ஜெ.பாஸ்கரன்/மேன் மக்கள் என்றும் மேன் மக்களே!

தமிழ்நாட்டில் அவரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ‘பட்டு’க்குப் பெயர்போன ‘நல்லி’ குப்புசாமி செட்டியார் அவர்களை இன்று மதியம், மரியாதை நிமித்தம் சந்தித்தேன். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ்க் காவலர் என்றால் சற்றும் மிகையில்லை! சென்னை மாநகரில் நடைபெறும் கலை, இலக்கிய நிகழ்வுகளில் நல்லி செட்டியார் அவர்களின் நேரடியான அல்லது பின்புலத்திலான பங்கு எப்போதும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.

என்னுடைய ‘தலைவலி’ புத்தக வெளியீட்டு விழாவில்தான் முதன் முதலாக அவரைச் சந்தித்தேன். என் சகோதரர் ஆடிட்டர் ஜே.பி. மூலம் அறிமுகம். விழாவில் கலந்துகொண்டு, வாழ்த்திப் பேசியதை மறக்க முடியாது! பின்னர் பல நிகழ்ச்சிகளில் அவருடன் கலந்துகொண்டிருக்கிறேன் – முகத்தில் அதே புன்னகையுடன், பேசிக்கொண்டிருப்பார். அவரது மேடைப்பேச்சுகளில் ஓர் இயல்பான உரையாடல் தொனி இருக்கும். அன்றைய சென்னையைப் பற்றியும், ஆளுமைகளைப் பற்றியும் சுவாரஸ்யமாகப் பேசுவார். மேடையில் இருக்கும் எல்லா விருந்தினர்களையும் குறிப்பிட்டு, அவர்களுடன் ஆன தனது நட்பினைப் பற்றிப் பேசுவார். இசை, இலக்கியம், நாடகம், ஆன்மீகம், நாட்டியம் என எல்லாத் துறைகளிலும் அவரது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார். ‘நல்லி’ நிறுவனம் விளம்பரம் கொடுக்காத பத்திரிகைகளே இருக்க முடியாது!
புத்தகங்கள் வாசிப்பதிலும், எழுதுவதிலும் மிகவும் ஆர்வமுடையவர். அவர் வீட்டில் ஆயிரக்கணக்கான புத்தகங்களுடன் சிறப்பான ‘பர்சனல்’ நூலகம் ஒன்று உள்ளது. நூல்கள் மீது அவருக்கிருக்கும் காதல், பட்டு நூல் மீதான காதலுக்கு இம்மியளவும் குறைந்தது அல்ல!

சமீபத்தில் இந்திய அரசு அவருக்கு ‘பத்மபூஷன்’ விருது கொடுத்து கெளரவித்தது. ஏற்கனவே பத்மஶ்ரீ(2003), கலைமாமணி(2000) போன்ற விருதுகள் அவரைத் தேடி வந்துள்ளன!

அவருடைய வியாத கீதை, விதுர நீதியில் நிர்வாகம், வியாசர் அறம் போன்ற, புத்தகங்கள் அனைவரும் வாசிக்க வேண்டியவை.

பத்மபூஷன் விருது அறிவித்த உடனேயே அவரைச் சந்திக்க நினைத்தேன். முடியவில்லை. இன்று மதியம் அவரது நிறுவனத்தில் சந்தித்தேன். எளிமையான மனிதர். பனகல் பார்க் நல்லி சில்க் ஹவுஸில் (சின்ன வயதில் பனகல் பார்க்கில் விளையாடிவிட்டு, நல்லியின் வாசலில் இருக்கும் வாட்டர் கூலரில் தண்ணீர் குடித்தது நினைவுக்கு வந்தது – தி.நகருக்கென்று ஒரு கோடை வாசம், மணம் உண்டு – விவரிக்க முடியாத, உணர மட்டுமே கூடிய சுகந்தம் அது!) வந்தவர், கடை சிப்பந்திகளுடன் அமர்ந்து, என்னுடன் பேசிக்கொண்டிருந்தார்! காலை, மாலை மிகவும் பிஸியான நிகழ்வுகளுக்கிடையே மதியம் என்னை சந்திக்க நேரம் ஒதுக்கினார். “உங்கள் நேரத்திற்கு நன்றி. பத்மபூஷன் விருதுக்கு வாழ்த்துகள். கொஞ்சம் தாமதமாகி விட்டது” என்று நான் சொல்ல, “நான் நினைத்த போது இங்குள்ளவர்களிடம், பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, வெளியே சென்றுவிட முடியும். ஆனால் உங்களுக்கு அப்படியல்ல. உங்கள் ஜூனியர் டாக்டர் பார்ப்பதைக் கூட உங்கள் பேஷண்டுகள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அதனால், உங்கள் நேரத்தில் நீங்கள் வந்ததுதான் மகிழ்ச்சி” என்றார்.

பொன்னாடை போர்த்தி, சிறிய இனிப்புடன், என் இரண்டு புத்தகங்களையும் கொடுத்து, ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டேன். புகைப்படக் கலைஞர் கலைமாமணி யோகா அவர்கள், புகைப்படம் எடுத்தார்.

மஹா பெரியவாள் அவதரித்த ஸ்தலம் சென்று வந்ததைப் பற்றி நான் குறிப்பிட, நேற்று அனுஷ நட்சத்திரத்தில் தான் கலந்துகொண்ட புத்தக வெளியீட்டு விழா பற்றி சொல்லி, அந்தப் புத்தகத்தின் காப்பி ஒன்றையும் வழங்கினார். (Sanatana Jyoti – The Spiritual Journey of Kanchi Maha Periyava’s Life Journey from 1894 to 1939 – vol 1 – by Vijay Vasudevan: Notion press.com).

விடை பெற்றுக்கொண்டு கிளம்பி வெளியே வந்தேன். கூடவே வந்தவருடன்,ஃஅ இராமகிருஷ்ணா பள்ளியைப் பற்றியும், அன்றைய ஆசிரியர்கள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். முதலில் என் கார் வந்துவிட, ‘உங்கள் கார் வரட்டும், பிறகு நான் போகிறேன்’ என்றேன். ‘நீங்க போங்க. நான் எங்கும் போகவில்லை. உங்களை வழியனுப்பவே வந்தேன்’ என்றார். ஒரு நிமிடம் வாயடைத்து, வியப்பில் மெளனமானேன். கைகளைப் பற்றிக்கொண்ட எனக்கு வார்த்தைகள் வரவில்லை – ஒரு தந்தையின் வாத்ஸல்யத்தைக் கைகளின் வழியே உணர்ந்தேன்.

மேன் மக்கள் என்றும் மேன் மக்களே!

One Comment on “ஜெ.பாஸ்கரன்/மேன் மக்கள் என்றும் மேன் மக்களே!”

Comments are closed.