ஸ்ரீதர்-சாமா/சுயநலம்

                நான் மறுபடியும் கூறினேன். “கடவுளின் முதல் தவறு மனிதன்”.  “நீ சொன்னதையே தான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறாய்” என்று வருத்தப்பட்டுக் கொண்டான் நண்பன் ஆவேசம் கலந்த எரிச்சலுடன்.  “ஒரு முழுமையை மனிதப் பிறவி அடையவில்லை தான்.  ஆனால் இந்த ஒரு குணாதிசயம், பௌதிகத் தோற்றம், விகிதாசாரம் இதைவிடச் சிறப்பாக அமைவது மிகவும் சிரமம் என்று எனக்குத் தோன்றுகிறது.”

“தவறு இது ஒரு ஏற்றத்தை அண்டியிருக்கிற இடைநிலை.  இந்த நிலை எந்த இரு ஏற்றங்களுக்கும் இடையில் அமைவது படைப்பு விதி.”

“ஏற்ற இறக்கங்களுக்கிடையில் என்று சொல்லாமல் இரு ஏற்றங்களுக்கிடையில் என்று சொன்னதன் மூலம் சிருஷ்டித் தத்துவத்தின் ஒரு வழிப் பயணத்தில் மனிதனின் படைப்பு இன்றைய அளவில் உச்சியை எட்டி விட்டதெனக் கூறுகிறாய்.  அதுதான் நானும் சொல்வது. உலகில் சிறந்தவன் இன்று மனிதன் தான்.”

“பொறு. கடவுள் எந்தவொரு ஏற்றத்தை மனிதனுக்குக் கொடுக்க விரும்பினானோ அதைவிடக் குறைந்த அளவிலேயே பலன்கிட்டியிருக்கிறது என்று நான் சொல்ல வருகிறேன். இதைக் கடவுள் எதிர்பார்க்கவில்லை. ஆகவே தான் இது கடவுளின் முதல் பிழை என்கிறேன்.”

“இதற்கு என்ன நிரூபணம்.”

“மனிதனுக்கான சிறப்பு அம்சங்கள் என்னென்ன?”

சற்று நேரம் மௌனம். “மிருகபலம் செப்பனிடப்பட்டு மூளை பலம் ஏறியிருப்பதுதான். ஆறாவது அறிவு”

“மிருகபலம் செப்பனிடப்பட்டு என்றால்? பலம்கூடியுள்ளதா குறைந்துள்ளதா?”

“குறைந்துள்ளது. நேச்சுரல். ஒரு பக்கம் ஏறினால் எதிர்பக்கம் இறங்கித்தானே ஆகவேண்டும்?”

“ஒரு மனிதன் தான் ஏற்கனவே பெற்றிருந்த பலத்தை இப்போது பெற்றிருக்கிற மிருகத்தை இப்போது தனியாகச் சந்திக்க முடியாது.”

“கிட்டத்தட்ட அப்படித்தான்.”

“எந்த சந்தர்ப்பங்களில் எல்லா மிருகங்களாலும் மனிதனை தனித்தனியாகச் சந்திக்க முடியாதோ அவற்றை விடக் கூடுதலான சந்தர்ப்பங்களில் எல்லா மனிதர்களாலும் மிருகத்தை தனியாகப் பார்க்க இயலாது.”

“சரிதான்.”

“ஆனால் வளர்ச்சி தியரியின்படி சிருஷ்டிகளுக்கிடையில் ஒரு தாழ்வு இருக்க முடியாது என்பதால் இந்த நஷ்டத்தை ஈடுகட்டத்தான் அபரிமிதமான அறிவுச் செல்வம் பயன்படும் என்று நம்பி இயற்கை ஆறாம் அறிவு வைத்திருக்க வேண்டும்.”

“ஆமாம்.”

“மனிதன் இந்த ஆறாம் அறிவைப் பயன்படத்தச் செய்வதில்தான் ஆண்டவன் தவறு செய்துவிட்டான். 70 வயது வாழும் ஒருவன் ஒன்னரை வருடம்தான் சிந்திக்கிறான் என்று கணக்கெடுப்பு சொல்கிறது. இதற்கு என்ன அர்த்தம்?”

“சிந்தனையை அதற்காகும் நேரத்துடன் சேர்த்துக்கணக்கிடுவது தவறு. நீ நான்கு மைல் நடக்க வேண்டுமென்றால் இரண்டு மணியாகிறது.  மின்சாரம் நான்கு மைல் கம்பியில் மின்சாரத்தை நொடியில் பாய்ச்சுகிறது. இதற்கு என்ன அர்த்தம்? மின்சாரம் மனிதனைவிடப் பெரியது என்றா அர்த்தம்? அது எப்படி? மின்சாரத்தைக் கண்டுபிடித்ததே மனிதன் தானே!”

“சரி.  சிந்தனைக்கான நேரத்தை விட்டுவிடுவோம்.  சிந்தனையை மட்டும் எடுத்தக்கொள்வோம்.  ஒரு சாதாரண மனிதன் சிந்தனையினால் சாதிப்பது என்ன?”

“……..”

“கால்குலேட்டர், கம்ப்யூட்டர், ஹைட்ரஜன் பாம்ப், சாடெலைட் (நஹற்ங்ப்ப்ண்ற்ங்) என்றெல்லாம் நீ சொல்ல முடியாது.  அதெல்லாம் விஸ்தாரமான உலகில் சிறு மூலையில் சிறு மனிதத் துளிகளின் பிரம்மாண்ட படைப்புகள்.”

“ஒப்புக் கொள்கிறேன்.  அப்படியாயின் ஒரு சாதாரண மனிதனின் அறிவு அவனுடைய தினசரி இயக்கத்திற்கு உதவுகிறது.  அவ்வளவுதான்.”

“எந்த இயக்கம்? சாப்பாடு? தூக்கம்? வயலில் உழுதல்?”

“ஆமாம்.”

“இது எப்படி இழந்த மிருகபலத்தை ஈடுகட்ட முடியும்? ஒரு மிருகம் சாப்பிடுவதில்லையா, இல்லை தூங்குவதில்லையா, இல்லை இரையைத் தேடி அலைந்து திரிவதுதான் இல்லையா?”

“………..”

“இத்தனையையும் பண்ணிவிட்டு மிருகம் தன் சரீர சக்தியையும் இழக்காமல் இருக்கிறது. நாமோ அதே மாதிரியான இயக்கங்களில் ஈடுபடும் சமயம் சக்தியை இழந்து விட்டு நிற்கிறோம்.”

“சரி, அதனால் என்ன?”

“என்னவா? நமக்கு இந்த ஒரு பலவீனம் இயற்கையாய் இருக்கிறது. இதுமாதிரி சந்தர்ப்ப சூழ்நிலைகளில் நாம் ஏற்றுக்கொள்ளும் பலவீனங்கள் எல்லாம் சேர்த்து நம்மைக் கொதிக்க வைக்கின்றன. நாம் நம்வசம் இழக்கிறோம். தவறு செய்கிறோம்.  அதை மறைக்க இன்னொன்று. இப்படியே நாம் மேல் மேலும் பலவீனமாகிக்கொண்டே போகிறோம். இந்த பலவீனம் நம்மை பலவிதத்திலும் பாதிக்கிறது. நாம் அதிகமாகக் கோபப்படுகிறோம் – பயம் கொள்கிறோம். நாம் நம்மைப் பற்றியே கவலைப்பட்டு சாகிறோம்.”

“நங்ப்ச்ண்ள்ட்ய்ங்ள்ள் ஒரு வரம் என்பேன் நான்.  மற்றவர்கள் எல்லோரையும் புறக்கணித்துவிட்டு தன்னைப்பற்றியே கவலைப்பட ஒருவனுக்கு எவ்வளவு தைரியம் வேண்டும்?”

“இது விபரீத விளக்கம். விவாதத்திற்கு மற்றுமே உதவும்.  அவனுடைய மேம்பாட்டுக்கு அது எந்தவிதத்திலும் உதவாது என்பதோடு சுற்றுப்புறத்தில் இருக்கிற அறிந்த தெரிந்தவர்களின் விரோதத்திற்கும் வெறுப்புக்கும் ஆளாகிற காரணத்தால் அது உகந்தது அல்ல.  தவறு செய்துவிட்டு விளக்கம் சொல்லுகிற கோழையைவிட விளக்கிவிட்டு தவறுகிற கொடியவன் ரொம்ப மோசமானவன்.”

“ஒருவன் எப்படி மற்றவர்களுக்காகச் சாப்பிட முடியாதோ தூங்க முடியாதோ அதுமாதிரி கவலைப்படவும் முடியாது.”

“ஒருவன் தனக்காகவே கவலைப்பட்டும் பிரயோஜனமில்லை.  எல்லாம் விதியின்படி நடக்கிறது. நீ எவ்வளவு சுதாரித்துக்கொண்டாலும் அந்தந்த நொடியின் நிமித்தம் நடக்க வேண்டியவை, உனக்கு ஆதரவாகவோ எதிராகவோ நடந்து கொண்டுதான் இருக்கின்றன.    ஒருவன் எப்படி மற்றவர்களுக்காகச் சாப்பிட முடியாதோ அதுமாதிரி தனக்காகவும் சாப்பிடமுடியாது.  முன்னதில் இருக்கிற பூரணத்துவம் பின்னதில் இல்லை என்கிற காரணத்தினால் நான் ஷெல்பிஸ் ஆக இருப்பதை எதிர்க்கிறேன்.”

“எல்லாவற்றிலுமே நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது.  சுய திருப்தியில் நன்மைகள் ஜாஸ்தி.”

“இதில் கெட்டது மட்டுமே உள்ளது.”

“இது ஒரு பலம்.”

“இல்லை. பலவீனம்.”

விவாதம் முறிந்தது! சித்திரக்குளம் தாண்டிவிட்டது மட்டும் காரணம் அல்ல. கசப்பும் எரிச்சலுங்கூட.

அதனால்தானோ என்னவோ “எங்கே போகிறாய்? கோவிலுக்கா? இரு நானும் வர்றேன்” என்று வழியில் பிடித்துக்கொண்ட நண்பன்  “நீ போய்விட்டுவா. நான் காலையிலேயே தரிசித்து விட்டேன்.” என்று எங்கேயோ பார்த்தபடி சொல்லி விட்டு பதிலைக்கூட எதிர்பாராமல் நடந்தான். அவன் நடையில் முதலில் கொஞ்சம் தயக்கம். நான் கூப்பிடுவேனோ என்று.

நான் கூப்பிடவில்லை. மனதிற்குள் சிரித்துக்கொண்டே கோயிலுக்குள் பிரவேசித்தேன். வாயிலில் இருமருங்கும் கூடைப்பூ விற்பவர்கள். முன்னொருநாள் கூடைப்பூ விற்க வந்த ஒருவனின் கூடைத்தட்டு விரைவாய் வந்த சைக்கிள்காரன் ஒருவனால் கீழே தள்ளப்பட்டதும் அந்தச் சிறுவன் ஓலமிட்டதும் மற்ற பூ விற்பனையாளர்கள் அதைக்கண்டு கொள்ளாமல் தங்கள் காரியத்திலேயே கவனமாய் இருந்ததும் நினைவு வந்தது.  இந்தமாதிரி மனிதர்கள்தாம் என் கருத்தை வலுவூட்டுகிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.  காரில் வருகிறவர்கள் கூட ஒரு முழம் பூ வாங்கும்போது நார் இடைவெளி தெரிகிறதாக்கும் என்று நிராகரிக்கிறார்கள். “பையனின் பிழைப்பைக் கெடுத்துட்டியேப்பா… பூவை மண்ணிலே தள்ளி மிதிச்சுட்டியே! இன்னிக்கு அவன் என்ன பண்ணுவான்?” என்று வரிசையாக அமர்ந்திருந்த பூக்காரர்களில் ஒருத்தன் – ஒரே ஒருத்தன் கேட்டிருப்பானா?

மனம் அலைபாய்ந்தது.  ஒரே ஓய்ச்சலாக இருந்தமாதிரி தோன்றியது. கடவுள் வழிபாட்டில் கவனம் செல்லவில்லை.  இன்று இது வெறும் சடங்கு. எள்ளளவும் அர்த்தமில்லாதது. சே, வராமலேயே இருந்திருக்கலாம்….

நவகிரகத்தைச் சுற்றிவிட்டு மூல ஸ்வாமியை தரிசித்து விட்டு பிரகாரத்தை பாதி சுற்றியிருப்பேன்… நுழைவாயிலில் விட்ட செருப்புக்கு டோக்கன் வாங்க மறந்தது ஞாபகம் வந்தது.  ஏற்கனவே அமைதியின்றி உபாதைகளினால் நெளிந்து கொண்டிருந்த மனம் மதுவருந்தியகுரங்கு போல தத்தளித்தது. புதுச் செருப்பு இல்லையென்றாலும் நன்றாக உழைத்த செருப்பு. ஏற்றுமதிச் சரக்கு என்று நண்பன் தள்ளுபடி விலையில் வாங்கித் தந்தது. ஆயிற்று ஒன்பது மாதங்கள் போல் பறந்தோடிவிட்டன. இதுவரை ஒரு தொந்தரவு இல்லை.

இரண்டாவது சுற்றுக்காக மறுபடியும் மூலஸ்தானம் அருகில் வந்தேன். பேசாமல் கும்பிடு போட்டுவிட்டு வெளியே போய் விடுவோமா என்று நினைத்தேன். பெரிதாய்ப் பேசுபவன் சிறு சிறு போராட்டங்களில் மனம் பேதலித்துப் போவது கண்டு நாணினேன்.  கால் என்னையுமறியாமல் இரண்டாம் வலத்திற்கு அழைத்துச் சென்றது. இனி முடியாது என்று சொல்லிக்கொண்டு இரண்டாம் சுற்றையும் ஆயிற்று என்று சொல்லி மூன்றாம் சுற்றையும் முடித்தேன்.

வாயிலில் செருப்பு இல்லை. அதைக் கவனித்துவிட்டு ஏமாற்றத்துடன் படபடத்த கண்கள் காலணிகளை வைக்குமிடத்தில் மரச் சட்டங்களுக்கப்பால் உட்காருபவனின் ஸ்டூலுக்கருகில் வீசியெறியப் பட்டிருப்பதைக் கண்டேன். நிலைகொள்ளாத சந்தோஷம். தேங்காய் பொறுக்கப் போன பையன் வந்ததும் “அந்தச் செருப்பை எடப்பா. இந்தா பத்து பைசா” என்றேன். காசு வாங்கியவன் இன்னொருத்தனின் சதிர் தேங்காய்க்காக மறுபடியும் பாய்ந்துசென்றான். என்னைப் போல இன்னும் சில பெண்கள் அவனிடம் டோக்கனைத் திரும்பக் கொடுத்து செருப்பைப் பெற காத்துக்கிடந்தனர். நான் பொறுமையிழந்து அவன் வந்ததும், “முதல்ல செருப்பை, எடு தம்பி, அவசரம்” என்று அவசரப்படுத்தினேன். தேங்காய் சுவைத்தபடி “துட்டு” என்றான்.  “கொடுத்தாகி விட்டது” என்றேன். அவன் நான் சுட்டிக் காட்டிய செருப்பு ஜதையைப் பார்த்தேன்.

“டோக்கன்?” என்றான்.

“டோக்கன் இல்லை. தரவில்லை.”

“அது எப்படி? இவ்வளவுபேருக்குத் தந்திருக்கேன். உனக்குத் தராம இருப்பேனா?” பெண்கள் அவசரப்படுத்தவும் அவர்கள் ஜதையை எடுத்துக்கொடுத்தான். நான் என் கதையை விளக்க முயன்றேன்.

“அப்பா, அவசரத்தில் டோக்கன் வாங்காம போய்விட்டேன்.  அங்கேதான் விட்டிருந்தேன்.”

“அப்ப இது உங்களுடையது இல்லை. எங்கிட்ட விடற ஜதையைத்தான் நாங்க பார்த்துப்போம்.  ஏய் தேங்காய் எடுக்காதே.  நா சம்பாரிச்சுது. சார், நீங்க எங்க விட்டீங்களோ அங்க போய்ப் பாருங்க!”

எனக்கு பற்றிக்கொண்டு வந்தது.  “ஏம்ப்பா, என் செருப்புன்னு சொல்றேன். என் செருப்பை எனக்குத் தெரியாதா? டோக்கனுக்குத்தான் நான் நின்னேன். நீ கவனிக்கலை. சரி டோக்கன் ஸிஸ்டம் இல்லைபோலிருக்குன்னு போயிட்டேன். சரி பேச்சு எதுக்கு? காசு கொடுத்தாச்சு.  செருப்பை எடு முதல்ல.”

“அது எப்படி சார் எடுப்பாங்க? டோக்கனை எடுங்க தர்றேன்.”

“ஏம்ப்பா. நீ தேங்காய் சில்லுக்குப் போவே, சூடத்தட்டு விற்பே, நடுநடுவே செருப்பையும் பார்த்துப்பே, உனக்காக நாங்க வெயிட் பண்ணி டோக்கன் வாங்க காசும் அழுவணுமா? செருப்பை கவனிக்கிற லட்சணமா இது? என் செருப்புக்கு டோக்கன் இல்லைன்னா உன்னை எவன் இங்க கொண்டாந்து அதை போட்டுக்கச் சொன்னான்?”

“நான் ஒண்ணும் போடலை சார். இது உங்க செருப்பில்லை.  நீங்க போயி கோயில் ஆபீஸ்ல கம்ப்ளெயின்ட் பண்ணிக்குங்க.”

“அப்ப தரமாட்டியா?”

“டோக்கன்.”

சடாரென்று கௌண்டருக்குள் பாய்ந்து செருப்பைப் பற்றினேன்.   தடுத்த அவனை உதறி தூரத் தள்ளினேன். பல்லைக் கடித்தபடி என் செருப்பைக் கையால் தட்ட முற்பட்டான். “யோவ்” என்று கத்தினான்.  “திருடன், செருப்பு திருடன்” என்று ஓலமிட்டான்.

இன்னொரு உதறல்.  செருப்பை கால்களில் மாட்டிக்கொண்டேன்.  “மத்த கோயில்ல அஞ்சு காசு தான் வாங்கறாங்க. உனக்குப் பத்துகாசு.  நீ பார்த்துக்கற லட்சணத்துக்கு” – “விடு விடு”வென்று நடந்தேன்.  “யோவ்” என்று பையன் இன்னொருமுறை பெரிதாகக் கத்தினான்.

அவ்வப்போது எங்கேயோ பார்க்கும் தோரணையில் யாரும் பின் தொடர்கிறார்களா என்று பார்த்துக் கொண்டேன். மனது அடித்துக் கொண்டுதான் இருந்தது.  செய்யக்கூடாதது செய்து விட்டோமோ என்று பயந்தேன்.

யாருமே பின் வரவில்லை. அந்தப் பையனுக்கு என்னைத் தடுத்து நிறுத்தவோ தொடரவோ பலமோ துணையோ இல்லாமல் போய்விட்டது. அவன் சகாக்கள் வழக்கம்போல் தங்கள் காரியங்களிலேயே மூழ்கிப் போய் üநான் எனக்குý என்றே வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள்.

“எல்லாவற்றிலும் நன்மையும் உண்டு! தீமையும் உண்டு” என்று நண்பன் சொன்னது இங்கு எனக்கு நன்கு புரிந்தது.

ஸ்ரீதர்-சாமா/தவறும் தண்டனையும் – விருட்சம் நாளிதழ்