கேரம்பா நர்சாரி/பௌடராமின் உலகம்

ஆங்கிலத்தில் :
ஜெய்காந்த சர்மா

தமிழில் : இராம. குருநாதன்

போடோ சிறுகதைகள்

சொல்ல முடியாது. என் கிராமத்திற்கு. நான் வேலை செய்து வரும் ஒரு மாதத்திற்குப் பிறகு வீட்டுக்குப் போகிறேன். வீட்டுக்கு என்று நகரம், எனது கிராமத்திலிருந்து ஐந்து மைல் தூரத்தில்தான் இருக்கு. நான் நினைச்சிருந்தா, என் கிராமத்திலிருந்து வந்து போகலாம்தான். சாலையும் அப்படி ஒண்ணும் மோசமில்லே. கிராமத்திலேந்து நகரத்துக்குப் போகணும்னா அரைமணி நேரத்துலே போயிடலாம். ஏன் சொந்தமா வீடு இருக்கிறப்போ அதெ விட்டுட்டு பெண்டாட்டி யோடவும், பிள்ளைகளோடவும் நகரத்துலே போயி இருக்கணும். இதுக்கு எங்கிட்ட ஒரு சரியான விடை இல்லே. என்னைப் போல இருக்கிற ஆபிசருங்க கிராமச்சனங்களோட பழக விரும்பாம தான் நகரத்துலே குடியிருக்காங்க. பௌடராம் என்னோட சொந்த மாமா இல்லே. என் சொந்த தாத்தாவோட இளைய சகோதரனின் மாற்றாந் தாயோட பையன். ஒரு வகையிலே அவன் உறவுன்னு சொல்லிக்கிடலாம். இன்னைக்கு அவன் மரணவாசலில் இருந்து கொண்டு இருக்கிறான். நான் போய்க்கொண்டு இருக்கிறேன். என் அத்தை, அதாவது, பெண்டாாமின் பெண்டாட்டி இறந்து ஒருமாதம் தான் ஆவுது. அவுங்க செத்துப்போனத கேள்விப் பட்டதும் அப்படி யொன்றும் என்னைப் பெரிசா அது பாதிக்கலே. நோயின் உக்கிரம் தாங்காம அவ சீக்கிரமா போய்ச் சேர்ந்துடுவான்னு நாங்க நெனச்சோம். நான் ஒண்ணும் பெரிசா அதனால பாதிக்கப்படலேன்னு அர்த்தமில்லே. அந்தச் சூழ்நிலையிலே, அலை அலையான சிந்தனைகள் என் மனசிலே முன்னோக்கிச் சென்றன. எங்களில் சிலர் கடும் உழைப்பாளிகளாக இருந்தும், அவங்க கிட்ட கொறைவாக இருக்கிற வயலையும், கால்நடைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது, சிலபேரு வசதியாயிருந்தும் சரியான சாப்பாட்டுக்கு வழியில்லாம, நம்பிக்கை இழந்த நிலையில் வாழ்ந்துகிட்டு இருக்காங்க. இந்த மக்களின் அன்றாட காட்சிகள் என்னோட மனத்திரையில் படமாக ஓடியது. சமயத்திலே, அந்த மக்களெ பார்க்கிற போது ஒரு பக்கம் இரக்கப்படத்தோணுச்சு. இன்னொரு பக்கம் கடுங்கோபமும் வந்திச்சு, அஞ்சு மாசத்துக்கு முன்னே நான் என்னோட பழைய வீட்டுக்குப் போயிருந்தப்ப, ஒருபலாமரத்து நிழல்லே என்னோட அத்தை லய்ஸ்ரீ உட்கார்ந்திருந்தாள். மாமா மூணு நாளா சாப்பிடாம இருந்ததாயும், அதுக்குப் பிறகு ஒருநாள் அவருக்குச் சாப்பாடு கிடைச்சதாகவும் சொன்னாள். நான் அவ சொன்னத காதுல போட்டுக்கிடலே. நான் இதெ அறிஞ்சிட்டு என்ன செஞ்சுட முடியும். ஒருத்தனுக்கு இரண்டு கவளம் ஒருநாளைக்குக் கிடைக்குது. இன்னொருத்தன் பட்டினி இருக்கான். ஒருத்தன் சந்தோஷமா இருக்கான். இன்னொருத்தன் அதுவும் இல்லாம கஷ்டப்படறான். எப்படி இப்படி இருக்கமுடியுது. எதெ கேள்விப்படறமோ அது எனக்கும் போதுமானதாகத்தான் தெரியுது.
ஆனா… அன்னைக்கு அத்தை இரண்டு வரியிலே சொன்னது இன்னைக்கும் என்னைக் கஷ்டப்பட வைக்குது…
வாழ்நாள்லே பாதிய கழிச்சாச்சு. ஒரு குறிக்கோளுமில்லாம என்னோட பாதை வேகமா விரையுது. என்னோட நினைவுகளும் கூட அப்படித்தான் விரையுது. இப்போ என் மனசுலே ஒண்ணுமில்லே.
என்னோட அத்தை செத்ததுக்கு பிறகு நான் கிராமத்துக்கு வந்த நிலையில், என் குடும்பத்துக்கு ஏதாச்சும் சேர்த்து வச்சிருக்கேனான்னு நினைச்சுப் பார்த்தேன். ஆறு குழந்தைகளைப் பெற்ற பௌடராமின் குடும்பம் விதியால் வஞ்சிக்கப்பட்டதை நினைச்சுப் பார்க்கறது ஒண்ணும் கஷ்டமில்லே. பெரிய பிரச்சனையே ஆறு மாதக் குழந்தையாலதான்… பௌடராமிடம் இரக்கமாக இருந்ததைக் காட்டிலும், அவன் வாழ்க்கை யில் நான் ஆட்பட நேர்ந்தது. அதுக்குப் பல காரணங்கள் இருக்கு. காரணங்கள் உண்மையாக இல்லேன்னா எண்ணங்கள் தவறா இருக்குமா என்று எனக்குச் சரியா தெரியாது. ஆனா, வாழ்க்கை விதியின் படியேன்னு ஒரு பழமொழி உண்டு. அது முன்னமே விதிக்கப்பட்டிருந்ததால், அது ஒருத்தரோட வாழ்விலே நடக்கும் போல. என்னோட சின்ன புத்திக்குத் தெரிந்த வரையில்லே. அதெ உண்மையின்னும் சொல்ல மாட்டேன். மறுக்கவும் மாட்டேன். அது மாதிரி ஒரு நிகழ்ச்சி என்னோட மாமா, அத்தை வாழ்க்கையிலே விதி விளையாடிடுச்சுன்னு தோணுது.
மாமாவை நல்லாத் தெரியும். அவனோட மூன்று சகோதரர்கள்லே அவன்தான் இளையவன். அவனைப் படிக்க வைக்கணும்னு தாத்தா நினைச்சாரு. அவனோட சொந்த தேவைக்காகக் கொஞ்சம் வங்காளத்திலே படிச்சான், எதோ கொஞ்சம் அதிலே எழுதவும் படிக்கவும் அவனுக்குக் தெரிஞ்சிருந்துது. இப்போ மாதிரி இருந்தா, அவன் நிச்சயமா நல்லா வந்திருப்பான். படிப்பிலே அவனுக்கு ஆர்வம் இல்லாமல் இல்லே. தான் படிக்காட்டியும், அவன் தன் பசங்களைப் படிக்க வைக்கிறதிலே ரொம்ப முயற்சி எடுத்துக்கிட்டான். மூத்த பசங்க படிப்பிலே ஆர்வங்காட்டலே. அதனால் அவனோட நம்பிக்கை பொய்யாப் போச்சு.
இதனால், தாத்தா, தன்னோட மாற்றாந்தாய் பையனான பௌடராமைப் படிக்க வைக்க ரொம்ப முயற்சி எடுத்துக்கிட்டாரு. ஆரம்பப்பள்ளியிலே படிச்சு முடிச்சதும், விடுதியில் தங்கி உயர்நிலைப் பள்ளியிலே படிச்சாரு. நகரத்திலே இருந்து படிச்சதனாலே, படிப்பு சம்பந்தமா எல்லா வசதி வாய்ப்புகளையும் பௌடராமுக்கு எளிதா கிடைச்சதுனாலே, அவரு படிப்பைத் தொடர்வதற்கு ரொம்ப வசதியா யிருந்துச்சு. ஆனா, அவன், படிக்கிறதை விட்டுட்டு, அந்த அருமையான மூன்று வருசப்படிப்பை நகர்ப்புற ஆடம்பரத்திலேயும் கேளிக்கைகளிலும் செலவழிச்சான். விடுதியில் தங்கிப் படிச்சாலும், அந்த மூணு வருசத்திலே; ஒருமுறை கூட ஆண்டுத் தேர்விலே தேறலே. வகுப்பிலும் அவன் ஒழுங்கா இல்லை. படிப்புக்கும் அவனுக்கும் சம்பந்த மில்லாமல் இருந்தது. எந்த ஒரு குறிக்கோளும் இல்லாம அலைஞ்சு திரியறதுதான் அவனுக்கு வாடிக்கையாய் போச்சு. அப்படி யிருந்தா அவன் எப்படி பரீட்சையிலே தேற முடியும்? பள்ளிப்படிப்பை முழுசும் முடிக்காம இருந்த நிலையில் சொந்தக்காரங்க, நண்பருங்க வீடுகளுக்குச் சென்று வருவதும் அவனுக்கு வாடிக்கையா போச்சு. அப்படிப் போனப்பதான், அவன் லய்ஸ்ரீயைச் சந்திச்சான். அவுங்க சந்திப்புக்குப் பின்னால், அவன் தனது படிப்புக்கு முழுக்குப்போட்டான். அவன் மனம் அவளிடம் தஞ்சம் அடைந்தது. லய்ஸ்ரீயை அடையவேண்டும் என்ற எண்ணத்தில் அவன் எல்லோரிடத்திலும் சிடுசிடுப்பாய் இருந்தான்.
தாத்தா இதையெல்லாம் தெரிஞ்சு வச்சிருந்தார். ஆனா பௌடராமின் சிடுசிடுப்புக்கு லய்ஸ்ரீதான் காரணம் என்பதை அறிந்து வைத்திருந்தும், ஒரு வழி தெரியாம இருந்தார். கடைசியா, தன் மனசை மாத்திக்கிட்டு, அவர் லய்ஸ்ரீயை வீட்டிற்கு மருமகளாக்க முடிவெடுத்தார். எண்ணமும் செயலும் ஒண்ணாச்சு. ஒரு நல்ல நாளா பார்த்து, லய்ஸ்ரீ வீட்டிற்குச் சென்று அவளைத் தன் மருமகளாக்கிக் கொண்டார்.
மிக ஆடம்பரமாக பௌடராமின் கல்யாணம் நடந்துச்சு.
அதெல்லாம் இப்போ மிகப் பழசாப் போச்சு. காற்றில் இறகாய் அலையும் வாழ்க்கையாய்த் திருமணத்திற்குப் பின் இந்தப் பன்னிரண்டு வருடங்கள் எப்படிக் கழிந்தன என்று பௌடராம் நினைத்துப் பார்க்க வில்லை. காலம் முன்னோக்கிச் சென்று கொண்டிருப்பது என்பதனை பௌடராம் போன்றோரால் தீர்மானிக்க முடியாதுதான்.
அந்தப் பன்னிரண்டு வருடங்களில், நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. அவரோட பெற்றோர்கள் இறந்து போனார்கள். மூத்த சகோதரர்களிடையே சர்ச்சை. தனித்தனிச் சமையலறைகளால் ஒவ்வொரு வரும் தனிமைப்பட்டுவிட்டனர். பௌடராமின் உலகம் குறிப்பிடத் தகுந்த மாற்றம் கண்டது. ஆறு குழந்தைகளுக்கு அப்பாவானார். எண்ணிக்கை அதிகமாக அதிகமாக அத்துணைக் குழந்தைகளுக்கும் சாப்பாடு போடுவதற்கு முடியாம போச்சு. அவனோட வயலையும், வீட்டையும், மாடுகன்னுகளையும் விக்கும் படியாயிடுச்சு.
இந்த மோசமான நிகழ்வு எப்படி வந்தது. பௌடராம் ஒரு சோம்பேறி என்று சொல்லத் தேவையில்லை. உழைப்பை மதிக்காதவன். வேலையாட்களையும், விவசாயிகளையும் நம்பியிருந்தவன். பெரிய குடும்பத்தைத் தாங்கவேண்டியவனானான். அதைப் பற்றிக் கவலைப் படாமல் சுதந்திரமா திரியவிரும்பினான். செலவழிப்பதிலும் கூட. ஊதாரி, மட்டாகத் தீர்த்துவிடுவான். எதிர்காலத்தைப்பத்தி நினைச்சுப் பார்க்காதவன். இப்படியே இருந்துட்டா ஏன் அவன் ஒண்ணுமில்லாதவன் ஆக மாட்டான்? இப்படியே போனா, மூத்த சகோதரர்களுக்குள்ளே சரி சமமா பிரிச்சிகிட்ட சொத்துலே இவர் பங்கு பூரா அழியறதுக்கு ரொம்ப நாள் ஆகாது. அவரது சொத்து போனதுக்கு இன்னொரு காரணம் இருந்தது. மது வாங்கிக் குடிக்கிறது வாடிக்கையாப் போச்சு. இதுலே வீட்டுல காய்ச்சற சாராயம் வேறே. அதுவும் கூட அவருக்குப் போது மானதா இல்லே. அதோட அவர் ஒருபோதும் திருப்தி அடைஞ்சதில்லே. பௌடராமைப் போலவே அந்தக் கிராமத்துலே பலரும் இருந்தாங்க. அவுங்கதான் அவருக்கு உண்மையான நண்பருங்க. தினந்தோறும் அவுங்க வாங்குற பொருள்லே சாராயமும் ஒண்ணு. பக்கத்திலே இருக்கிற சாராயக்கடைக்குப் போயி குடிச்சிட்டு, ராத்திரி பூரா மட்டு மீறிப்பேசியபடி பொழுதைக் கழிக்கிறது அவுங்களுக்குத் தினப்படி வாடிக்கையா ஆயிடுச்சு.
பௌடராமுக்கு வருவாய்ன்னு பார்த்தா ஒண்ணே ஒண்ணுதான். சொந்த நிலம் கொஞ்சம். அவனுக்குக் கடை கண்ணி கிடையாது. சரியான வருவாய்க்கும் வழியில்லே. பயிர் பச்சையிலிருந்து சொற்பமா
கிடைக்கிறதுதான் அவனோட வருமானமே. அதெ வச்சிக்கிட்டு அவன் தன் பெண்டாட்டிக்கோ, பிள்ளைகளுக்கோ சாப்பாட்டுக்கும், உடுத்து மாத்தறதுக்கும் செலவு செய்யப் போதாது. கடன் வாங்கும்படி ஆச்சு. அதுக்கு நிலத்த அடமானமா வைக்கவேண்டியிருக்குது. வாங்குன கடனெ திரும்ப அடைக்க வழியுமில்லே. அதுக்கு மொத்த நிலத்தையும், எருதையும் விக்க வேண்டி இருந்தது.
பௌடராம் ஏழையாக நேரிட்டது. ஒரு தெசையும் தென்படாமல் போகவே, வளர்ந்த மூத்த பெண்ணும், அவளுக்கு அடுத்த மகனும் வேலைக்குப் போனார்கள். மத்த வீட்டிலே போய் வீட்டு வேலை செய்யறது, நாத்து நடறது, மாடு மேய்க்கிறதுன்னு அவங்க வேலை செஞ்சாங்க. அவன் ஒரு வேலையும் செய்யத் திறமை அற்றவனாய், அப்படியே செய்ய ஆசைப்பட்டாலும் அவனோட கைகள் அதுக்கு இடங்கொடுக்காது. இந்த இளவயசிலே முதுமை வந்துடுச்சு. அவனைப் பல நோய்களும் தாக்க ஆரம்பிச்சுடுச்சு. அவன் இருமும்போது ரத்தம் வந்தது. டாக்டரையோ நாட்டு மருத்துவரையோ பார்க்க வழியில்லே. வேலை பார்த்து வந்த அவனோட மகளும், மகனும் சம்பாதிச்ச சொற்ப சம்பளம் வீட்டுக்கே போதுமானதாக இல்லே. அத்தை அடிக்கடி வெளியே போய்ப் பிச்சை வாங்கி வந்து மத்த குழந்தைகளுக்கு உணவு ஊட்டுனா. மக்கள் அவன் மீது வெறுப்புக்கொண்டதோடு, அவனை ஒதுக்கி வைத்தார்கள். ஒவ்வொருத்தருக்கும் வருங்காலம் பற்றிய கவலை இருக்கும்போது, அடுத்தவங்களைக் காப்பாத்த யாருமில்லே.
இதையெல்லாம் பௌடராம் எண்ணிப் பார்த்ததா தெரியலே.
ஒரு நாள் பௌடாராம் என்னிடம் வந்து தத்துவம் பேசினான். “இந்த ஒலகத்துலே எனக்கு வாழறதுக்கு ஆசையில்லே… வாழறதுல்லே என்ன பயன் இருக்கு. அமைதியும் மகிழ்ச்சியும் எங்குமே இல்லை. ஜனத் தொகை மட்டும் பெருகிகிட்டே இருக்கு. மக்களெ நோய் பீடிச்சு இருக்குது. விலைவாசியோ ரொம்ப ஒசந்து போச்சு. இப்படிப்பட்ட ஒலகத்துலே வாழறத விட சாவறது நல்லது.” நான் எதுவும் பதில் சொல்லலே. அவன் எதுக்கும் இரக்கமோ, தான் செஞ்சதுக்கு வருத்தமோ படலே என்பது எனக்கு மட்டும் தெரியும். இன்னும் அவன் தன்னோட தவறை உணர்ந்தவனா தெரியலே.
நான் கிராமத்தை நெருங்கினேன். அந்தச் சாலையில் திரும்பிய கொஞ்ச தூரத்திலே எனது கிராமம், வேகமா நடக்கத் தொடங்கினேன்.
ஒரு க்ஷணத்திலே இதயத்தைக் கிழிப்பதுபோல ஒரு அழுகைக் குரல். எங்கிருந்து வருது? அது பௌடராம் வீட்டிலிருந்து வந்தது. வடக்குப்பக்கமா அந்தக் கிராமத்துலே நுழைஞ்சா, சாலைப் பக்கமா இருக்கும் அந்த வீட்டைச் சீக்கரமா அடைஞ்சுடலாம்.
வேகமாக ஓடி மாமா வீட்டு வாசலுக்கு வந்துட்டேன். சாலைப் பக்கமாகவும், வாசல் பக்கமாகவும் ரொம்ப சனங்க கூட்டமா கூடி இருந்தாங்க. வீட்டு முற்றத்திலேயும் சனங்க.
மாமா இறந்திருக்கிறார். பாடையில் மௌனமாக உயிரற்ற அவரது சடலம் கிடந்தது. துக்கம் விசாரிக்கச் சாதி சனம் வந்தனர். சிலர் விம்மி அழுதனர். சிலர் கடுகடுப்பாக முகத்தை வைத்துக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் அரச இலையால் சடலத்தின் வாயில் நீருற்றிக் கொண்டிருந்தனர். நானும் அவ்வாறு நீருற்றிவிட்டுச் சொன்னேன். “மாமா, ஒரு துளி நீராவது அருந்துங்க. ஒங்க ஆன்மா சந்தோஷ மடையட்டும்.”
அதுக்குப் பிறகு, நாலு பேரு பாடையைத் தோளில் சுமந்து கொண்டு இடுகாடு நோக்கிச் செல்லத் தொடங்கினர். ஒரு கூட்டம் பின் தொடர்ந்து சென்றது.
இடுகாட்டில் அவர் பிணம் நெருப்பில் வெந்து சாம்பல் ஆகும் வரை எல்லாக் காட்சிகளையும் பார்த்துக்கொண்டிருந்தேன். நாம இனி மாமாவைப் பார்க்க ஆசைப்பட்டாலும் அது நடவாது என்று நினைச்ச போது என்னைப் பாதிச்சு வருத்தமடையச் செய்தது.
அத்தை செத்துப்போன சில நாள்கள்லே, பௌடராம் மாமா மகிழ்ச்சியாதான் இருந்திருப்பார். ஒலக கஷ்டத்திலேர்ந்து அவருக்கு மீட்சி கிடைச்சது… ஆனர், பிள்ளைங்க கதி?…அவங்களுக்குன்னு என்ன இருக்கு? கொஞ்சம் அதெ நினைச்சுப் பார்த்தப்போ அது என்னை அலைக்கழிச்சுது.
ராத்திரியை ஒருவிதமா கழித்துவிட்டு, நகரத்துக்கு வந்து விட்டேன். கிராமத்துக்கு செல்லும்போது என் கால்கள் விரைந்தன. ஆனா, இப்போ, என் விருப்பத்திற்கு மாறாக, என்னால் விரைவாக நடையைத் தொடர முடியலே. என் உடல் பாரமாய் இருப்பதாக உணர்ந்தேன். என் வீட்டை நான் எப்போது அடைவேன்? அதுக்கு நீண்ட தூரம் இருக்கு…!

போடோ சிறுகதை – விருட்சம் நாளிதழ்

One Comment on “கேரம்பா நர்சாரி/பௌடராமின் உலகம்”

Comments are closed.