
.
07.06.2025
ஆசிரியர் பக்கம்
ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 94
மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
மோகினி: வணக்கம்.
அழகியசிங்கர் : வணக்கம்.
ஜெகன் : சமீபத்தில் வெளியான உங்கள் இரண்டு கதைகளைப் பற்றிச் சொல்ல வேண்டும்.
அழகியசிங்கர் : ஆமாம். ஒரு கதை தினமணி கதிரில் வெளிவந்தது. கதையின் பெயர் வீரன் கோயில்.
மோகினி : அந்தக் கதை பெரிய பிரச்சினை ஆகிவிட்டது போலிருக்கிறது.
அழகியசிங்கர் : ஆமாம். அக் கதையை அப்பட்டமாக எழுதியிருந்தேன். யார் என் கதைகளைப் படிக்கப் போகிறார்கள் என்ற எண்ணம் எனக்கு.
மோகினி : ஏன் அப்படி எழுதினீர்கள்?
அழகியசிங்கர் : உண்மையில் போட்டிக்காக 5 கதைகளை எழுதியிருந்தேன். 3 கதைகள் போட்டியில் வெற்றி பெறவில்லை. ஒரு கதையின் விதி என்னவென்று தெரியவில்லை. ஒரு கதை அந்திமழையில் சிறப்புக் கதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஜெகன் : ஒரு கதையைத் தினமணிக்கு அனுப்பினீர்களா?
அழகியசிங்கர் : ஆமாம். அதற்கு இன்னும் கொஞ்சம் பக்கங்கள் சேர வேண்டுமென்று அதன் ஆசிரியர் கேட்டுக்கொண்டதால் சில பக்கங்களைச் சேர்த்தேன். அதுதான் பிரச்சினை ஆகிவிட்டது.
மோகினி : கதையின் தலைப்பு வேறு மாறிவிட்டது.
அழகியசிங்கர் : ஆமாம். வீரன் கோயில் என்று. மேலும் கிராமத்தின் பெயரை நான் மாற்றவில்லை. சில பெயர்களையும் மாற்ற வில்லை.
மோகினி : அப்படியென்றால் உண்மைச் சம்பவத்தை எழுதி விட்டீர்களா?
அழகியசிங்கர் : இது ஒரு நிகழ்ச்சியின் நீட்சி. இது கதை என்றால் கிராமத்தில் உள்ளவர்கள் எல்லோரும் நம்ப மாட்டேங்கிறார்கள். கும்பாபிஷேகம் நடக்க இருக்கும் வீரன் கோயிலில் மீதி வேலையைச் செய்ய முடியாது என்று கூறி விட்டார்கள்.
ஜெகன்: ஐய்யய்யோ..அப்புறம் என்ன செய்தீர்கள்
அழகியசிங்கர். வேற வழி இல்லை. மன்னிப்புக் கேட்டேன். கதையாய் எழுதினேன் என்று சொன்னாலும் யாரும் நம்பவில்லை. சில கதாபாத்திரங்கள் உண்மைப் பெயரில் எழுதி இருந்தேன். எல்லோரிடமும் திட்டு வாங்கினேன்.
மோகினி : ஒரு வழியாகப் பிரச்சினை முடிந்தது.
அழகியசிங்கர் : முடிந்தது. ஆனால் ஊரில் உள்ள என் பெரியப்பா குடும்பம் என்னை மன்னிக்கத் தயாராயில்லை.
மோகினி : இதனால் என்ன ஆகும்.
அழகிய சிங்கர் : ஒன்றும் ஆகாது. அவர்கள் என் குடும்பத்தோடு பேச மாட்டார்கள்.
மோகினி : இரவு 10.30 மணி ஆகிவிட்டது. தொடர்ந்து நாளை பேசலாம்.
அழகியசிங்கர் : குட் நைட்.
(இரவு 10.29 மணி)
அழகியசிங்கர்/ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 93 – விருட்சம் நாளிதழ்
