
அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 34
இந்த வருஷம் எங்க ஆபீஸ் மேகசின்ல நான் எழுதினதை போட்டிருக்காங்க.
என. மனைவி சுசிலாவும் அதைப் படிச்சிட்டு,”ஓகோ இத்தனை நடந்திருக்கா? திருட்டுக்கொட்டு ஒண்ணும் தெரியாத பாப்பா மாதிரி நம்ம முதல் இரவுல நடுங்கினீங்க? மேலே வனஜா கதை என்னாச்சு சொல்லுங்கோ தெரிஞ்சிக்கறேன்.”
“இப்ப சொல்லுவே,நானும் லூஸ் மாதிரி எல்லாத்தையும் சொல்லிடுவேன்.,அப்பறம் காலம் காலமா சொல்லிக் காட்டுவே எனக்குத் தெரியாதா?”
“வனஜா தவிர இன்னும் எத்தனை?”
“சும்மா எழுதினதுடி,விச்சுவை வேணா கேளேன் என் ஒழுக்கத்தைப் பத்தி” சொல்லிட்டிருக்கறப்பவே அந்த கடங்காரன் உள்ளே நுழைஞ்சிட்டான்.
“டேய் என்னடா வனஜாவைப் பத்தி எழுதிட்டே போல இருக்கு?பத்மா பத்தியும் எழுதுடா ஸ்வாரஸ்யமா இருக்கும்” அப்பதான் என் மனைவியைப் பாத்தது போல “தங்கச்சி நல்லா இருக்கயா? வேலையா இந்தப் பக்கம் வந்தேன் அப்படியே தலையைக் கட்டிட்டுப் போலாம்னு வரட்டா” நழுவிட்டான் படு பாவி.
சுசிலா என்னைப் பாத்தா,”என்ன சாரே,உங்க பால்ய ஒழுக்கம் சந்தி சிரிக்குது”
“அவனுக்கு பொறாமை,நான் பெரிய ரைட்டரா வந்துடுவேன்னு,அதான் வத்தி வச்சிட்டுப் போறான்.”
“சரி சரி பரவாயில்லை கல்யாணத்துக்கப்பறம்,என் மேல எவ்வளவு பிரியமா இருக்க்கீங்கன்றதுதான் முக்கியம். நேத் கூட மல்லிப்பூவும் பிரேமவிலாஸ் ஹல்வாவும் வாங்கிட்டு வந்தீங்களே,ஆனா ஒண்ணும் நடக்கலை அசதியாத் தூங்கிட்டீங்க.” வெட்கப் புன்னகையுடன் சொன்னா.
“ஆமாம் இல்ல? இன்னிக்கு பூரா நான் ஃப்ரீதான்“
“ஐய்யே ஆளைப் பாரு போய் சுஜாதா, பாலகுமாரன் மாதிரி எழுதி பேர் வாங்குங்க”சொல்லிட்டே கைக்கு எட்டாம நழுவிட்டா.
இப்ப வருவோமா என் முதல் காதல் கதைக்கு. நானும் வனஜாவும் கோவில் பிரகாரத்தை சுத்தி வந்தோம். ஆளில்லாத திருப்பத்துல சட்னு அவ கையை பிடிச்சேன். அவளும் தன் பூந்தளிர் விரல்களால் என் விரல்களை இறுக்கினாள்.கரண்ட் உச்சந்தலைக்கு பாஞ்சது. “கை விடமாட்டீங்களே”மெதுவா கேட்டா. பதில் சொல்ல வாய் திணறியது. அவள் கையை இறுக்கினேன்.
யாரோ பின்னால் வர சத்தம் கேட்டு சட்னு விலகி நடந்தோம். கண.ணாலயே போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போயிட்டா.
கடிதம் எழுதிக் கொடுக்கலாம்னு யோசிச்சு,”கண்ணே வனஜா ஐ லவ் யூ, உன்னை பாத்ததுல இருந்து ஒரு வேலையும் ஓடலை.அடுத்த ஞாயித்துக் கிழமையும் கோவிலுக்கு வருவயா” அன்புடன் xxxxஅவ்வளவுதான் அதை நாலா மடிச்சு ஒரு கவர்ல போட்டு கல்கண்டு புக் உள்ளே வச்சு என் காலேஜ் பேக்ல வச்சிண்டேன்.
அம்மா,”என்னடா நேத்துல இருந்து ஒரே டென்ஷனா இருக்கே,எதாவது பரிட்சையா?”
“உனக்குப் புரியாது , லன்ச் டப்பாவைக் கொடு.”
ஒரே பரபரப்புல புறப்பட்டா ஷூ கூட கால்ல நுழைய மாட்டேங்குது.சைக்கிள் டயர்ல காத்து இல்லை. பரண்ல ஏறி பம்ப்பை எடுத்து ஒரு வழியா காத்தடிச்சா,பரண் மேல ஏறினதுல டிரஸ் பூர ஒட்டடை, சட்டையை மாத்திண்டு ஜம்ப் பண்ணி சைக்கிள்ல ஏறி 10 அடி போகலை செயின் கழண்டுக்கிச்சு என்ன இப்படி இத்தனை தடைகள்? ஒரு நல்லது நடக்க பல தடைகளைத் தாண்டிதான் ஆகணும்னு நானே சமாதானம் பண்ணிக்கிட்டேன்.
வனஜா படிக்கிற மீனாட்சி காலேஜ் கிட்ட வரப்பவே லேட்.எல்லாரும் உள்ளே போயாச்சு.
மனசெல்லாம் கனமாகி என் காலேஜ் போனேன். ஏதோ பேக்ல இருந்து எடுக்கறப்ப கல்கண்டு புக் வெளில விழுந்தது. நாராயணசாமி குனிஞ்சு எடுத்தான் நான் பதறிப் போய் அவன் கைல இருந்து பிடுங்கி பைக்குள்ளே வச்சிட்டேன். அவன் வினோதமா பாத்தான்
சாயந்தரம் காலேஜ் முடிஞ்சவுடனே அவசரமா போனேன் மீனாட்சி காலேஜ் வாசலுக்கு, அவளைக் காணோம். அந்த வாரம் முழுவதும் ஏமாற்றம்தான்.
முத்து ஸ்டோருக்கு எதிர் வீடு நண்பன் விச்சுங்கற விஸ்வநாதன் குடியிருக்கற வீடு.ஞாயித்துக் கிழமை அனுமார் கோவில்லயும் வனஜாவை பாக்க முடியாத ஏக்கத்துல விச்சு வீட்டுக்கு மத்யானம் போனேன். விச்சு,”என்னடா ஒரு மாதிரியா இருக்கே”ன்னான்.
என் ஆப்த நண்பன் அவன்,எலிமென்டரி ஸ்கூல்ல இருந்து ஒண்ணா படிச்சோம். அவன் அக்ரிகல்சுரல் காலேஜ் நான் அமெரிகன் காலேஜ். என் எல்லா விஷயமும் அவனுக்குத் தெரியும். முத்து ஸ்டோர் வனஜாவைப் பத்தி அவனிடம் சொன்னேன்.
“அடப் பாவி எதுத்த ஸ்டோர்ல இருக்கற வனஜாவா? அவ பர்வதத்தோட ஃபிரண்ட் ஆச்சே. கொஞ்சம் மா நிறம்தானே அவ்வளவு ஒண்ணும் அழகில்லையே?”
எனக்கு கோபம் வந்தது. ஆனாலும் இவனால் காரியம் ஆகும் போல இருக்கே கோபத்தை அடக்கிட்டு,” எங்களுக்கு பிடிச்சிருக்கு”ன்னேன்.
“எப்படியோ போ, ஆனா எனக்குத் தெரிஞ்ச வரை வனஜா நல்ல பொண்ணுதான். பெஸ்ட் ஆஃப் லக்”
“ஒரு வாரமா பாக்கலைடா கவலையா இருக்கு.” சொல்றப்பவே “பர்வதம், பர்வதம்”னு கூப்டுட்டே வனஜாவே உள்ளே வந்தா. என்னைப் பாத்து அவளுக்கும் திகைப்பு,தலையை குனிஞ்சிண்டா.
“விச்சு அண்ணா பர்வதம் இல்லையா?”
“உள்ளேதான் இருக்கா போ,என்ன ஒரு வாரமா கண்ணுல படலை ஊருக்கு போயிருந்தயா”
“ஆமாம்ண்ணா, என்னோட மேலூர் மாமா இறந்துட்டாங்க அதுக்குப் போயிருந்தோம்.” சொல்லிட்டே என்னைக் கடைக் கண்ணால் பாத்தா.
“மறந்துட்டேனே இது என் ஃபிரண்ட் சீனு,அரசமர சந்துலதான் இருக்கான்
அழகா கையைக் குவிச்சா.
“சீனு, இது வனஜா, பர்வதத்தோட ஃபிரண்ட் மீனாட்சி காலேஜ்ல படிக்கறா”.
அவ உள்ளே போயிட்டா பர்வதத்தைப் பாக்க.
”இப்ப சந்தோஷமா? தனியா பேசணுமா? இரு ஏற்பாடு பண்றேன் இங்கேயே உக்காரு”
அடுத்த 2 நிமிஷத்துல “தண்ணி கேட்டீங்களாமே”னு தண்ணிச் சொம்போட வந்தது வனஜா. அந்த சொம்பை பக்கத்துல இருந்த ஸ்டூல்ல வச்சிட்டு ஒயிலா மரக் கம்பத்துல சாஞ்சு நின்னா.
“ஒரு வாரமா தவிச்சுப் போயிட்டேன் தெரியுமா”
“இங்க மட்டும் என்னவாம்,திடீர்னு மாமா செத்துப் போயிட்டார், உங்க கிட்ட சொல்ல வழியில்லை, ராத்திரியோட ராத்திரியா ஊருக்குப் போயிட்டோம்.”
“சரி, இன்னிக்கு கோவில்ல சாயந்தரம் பாக்கலாம் பாருவோ அவ அண்ணனோ வந்துடுவாங்க” உள்ளே போயிட்டா.
சாயந்திரம்,”அம்மா ஹனுமார் கோவில் வரை போயிட்டு வரேன்.”
அம்மா, ”என்னடா ஆச்சரியம் வரவர கோவிலுக்கெல்லாம் போறே,ஏதோ நல்ல ஸ்நேகிதம் இப்பதான் கிடைச்சிருக்கு போல”
“ஆமாம்மா ரொம்ப நல்ல ஸ்நேகிதம், எப்பவாவது உனக்கு தெரிஞ்சுதானே ஆகணும்”
“என்னவோப்பா வரவர பூடகமாவே பேசறே விச்சுப் பயலைக் கேக்கறேன் என்னாச்சு என் பையனுக்குனு.”
செருப்பை மாட்டிண்டு கோவிலுக்குப் போனேன். எனக்கு முன்னாலேயே வனஜா அங்கே உற்சவர் இருக்கற இடத்தை ஒட்டி பெரிய திண்ணை மாதிரி ஒரு இடம். அதுல உக்காந்திருந்தா. நானும் போய் பக்கத்துல உக்காந்தேன்.
வனஜாவே பேச்சை ஆரம்பிச்சா,”என் நிலைமையை தெரிஞ்சிக்கோ, நாங்க லோயர் மிடில் கிளாஸ். அப்பா கார்பொரேஷன் ஆபீஸ்ல குமாஸ்தா. நாங்க 4 குழந்தைங்க,
அப்பாவோட மாச வருமானம் 15 நாள் தாங்காது. அம்மா அப்பளம் இட்டு ஏதோ இழுத்துப் பிடிக்கறா. அக்கா இப்ப கல்யாண வயசுல, மேலூர் அத்தை பையனுக்குத்தான் கொடுக்கற ஐடியா. கோவில்ல பண்ணினாலும் பத்தாயிரம் ரூபா வேணும். இந்த நிலைல நான் உன் கூட இப்படி,அதுவுமில்லாம நாங்க கன்னட பிராமணாள், நீ தமிழ் பிராமின் எப்படி முடியுமோ பயமா இருக்கு.ஏமாத்திட மாட்டயே?” கண் கலங்க முகத்தைப் பாத்தா.
அவ கையை இறுகப் பிடிச்சிண்டேன், கீழே பிரகாரத்தைச் சுற்றிண்டிருந்த தாத்தா கண்ணாடியை இறக்கி எங்களைப் பார்த்தார். பின்னால வந்த ஒரு மாமி கிட்ட, “கலி முத்திடுத்து கோவில்னு கூட பாக்கறதில்லை, பசங்க களிசடையா போயிடுத்து,இதெல்லாம் பாக்கணும்னு நம்ம தலையெழுத்து.” பலமாவே பேசிண்டு நடந்தார்.
“என் படிப்பு இப்ப முடிஞ்சிடும், பேங்க் ஆபீசர் எக்சாம் எழுதியிருக்கேன். வேலை கிடைச்சிடும்,அப்பறம் நானே செலவு பண்ணி உன்னை கல்யாணம் பண்ணிப்பேன். உன் அக்கா கல்யாணம் அதுக்குள்ளே ஆயிடும்தானே.”
“ம், எல்லாம் நல்லா நடந்தா சந்தோஷம் , உன்னை இனிமே என்னால மறக்க முடியாது”
அடுத்து வந்த ஆறு மாதங்கள் எங்கள் வாழ்வின் மறக்க முடியாத நாட்கள.. மதுரைல நாங்க சேந்து போகாத இடங்களே இல்லை. காந்தி மியூசியம், நாயக்கர் மஹால், மாரியம்மன் தெப்பக் குளம், திருப்பரங்குன்றம், அழகர் மலை எல்லா இடமும் ஜோடியா ஆனா யாருக்கும் சந்தேகம் வராம சுத்தினோம்.சின்ன சின்ன வரம்பு மீராத சில்மிஷங்கள்.
வனஜாவோட அக்கா கல்யாணமும் சீக்கிரம் கூடி வரும் போல தெரிஞ்சது.
அன்னிக்கு விச்சு வீட்டுக்கு போனப்ப அவனோட அம்மா கூட பேசிண்டிருந்தது வனஜாவோட பேரன்ட்ஸ். விச்சு என் காதுல முணுமுணுத்தான். வனஜாவோட அக்கா சரோஜா கல்யாண, நிச்சயதார்த்தத்துக்கு கூப்பிட வந்திருக்கானு.
வனஜா கன்ஃபர்ம் பண்ணினா சந்தோஷமா. பேருக்கு நிச்சயதார்த்தம், வெள்ளிக்கிழமையே கல்யாணம். திருப்பரங்குன்றத்துல தேவாங்கர் சத்திரம் 4 மணி நேரத்துக்கு இலவசமா கிடைச்சிருக்காம், உறவுலயே சமையல்காரர்
இருக்கார். சல்லிசா பண்ணிக் கொடுக்க ஒத்துண்டிருக்கார்.
விச்சு ஃபேமிலியோட நானும் கல்யாணத்துக்குப் போனேன். நாங்க போறப்ப ஒரே பரபரப்பு கசமுச பேச்சுக்கள் கல்யாணப் பொண்ணு ஓடிப் போயிடுத்தாமே. வனஜாவோட அம்மா அழுது மூக்கை சிந்திண்டு உக்காந்திருக்கா. வனஜாவோட அப்பா இடிந்து போய் உக்காந்துட்டார். மேலூர் அத்தையாம்(மாப்பிள்ளையோட அம்மா) அவங்கதான் அவரை ஆசுவாசப் படுத்திண்டிருந்தா, ”அது அசத்து போனாப் போறது, சின்னவளை மணைல உக்கார வை.முகூர்த்த நாளை வீணாக்காதே”
அந்தப் பக்கம் நின்றிருந்த நானும் இதைக் கேட்டேன். வனஜாவை கட்டாயப்படுத்தி உக்கார வச்சிடுவாங்கனு தெரிஞ்சது. வெளியே வந்தேன், 5ம் நம்பர் பஸ் பிடிச்சு வீடு வந்து விழுந்தவன்தான்
நாலு நாள் வெளியே வரலை. எங்க கைகளை மீறிய விஷயங்கள் யார் என்ன செய்ய முடியும் என் மேல என்ன தப்பு. .
கனரா பேங்க்ல வேலை கிடைச்சது, விருத்தாசலத்துல போஸ்டிங். “போங்க சார் நமக்குனு ஒரு சுசீலா எங்கயோ பிறந்திருக்கா. “
ஆசிரியர் குறிப்பு:
வயது 74. ஓய்வு பெற்ற இன்ஜினியர்
2021ல எழுத ஆரம்பித்து இப்ப 350 க்கும் மேல் சிறு கதைகள், குறு நாவல்கள் பல, நாவல் என எழுத்துப் பணி.
மலர்வனம் மின் இதழ் சிறந்த சிறு கதை எழுத்தாளர் விருது. “ஜானு”, “ ரத்னாவாகிய நான்” இரண்டு புஸ்தகங்களை வெளியிட்டனர்.
“ஜானு” என்ற சிறுகதை தொகுப்பு பெங்களூரு பாவாணர் பாட்டரங்க புலனக் குழுவின் உலக வினைத்திறன்(சாதனை) நூல்களில் ஒன்றாகும்.
யூனிக் உலக சாதனை சான்றிதழ் பெற்ற நூல்.
என்னுடைய சிறு கதைகளில் மனதை வருடும் நகைச்சுவை, காதல் உணர்வு, படிக்கத் தூண்டும் நடைக்கு பஞ்சமிருக்காது என்பது நிச்சயம்.
இதுவரை 14 புத்தகங்கள் வெளி வந்திருக்கின்றன.

Always rock…
மிக்க நன்றி
Arumai !👏🙏
மிக்க நன்றி