
மொழியின் அதிகபட்ச சாத்தியமே
மௌனத்தில் குதிப்பது தானே
பேசி பேசியே கெட்டவர்கள் தான் அதிகம்
அல்லது கெடுத்தவர்கள்
பொதுவாக பிசாசு வளர்ப்பது
அவ்வளவு ஆபத்தானது
குரங்கு குட்டி போல் தாவி வந்து
நம் மீது ஒட்டிக் கொள்ளும்
தோளில் சுமந்து கொண்டு
திரிபவர்களை கேளுங்கள்
ஒவ்வொருவனும் பிறவிக்
கவிஞனாக இருப்பான்
செய்யுள் பாட வந்து விட்டால்
சிவனார்களும்
நக்கீரர்களிடமிருந்து
தப்ப முடியாது தெரிந்தது தான்
வள் வள்ளென்று விழும்
ஒரு நாயோடு சரி சமதையாக உரையாடுபவனுக்கு
குழந்தைகள் போல தலையாட்டி அழைக்கும்
ஒரு பாதாம் மர இலையோடு
ஒரு வார்த்தை பேசவும் பிடிக்காது
தொடங்கிய இடத்தில் முடிவதற்கு தானே
எல்லாமே தொடங்குவது
இனி பேசுவதற்கு என்ன இருகிறது
அந்த மொழியை கொஞ்சம்
எழுத்துப் பக்கம் திருப்பி விடு
கிணற்றுத் தவளை குளத்திலாவது
குதிக்கட்டும்.
வே.கல்யாண்குமார்./நான்கு நாய்க்குட்டிகள்.! – விருட்சம் நாளிதழ்
