போடோ சிறுகதை

சனில் குமார் பிரம்மா/ஆர்கி

ஆங்கிலத்தில் ஜெய்காந்த சர்மா

தமிழில் இராம. குருநாதன்

தன்னைப் பற்றித் தானே நினைத்துப் பார்த்துக்கொள்வதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. கண்ணாடியைப் பார்க்கிறபோது- அடிக்கடி தலை சீவிக்கிறபோது- இளைஞர்கள்கிட்ட இப்படி ஒரு பழக்கம். பங்கரபா என்ற இடத்தைச் சேர்ந்த இளவயசு பொண்ணு ஆர்கி. அவகிட்டே இந்தப் பழக்கமெல்லாம் கிடையாது. ஏன்னா அவ பார்க்க அழகா இருக்கமாட்டா. நீட்டிக்கிட்டிருக்கிற பற்கள், கூன் விழுந்த முதுகு, வீங்கியிருக்கிற தொண்டை, மண்புழு தலையைப் போல நெளிஞ்சுப் போயிருக்கிற விரல்கள். சின்ன வயசிலேயிருந்து வயல்லே நாத்து நடுவது அவள் வேலை. அதனால், அவள் உடம்பெல்லாம் சிராய்த்துப் போய் அவளை வயசானதாகக் காட்டும். அப்படி ஒரு தோற்றம். கல்யாண வயசைத் தாண்டி ரொம்ப காலமாச்சு. சின்ன வயசா இருக்கிறப்பவே அவளுடைய அப்பா அம்மா அவளது கல்யாணத்துக்கான ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. அவளைப் பார்த்தால் இப்போதும் கூட, எல்லோருக்குமே ஒரு கேலிச் சிரிப்புத்தான் வரும்!
இலையுதிர் காலம்! இந்த வருஷம். தௌராகுரியிலே இருக்கிற பசிராம் மகாஜன் வீட்டில், பயிர் பிடுங்கி நடுகிற கூலி வேலைக்கு ஒத்துக்கொண்டாள் ஆர்கி. அந்த வேலையை ஏற்றுக்கொள்வதற்கு, மகாஜனிடமிருந்து தனக்குத் தேவைப்படுகின்ற துணிமணிகளைக் கூலியாக வாங்கிக்கொண்டாள். வேறு எதுவும் ஆர்கி கேட்கவில்லை!
அவள் அண்ணன் தோப்ரா, ஒரு குடிகாரன், பல வருஷத்துக்கு முன்பு மகாஜனிடமிருந்து ஐந்து மா நெல்லு வாங்கிகிட்டான். பாவ ஐன்மமான ஆர்கி அவ அம்மா, அணிந்திருந்த ‘டாக்கானா’வைத் தான் அணிந்துகொண்டு, பசிராம் வீட்டுக்கு வேலை செய்யப்போனாள். , அந்த உடையில், அவளைப் பார்த்துக் கிராமத்திலே எல்லோரும் சிரிச்சாங்க. ஆண்டவன்தான் இப்படி அவளுக்கு அழகில்லாத தோற்றத்தைக் கொடுத்திருக்கான். இதுபோதாதுன்னு அவளுக்கு மூன்று நான்கு கெட்ட பழக்கங்கள் வேறு! எப்போதாவது புகையிலையைப் பிடியாகச் சுருட்டிக் குடிப்பாள்; படுக்கையிலே சிறுநீர் கழிக்காமல் இருக்கமாட்டாள். மீனையோ, மாமிசத்தையோ சமைக்கும்போது அவற்றை ருசி பார்க்காமல் விட மாட்டாள். அவளைவிட்டு நீங்காத
பழக்கங்கள் இவை.
கொஞ்ச நாளைக்கு முன்பு, அவ பன்சிராம் மகாஜன் வீட்டில் கூலி வேலை செய்வதற்காகத் தங்கும்படி ஆனது. மகஜனோட மனைவி லய்ஸ்ரீ அவளை அடுப்பங்கரையிலே தங்க வைத்தாள், படுக்கப்போனாள். அந்த வீட்டில் கிராமத்திலே இருக்கிற மத்த பெண்களும் படுத்து உறங்கினார்கள். ஆர்கி படுத்ததுமே உறங்கிப் போனாள்.
விடியல் நேரம்! அவள் கோடைக்காலத்தைப் பற்றிக் கனவு கண்டு கொண்டிருந்தாள். எங்கும் ஒரே கனமழை. கிராமத்து வயல்களெல்லாம் தண்ணீரில் மூழ்கியிருந்தன. அதையே நினைச்சுக்கிட்டு இருந்த ஆர்கி, படுக்கையிலே மூத்திரம் போனாள். படுக்கை ரொம்ப நனைஞ்சு இருந்தது.
“அப்பாவின் மனைவி அப்படிப் போயிருக்கலாம். படுக்கை முழுசும் நனைஞ்சுபோச்சே!”, “என்னோட ஸ்கேர்ட்டும் தொப்பையா நனைஞ் சுட்டுதே” மற்ற பெண்கள் எல்லோரும் ஆர்கியை வார்த்தைகளால் கரிச்சுக்கொட்டினாங்க.
ஆர்கி சாவதானமாகத் தன்னிடம் இருந்த துண்டு பீடியைப் பத்த வச்சு இழுத்துக்கிட்டிருந்தா. அவளைக் கேலி பேசிய, மற்றப் பெண்கள் படுக்கையில் அமர்ந்திருந்தார்கள். பக்கத்திலே மகாஜன் படுத்துக் கிடந்ததால் அவர்கள் அவளை உரத்துக் கேலி பேசவில்லை! பணி செய்யும் ஆட்கள் அடுத்த அறையில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். ஆர்கி, வெட்கத்தை மறைத்துக்கொண்டு, நனைந்திருந்த துணிமணியை
எடுத்துச் சுருட்டி ஒரு மூலையில் வைத்தாள்.
பொழுது விடிந்தது. அடுப்பங்கரைக்கு ஒருவரும் நுழையவில்லை. வயசுக்கு வந்துவிட்ட பெண்களால் வீடு முழுக்க ஒரே முடை நாற்றம். சகிக்க முடியவில்லை. மகஜனோட மனைவி லய்ஸ்ரீ அவ்வப்போது அந்தப் பெண்களைப் பார்த்துத் திட்டினாள். ஆர்கி பீடியைப் புகைத்துக் கொண்டே வெளிப்புறத்தைப் பெருக்கிக் கொண்டு இருந்தாள்.
கொஞ்ச நேரத்துக்குப் பிறகு, லய்ஸ்ரீ ஆர்கியை எவ்வளவு திட்ட முடியுமோ அந்த அளவிற்குத் திட்டித் தீர்த்து விட்டு, மூலையில் இருந்த ஆர்கியோட சின்ன மூட்டையை எடுத்து வெளியே வீசியெறிந் தாள். அதுக்கப்புறம் அவள் கோழிகள் இருக்கும் அறையில் தங்கும்படி ஆனது.
அந்தக் கிராமத்து மக்கள் அவளைப் பார்த்து, ‘மூத்திரம் போறவன்னு சொல்ல ஆரம்பிச்சாங்க. அவளைத் தாண்டிப்போகும் பணியாளர்கள் கூட அவளைக் கேலி செய்யாமல் போறதில்லை. ஆர்கி, ஒண்ணுமே சொல்லாம, தோளை மட்டும் உயர்த்திக்கொள்வாள்.
ஒரு நாள் நிலைமை மோசமாப் போச்சு. ரொம்ப நாளைக்குப் பிறகு, பசிராமோட பள்ளிக்கூட நண்பர்கள் நாலைஞ்சு பேர் அவரோட வீட்டுக்கு விருந்தாளியா வந்தாங்க. மகாஜன் சொல்லியபடி, லய்ஸ்ரீ கோழிக்கறி செய்ய ஆயத்தமானாள். அதன் ஒரு பகுதியைப் பொரித் தாள். மற்றொரு பகுதியை நேபாளிக் கீரையோடு சேர்த்துச் சமைத்து வைத்தாள். விருந்தாளிகள், தேநீரும் சிற்றுண்டியும் சாப்பிட்டு விட்டு வெளியே சிறிது தூரம் நடக்கச் சென்றனர். அவர்கள் திரும்பி வருவதற்குள், தட்டுகளைத் தயார் செய்ய நினைத்த லய்ஸ்ரீ, ஆர்கியைக் கூப்பிட்டு அவற்றைத் தயாராக வைக்கச் சொல்லிவிட்டு விருந்தாளிகள் திரும்பிக் கொண்டிருக்கிறார்களா என்று பார்க்க வாசல் பக்கம் சென்றாள். ஆர்கிக்கு இத்தருணத்தில் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த வீட்டின் பணியாளான புகாபாவிற்காக ஒரு தட்டு வைத்தாள். பாத்திரம் நிறைய பொரித்த கோழிக்கறி இருந்தது. புகாபாவின் தட்டில் அதிகமான கோழிக்கறியை வைத்தது மட்டுமல்லாமல், கீரை கலந்து வதக்கிய கறியையும் வைத்தாள். அவ்வாறு தட்டு நிறைய வைத்ததற்கு புகாபா அவ்வப்போது அவளிடம் நகைச்சுவையோடு பேசியதுகூடக் காரணமாக இருக்கவேண்டும். அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே அவள் ரொம்ப மகிழ்ச்சி அடைந்திருந்தாள். தன் பங்கிற்கு மிகுதியாகவே சாப்பிட்டு விட்டதாகவே அவனுக்குப்பட்டது. இதற்கு முன் அவன் அப்படி அதிகப்படியாகக் கோழிக்கறியைச் சாப்பிட்டதில்லை. சாப்பிட்டு முடிக்க மிகவும் சிரமப்பட்டான். புகாபாவின் தட்டில் அதிகமான கோழிக்கறியை வைத்தது ஒரு தீர்மானத்தோடுதான். அவள் கறிவைக்கப் பட்டிருந்த பாத்திரத்தின் பக்கத்தின் அருகில் அமர்ந்து கொண்டு மூன்று கறித்துண்டுகளை மட்டும் வைத்துவிட்டு மற்ற அனைத்தையும் காலி செய்திருந்தாள், சாப்பிட்டுவிட்டு மீன் பிடிக்க அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். இந்த நிலையில் விருந்தாளிகளை எப்படி எதிர்கொள்வது?
லய்ஸ்ரீ வீட்டுக்குள் வந்தாள். விருந்தாளிகள் அவளைப் பிள் தொடர்ந்தனர். அவர்களை விருந்து பரிமாறும் அறையில் உட்காரச் சொல்லிவிட்டு, தட்டுகளை எடுத்து வருவதற்கு அடுப்படிக்குச் சென்றாள். பாத்திரத்தைத் திறந்து பார்த்தாள். அதில் மூன்று கோழிக்கறித் துண்டுகளே பாத்திரத்தின் அடியில் இருந்தன. கீரையோடு சேர்த்துப் பொரித்த பாத்திரத்தைப் பார்த்தாள். அதிலும் இரண்டு பாத்திரங்கள் மட்டுமே நிரம்ப இருந்தன. மற்றவை காலியாகியிருந்தன. லய்ஸ்ரீக்கு ரொம்ப அவமரியாதையாகப் போய்விட்டது. அதனை வெளிக் காட்டிக் கொள்ளாமல், காலையில் பால்காரன் கொடுத்துவிட்டுப்போன பால் இருந்தது. அதைக்கொண்டு விருந்தாளியைச் சமாளித்தாள். அவர்களுக்கு உலர்ந்த மிளகாய்களை ‘சாலடாகச் செய்து பரிமாறினாள்.
“இது சரியில்லைதான். என்ன செய்யறது? மீனும், இறைச்சியும் போதலை, மிகச் சாதாரணமாதான் வைச்சிருக்கேன். சாப்பிடுங்க” இதனைச் சொல்லிவிட்டு, அடுப்படிக்குச் சென்றாள் லய்ஸ்ரீ.
“இது போதும்!” என்று சொல்லிவிட்டு அவர்கள் சாப்பிடத் தொடங்கினர். கொஞ்ச அளவுதான் அவர்களால் சாப்பிடமுடிந்தது. சர்க்கரை கலந்த பால் அருந்தியதால், அவர்களுக்கு மிளகாய் காரத்தின் உறைப்பு தணிந்திருந்தது. வெட்கம் தலைகாட்ட எரிச்சலோடு இருந்த மகாஜனுக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை.
“விருந்தாளிங்க போகட்டும். நான் லய்ஸ்ரீயோட அப்பா கல்யாணத்தைச் சொல்லிக் காண்பிக்கணும்’ மனத்திற்குள் இப்படிச் சொல்லி விட்டு அமைதியோடு இருந்தார். விருந்தாளிகள் இன்னும் சாப்பிட்டு முடிக்க வில்லை. அவர்களுக்கு ஒன்று நினைவு வந்தது. ‘சில மணி நேரத்துக்கு முன்புதானே கோழி இறைச்சி அரிந்து வைத்ததைப் பாத்தோமே அதற்குள் என்னாச்சு?..’
விருந்து முடிஞ்சதும் அவர்கள் பிரிந்து சென்றார்கள். பசிராம் உடனே எழுந்தார். கைப்பிடி உடைந்து போயிருந்த மரவெட்டுக் கத்தியால் மனைவியை அடித்தார். ‘விருந்தாளிக எப்ப வந்தாலும்
உன்னால் எப்போதுமே எனக்கு இப்படி அவமரியாதைதான்: பணியாள் புலாபா உடனே திரும்பாத வரையில் அவன் பிழைத்தான். இல்லேன்னா, அவனுக்கு பசிராம் பலத்த அடி கொடுக்கிருக்கக்கூடும்.
புகாபா சொன்னான். ‘இது ஆர்கியோட வேலை. நான் கூட எனக்கு வச்சதைச் சரியா சாப்பிட்டு முடிக்கலே!’ உண்மை அறிந்த பசிராம். அநீதி இழைத்துவிட்டதாகத் தன்னைத் தானே நொந்து கொண்டார். தலையைக் குனிந்து கொண்டு அமைதியாக இருந்தார்.லய்ஸ்ரீ படுக்கையில் கிடந்து அழுது புலம்பினாள்.
சூரியன் மறையும் நேரம். ஆர்கி மகாஜன் வீடு நோக்கி விரைந்துகொண்டிருந்தாள். வழியில் புகாபா, அவளைப் பார்த்து,” மீன் பிடிக்கப் போனீயே! புடிச்சுட்டு வந்திட்டியா?”
ஆர்கி உதட்டில் புன்னகையை வரவழைத்துக்கொண்டு சொன்னாள். *தூண்டில் கிடைக்கலே. ஆனா, கூடை நிறைய நத்தை மட்டும்தான் கிடைச்சுது.” அவளுக்கு மீன் பிடிக்க சாமர்த்தியம் போதாது. ஆனால், தூண்டிலைக் குறைசொன்னாள். வீட்டு வேலை செய்வதற்குச் சலிப்புக் கொள்வாள் அவள். மீன் பிடிப்பதிலும் கூட அவள் அப்படிதான். மற்றப் பெண்கள் எல்லோரும் கூடை வழிய வழிய மீன்களை நிரப்ப, அவள் மட்டும் கூடை நிறைய நத்தையை நிரப்பியிருந்தாள். மகாஜன் வீட்டை அடைந்த பிறகு, அவள் புகையிலையைச் சுருட்டிப் பீடியாக்கிப் புகைக்கத் தொடங்கினாள். அது ரயில் புகைபோல இருந்தது. அப்போது தான் அவள் தன் களைப்பு நீங்குவதாக உணர்ந்தாள்.
லய்ஸ்ரீ ஆர்கியைப் பார்த்து நேரடியாகக் கேட்டாள். “மத்தியானம் சாப்பிட வச்சிருந்த கோழிக்கறி எப்படி குறைஞ்சுபோச்சு?’
“புகாபாவுக்குக் கொடுத்தேன்” பதில் சொன்னாள் ஆர்கி.
“எல்லாத்தையுமா புகாவுக்கு வச்சே?’
“நானும் சாப்பிடத்தான்”
பசிராம் வராண்டாவில், ஒரு பக்கமாகச் சாய்ந்துகொண்டு அவர்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டிருந்தார். லய்ஸ்ரீயை அடிச்சது தப்பா போச்சு. நான் தப்பு செஞ்சிட்டேன். ஆர்கியைத் திட்டவோ, அடிக்கவோ முடியாது. அவ தப்பேதான் செஞ்சுகிட்டு இருக்கா. பல குடும்பங்களின் சகோதரியாக இருந்து உதவி செஞ்சுகிட்டு இருக்கா- அவளை வேலைய விட்டு விரட்டிட்டா, அவள்
அப்பன் கிட்டேயிருந்து வாங்கிய கடனுக்கு ஈடு செய்ய முடியாது’ இவ்வாறு தனக்குத்தானே சொல்லிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தார்.
வறட்சிப் பருவம் கழிந்தது. புதிய வைசாகிக்கோடை அது. புகாபா, மகாஜன் வீட்டிலிருந்து புறப்படவேண்டிய தருணம். ஆர்கியும் ஒப்பந்தம் முடிந்து புறப்பட அதுதான் தருணம். பசிராம் புதிதாக வேறு யாரையும் பணிக்கு அமர்த்தவில்லை. பசிராம் நினைத்துப் பார்த்தார்’ எப்படிப்பட்ட நபர்களைப் புத்தாண்டிலே புதுசா பணிக்கு வைத்துக்கொள்வது?” அவ்வாறு நினைத்ததுமே அவருக்குத் திடீரென்று ஆர்கிதான் நினைவுக்கு வந்தாள். ஆர்கி வேறொரு எண்ணத்தில் இருந்தாள். மகாஜன் வீட்டிலிருந்து வெளியேறியதுமே, புகாபாவிடம் தான் கொண்டிருக்கும் காதலை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தாள். நாளெல்லாம் அவன் சொன்ன நகைச்சுவையான வார்த்தைகளை எண்ணிப் பார்த்துக்கொள்வாள். ‘அன்னிக்கு அவன் தட்டிலே வச்ச கோழிக்கறி அவன் மனசை நிறைச்சிருக்கும். இப்ப அவன் தன்னைக் காதலிப்பான். அவன் ஏன் சும்மா சும்மா என்னெ பத்தி நகைச்சுவையா பேசணும்?” அவள் மனத்தில் இந்த எண்ணம் உதித்தது. அவளது மென்மையான மனம் உடைந்தது. ஆர்கிக்கு அவனோடு பேசுவதற்கு நேரம் கிடைக்கவில்லை. அதனால், வீட்டை வி ட்டு வெளியேறப்போகும்போது, அவனிடம் பேசினாள். “அண்ணாச்சி இந்த வருஷம் வேற எந்த வீட்டுக்கும் போய் வேலை செய்யற எண்ணம் உண்டா?’
“இல்லே”
“உங்க அண்ணி கல்யாணத்துக்குத் தேதி வச்சாச்சா?”
“எப்பவோ வச்சாச்சே, இந்த வருஷமே வச்சாச்சு” ஆமா, உங்களுக்கு?. புகாபா கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல ஆர்கியால் முடியவில்லை. அது அவளை என்னவோ செய்தது. பெருமூச்சு விட்டபடி, அவள் பதில் சொன்னாள். “நான் நாலு எழுத்துப் படிக்காதவ, படிப்பறிவு இல்லாதவ என்னை யாரு ஏத்துக்கப்போறா? நான் யாரெ நினைச்சு நம்பிக்கை யோடு இருந்தேனோ அவரே கைவிட்டுட்டார்.” ஒருவாறு திணறியபடி இவ்வாறு சொல்லிவிட்டு அவள் மெல்ல நடந்தாள்.
தன் கொழுந்தியாளுக்கு இந்த ஆண்டு திருமணம் என்று சொன்ன புகாபாவின் சொற்கள் ஆர்கியின் இதயத்தை வேல் கொண்டு தாக்குவது போலிருந்தது. கனத்த இதயத்தோடு இருந்த அவள், அவளாகவே இல்லை.
கோழிப் பண்ணைக்குச் சென்றாள். உடைந்த கண்ணாடித் துண்டில் தன்முகத்தைப் பார்த்தாள். அகண்டிருந்த தனது முகம், ஒரு புலியைப் போலத் தோற்றமளித்தது. வெளியில் நீட்டிக் கொண்டிருக்கும் பற்கள், தட்டையாய் மழுங்கிய மூக்கு, இரவைப் போலவே கறுத்த தோற்றம்- ஆர்கியின் உண்மையான தோற்றம் அந்த உடைந்த கண்ணாடித்துண்டில் தெரிந்தது. இன்றைக்குத்தான் அவள் தன்னை அறிந்துகொண்டாள். தான் இப்படி இருக்கும் நிலையைக் கண்டு அவள் தன்மீதே வெறுப்புக்கொண்டாள்.
ஆர்கி தனக்குள் சொல்லிக்கொண்டாள், “என்னதான் ஒருத்தரோடு பழகியிருந்தாலும், பார்க்க நல்லா இல்லேன்னா, ஒரு பெண்ணோட முகம் கல்யாணத்தன்னிக்கு ரொம்ப கஷ்டப்படும். என் கல்யாணமும் அப்படித்தான் போல! அதுக்கு வழியே இல்லே. இப்படிக்கடவுளோட படைப்பிலே இருக்கும் போல!!” அடிக்கடி இதே நினைவு அவளை அசைபோட வைத்தது. அவளிடமிருந்து கண்ணீர் வெப்பமாய் வெளி வந்தது. அவளது தனிமைப் புலம்பலோடு அந்தி நேரமும் வந்தது. புகாபா, மூட்டைமுடிச்சுமாய், அவள் அருகில் வந்தான். அவளிடத்து இனிய குரலில் பேசினான். “நான் போயி வர்றேன், ஆர்கி.” கண்ணீரால் நனைந்திருந்த கண்களோடு அவளும் அவனுக்கு விடை கொடுத்தாள்.
நெடு நேரமாக புகாபா அடியெடுத்துச் செல்வதைப் பார்த்த வண்ணம் இருந்தாள் ஆர்கி, அவளும், சிறிது நேரத்திற்குப் பிறகு, துணிமணி அடங்கிய சின்ன மூட்டையோடு, தெற்குப்பக்கமாக நடக்கலானாள். வருத்தமான இதயத்தோடு மெல்ல அடியெடுத்து வைத்தவள், ‘இந்த வாழ்க்கையிலே நான் மறுபடி புகாபாவைச் சந்திப்பேனா?” என்று சிந்தித்தவாறே சென்று கொண்டிருந்தாள்.