ஸ்ரீதர்-சாமா/ தொட்டில் பழக்கம்மரப்பெட்டி மட்டும்

“ஐயா வாருங்கள். உங்களுக்கு என்ன வேண்டும்?”
“நேற்று எனக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான். அவனுக்கு அழகான தொட்டில் ஒன்று வேண்டும்.”
“இதோ இப்படி வாருங்கள். டேய் பையா, ஐயாவுக்கு ஏதாவது பானம் கொண்டு வா. அதே அந்த பீரோவின் அருகில் இருக்கிறதே, கவனித்தீர்களா? மரத்தொட்டில், மரத்தால் எதையும் நாங்கள் செய்கிறோம் ஐயா. கடந்த இருபது வருடங்களாய்…”
“ஊஹ÷ம்! மரத் தொட்டிலா அது? மரப்பொந்து மாதிரி இருக்கிறது வேறு பாருங்கள்.”
“ஆகட்டும் ஐயா. தங்கள் திருப்தியே எங்கள் நோக்கம். இதே நோக்கத்துடன் இருபது வருடங்களாய்…”
“இது என்ன?”
“வேலைப்பாடமைந்த தொட்டில் ஐயா. வார்னிஷ் பெயின்ட்டில் எப்படி பளபளக்கிறது… அடடா! எங்கள் நிறுவனத்தின் நுட்பக் கலைஞர்கள் டிûஸன் செய்தார்கள் ஐயா.”
“இது வேண்டாம். என் மகன் கையைக் காலை உதைக்கையில் கண்ட இண்டு இடுக்குகளில் மாட்டிக்கொண்டு விடக்கூடாது. அது என்ன சலவைக் கல்லில் செய்த தொட்டிலா?”
“இல்லை ஐயா, பெயிண்ட் அந்த நிறத்தில் கொடுத்திருக்கிறோம். நீங்களே ஏமாந்து விட்டீர்கள் இல்லையா?”
“அது வேண்டாம் என்று சொல்ல வந்தேன். எனது மகனின் மஞ்சள் நிறத்திற்கு இது எடுப்பாய் இராது.”
“இது?”
“நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் என்மகன் குப்புறப் படுத்துக்கொண்டால் இடவசதியிருக்காது போலிருக்கிறதே… தொட்டிலே சிறைபோல இருக்கக்கூடாது என்று சொல்கிறேன்.”
“சரியாகச் சொன்னீர்கள். இங்கே… இங்கே… வலதுபுறம் சற்று திரும்பிப் பார்க்கிறீர்களா?”
“உஸ்… எதுவும் சரியில்லை.”
“மரம் சம்பந்தப்பட்ட எல்லாம் நாங்கள் செய்கிறோம் ஐயா. நிதானமாக சுற்றிப்பார்த்து வேண்டியதை எடுத்துச் செல்லுங்கள்.”
“அடடா! மரச்சாமான்கள் அத்தனையுமா செய்கிறீர்கள்? எனக்கு இதுவரை எட்டாமற்போய்விட்டதே! எனக்குத் தொட்டில்தான் வேண்டும் என்று இல்லை… இந்தத் தள்ளு வண்டி என்ன விலை?”
“அதன் மேலேயே குறிப்பிட்டிருக்கிறோம் ஐயா!”
“என்னது?… அம்மாடியோவ்! இவ்வளவு? செத்தேன் போங்கள்!”
“மரத்தாலான எதையும் நாங்கள் 20 வருடங்களாய்.”
“அடடே! நேற்று பிறந்த குழந்தை எங்காவது அதற்குள் தள்ளுவண்டியைத் தள்ளுமா? அறிவு அந்த அளவுக்கு வேலை செய்யவில்லை பார்த்தீர்களா?…”
“குழந்தை அழுதால் விளையாட்டு காட்ட நிறைய மரச்சாமான்கள் உள்ளன ஐயா! இதைப் பார்த்தீர்களா? எலக்ட்ரிக் ஸிங்கர், ப்ளக்கைப் பொருத்தினால் பாடும்!”
“ஒரு மர பொம்மைக்கு இவ்வளவு சக்தி இருப்பது ஆச்சர்யம் தான். ஆனால் எனக்கு அது வேண்டாம். என் மகன் பாட்டைக் கேட்டு பயந்துவிட்டால்?”
“இனிய பாட்டாகப் பாடும் ஐயா!”
“ஒரு இரவில் அழுதான் என்றால் அப்போது யாரைய்யா ப்ளக்கைப் பொருத்தி இதைப் பாடவிட்டுக் கொண்டிருப்பார்கள்?”
“குழந்தையின் அழுகுரலைக் கேட்டவுடன் மற்றொரு பாட்டரியின் உதவியால் அதுவாகவே பாடும். முன்னால் நாம் ஒரு பட்டனை அழுத்தியிருக்க வேண்டும், அவ்வளவு தான்!”
“அந்த பட்டனை அழுத்த மறந்துவிட்டால்… ஊஹøம்! நமக்கு இது ஒத்துவராது!”
“மர இரயில் வண்டி இதோ செய்திருக்கிறோம் ஐயா…. நேற்றுத்தான் புதிதாக வந்திருக்கிறது…”
“புகையென்றாலே எனக்குப் பிடிக்காது!”
“இது எலெக்ட்ரிக் வண்டி ஐயா… புகை விடாது!”
“ரொம்பவும் மெலிதாக இருக்கிறதே… உடைந்து விட்டால்?”
“இலவசமாக வேறு ஏதாவது செய்து தருவோம் ஐயா… உங்கள் திருப்தியே எங்கள் நோக்கம்… மரத்தால் எதையும் நாங்கள் செய்வோம்… கடந்த 20 வருடங்களாக நாங்கள் இங்கு…”
“எல்லாம் சரிதான். எனக்குக் கரண்டு என்றாலே பயம்!”
“ப்ளக்கைப் பொருத்துவது மட்டும் உங்கள் வேலை ஐயா!”
“ப்ளக்கைப் பொருத்துகையில் ஷாக் அடித்து நான் இறந்துவிட்டால்?”
“எங்கள் செலவில் மரப்பெட்டி தயார் செய்து உங்கள் சவ அடக்கத்திற்கு ஏற்பாடு செய்வோம் ஐயா!”

ஸ்ரீதர்-சாமா/சாது மிரண்டால் – விருட்சம் நாளிதழ்

One Comment on “ஸ்ரீதர்-சாமா/ தொட்டில் பழக்கம்மரப்பெட்டி மட்டும்”

Comments are closed.