ஸ்ரீதர்-சாமா /தலைமுறைகள்

அவசர அவசரமாக வீட்டிற்குள் நுழைந்தான் ராமு.  ராதா நோட்டுப் புத்தகத்தில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.

“அப்பா எங்கேடீ?”

அவள் கண்களை எடுக்காமலே சொன்னாள்.

“சந்தியா வந்தனம் பண்ணிண்டிருக்கா.”

அவன் முற்றத்திற்கு விரைந்தான்.  அப்பா ப்ராணாயாமம் முடிக்கும் வரை காத்திருந்தான்.

“அப்பா.”

அவர் நிமிர்ந்தார்.

“ரிஸல்ட் வந்தாச்சு. நம்பர் வந்திருக்கு.”

“சின்னம்பியும் சொன்னான்.”

“ட்யூடரைப் பார்த்தேன். üபுஸ்தகம் கூட வாங்காம எப்படிடா பாஸ் பண்ணினேன்னு ஆச்சரியப் பட்டார்.  நான் தான் கிளாஸ்ல ரெண்டாவது ராங்க்கா இருப்பேன்.”

அவர் ஜபம் செய்ய தூண் ஓரமாக வந்தமர்ந்தார்.

“அப்பா.”

“சொல்லு.”

“ப்ரண்ட்ஸ்லாம் அப்ளிகேஷன் பாரம் வாங்க நாளைக்கு போகப் போறாங்க. நேரே நம்மாத்துக்கு வந்து என்னையும் அழைச்சுண்டு போறதாச் சொன்னா.”

“……..”

அம்மா சமையற்கட்டிலிருந்து எட்டிப் பார்த்தாள்.

“நாளைக்கு மூணு காலேஜøக்காவது பார்ம் வாங்கி நிரப்பிக் கொடுத்தாகணும். 15 நாள் தான் டயமாம்.”

அப்பா தியானத்தில் ஆழ்ந்தார். கண்களை மூடிக் கொண்டார்.  பின்னர் “ஈஸ்வரா…” என்று சொல்லிக் கொண்டே சாப்பிட அமர்ந்தார். அவர் தட்டொலியும் அவன் விசும்பலுமே அவ்வீட்டில் இரண்டு மூலையில் கேட்டன.

மறுநாள் காலை.

அப்பா வாயிலுள்ள வெற்றிலைக் குழம்பைத் துப்பிவிட்டு சட்டையை மாட்டிக் கொண்டார். தாழ்வாரத்தில் செருப்பை மாட்டிக் கொண்டார்.

“அப்பா.”

அவர் சங்கடத்துடன் திரும்பினார்.

“என்னடா?”

“ப்ரண்ஸ்லாம் இன்னும் கொஞ்ச நேரத்துலே வருவா.”

“…….”

“வர்றலையான்னு கேட்டா என்னன்னு சொல்றது.”

“எங்காத்துல நாங்க தினமும் வாய்க்கும் வயத்துக்கும் சண்டை போடறோம்… காலேஜ÷க்கு நான் எப்படிடா வர்றதுன்னு கேளு.”

செருப்பொலி தேய்ந்து அடங்கியது. கண்களில் நீர் முட்ட ராமு நின்றிருந்தான்.

“குளிச்சுட்டு சாப்பிட வாடா ராமு” அம்மா மிக அருகில் வந்து சொன்னாள்.

“……..”

“இதுக் கெல்லாம் மனசுடைஞ்சு போயிடுவாளா… அசடு… நல்ல வேலையில சேந்தப்பறமா படிச்சுக்கறது. காலேஜ÷க்குப் போயிதான் படிக்கணுமா என்ன?”

“……….”

“என் தம்பி கூட அப்படித் தாண்டா.”

“ப்ரண்ஸ் வந்தா நா இல்லேன்னு சொல்லிடுமா” – அவன் தட்டியை விலக்கிக் கொண்டு தன் அறைக்குச் சென்றான்.  பின்னாலேயே உமா வந்தாள். பூஞ்சை மார்பை மறைத்திருந்த ரவிக்கை கிழிந்து வெளிறிய சதை வெளித்தெரிய பார்க்கக் கண்றாவியாக இருந்தாள்.

“என்னடி?”

“பாஸ் பண்ணிட்டயாமே… எனக்கு எதுவும் கிடையாதா?”

“ஆமா.. பெரிய பாஸ்… பாஸ் பண்ணப்பறம் தான் ஏண்டா பண்ணோம்னு தோண்றது.”

“பாமா ஆத்துக்குப் போயிருந்தேன்.  அவ அண்ணா கூட பாஸ் பண்ணிட்டானாமே.. என் கூட யாருமே பேசலை”…

“….”

“காலேஜ÷க்கு மேல் படிப்புக்குப் போறதா சொல்லிண்டிருந்தியே…”

“நா தான் சொல்றேன். என்னை இந்த வீட்டுல யார் மதிக்கறா?”

“அப்பா போகக் கூடாதுன்னு சொல்லிட்டாளா?”

“உன் வேலையைப் பாத்துண்டு போடி கழுதை.”

அவள் மிரண்டு போய் அவனைப் பார்த்தாள்.

ஃ  ஃ   ஃ

அதற்குப் பிறகு அவன் அந்த வீட்டில் யாருடனும் அவ்வளவாகப் பேசுவதில்லை. அம்மா சாப்பிட வந்து கூப்பிட்டால் போவான்.   வெளியில் செல்வது இல்லை, நண்பர்களைச் சந்திப்பதும் இல்லை.

பின்பொரு நாள் வழக்கம் போல் அப்பா சந்தியா வந்தனம் முடித்து விட்டு காலி டம்ளர் உத்தரணியுடன் சாப்பிட பலகாயைப் போட்டுக் கொண்டு அமர்ந்தார். பரிமாறிக் கொண்டே அம்மா மெதுவாக விஷயத்திற்கு வந்தாள்.

“ராமு கொஞ்ச நாளா சரியா சாப்பிடறதில்லே.”

“……”

“ராத்திரியானா ஏதேதோ கனவில் உளர்றான். ஏதோ குழந்தை பணத்துக்கும் பொருளுக்கும் ஆசைப்படலை… மேலே படிக்கணும்னு ஆசைப்படறான். கஷ்டத்தோட கஷ்டமா மூணு வருஷம் தள்ளிட்டோம்னா…”

“ரொம்ப பேராசைடி உனக்கு.”

“எங்கேயோ பொறந்து நல்லா இருக்க வேண்டிய பிள்ளை.  இந்த தரித்திரத்தோட வயத்துல பொறந்து கஷ்டப்படறான்…”

அம்மா எதையெல்லாமோ நினைத்துக் கொண்டு அழுதாள்.  சிறு வயதில் üஅதற்குப் படிக்க வைப்பேன், இதற்குப் படிக்க வைப்பேன்.  நீ நல்ல மார்க் மட்டும் வாங்கணும்ý என்று மடியில் உட்கார்த்தி வைத்து சோற்றுடன் நம்பிக்கையையும் ஊட்டிய நாட்களை அவளால் மறக்க முடியவில்லை.  இதோ இன்று குழந்தை அவளை ஏமாற்றவில்லை. ஆனால் அவள்?

அப்பா என்ன பேசுவார்? என்ன பேச முடியும் அவரால்?  அழுகையூடே சின்னப் பெண் மாதிரி தன் மனைவியும் அடம் பிடிப்பது அந்த வேதனையிலும் வேடிக்கையாக இருந்தது.

சாப்பிட்டு விட்டு வெற்றிலைச் செல்லத்துடன் கூடத்தில் வந்தமர்ந்தார். அம்மா சமையற்கட்டு வேலைகளை அப்படியே போட்டு விட்டு அவர் பதிலுக்காகக் காத்திருந்தாள். அது அன்று என்று இல்லை, என்றுமே அவரிடமிருந்து வரவில்லை.

ஃ  ஃ   ஃ

நாலைந்து நாட்கள் கழித்து ஒரு நாள் காலை…

அவன் கஷாயம் குடிப்பது போல காப்பியை விழுங்கி விட்டு சட்டையை மாட்டிக் கொண்டு புறப்பட்ட சமயம்…

“எங்கேடா போறே?” என்று கேட்டார் அப்பா – நியூஸ் பேப்பர் படித்துக் கொண்டே.

“லைப்ரரிக்கு.”

“சீக்கிரமா வந்துடு. பிச்சை 9 மணிக்கு வரேன்னான். நல்லா டிரஸ் பண்ணின்டு இரு”

üபிச்சைý என்றதுமே அவன் உள்ளம் துள்ளிக் குதித்தது. பி.யூ.ஸியில் அலைந்து அவனுக்கு சீட்டு வாங்கித் தந்தவர் அவர் தான். விண்ணப்பப் பாரம் பூர்த்தி செய்த நாள் முதல் சம்பளம் கட்டிய நாள்வரை அவனுக்கு உதவியாக இருந்தவர் அவர்.

போன வருடம் கிட்டத்தட்ட இதே சமயம் தான் வந்திருந்தார்.  இப்போதும் வருகிறார். அப்படி… அப்படியென்றால்… அப்பா என்னை டிகிரியில் சேர்க்க முடிவு பண்ணிவிட்டாரா?…

அவன் குதித்துக்கொண்டு வெளியே தாவினான். லைப்ரரிக்குப் போகவில்லை. ஒவ்வொரு நண்பன் வீட்டிற்கும் சென்று மனந் திறந்து உரையாடினான்… என்னென்ன புத்தகங்களை வாங்காமலே படிக்கலாம் என்று தெரிந்து கொண்டான். எந்தெந்தக் கல்லூரியில் எந்தெந்த டிபார்ட்மென்ட் நன்றாக இருக்கும், யார் யார் ஆசிரியர்கள் என்ற விவரங்கள் கேட்டுத் தெரிந்து கொண்டான்.

8 மணிக்கெல்லாம் குளித்துவிட்டு இத்தனை பழைய சாதத்தையும் உருட்டிப் போட்டுக்கொண்டு சலவை சட்டை, பேன்ட் அணிந்து கொண்டு தயாராகி விட்டான்.

கிட்டத்தட்ட 10 மணிக்குத்தான் பிச்சை வந்தார். வழியெல்லாம் அவருடன் பேசிக்கொண்டு வந்தான்.

“ஏதோ மாமா. நீங்க போன வருஷம் சீட்டு வாங்கிக் கொடுத்ததையெல்லாம் நா மறக்கவேயில்லை”

“சும்மா ஐஸ் இறக்காதேடா. ஆமா, லீவுல டைப்ரைட்டிங், ஷார்ட் ஹான்ட்டுன்னு ஏதாவது படிச்சியா?”

“இல்லே மாமா. அப்பா போகக் கூடாதுன்னு… இல்லை… எனக்கே பிடிக்கலை மாமா. ஆமா மாமா, உங்களுக்கு அந்த பிரின்ஸிபாலை நல்லாத் தெரியுமா?”

“அவர் முன்ன ஒரு கம்பெனில்ல இருந்தப்போ நா அவருக்குக் கீழே டைப்பிஸ்டா இருந்தேன். அப்ப கொஞ்சம் பழக்கம்.  அவ்வளவுதான்.”

“அதே பிரின்ஸிபால் கிட்டத்தான் இப்பவும் போறேளா மாமா?”

“அவர் வீட்டுக்கு ஏன் போகணும்?”

“பின்னே அட்மிஷன் எப்படி?”

“காலேஜ் அட்மிஷன்னா அவரைப் பார்க்கலாம். ஹோட்டல்ல சரக்கு எடுக்கற வேலைக்கு அவர் ஏன்டா?”

ஃ    ஃ     ஃ

ஒரு வாரத்திற்கு மேல் ஓடிவிட்டது. அவன் சித்தபிரம்மை பிடித்தவன் போலிருந்தான். ரெண்டு ரூபாய் கூலிக்காக காலொடிய சைக்கிள் மிதித்தான். மாவு மிஷின், ரேஷன் கடையடி, கறிகாய்ச் சந்தை, எண்ணெய் மண்டி என்று நாள் முழுதும் தவங்கிடந்தான்.  கேரியரில் அரைத்த மாவு டின்னுடனும் ஹான்ட் பாரில் வெள்ளைக் கோதுமைப் பையுடனும் அவன் சைக்கிள் மிதித்துச் செல்கையில் எப்போதாவது குதித்துக் குதித்து நடக்கும் இளைஞர்கள் தென்பட்டால் பக்கத்தில் ஏதாவது சந்திற்கு சைக்கிளை ஒடித்து ஒட்டிக்கொண்டு போய் விடுவான். ஒவ்வொரு இரவும் வீட்டிற்கு வருகையில் பிரக்ஞை இல்லாமல் படுப்பான். அம்மாதான் அவனையெழுப்பி சமையலறையில் உட்கார்த்தி வைத்து சாதம் போடுவாள். அப்பாவும் அவனும் சந்திப்பதே இல்லை, சந்தித்தாலும் பேசிக் கொள்வதே இல்லை.

அப்பாவும் நோயாளி போல கரைத்துச் சாப்பிடுவார்.  உடம்பு ரொம்பவும் சிரமப்படுத்திய நாட்களில் சாப்பாட்டில் குறையிருக்குமே தவிர ஸ்நானம், பூஜை, புனஸ்காரங்களில் இருக்காது.  இருமிக் கொண்டே பச்சைத் தண்ணீரை உச்சந் தலையில் விடியற்காலையில் ஊற்றிக் கொள்வார்.

அவர்கள் உள்ளூற பயந்தபடியே நடந்தது. “லேசாக நெஞ்சை வலிக்கிறது” என்று ஒரு நாள் படுத்துக்கொண்டார். என்றுமில்லாமல் எல்லோரையும் அருகில் வரவழைத்து நன்றாகப் பேசினார்.  ராமுவையும் “கோபமாடா?” என்று கேட்டார். அவனுக்கு எதையும் சொல்லத் தெரியவில்லை. üஇல்லைý என்பது போல் மெதுவாகத் தலையசைத்தான். திருப்தியடைந்தவர் போல் கண்களை மூடிக் கொண்டார்.

ஃ   ஃ   ஃ   ஃ

அப்பா இறந்துபோய் இரண்டு வாரங்கள் ஓடிவிட்டன. சமையலறையில் எப்போது பார்த்தாலும் கதறலும் ஓலமும் முனகலுமாய் இருந்தது. அவனுக்கு அருவருப்பாக இருந்தது.  சட்டையை உதறிப் போட்டுக்கொண்டு ஹோட்டலுக்குப் போனான்.

முதலாளி இல்லை. அவர் தம்பி கல்லாப் பெட்டியில் உட்கார்ந்திருந்தார்.

“ஏண்டா இத்தனை நாள் வேலைக்கு வரல்லை?” என்று கேட்டார்.  சர்வர் பையன்கள் அங்கங்கு நின்று அவனை கரிசனத்தோடு பார்த்தார்கள்.

“தகப்பனார் காலமாயிட்டார் முதலாளி.”

அவருடைய ஆறுதல் வார்த்தைகளுக்காக அவன் ஏங்கி நின்றான்.  அவர் ஒரு துக்கமான சமாசாரத்தைச் சொன்னார்.

“நீ வேலையை விட்டுட்டாயாக்கும்னு நினைச்சு நம்ம கிட்டாவை திரும்பக் கூப்பிட்டேனே… இப்ப என்ன பண்றது?”

“முதலாளி…”

“உம்? வேற ஏதாவது தெரிஞ்ச இடத்துல பார்க்கறேன்? ஒரு வாரம் கழிச்சு வந்து பார்.”

அவர் ஒரு அழுக்கேறிய ரிஜிஸ்டரைப் பிரித்து கூட்டிக் கழித்து 30 ரூபாயும் சில்லறையும் தந்தார்.

“உன் சம்பள பாக்கி. நல்ல பையன். என்ன பண்றது.  நீயும் எங்கயானா முயற்சி பண்ணு. சும்மா இருக்காதே.”

வீட்டில் அம்மா அழுது கொண்டிருப்பாள் என்று நினைத்தான்.  அவர் ஏதோ இரைந்து கொண்டிருந்தாள். சட்டையைக் கழற்றி வைத்தான்.

“ஒரு டம்ளர் தூத்தம் கொண்டு வாடி உமா.”

கயிற்றுக் கட்டில் சாத்தியருந்த மூலைக்குப் போனான். அப்பா படுத்திருந்த… ஏன் வாழ்ந்திருந்த கட்டில். அதை இறக்கி தூசி தட்டிவிட்டு உட்கார்ந்தான். உமா நீருடன் வந்தாள். கன்னங்கள் அரை குறை வெளிச்சத்தில் பளிச்சிட்ட மாதிரி…

“ஏன்டி அழுதியா?”

“……”

“ஏன்? என்ன விஷயம்?”

“மாப் நோட்டுப் புஸ்தகம் வாங்கப் பணம் வேணும்னு அம்மாவைக் கேட்டேன். அம்மா அடிச்சு இனிமே ஸ்கூலுக்குப் போகக் கூடாதுனுட்டா.”

முன்பு அவன் இருந்த நிலையில் அவள்! அவன் அப்பாவின் கட்டிலில் அவன்! அப்பா பதில் சொல்லவில்லை. அவன்?

வேட்டி முடிச்சிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்தான்.

“அழாம வேணுங்கறது வாங்கிக்கோ!”

மீதிப் பணத்தை ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்த அம்மாவிடம் கொடுத்தான்.

“சிலவுக்கு வச்சுக்கோ. நா வேலைக்குப் போயிட்டு வர்றேன்.”

ராமு வெளி நடந்தான். பிச்சை வீட்டிற்குப் போகாமல் பழைய ஹோட்டலுக்கும் நடக்காமல் ஏதோ ஒரு நம்பிக்கைத் தெளிவுடன் இதுவரை நடந்திராத ஒரு பாதையில் காலை அகலப்போட்டு நடந்தான்.

ஸ்ரீதர்-சாமா/தவறும் தண்டனையும் – விருட்சம் நாளிதழ்