
அரசியல் செய்வதிலும் சரி, டேமேஜ் கண்ட்ரோல் செய்வதிலும் சரி திமுகவிடம் இருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும். அஜீத்குமார் கொலை திமுக ஆட்சிக்கு மிகப்பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்தும் நிலை இருந்தது. திமுக ஈகோ சிஸ்டம் எடுத்த துரித நடவடிக்கைகள் அந்த நிலையை எப்படி மாற்றியிருக்கிறது என்று பாருங்கள்.
ஞாயிறன்று செய்தி பரபரப்பானவுடன் காவல்துறை அதிகாரிகளுடன் மீட்டிங் நடத்தி, அதிகாரிகளை கண்டிக்கிறார் முதல்வர். அதாவது இந்த சம்பவத்திற்கும் முதல்வருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தகவல் கிடைத்ததும் முதல்வர் நடவடிக்கை எடுக்கிறார் என்ற செய்தியை மக்களிடம் கொண்டு செல்கிறார்கள்.
அதே நாளில் அஜீத்குமார் வலிப்பு வந்து இறந்தார் என்ற செய்தி கசிய விடப்படுகிறது. ஆனால் அது செல்ப் எடுக்கவில்லை என்பதால் அப்படியே ஓரம்ங்கட்டப்படுகிறது.
நேற்று முன் தினமே தனிப்படை காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கைது செய்யப்படுகின்றனர்.
நேற்று முதலில் டிஸ்பி, பிறகு எஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.
ஜூலை 1 முதல் ஓரணியில் தமிழ்நாடு எனும் பிரச்சாரத்தை துவங்க இருந்தது திமுக. ஆனால் அஜீத் கொலையில் அப்படியே அமுங்கி விட்டது.
ஆனாலும் வழக்கத்துக்கு மாறாக மீடியாவைச் சந்தித்த முதல்வரிடம் திருபுவனம் சம்பவம் தொடர்பாக கேள்வி கேட்கப்படுகிறது.
நீங்கள் எவ்வளவு நல்லாட்சி நடத்தினாலும், எவ்வளவோ நலத்திட்டங்களை கொண்டு வந்தாலும், சில அதிகாரிகளின் தவறுகளால் அவை அனைத்து வீணாகிறதே என்று ஒரு பத்திரிகையாளர் செட்டிங் கேள்வியை எடுத்து வைத்தார்.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் பொழுதே வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றினார் ஸ்டாலின்.
ஆனாலும் நீதிபதிகளின் கேள்விகளை தமிழக அரசால் எதிர்கொள்ள முடியவில்லை.
கடந்த 2 நாட்களாக தமிழக எதிர்கட்சிகள் எந்த போராட்டத்தையோ, ஆர்பாட்டத்தையோ செய்யவில்லை. ஆர்பாட்டம் செய்து எதிர்கட்சிகள் வைக்கும் கோரிக்கைகள் முன்பாகவே நிறைவேற்றப்பட்டுவிட்டன.
குறைந்தபட்சம் பாதிக்கப்பட்டவர் குடும்பத்தை சந்தித்து அவர்களின் கோபத்தை அரசுக்கு எதிராக திருப்பும் வேலையையாவது எதிர்கட்சிகள் செய்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுடன் எதிர்கட்சி தலைவர்கள் சேர்ந்தால் அங்கே ஆளும்கட்சி நுழைவது கடினம். அரசு அதிகாரிகள் நுழைவதும் கடினம். பிரச்சினையை தீர்க்கவிடாமல், நெருப்பை அணையவிடாமல் அரசியல் செய்யலாம்.
ஆனால் இங்கேயும் எதிர்கட்சிகள் சொதப்பியது. பாதிக்கப்பட்டவர்களை எட்டிக்கூட பார்க்கவில்லை. ஹெச் ராஜா மட்டும் தான் அஜீத் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறி, மீடியாவை சந்தித்தார். ஆனால் இந்த செய்தி எந்தளவு மக்களை சென்று சேர்ந்திருக்கும் என்பது நம அனைவருக்குமே தெரியும்.
எதிர்கட்சிகள் ஸ்கோர் செய்யத் தவறிய இடத்தில் திமுக நுழைந்தது. பாதிக்கப்பட்டவர் குடும்பத்துடன் அமைச்சர் பெரிய கருப்பன் சந்தித்தார். முதல்வருக்கு போன் செய்து பாதிக்கப்பட்டவர்களுடன் பேச வைத்தார். அனைத்தும் லைவ் ரிலே. பக்காவாக ப்ளான் செய்யப்பட்டிருக்கிறது. நிவாரணம், அரசு வேலை என பாதிக்கபட்டவர்களின் குரலையும் மியூட் செய்து விட்டார்கள்.
நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு எதிர்கட்சிகள் போராட்டத்தில் இறங்கினால், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றவேண்டும் என்பதே அவர்களின் ஒரே கோரிக்கையாக இருக்கும். அதை மட்டும் விட்டுவைப்பானே என்று அதையும் முதல்வர் ஸ்டாலின் செய்து முடித்துவிட்டார்.
இந்த ஆட்சிக்கு மிகப்பெரிய சிக்கலாக, பிரச்சினையாக இருக்க வேண்டிய ஒரு சம்பவத்தில் தப்பித்ததுடன் அல்லாமல், ஸ்கோர் செய்திருக்கிறது திமுக அரசு.
லட்டு மாதிரி கையில் கிடைத்த ஒரு பிரச்சினையை மீண்டும் ஒருமுறை தவற விட்டிருக்கின்றன எதிர்கட்சிகள்.
இதற்கு மேல் எதிர்கட்சிகளின் எந்தப் பிரச்சாரமும் மக்களிடம் எடுபடாது.
பிரச்சினை என்றவுடன் துரித நடவடிக்கை எடுத்துவிட்டார் முதல்வர் என்று திமுக, கூட்டணிக் கட்சிகள், மீடியா அனைவரும் ஒரே குரலில் பாடுவார்கள்.
2026 தேர்தலில் வெற்றி பெற திமுக எவ்வளவு முனைப்புடன் இருக்கிறது என்பதை இனியாவது எதிர்கட்சிகள் புரிந்து கொண்டால் சரி.
அரசியல் செய்வது எப்படி என்பதை திமுகவை பார்த்தாவது கற்றுக் கொள்ளலாம். முக்கியமாக பெரிய கட்சி என்று சொல்லிக் கொள்ளும் அதிமுக அரசியல் செய்வதையே மறந்து விட்டது..
திமுகவை சமாளிக்க முடியாமல் எதிர்கட்சிகள் திணறுகின்றன என்பது தான் கசப்பான உண்மை..
