ஸ்ரீதர்-சாமா/சாது மிரண்டால்

நைட் ஷிப்ட் பார்த்தேன் இல்லையா? ரெண்டு கண்ணும் எல்.ஐ.சி.மாதிரி ‘குபு குபு’‘ வென்று எரிந்தது. ஆனால் தூக்கத்தைத்தான் காணோம்!
“ஏய். இப்படி வா!”
அப்போதுதான் ‘பாத்’‘ முடிந்து ‘மடிசார்’‘ மடித்து உடுத்தி ‘மேக்கப்’‘ முடித்து சுப்ரபாதத்திற்கு ‘பர்ஸ்ட் கியர்’‘ போட்டுக் கொண்டிருந்த ராஜி நிமிர்ந்தாள்.
“உன்னைத் தாண்டி… இங்கே வா!”
சுப்ரபாதத்திற்கு ‘ஹோல்டான்’‘ கொடுத்துவிட்டு “சீ, என்ன கண்றாவி இது? யாராவது பார்க்கப்போறா” என்று ‘வெட்கி’‘ விட்டு மீண்டும் சுப்ரபாதத்திற்கு ‘ரைட்ஸ்’‘ கொடுத்தாள்.
“உன் மூஞ்சிக்கு ‘லவ்’‘ வேறயா? சீ கழுதை… வா இப்படி.”
அரண்டுபோய் வந்தமர்ந்தாள்.
“பிருந்தா என்ன சொல்றா?”
“எண்ணெய் தேய்ச்சு விடறேளான்னு கேட்டா… அதை ஏன்…”
“அறைஞ்சேன்னா தெரியுமா? காலேஜ் அட்மிஷன் பத்தி என்ன இழவுடி சொல்றான்னு கேட்டேன்.”
“காலேஜ் ஸீட் கிடைக்கிறதே கஷ்டம்… வந்ததை விடுவாளா? அண்ணா என்ன சொன்னாலும் சரி, நான் சேரத்தான் போகிறேன்னு சொல்லிட்டா.”
அவ்வளவுதான். கண்ணில் ஒட்டிக்கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச தூக்கமும் போய்விட்டது.
“முண்டம் மாதிரி அதைக் கேட்டுண்டு நின்னியா? ‘திடீர்னு கேட்டா பணத்துக்கு அவர் எங்கேடி போவார்’‘னு கேக்கறது தானே!”
“நல்லா இருக்கே… அவ சொல்றதில் என்ன தப்பாம்?”
“சரிதான்… நீயும் அவ பக்கமா? வந்து சேர்ந்தது பார் எனக்கு… கருமம்!”
“கோபமான்னா என் பேரில்?” – முகவாயை நிமிர்த்திக் கேட்டாள் ராஜி.
சூடாக எதையாவது சொல்லத்தான் நிமிர்ந்தேன். அந்தக் ‘கரப்ஷன்’‘ இல்லாத கண்ணின் குளுமை வெப்பத்திற்கு ‘நாக் அவுட்’‘ கொடுத்துவிட்டேன்.
“சூடாக இன்னொரு கப் காப்பி கொண்டு வா பார்க்கலாம்” என்று அவளை அனுப்பிவிட்டு தலை மயிரைப் பிய்த்துக் கொண்டேன்.
எவனைப் பிடிக்கலாம்?
அபிராமனைக் கேட்கலாமா? கஞ்சப் பயல். பஸ் சார்ஜ்ஜிற்கே ‘குமுறிக் குமுறித்’‘ தருவானே.
கோந்து? ஊஹøம். சொச்ச ஆயுசுக்கு அவன் அந்த வெளிறிய மஞ்சள் டெரிலின் சட்டையை மாத்தப் போவதுமில்லை. அந்தச் சட்டையில் பை முளைக்கப் போவதுமில்லை… அவன் அகமுடையாள் ‘வச்சுக்கோடா பிராம்மணா’‘ என்று சில்லறை இடப் போவதும் இல்லை.
டைப்பிஸ்ட்?
நல்ல பையன்தான். அஞ்சோ பத்தோ கேட்டால் ஆத்துக்கே கொண்டு வந்து கொடுப்பான். ‘ஒரு இருநூறு ரூபாய் வைடா’‘ என்றால் டைப்ரைட்டர் இல்லாமலே டைப் அடிக்க ஆரம்பித்து விட மாட்டானோ?
வேற எவனைப் பிடிக்கலாம்? தலைக்கு அரையடி இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் தலைமயிரை பரப்பிக் கொண்டது தான் மிச்சம்! ஒரு உருப்படியான வழியும் கிடைக்கவில்லை!
ராஜீ கொடுத்த பனத்தை விழுங்கிவிட்டு எட்டி நடந்தேன் பஞ்சாபகேசன் வீட்டிற்கு.
“பஞ்சு சார் இருக்காரா?”
பஞ்ச மாமி அசரீரியாகக் குரல் கொடுத்தாள்.
“இப்பத்தான் பையைத் தூக்கிண்டு மார்க்கெட் கிளம்பினார். தேரடி பக்கம் போனேல்னா பார்க்கலாம்.”
தேரடியில் எங்கோ மூலையில் பறக்கும் ‘பஞ்சுவை’‘ கண்டு பிடிப்பது சாதாரண காரியமா? கை தட்டினால் அத்தனை கிழங்களும் ஒரே சமயத்தில் திரும்பித்துக்கள்.
“யாரு, சாமாவா?” பஞ்சு கையை ஆட்டிக் கூப்பிட்டார்.
உடனே விஷயத்தை ஆரம்பித்த முடிகிறதா? ஆயிரம் பேரம் பேசி அஞ்சு பைசா கொத்தமல்லி கருவேப்பிலையுடன் நின்று கொண்டதால் காய்கறிக்காரியிடம் ‘சாவு கிராக்கி போன்ற பல கௌரவப் பட்டங்களைப் பெற்றுக் கொண்ட பஞ்சு முகத்தில் அந்தப் பொலிவுடன் “ஏது இத்தனை தூரம்” என்றார்.
அவர் உதவுவார் என்ற நம்பிக்கை எனக்குக் கிஞ்சித்தும் இல்லை, அது மாதிரியே அவர் பதிலும் அமைந்தது.
தனக்கு ரெண்டு மாச சம்பளம் ‘அரியர்ஸ்ஸில்’‘ இருப்பதில் ஆரம்பித்த மனிதர் “உன் ஆத்துக்காரியை ஒரு டம்ளர் சர்க்கரை எடுத்து வைக்கச் சொல்லு… பார்வதியை அனுப்பறேன்” என்பதில் மங்களம் பாடினார்.
உப்பு சப்பில்லாத முகத்தை தொங்கப்போட்டுக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தால் பிருந்தா எதிர்ப்பட்டாள்.
“அண்ணா… எனக்கு இன்னிக்கு அட்மிஷன்.. மறந்துட்டியா?”
“எல்லாம் தெரியும்படி. அந்தப் பீஸ÷க்குத்தான் நாயா அலையறேன். ராத்திரி பகல்னு பார்க்காம கம்பெனில்ல ரத்தத்தை உறிஞ்சறான். வீட்டுக்கு வந்தால் ஆபீúஸ தேவலைன்னு தோண்றது. யாராவது தீட்சை கொடுத்தால் பேசாம போயிடலாமான்னு பாக்கறேன்.”
அவளுக்கு ஏதாவது உறைத்தால் தானே?
“அதுக்கில்லைண்ணா, ஒரு பெரிய வெயிட்டிங் லிஸ்ட் வச்சிருக்கானாம். ‘யார் யார் சேராம இருப்பா’‘ன்னு அவனவன் பணப்பையை தோள்ல சாத்திண்டு காத்துண்டிருக்கான். அப்புறமா வருத்தப்பட்டு பிரயோஜனமில்லை.”
நகத்தைக் கொறிக்க ஆரம்பித்தேன்.
“எது எப்படியோண்ணா.. நான் இந்தத் தடவை காலேஜ்ல மட்டும் சேரலை, ஆத்திலேயோ குளத்திலேயோ விழுந்து செத்துப் போவேன்.”
“சரி சரி! மூக்கைச் சிந்தாதே. தண்ணீர்ப் பஞ்சம் வந்தாலும் வந்தது, எல்லாம் தைரியமா இதுமாதிரி டயலாக் பேசக் கிளம்பிடுத்துக்கள்.”
வேற வழியில்லை. பாங்க்கில் இருக்கிற ‘கரண்ட் அக்கவுண்டை’‘ ஜப்தி செய்ய வேண்டியதுதான். கிளம்பினேன்.
‘எங்கேண்ணா போறே?’‘ – பிருந்தா இறங்கிய குரலில் கேட்டாள்.
“எங்கயாவது போறேன். பத்து மணிக்கு ரெடியா இரு. இப்ப வழியை விடு.”
“மினிமம் தவிர மீதியை எடுத்துக் கொள்கிறேன்” என்றதும் பாங்க் கிளார்க் அடுத்தவனைப் பார்த்து ஹி… ஹிளித்தான்.
அவனுக்கு என்ன? இளவட்டம்! ‘ஜில்’‘லென்று ‘பேன்’‘ கீழே சட்டைக் காலரை தூக்கிவிட்டுக்கொண்டு கொஞ்ச நேரத்திற்குக் கிறுக்கினால் மாசம் சுளையாக 600 ருபாய். என்னை மாதிரியா?
மீதிப் பணத்திற்கு சாரதி வீட்டிற்குப் படையடுத்தேன். அவளுடைய கொள்ளுப்பாட்டி ஏன் செத்தாள், தாத்தா ஏன் இன்னும் சாகவில்லை என்றெல்லாம் விளக்கிவிட்டு சாரதியின் அக்காள் ஒரு 40 ரூபாய் கொடுத்தாள். அது கிடைத்த தெம்பில் நெற்றியை அழுந்தத் துடைத்துக் கொண்டு மௌலியைப் பிடித்தேன். பின்னர் பாபு பின்னர்… (லிஸ்ட் பெரியது, எல்லோர் பெயரும் நினைவில் இல்லை)
மூச்சைப் பிடித்துக்கொண்டு வீட்டிற்கு விரைந்தேன். பிருந்தா வாசலில் நின்று கொண்டிருந்தாள்.
“இந்தா நேத்து கொடுத்த 20 ரூபாய் எடு” என்றேன் ராஜியிடம்.
“அய்யோ… அரிசிக்காரி கூப்பாடு போடுவாளே” என்று முனகினாள்.
“எல்லாம் போட்டு முடித்த பின்னர் ஒரு டம்ளர் பானைத் தண்ணி கொடுத்து அனுப்பி வை. இப்ப துட்டை எடு. வெட்டிப் பேச்சுக்கு நேரமில்லை.”
பூஜை அறைக்குள் புயல் வேகத்தில் நுழைந்தேன். விநாயகருக்கு ஒரு ‘சலாம்’‘ வைத்துவிட்டு அவர் உண்டியலை ‘ஸீஸ்’‘ பண்ணினேன். “கூடிய சீக்கிரம் 150 சதவிகித வட்டியுடன் உம் கடனை அடைக்கிறேன். இப்போதைக்கு உம் கணக்கை ஜப்தி செய்ததை நினைத்து அழாமல் சமர்த்தாக தொப்பையைத் தடவிக்கொண்டு உட்கார்ந்திரும்” என்று ஆக்ஞாபித்துக் கொண்டேன்.
அப்போதும் பணம் கையைக் கடித்தது. ஜன்னலை ‘அலேக்’‘ காகத் தூக்கி பரையில் போட்டு, பரையை இரும்புப் பெட்டியில் திணித்து, இரும்புப் பெட்டியை தகர டப்பாவுக்குள் அடக்கி அந்த அறையை ஒரு எம்.ஜி.ஆர். – நம்பியார் போர்க்களமாக்கிய பின்னர் இன்னொரு நோட்டு தேறியது.
அதற்குள் பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது. பிருந்தா காலில் வென்னீரை ஊற்றிக்கொண்டு ‘குதி குதி’‘ என்று குதித்தாள்.
“உன்னிடம் இருப்பதையும் எடு” என்றேன் அவளிடம்.
“என் கிட்ட ஏது பணம்? அந்த அஞ்சு ரூபாதான்..”
“அப்பறம் பஸ் சார்ஜ், டிபன்?”
“இதுவரை தூங்கித் தூங்கி தின்ன டிபனை நடந்துபோய் கரைத்துக்கொள், எடு என்றால் எடு.”
பிருந்தா பணிந்தாள். அவளுக்கு வேண்டியது காலேஜ் ஸீட். அதற்காக குரங்காட்டியின் ராமனைப் போல கடலைத் தாண்டவும் ரெடி.
இருவரும் கல்லூரிக்கு விரைந்தோம். கையில் ‘இண்டர்வ்யூ’‘ கார்ட் மடிந்து கசங்கி உருக்குலைந்து போயிருந்தது. உள்ளங்கையில் வியர்வை பெருகியது.
இன்னுங்கூட அட்மிஷனுக்குச் சொல்லி மாளாத கூட்டம். பாதி பேர் இன்னும் நின்றிருந்தார்கள்.
“உன் முறை வந்ததும் சொல்லு. நான் அங்கே சிமெண்ட் பெஞ்சியில் உட்கார்றேன். அசதியா இருக்கு” என்று சொல்லி கர்ச்சீப்பில் மொத்தமாகக் கட்டி வைத்திருந்த பணத்தை அவளிடம் கொடுத்துவிட்டு மரத்தடிக்கு விரைந்தேன்.
பெஞ்சியில் விழுந்த பின்னர்தான் அசதி அதிகமாகியது. உடம்பில் எங்கு தொட்டாலும் வலி. காய்ந்த சருகுகளைக் காலால் தள்ளிவிட்டு இடது கையை தலையணையாகக் கொடுத்து சற்றே சாய்ந்த நிலையில் கண் அயர்ந்த சமயம்.
“அண்ணா…” என்று தலைமாட்டில் அவலக்குரல். வாறிச் சுருட்டிக்கொண்டு எழுந்தேன். பிருந்தா முகம் பேயறைந்த மாதிரி இருந்தது.
“பீஸ் கட்டினா போறாதாம் அண்ணா… அது வெறும் ட்யூஷன் பீஸôம்… தனியா இன்னொரு 500 ரூபாய் டொனேஷனா கட்டணுமாம்.”
ஒவ்வொரு வார்த்தையும் இடியாக இறங்கி கால் வழியாக ‘எர்த்’‘ ஆகியது.
“அடுத்த மாசம் தரேன்னா விடமாட்டாங்களா?”
“மாட்டாண்ணா.”
“யாருடி விடமாட்டா? யாருன்னு பார்த்துடறேன்.”
சாமா விஸ்வரூபம் எடுத்தேன். பிருந்தாவை தள்ளி விட்டு ‘விடு விடு’‘ என்று வராண்டாவில் நடந்தேன்.
“யோவ்” என்று எவனோ சாதல்வார் சிப்பந்தி கையைப் பிடித்தான். நாலு ஃபைலை மொத்தமாக தூக்கத் திராணியில்லாத பயல். ‘லேத்’‘தை தனியாளாக அக்குவேறு ஆணிவேறாகப் பிரிக்கும் என்னிடமா வேலை காட்டுகிறான்? ஒரு சுழற்று சுழற்றி விட்டவுடன் ‘விர்’‘ரென்று பறந்துபோய் ‘க்யூ’‘வில் நின்றவர்கள் மத்தியில் ‘பொத்’‘ தென்று விழுந்து ஓலமிட்டான்.
ஒரே கூச்சல், குழப்பம்
காஷியர் பணம் வைத்திருந்த ‘úஸப்’‘பை இழுத்த மூட சாவிக்கொத்தில் சாவியைத் தேடலானார்.
“வாட்ஸ் ஹாப்னிங் தேர்?” என்று கேட்டுக்கொண்டே பிரின்ஸிபால் வெளிவந்தாள். பயந்துபோய் மறுபடியும் அறைக்குள்ளே ஓடினாள். நானும் உள்ளே நுழைந்தேன். ப்யூன் பின்னால் கையைப் பிசைந்துகொண்டு நின்றான்.
“யாரு டொனேஷன் கேட்டது?” என்று பி.ஆர்.ஓவைப் பார்த்துக் கத்தினேன். அவர் என்னைவிடப் பலத்த குரலில் “அவர்தான்” என்ற பிரின்ஸிபாலினியை சுட்டிக் காட்டிக் கத்தினார்.
“ஒய் நாய்ஸ்?” என்று அந்த அம்மாள் ஏதோ இழுத்தார்கள்.
“நாய்ஸ் பேய்ஸ்ன்னு திட்டினீங்கன்னா நா என்ன செய்வேன்னு தெரியாது. ஏம்மா, எங்கே நல்லது கத்துக்கொடுக்கணுமோ அங்கே தில்லுமுல்லு முதல்ல கத்துத் தர்றீங்களே… நியாயமா இது?…”
அந்த அம்மாளுக்குத் தமிழ் தெரியாது போலிருக்கிறது.
“நாம் இல்லே… நாம் இல்லை…மேனேஷ்மெண்ட்…” என்று ஏதோ மென்று விழுங்கினார்.
அந்த சமயத்தில் அந்த அறைக்குள் ஒரு பெரிய மனிதர் பிரவேசித்தார். ஸில்க் ஜிப்பா, கையில் டிராவலர்ஸ் பெட்டி…
அந்தச் சூழ்நிலையில் ஒதுங்கி இருந்த பிரின்ஸிபாலை விட்டுவிட்டு என்னைப் பார்த்து சலாம் அடித்தார்.
“யாருய்யா நீ?” என்று பிரின்ஸிபால் தோரணையில் கத்தினேன்.
அவர் முகம் ஒரு முழத்துக்கு நீண்டது.
“நேத்து ஃபோன் பண்ணேன், மேனேஜருக்கு… மேலே பேச வந்திருக்கேன்.”
“என்ன? லஞ்சம் அழ வந்திருக்கியா?”
“ஹி… ஹி…”
“என்னய்யா மார்க் வாங்கினே?”
“நா வாங்கலீங்க. நம்ம பொண்ணு. 250 சொச்சம்… ஹி…ஹி…”
“நல்லா இருப்பியா நீ? அடுக்குமாய்யா இது?” என்று ஏதோ கேட்க நினைத்தவன் பல்லைக் கடித்துக்கொண்டு “2500 ரூபா இருக்குமா?” என்றேன்.
“ஆங்” என்று வாயைப் பிளந்தார் அவர். “மானேஜர் கிட்டே ஒன்றரைக்குத்தானே நேத்து பேசித்து?”
‘இன்னிக்கு ரெண்டரை நோட்டய்யா. இஷ்டமிருந்தா வை. இல்லாட்டி போய்கிட்டே இரு…’‘
அவர் கொண்டு வந்த பெட்டியைத் தலை கீழாய்த் திறந்து அத்தனை நோட்டையும் மேஜையில் கொட்டினார்.
“இருக்கறதையெல்லாம் கொடுத்துட்டேன்…. எண்ணிப் பார்த்துக்குங்க. சார் ரொம்ப சூடா இருக்கீங்க போலிருக்கு”
“துட்டு கொடுத்தாச்சு இல்லே? நடையைக் கட்டு. நாளைக்கு வந்து பெண்ணைச் சேர்த்துவிடு”
“அது போதும் சார்” என்று இன்னொரு சலாம் வைத்து விட்டு நகர்ந்தார். பிரின்ஸிபால் வாயடைத்துப் போய் இத்தனையும் பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள்.
இப்போது என்னிடம் சூடு குறைந்திருந்தது. ஆனால் உறுதியுடன் சொன்னேன்.
“ராப் பகலா படிச்சு 450-க்கு மேல் என் தங்கை வாங்கியிருக்கா. அவளுக்கோ அவளை மாதிரி இன்னொரு ஏமாந்த பொண்ணுக்கோ வர வேண்டிய ஸீட் டொனேஷன் தராமப்போனா இப்படி வேற விதத்தில் போயிருக்கும். நியாயம் பத்தி நமக்குள்ள யாரு முதல்ல பேசணும்னு முடிவு பண்ணிங்குங்க…”
அந்த அம்மாள் இன்னும் ரத்தம் உறைந்த நிலையில் நின்றிருந்தாள்.
மேஜையில் கிடந்த நோட்டில் கை நிறைய அள்ளி அவள் முகத்தில் அடித்தேன். மீதியை அவள் பக்கமாகத் தள்ளினேன்.
“உங்க பேராசைக்கு இந்த ஏழையின் பிச்சை. இனிமேயாவது என் தங்கச்சியைச் சேர்த்துக்குங்க.”
இண்டர்வியூ கார்டையும் எறிந்தேன். கதவைத் திறக்குமுன் மற்றொரு முறை திரும்பினேன்.
“நா துணிஞ்சிட்டேன். நாளைக்கு நீங்க என் தங்கச்சிகிட்ட ஏதாவது வாலாட்டினீங்கன்னா எதையும் செய்யத் தயங்க மாட்டேன். ஜாக்கிரதை.”
ஃ ஃ ஃ ஃ
குழந்தை முதல் நாள் காலேஜ் போறா. ஆசீர்வாதம் பண்ணுங்கோ.
ராஜி கொடுத்த மோர் சாதம் கொண்ட அலுமினிய டிபன் பாக்ûஸ தரையில் வைத்துவிட்டு பிருந்தா என்னை நமஸ்கரித்தாள்.
“நல்லா படிச்சு நல்ல மார்க் வாங்கணும், என்ன?”
குழந்தையை வாரி அனைத்துக் கொண்டபோது இது வரை பட்ட கஷ்டமெல்லாம் லேசாகத்தெரிந்தது.

2 Comments on “ஸ்ரீதர்-சாமா/சாது மிரண்டால்”

Comments are closed.