
ஆங்கிலத்தில் : ஜெய்காந்த சர்மா
தமிழில் : இராம. குருநாதன்
பாவம் செய்தவர்களின் முடிவு ஏழேழு சென்மங்களுக்குத் தொடரும் என்று அவர்கள் சொல்லிக்கொண்டனர். அது உண்மையா? உணர்வற்ற இதயம் படைத்த துபாகாங் மனத்தை அந்தக் கேள்வி
பற்றிக்கொண்டது.
அந்தக் கிராமத்தில் மிகவும் வயதானவர் துபாகாங். மிகப் பெரிய செல்வர். சின்ன வயதிலிருந்தே அவர் அறியாமையில் இருந்த கிராம மக்களை ஏமாற்றி வந்தவர். இத்தனைக்கும் அரைகுறையாகப் படித்தவர். தன்னைக் கடன் கேட்டு வருபவர்களுக்குக் கடன் கொடுத்து, அவர்களின் நிலத்தை, பிற உடைமைகளை அபகரித்துவிடுவது அவருக்கு வழக்கமாக இருந்தது. இந்த வகையில் அவருக்கு நிலமும் பெருகியது. சொத்தும் குவிந்தது. தன் சொந்தங்களுக்குக்கூட உதவிட மாட்டார். தேவையானால் அவர்களைக் கொல்லவும் கூடத் தயங்கமாட்டார். அவர் இப்படித்தான் மற்றவர்களையெல்லாம் தன் வயப்படுத்தி மகாஜன் ஆனார். ரொம்ப சொத்துச் சேர்த்திருந்தார். அச்சத்தின் காரணமாகவே கிராம மக்கள் அவருக்கு மரியாதை கொடுக்கத் தொடங்கினர்.
வயது அதிகமாக அதிகமாக அவருக்கு உடல் நலிவடைந்தது. அவரை நோய்க்கு உள்ளாக்கியது. கவலையும் சூழ்ந்து கொண்டது. அடிக்கடி பல எண்ணங்கள் இதயத்தை வலுவிழக்கச் செய்தன. “இவ்வளவு பெரிய சொத்துச் சேர்த்து என்ன பயனைக் கண்டோம்? இது வரை, நான் எந்த சந்தோசத்தையும் கொஞ்சம் கூட அனுபவிக்கிலே. இந்த ஒலகத்தை விட்டுப் புறப்பட நேரம் வந்துடுச்சு இப்ப. இந்த ஒலகத்திலே ஒண்ணு மில்லாம வந்தேன். இப்ப, ஒண்ணுமில்லாம போகப்போறேன். ஒருத்தர் இந்த ஒலகத்தை விட்டுப் போறப்ப, சொத்து காசு, மனைவி, மக்கள் இவங் கெல்லாம் கூட வரப் போறதில்லை. இதனையே எண்ணிப் பார்த்தபடி இருந்த அவர், மற்றவர்களுக்கு இழைத்த அநீதியையும் நினைத்துக் கொண்டார். அப்படி நினைக்கையில், அவரிடம் கேள்வி பிறந்தது. ‘பாவம் செய்தவர்களின்
முடிவு ஏழேழு சென்மங்களுக்குத் தொடரும் என்று அவர்கள் சொல்லிக் கொண்டனர்.
அது உண்மையா?’
தாம் செய்த பாவத்தைக் கழுவ, இந்தக் கடைசி காலத்தில் ஒரு கோயில் கட்டினார். பாவத்திற்குக் கழுவாய் தேட, அந்தக் கோயிலில் நாள்தோறும் தெய்வங்களுக்குப் பூசை செய்து வந்தார். நேற்றைய தினம், காலையில் குளித்துவிட்டு வழக்கம்போலக் கையில் ஊதுபத்தியை எடுத்துக்கொண்டு கோயிலுக்குச் சென்றார். கோயில் வாசலில் அவருக்கு வாய் அடைத்தது. தலை சுற்றியது. கிறுகிறு என்று வந்தது. மயங்கி விழுந்தார். அதற்குக் காரணம், தன் கண்முன் கொடூரமாகக் காட்சி ஒன்றைக் கண்டதுதான்; மாற்றாந்தாயின் சகோதரன் பார்கோவின் இறந்த உடலைப் பார்த்ததுமே அவரிடம் இனம் புரியாத ஒரு மாற்றம்.
பார்கோவின் சடலம் குத்துவாளால் கண்டதுண்டமாக வெட்டப் பட்டுக் கிடந்தது. கோயில் வாசலில் அந்தச் சடலம் ரத்தம் சிதறிக் கிடந்தது. அந்தக் கிராமத்து மக்கள் அதனைப் பார்த்துவிட்டு, காவல் நிலையத்துக்குத் தகவல் தந்தனர். காவலர் அந்தச் சடலத்தை ‘போஸ்ட் மார்ட’த்திற்காக எடுத்துச் சென்றனர்.
குடும்பத்தினர் கண்ணீர் சிந்தினர். துபாகாங்கைக் கொண்டு வந்து படுக்கையில் கிடத்தினர். நோயின் கடுமை தீவிரமாகியது. மந்திர வாதிகள், மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். தெய்வங்களுக்குக் கோழி, புறா, பன்றி, ஆடு முதலியவற்றைப் பலர் நேர்ந்து கொண்டார்கள். பார்கோவின் ஆவிதான் துபாங்காவைப் பீடித்திருக்கிறது என்ற செய்தியை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேகமாக அவர்கள் ஓடினர்.
அன்று மாலை மந்திரவாதி வந்தான். என்ன நடந்தது என்பதனை அறிய இரண்டு முட்டைகளை வைத்து மந்திரம் ஓதினான். விடியற் காலை முட்டைகள் தேவை இருந்ததால், அதனை எடுத்துவர, துபாங்காவின் மூத்த மகன் தபாகாங் சென்றபோது, முட்டையை விழுங்கிய நிலையில் இருந்த பாம்பு ஒன்று அவனைக் கடித்தது. ஏதோ தன்னைக் கடித்து விட்டதாக அலறினான். பாம்புதான் கடித்திருக்க வேண்டும் என்று நினைத்தான். நஞ்சு தலைக்கேறியது. தபாகாங்காவின் மனைவி விளக்கை எடுத்துவந்து பார்த்தாள். பாம்பு முட்டையை மட்டும் விழுங்கவில்லை. பெட்டைக் கோழியையும் கடித்துக் கொன்று போட்டிருந்ததைக் கண்டாள். ஆபத்துக்குமேல் ஆபத்து தொடர்ந்தது. ஒரு புறம். அப்பா படுத்த படுக்கையில்.. பையனோ பாம்பு தீண்டி இறக்கும் தருவாயில்! அங்கும் இங்குமாகத் தேடிக் கண்டுபிடித்து பாம்பு நஞ்சு எடுப்பவனை அழைத்து வரும்போது, தபாகாங்கா வாழ்க்கை முடிந்து போயிருந்தது. தபாகாங்கா சாவின் விளிம்பில் இருந்த நிலையில் தான் செய்ததை ஒத்துக் கொண்டான். ‘பார்கோவின் சாவுக்குத் தானே காரணம்.’ இதனைக் கேட்ட அவனுடைய அப்பா துபாகாங் அதிர்ந்து போனார்.
பார்கோவைத் தபாகாங் கொன்றதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்பட்டன. அதில் ஒன்று; கோயிலைக் கட்டி முடித்த பிறகு துபாகாங் பார்கோவிற்கு நிலம் கொடுத்தது தபாகாங்கிற்குப் பிடிக்க வில்லை. இரண்டாவது; பார்கோவின் இளைய மகளை தபாகாங் வாழ்க்கைத் துணைவியாக ஆக்க நினைத்தது.. இவற்றை அறிந்து கொண்ட பார்கோ, அவனை மிகவும் வெறுத்தான்.
அதற்கான வாய்ப்பினை எதிர்பார்த்துக் காத்திருந்தான். ஒருநாள் தபாகாங் பார்கோவைப் பழிவாங்கக் கறுவிக்கொண்டிருந்தான். திடீரென்று பார்கோ கோயிலுக்குச் சென்று வழிபட ஆசைப்பட்டான். வினை அறுக்கும் காலம் போலும்! தபாகாங் அன்றைக்கு முன்னமே எழுந் திருந்தான். பார்கோ கருவறை முன் கடவுளை வணங்கிக் கொண்டிருந்ததைக் கண்டான். உடனே, குத்துவாளால் அவனைக் குத்தினான். அதன் பிறகு, ஆற்றில் குளித்தான். நடந்த இந்த நிகழ்ச்சியை யாரும் பார்க்க வில்லை. பார்கோவின் உடல் எங்கும் ரத்தம் வழிந்தது. வலியால் கத்திய படியே இறந்துபோனான். விடியற் காலை இறந்த செய்தியை போலீசுக்குத் தெரிவித்ததோடு, தபாகாங் பார்கோவைக் கொன்றதையும் தெரிவித்தனர்.
துபாகாங், தன்னைச் சுற்றி இருட்டின் வலை பின்னப் பட்டிருப்ப தாகவே உணர்ந்தார். மனத்தளவில் துன்பத்திற்கு ஆளான துபாகாங்கின் மூளையில் எதுவும் ஏறவில்லை. படுக்கையில் கிடந்த அவர் உளறத் தொடங்கினார்; “இனிமேல் என்ன நடக்கணும்?” மக்களிடம் பெற்றிருந்த மட்டுமரியாதை எல்லாம் அவதூறாக மாறியது. அந்த முதிய மனிதர் நினைக்கலானார். ‘இவ்வளவு பெரிய சொத்து என்னவாகும்?”
நடுப்பகலில் ஒரு நாள். பணப்பெட்டியின் பூட்டுக்கும் சாவிக்கும் காப்பாளராக இருந்த தன் மனைவியை அழைத்து, “நேற்றுவரை எவ்வளவு செலவு ஆனது?” ஜாடி நிறைய காசுகள் இருந்து அவை செலவழிந்து போனதை அறிந்துகொண்டார். அவர் தனக்குள் சொல்லிக் கொண்டார். “ஒழைச்சு சம்பாதித்த பணம், கொஞ்சங் கொஞ்சமா செலவழியுதே!’ அதை எண்ணியபோது நீண்ட பெருமூச்சு மேலெழும்பியது.
வயசான துபாகாங் வெறுப்பும் அடைந்தார். பணப் பெட்டியைக் குறித்த கவலையில் அதிர்ந்துபோனார். தொடர்ந்து பணம் குறைந்து போய்க் கரைந்து வருவதை எண்ணிய அவருக்குக் கவலையும் வருத்தமும் அதிகரித்தன. பணத்தின் மீது அதிகமாகப் பற்று வைத்திருந்ததை அவர் மனம் வெளிப்படுத்தவும், இதயம் தாக்குண்டு இறப்பை அவர் தழுவ நேரிட்டது. பணத்தின் மீது அவர் கொண்டிருந்த பேராசை அவரோடேயே சென்றது.
அப்போது பெய்த கன மழை கிராமத்தைத் தாக்கியது. அந்தக் கிராமத்து மக்களின் மனத்தை அது குளிர்வித்தது.

One Comment on “பந்து ராம் பசுமதாரி/இருட்டின் வலை”
Comments are closed.