜத்தின் அப்பாவின் வாரிசு என்று லீகல் சர்டிஃபிகேட், அவளது கூடப்பிறந்தவர்கள், வாரிசுகளின் நோ அப்ஜெக் ஷன் சர்டிஃபிகேட்..
“எங்களுக்கு வேண்டாம் சித்தி.. நீங்க தாராளமா ஹாஸ்பிடல் கட்டுங்க..”
இந்த ஊரில் ஆரம்ப சுகாதார நிலையம் தவிர பெண்களுக்கு மகப்பேறுக்கென மருத்துவமனை எதுவும் இல்லை..
ஏதாவது பெரிய பிரச்சினை என்றால் கோயமுத்தூருக்குத்தான் ஓடவேண்டும்.
தட்டில் டீ கோப்பைகளை வைத்து எடுத்து வந்தாள் ரங்கம்மா.
“எடுத்துக்குங்க”
“என்ன ரங்கம்மா.. எப்படி இருக்கே?” என்றபடி டீயை எடுத்துக்கொண்ட சௌந்தரராஜன்,
அம்புஜத்தின் பக்கம் திரும்பி,
“பதினஞ்சு வர்சம் முன்னாடி இந்த ஊருக்கு புருஷனோட வந்திச்சு இந்த ரங்கம்மா..இதுக்கும் புள்ளைங்க இல்லே.. வரதன் விவசாயக் கூலியா இருந்தான். அப்புறம் அவனும் போயி.. ஏன் ரங்கம்மா, அவன் போயி பத்து வருசம் இருக்குமா?”
“ஆச்சுங்க..”
ஓரமாக பவ்யமாக நின்றாள் ரங்கம்மா.
ஆரம்ப சுகாதார மையமான இந்த ஊரின் சிறிய மருத்துவ மனைக்கு மருத்துவராக
டாக்டர் அம்புஜம் பொறுப்பேற்ற போது துப்புறவுப் பணியாளராக சேர்ந்தவள் ரங்கம்மா.
அவள் புருஷனுக்கு காச நோய். இதே ஆஸ்பத்திரியில் தான் சிகிச்சை பெற்று வந்தான்..
அம்புஜம் உதவி செய்ய, கோயம்புத்தூரில் போய் ஆபரேஷன் எல்லாம் செய்து கொண்டான்.
நோய் முற்றிய நிலையில் கண்ணை மூடி விட்டான்.
“சரிங்க.. நாங்க கிளம்பறோம்..” ஊர்த்தலைகள் கிளம்பின.
வீட்டில் இரவு சாப்பிட்டு முடித்து உட்கார்ந்த போது, அமெரிக்காவில் இருக்கும் மகள் சித்ராவிடமிருந்து ஃபோன்.
“என்னப்பா, அம்மா உங்க சொந்த ஊர் புராஜெக்ட் எப்படி போயிட்டிருக்கு?”
“அனேகமா வேலை முடிஞ்சு போச்சு சித்ரா..கிரி ஆஃபீஸ் போயாச்சா ?
பசங்க எங்கே ஸ்கூலுக்குப் போயிட்டாங்களா,..”
“எல்லாம் கிளம்பிட்டாங்கப்பா…. அது சரி..நீங்களும் அம்மாவும் எதுக்காக இந்த வயசுல புதுசா ஹாஸ்பிடல் கட்டி கஷ்டப் படணும்..
பேசாம இங்கே வந்திரலாம் இல்லே..க்ரீன் கார்ட் ஹோல்டர்தானே..”
ராமபத்ரன் தொண்டையை செருமிக் கொண்டார்.
“சித்ரா.. இங்கதான் நானும் உங்கம்மாவும் வளர்ந்தோம்… படிச்சோம்..இந்த ஜனங்களுக்காக
நம்ம அறிவை பயனபடுத்தாம.. எங்கேயோ யாருக்காகவோ உழைக்கிறது எங்களுக்கு பிடிக்கலேம்மா..”
“நீதான் பிடிவாதமா க்ரீன் கார்ட் வாங்கிக் கொடுத்திட்டே..அதுக்காக நாங்க சொந்த மண்ணை
விட்டுட்டு வரமுடியுமா..எப்பவாச்சும் வரோம்.. உங்க கூட இருக்கோம் இல்லே அது போதும்மா
எங்களுக்கு..”
“சரி.. சொன்னா நீங்க கேட்க மாட்டீங்க..”
“அப்படியில்லே சித்ரா..நம்ம நாட்டுல படிச்சுட்டு, இவங்களுக்கு செய்யாம எங்கேயோ
யாருக்கோ போய் உழைக்கறதுல எங்களுக்கு இஷ்டம் இல்லேம்மா.. அதுவும் கூடுமானவரை ஃப்ரீயாவோ அல்லது குறைஞ்ச அளவு பணம் வாங்கியோ நானும் அப்பாவும் மருத்துவம் செய்யறதா இருக்கோம்.. பாவம் இங்கே சுத்துப்பட்டு கிராம ஜனங்க.. பொண்ணுங்க..அவங்களுக்கு சரியானபடி ஒரு மெடர்னிடி ஹாஸ்பிடல் இல்லே.. அவங்களுக்கு நல்லது செய்யணும்னு நினைக்கிறோம்.. இது தப்பா?”
“சரி.. உங்க இஷ்டம்..” பேச்சை மாற்றினாள் மகள். “உங்க ஹெல்த் எல்லாம் எப்படியிருக்கு..
ரமணி வந்து, போயிக்கிட்டு இருக்கானா..?”
கல்யாணம் செய்து கொள்ளாத நாற்பதைத் தாண்டிய தூரத்து சொந்தக்காரன் ரமணி
அடிக்கடி இவர்களுக்கு வந்து உதவுபவன்.
“அவனும் அனேகமா எங்களோடயே தங்கிடறேன்னிருக்கான்”
கொஞ்ச நேரம் பேசின பிறகு ஃபோனை வைத்தார்கள்.
அடுத்த வாரம்..
அநேகமாக முடிந்து விட்ட நிலையில் இருந்த “அன்பு மகப்பேறு மருத்துவமனை”யைப்
பார்வையிட வந்த அரசு அதிகாரிகளோடு, அம்புஜம் ராமபத்ரன் இருவரும் விளக்கம்
கூறியபடி நடந்தார்கள்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாகப் பேசினார்கள்.
நான்கு பெட் கொண்ட ஐசியூவின் நவீன சிகிச்சை முறைகளை அதிகாரிகளுக்கு
விளக்கினார்கள்.
ஆக்சிஜன் கையிருப்பு, மெடர்னிடி வார்டின் வசதிகள் நவீன டாய்லெட்கள், குடிநீர் வசதி,
கழிவுப் பொருட்களை டிஸ்போஸ் செய்யும் வசதி சகலமும் விவாதிக்கப் பட்டன.
வந்து பணி புரிய ஓரிரு உதவி டாக்டர்கள், நர்ஸ்கள் நியமனம் செய்யப்பட இருப்பதையும் குறிப்பிட்டார்கள்.
ரங்கம்மாவுக்கு துப்புரவுப் பணியில் உதவிக்கு இருவர்.
அதிகாரிகள் கேட்ட டாக்குமென்ட்கள் தரப் பட்டன.
இதெல்லாம் முடிந்த பிறகுதான் திறப்பு விழா என்று முடிவெடுத்திருந்த படியால். அன்றே
கோவில் குருக்களிடம் சென்று நல்ல நாள் குறித்தார்கள்.
சுகாதார அமைச்சர் அன்று வேறு நிகழ்ச்சிகள் இருந்ததால் வர இயலவில்லை என்று சொல்ல,
கலெக்டரை அழைக்கச் சென்றார்கள்.
மருத்துவர்கள் கூடவே வந்திருந்த சௌந்தரராஜன்,
“அய்யாதான் உங்க ராசியான கையால இந்த ஹாஸ்பிடலை திறந்து வைக்கணும்..”
கலெக்டரிடம் குழைந்தார்.
“நல்ல விஷயமாச்சே கண்டிப்பா வரேன்….. “
திறப்பு விழா அன்று அலங்காரங்கள் மிக எளிமையாக செய்யப்பட்டன.
அன்றே பெண்களுக்கான சர்விகல் புற்று நோய் பரிசோதனை இலவசமாக செய்யப்படும்
என்று அறிவித்திருந்தார்கள்.
மருத்துவமனை வாசலில் ஷாமியானாவின் கீழே போட்டிருந்த பிளாஸ்டிக் சேர்களில்
பெண்கள் நிறைந்திருந்தார்கள்.
அக்கம் பக்கம் ஊர்களிலிருந்தும் வந்திருந்தார்கள்.
எல்லோருக்கும் டீ, பிஸ்கட்.
ரங்கம்மா ஓடி ஓடி உபசரித்துக் கொண்டிருந்தாள்.
மெல்லிய நாதஸ்ர இசை கேசியோவிலிருந்து மிதந்து கொண்டிருந்தது.
சரியான நேரத்தில் காரில் வந்து இறங்கிய கலெக்டரை அம்புஜம் ராமபத்ரன் இருவரும் மரியாதையுடன் வரவேற்க, ஊராட்சி தலைவரும், துணைத் தலைவரும் மாலை போட்டு வாய் முழுக்க சிரிப்புடன் கும்பிட்டார்கள்.
கலெக்டர், வாசலில் நின்றபடியே ராமபத்ரனிடம், மருத்துவ மனை குறித்து ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார்.
வாசலில் இருபுறம் வாழை மரங்களைக் கட்டியிருந்த கம்புகளின் குறுக்காக மஞ்சள் ரிப்பன் .
ஃபோட்டோகிராஃபர், ரிப்பனுக்கு மறுபுறம் உள்பக்கமாகப் போய் நின்ற படி தயாரானார்.
முன் வரிசை நாற்காலியில் உட்கார வைக்கப் பட்ட கலெக்டர்,
“டாக்டர், ஒரு நிமிஷம் என்று அம்புஜத்தையும் ராமபத்ரனையும் அழைத்தார்.
“டாக்டர், இங்கே யாராவது வயசான பெரியவங்க இருந்தாங்கன்னா இந்த ரிப்பனை வெட்டுகிற மரியாதையை அவங்களுக்கு கொடுக்கலாமே..நான் வாழ்த்திப் பேசறேன்…”
மருத்துவர்கள் இருவரும் முதலில் திகைத்தாலும், பின்னர் , சிறிது யோசித்த டாக்டர் அம்புஜம், ராமபத்ரனிடம் பேசிவிட்டு, கலெக்டரிடம் மெதுவான குரலில் ஏதோ சொன்னாள்.
அவர் முகத்தில் சிரிப்பு.
“ நிச்சயமா செய்யலாம்.. நோ பிராப்ளம்.. “என்றார்.
பின்னர் தலைவர் சௌந்தரராஜனிடமும் சென்று செய்தியைச் சொன்னாள். உடனே அவர் முகம் மாறியது.இறுக்கமானது.
சிறிய புதுக் கத்திரிக்கோல் ஒன்றை பட்டுத்துணி போர்த்திய தட்டில் வைத்து டாக்டரிடம் கொடுக்க ஒரு ஓரமாக நின்று காத்துக்கொண்டிருந்த ரங்கம்மாவிடம் வந்து விஷயத்தைச் சொன்னாள் அம்புஜம்.
அவ்வளவுதான்..
மிரண்டு போய் பின் வாங்கி ஓடினாள் ரங்கம்மா.
அவளை அம்புஜம் கண்டிப்புடன் அழைத்து அருகில் நிற்க வைத்தாள்.
“இருங்க டாக்டரம்மா..ஒரு நிமிஷம்..” முன்னே வந்தார் தலைவர் சௌந்தரராஜன்.
கூடவே அவரோடு நாலைந்து பேர்.
மெல்லிய குரலில், “அம்மா, இதை யாரு வேணா தெறக்கட்டும். ஆனா ரங்கம்மா வேணாம்..”
“ஏன்..”
“காரணமெல்லாம் எதுக்குங்க..வேண்டாம்னு நாங்க எல்லோரும் தீர்மானம் செய்யறோம்..”
“நாந்தான் மாட்டேன்னு சொன்னேனேம்மா..’என்று ரங்கம்மா கண் கலங்க,
“இரு.. ஏன்னு சொல்லுங்க தலைவரே..”
“அவங்க துப்புரவுத் தொழிலாளின்னு பார்க்கிறீங்களா..”கலெக்டர் குறுக்கிட்டார்.
“கோவிட் சமயத்திலே, நாடே அவங்களுக்கு மரியாதை செய்ததை மறந்துட்டீங்க்ளா..”
“அதெல்லாம் இல்லீங்க..” வற்புறுத்திய பிறகு, துணைத் தலைவர் தயங்கித் தயங்கி,,
“இது மகப் பேறுக்கான ஆஸ்பத்திரிங்க.. ரங்கம்மாவோ, புருஷன் குழந்தை இல்லாதவங்க.. “
“அடச் சே.. இதைச் சொல்ல உங்களுக்கு வெக்கமாயில்லே..?”ஆத்திரப்பட்டாள் அம்புஜம்..
“சரி.. ஒரு நிமிஷம்..” என்றவள், கூட்டத்திலிருந்து யாரையோ அழைத்தாள்..
பதினாறு வயதிலிருந்த ஒரு பையனும், கிட்டத்தட்ட அதே வயதில் ஒரு பெண்ணும் வந்து
நின்றனர். இவங்க ரெண்டு பேருமே ரங்கம்மாவோட குழந்தைங்கதான்..”
“இங்கேயே பதினஞ்சு வருசமா இருக்கிறா இவ….வளர்ப்புப் பிள்ளைங்களா.. இவங்களைப் பார்த்ததே இல்லையே..அவளும் சொல்லவே இல்லையே..”
கூட்டத்தில் முணுமுணுப்பு.
“ஒரு வேளை படிக்க வக்கிறாளோ..இல்ல..தங்கச்சி பிள்ளைங்களா இருக்கும்..’
“நாந்தான் இங்கே வந்தப்ப ரங்கம்மாவை வேலைக்கு சேர்த்து விட்டேன்.”டாக்டர் தொடர்ந்தார்.
“அதுக்கு முன்னாடி நடந்த விஷயம் இது..
ரங்கம்மாவுக்கு ஒரு மகன் இருந்தான். நல்லா படிக்கிற பையன். அவனுக்கு பதினாறு
வயசாறப்ப, சைக்கிள்ல வந்தவனை லாரி அடிச்சிருச்சு.
கோயமுத்தூர்ல எங்க ஆஸ்பத்திரிக்கி தூக்கிட்டு வந்தாங்க..பையனுக்கு மூளைச் சாவுன்னு சொல்வாங்களே அப்படி ஆயிடிச்சு..
அப்பதான் அவனோட உடல் உறுப்புக்களை தானம் செய்ய முடியுமானு ரங்கம்மாவையும் அவ புருஷனையும் கேட்டோம்..
முழு மனசோட சம்மதிச்சாங்க..
இதோ இந்தப் பையனுக்கு, ரங்கம்மா மகனோட சிறு நீரகம், இந்தப் பெண்ணுக்கு இதயம், இதெல்லாம் மாற்று அறுவை சிகிச்சை மூலம் வச்சிருக்குது.
எல்லாம் அப்ப எங்க ஆஸ்பத்திரி மூலம் தான் நடந்தது.எல்லாத்துக்கும் எங்க கிட்டே ஆதாரம் இருக்கு. பேப்பர்கள் இருக்கு. மகனை மறக்கத்தான் அவளுக்கு பிள்ளையில்லேன்னு சொல்லி வச்சா.”
தொடர்ந்தார் டாக்டர் அம்புஜம்.
“இப்ப சொல்லுங்க, இவங்க ரங்கம்மா பிள்ளைங்க இல்லையா. அவங்களை அட்ரஸ் தேடி நான் தான் வரவழைச்சேன்.
ரங்கம்மாவுக்கு சந்தோஷமா இருக்குமேன்னு நினைச்சேன்”
தலைவர் சௌந்தரராஜன் மெல்ல தொண்டையைக் கனைத்துக் கொண்டு,
“ரங்கம்மா.. நீதான் மகராசி.. உன் கையாலேயே திறம்மா. “ என்று கும்பிட்டார்.
ஆசிரியர் குறிப்பு
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 2002 லிருந்து 14 வருடங்கள் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், அனிமேஷன், வெப் டிசைனிங் துறையில் வருகைப் பேராசிரியர். பிரபல எழுத்தாளராக பல பத்திரிகைகளில், நூற்றுக் கணக்கான சிறுகதைகள், பேட்டிகள், மருத்துவக் கட்டுரைகள், குறுநாவல்கள் வெளிவந்து பல பரிசுகளைப் பெற்றுள்ளன. அவை புத்தக வடிவிலும் பல தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. சென்னை தொலைக்காட்சியில் பகுதி நேர அறிவிப்பாளராக, தொகுப்பாளராக, 15 வருடங்கள் பணி. சென்னை வானொலி பண்பலையில் இரண்டு வருடங்கள் செய்தி வாசிப்பாளர் மற்றும், நாடக ஆசிரியர். சமூக சேவை இலக்கியம் இரண்டிலும் சிறப்பாக பணி செய்துவரும் உரத்த சிந்தனை அமைப்பின் தலைவர்.

👌
அருமையான முற்போக்கு.சிந்தனையுடைய கதை.
பாராட்டுகள்
Super