மங்கல் சிங் கசோவாரி/அருகிலும் தொலைவிலும்

போடோ சிறுகதைகள்


ஆங்கிலத்தில் : ஜெய்காந்த சர்மா
தமிழில் : இராம. குருநாதன்

இரவின் நடுநிசி, பிலய் கனவு கண்டதும் படுக்கையில் கணவனைத் தேடிப்பார்த்தாள். வெளியே போயிருப்பதை அறியவில்லை.
அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
எங்கே அவர் போயிருப்பார்? அவசரமாக எழுந்து, போடோ ஆடையான தகானாவை சரி செய்து கொண்டாள். விளக்கைப்பற்ற வைத்து அறை முழுக்கத் தேடினாள். சுற்றும் முற்றும் தென்பட வில்லை. வெளியே வந்து வராண்டா வழியே உற்றுப் பார்த்தாள். ரமௌன் தெற்குப்புறமாக வேலியில் சாய்ந்தபடி எதையோ நோக்கியவாறு இருப்பதக் கண்டாள். அவர் புகைத்த சிகரெட் துண்டு விளிம்பு நுனி வரை சாம்பலாகிய பின் அவரது வாயிலிருந்து கீழே விழுந்தது. ஒன்றிலும் ஆர்வங்கொள்ளாது அப்படியே இருந்தார். அவள் பெருமூச்சு விட்டாள். உள்ளே வறுத்தெடுக்கும் உஷ்ணம் தாங்காமல், குளிர்ந்த காற்றுக்காக வெளியே வந்திருக்கலாம் என்று எண்ணியவளாய், அவள் வந்த சுவடு தெரியாமல் படுக்கைக்குச் சென்றுவிட்டாள். விளக்கின் ஒளியைக் குறைத்துவிட்டுப் படுத்துக் கொண்டாள். ரமௌன் அமைதியாக எதையோ யோசனை செய்து கொண்டிருந்தான். அவள் வந்தது கூடத் தெரியவில்லை.
ரமௌன் வீடு கிராமத்தின் மத்தியில் இருந்தது. சொல்லப்போனா, எளிதாக எண்ணிவிடக்கூடிய அளவில்தான் அவனது குடும்ப உறுப்பினர்கள் இருந்தனர். அவனைச் சேர்த்து, ரமௌனின் அப்பா ஹாவ்லா, ரமௌனின் மனைவி பிலய் மட்டுமே இருந்தனர். அவனு டைய அம்மா இறந்துவிட்டார். பி.ஏ. முடித்த கையோடு, கிராமத்தின் பக்கத்து ஊரிலிருந்த ஒரு அலுவலகத்தில் குமஸ்தா வேலை கிடைத்தது. பிலய் ரமௌன் திருமணம் காதல் திருமணம். கிராமத்து மக்களே அதற்கு ஒன்றாக ஒத்துழைத்தார்கள். பிலயும் ஒரு மெட்ரிக்குலேட் கொஞ்சம் நிலபுலங்களும், அலுவலக வேலையும் அவர்கள் குடும்பம் நடத்துவதற்குப் போதுமானதாக இருந்தது. பிலய் நீண்ட முடியுடன்
பார்ப்புதற்கு மிக அழகாக இருந்தாள். வீட்டு வேலைகளிலும் திறமை படைத்தவள். மாமனாருக்கு அவளை மிகவும் பிடித்திருந்தது. அவரிடம் அவளும் மிகுந்த மரியாதை வைத்திருந்தாள். மாமனாரிடம் பெயர் எடுக்கவேண்டி அவர் கிழித்த கோட்டைத் தாண்டமாட்டாள்.
ஒரு செவ்வாய்க் கிழமை, இரவு ஒன்பது மணி. அலுவலகத்திலிருந்து ரமௌன் வீட்டுக்கு வரவில்லை. பிலய்க்கு அச்சமாக இருந்தது. மாமனாருக்கு இரவுச்சாப்பாடு வைத்துவிட்டு, கணவன் வரட்டும் எனக் காத்திருந்தாள். கணவனில்லாமல் அவள் என்றும் சாப்பிட்டதில்லை. அது அவளுக்குப் பழக்கமாகிவிட்ட ஒன்று. அவள் மிகுந்த பசியில் இருந்தாள்.
“இன்னைக்கு என்னாச்சு?” வெளியே அடிக்கடிப் பார்த்த வண்ணம் ஆழ்ந்து யோசனை செய்தாள். கையில் கோப்புக்கட்டுகளோடு அவன் வாசலுக்குள் நுழைந்தான். நுழைந்ததும், மனைவியைப் பார்த்து, “பிலைய்! எனக்குப் பத்திக்கிட்டுத்தான் வருது” என்று இரைந்து கத்தினான்.
“நடு ராத்திரி வரை நீங்க அங்க தங்கியிருந்தீங்க. அவளது வார்த்தைகள் வேகமாக வெளிப்பட்டன.”
‘ஆடிட்டர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். ஏழு மணிவரை அங்கே இருக்க வேண்டியதா போச்சு. வீண் பேச்சு தவிர வேறெதுக்கும் வழி யில்லாம, அதுவும் ஒருத்தரோட விருப்பத்துக்கு மாறா டீக்கடையில் இருந்தோம்.” சட்டையை மாற்றிக் கொண்டே அவளுக்குப் பதில்
சொன்னான்.
“நான் ஒங்களெ ஒரு சைக்கிள் வாங்கிக்கச் சொல்லி வற்புறுத்திக் கிட்டே இருக்கேன். எத்தனை நாள்தான் நடந்தே போவீங்க. கையைச் சீக்கிரமா கழுவிட்டு வாங்க. ஒங்களுக்காகச் சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன்” என்று சொல்லிவிட்டு பிலய் சமையற் கட்டுப் பக்கமாக மெல்ல நகர்ந்தாள். கையைக் கழுவிக்கொண்டு சமையற்கட்டுக்குக்குப் போன ரௌமன், இரண்டு தட்டுகள் இருப்பதைப் பார்த்துவிட்டு, “நீ இன்னும் சாப்பிடலையா?” என்றான்.
அவள் கறியைப் பரிமாறிய படியே, “நீங்க நடு ராத்திரிலே வந்தீங்க. நீங்க பசியா இருக்கும்போது நான் மட்டும் முன்பே சாப்பிட்டு விடுவதா?’
சாப்பாட்டுக்குப் பிறகு, சமையற்கட்டைச் சுத்தம் செய்து, படுக்கைக்கு வந்து படுத்தாள். நாள் முழுதும் ஓய்வில்லாமல் பத்துப் பாத்திரங்களைத்
தேய்த்துவிட்டு வந்தவள் உறங்கிப்போனாள். கோப்புகளைப் பார்ப்பதில் தீவிரமாக இருந்த கணவனைப் பார்த்து, “ஒங்களுக்குத் தூக்கம் வரலையா? நாளைக் காலையிலே ஒங்க வேலைய வச்சிக்கிட்ட ஒண்ணும் குடி முழுகிப்போயிடாது. ஏற்கெனவே பதினோரு மணி ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன்.”
“நீ தூங்கப் போ. நாளைக்கும் முடிக்க முடியாத வேலை தலைக்கு மேல இருக்கு. ‘ஓவர் டைம்’ செஞ்சாக் கூட இதெ முடிக்கமுடியாம ஆயிடும் போல. அந்த அளவுக்கு ஆபீஸ் நேரமும் கூடுதலாப் போயிடுச்சு.”
பிலய், கொசுவலையை விரித்துவிட்டுப் படுத்துக்கொண்டாள் மேசையில் குவிந்து கிடந்த கோப்புகளை நள்ளிரவு வரை கஷ்டப் பட்டுப் பார்த்த பின் விளக்கின் திரியைச் சற்று மங்கலாக்கி விட்டு வந்து படுத்தான்.
நள்ளிரவில் இடியும் மின்னலுமாய்த் தொடர்ந்து பெய்த ஆலங் கட்டி மழை அந்தக் கிராமத்தை அலைக்கழித்தது. புழுக்கத்துடன் கூடிய இருள் எங்கும் பரவியிருந்தது. மரங்கள் சுற்றிச் சுழன்று கீழே விழுந்தன இடி உறுமியது கேட்டு அதிர்ந்துபோன பிலய் வழக்கம் போல, படுக்கை யில் கணவனைத் தேடினாள்.
அவன் அங்கில்லை. அவ்வப்போது எண்ணங்கள் எச்சரிக்கை செய்தன. விளக்கைப் போட்டுவிட்டு, படுக்கையிலிருந்து எழுந்து, ‘போர்டிக் கோ’விற்கு வந்தவள், தெற்குப்புறமாக ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் உதட்டில் சிகரெட்டோடு இருந்த கணவனைப் பார்த்தாள் பிலய் வந்து நின்றதையும் கவனிக்கவில்லை. “என்ன அப்படி ஒரு யோசனை?” அவனிடம் முறையிட்டாள்.
ரௌமன் அப்போதுதான் எழுந்தவன் மாதிரி திரும்பி அவளைப் பார்த்தான். திகைப்புற்ற அவன், “பிலய், நீயா?’
“ஆமாம், நானேதான்.” முகத்தைத் திருப்பி, இடைமறித்து, “அப்படி என்ன ஆழ்ந்த யோசனை? இன்னைக்குச் சொல்லித்தான் ஆகணும் இன்னைக்கு நேத்தைக்கா இப்படி ஒங்களைப் பார்க்கிறேன். ரொம்ப நாளா ஒங்களை இப்படியே கவனிச்சுக்கிட்டு வர்றேன். என்னைத் தனிமையில் படுக்கையிலே விட்டுட்டு வந்தா என்ன அர்த்தம்? ஒங்க மனைவியான எங்கிட்ட சொல்லாம, என்ன நடந்துச்சுன்னு இப்ப இப்படி இருக்கீங்க.” வார்த்தைகள் அடைத்தன. கன்னத்தில் இருந்து கண்ணீர் வழிந்து, பனித்துளி போல, விளக்கொளியில் ஒளிவீசியது
நீண்ட பெருமூச்சுடன், மீண்டும் முணுமுணுத்தாள். “நம்ம கல்யாணத் பிறகு. நாம ரெண்டு பேரும், ஒண்ணா இருந்து, இன்பலோகத்தைச் சிருஷ்டிக்கணும்னு நினைச்சேன், எல்லாம் பொய்யாப் போச்சு. ஒங்களுக்கு ஆத்ம சுத்தியா இருந்து என் மனசை ஓங்க சந்நிதியிலே ஒப்படைச்சேன். ஆனா, ஒங்களை மகிழ்ச்சியா வச்சுக்க என்னாலே முடியலே. வெளிப்படையா பேசுங்க. ஒங்களை குழப்பத்துக்கு ஆளாக்குவது எது? நீங்க சொல்லலேன்னா, எங்கிட்ட என்ன குறை இருக்குதுன்னு எப்படித் தெரிஞ்சுக்குறது?”
பிலய் இரத்தக்கண்ணீர் வடித்தாள். ரௌமன் அவளை அணைத்தவாறே சொன்னான். “ஏன் அழறே. ஒங்கிட்ட எந்தக் கோபதாபமுமில்லே. நீ ஒண்ணும் தப்பு செஞ்சுட்லே.” தொண்டையைச் சரி செய்து கொண்டு, மறுபடி சொன்னான். “ஒங்கிட்ட நம்பிக்கையில்லாம, நான் பெரிய தப்பு செஞ்சிட்டேன். அதெ நினைச்சு ரொம்ப கலக்கமா கூட இருக்கு, அதெ ஞாபகத்துக்குக்கூடக் கொண்டுவர முடியலே.”
“என்ன அது?” ஆவலுடன் கேட்டாள் பிலய்.
“நான் ஒருத்தியை விரும்பியிருந்தேன்,” என்று சொல்லிவிட்டு, சற்று இடைவெளிக்குப் பின் தொடர்ந்தான். “என்னோட அம்மா செத்த பிறகு அவள் என்னை அன்போடு வளர்த்தவள். அவளோட அன்பை என்னால மறக்க முடியலே. அவளை ஒருபோதும் மறக்கவும் முடியாது. அவளோட பெயர் ஜரௌ. நம்மைப்போலவே, அவளும் ஆதாமும் காதலிச்சாங்க. அவங்க எதிர்காலக் கனவை மனசாற அப்பா ஏற்றுக்கொண்டார். கல்யாணம் ஆன மூணு மாசத்திலே ஆதாம், இராணுவத்திலே போய் மீண்டும் சேர்ந்தான். திடீர்னு ஒருநாள் ஜரௌ விற்கு ஒரு தந்தி வந்தது- ‘அவள் கணவன் ஆதாம் ஒரு விபத்தில் இறந்து போனதாக’
ஜரௌ சித்தப்பிரமை பிடிச்சுது. பெரும் சங்கடமாய்ப் போனது. அவளது நடத்தையும் மாறிப்போனது. உண்பதிலும், வசிப்பதிலும், உறங்குவதிலும் அவள் கவனக்குறைவாக இருந்தாள். பதினஞ்சு நாளுக்குப் பிறகு, அவளைப் பற்றிய ஒரு செய்தி வெளி வந்தது. ஜூரௌ காணாமல் போய்விட்டாள் என. நான் மிகவும் குழப்பமடைந்தேன். ஜரௌ இன்னும் உயிரோடு இருக்கிறாள் என்று நானும் நம்பினேன். வெறிகொண்டு அவளைத் தேடினேன். ஆனால், எல்லாம் பயனில்லாமல் போச்சு.”
*பதினஞ்சு நாளுக்கு முன், ஒரு இரவில், இடுகாடு பக்கமாய் சென்றேன். ஆலங்கட்டி மழை வேறு பெய்தது. அரச மரத்தில் ஒரு கறுப்பு உருவத்தைக் கண்டேன். மின்னல் அடித்தது. ஒரு மரத்தில் உருவம் தொங்கிக் கொண்டிருந்தது. பயந்துபோய் வீட்டை. நோக்கி ஓடினேன் மயக்கத்தில் உறைந்துபோய் மயங்கி விழுந்தேன். நோய்க்கு ஆளானேன். நான் பார்த்த அந்த உருவம் ஜூரளவு டையது. புல்வெளி சார்ந்த அந்த மேட்டுப்பகுதியிடத்து, அவள் ஆன்மா சாந்தி அடையட்டும். அங்கே கடம்ப மரங்கள் இருந்தன. என் அப்பா அதை வெட்டிவிட்டார். ஒவ்வொரு பகலிலும் ஜூரௌ அங்கிருந்து என்னை அழைப்பதாய் உணர்கிறேன். அவளது கை அசைவுக்கு முன் நிற்க முடிய வில்லை.
“அவள் யார்? எங்கிருந்து வந்தவள்? யாரோடு அவளுக்கு உறவு பிலய் வரிசையாக ரௌமனைக் கேள்விக் கணைகளால் தொடுத்தாள். “ஒங்க ஞாபகத்தைப் பற்றிக் கொண்டிருக்கும் அவள் யார்? சொல்லுங்கள்,
“அவள் வேறு யாருமில்லை. என்னோட மூத்த சகோதரிதான்!”
“சகோதரியா?”
திகைப்போடு அவள் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவந்தன. பிலய், தன் தவற்றை உணர்ந்தவளாய், வெட்கிப்போனாள். குற்றஞ் செய்துவிட்டதாய்க் குறுகிப்போய், அவனை அரவணைத்தபடியே,” என் செயல் எப்படிப்பட்ட வேடிக்கைத்தனமானது? எவ்வாறு இப்படிக் கோண புத்தியோடு நடந்து கொண்டேன் நான்? என்னை மன்னிச்சுடுங்க.”
பிலயின் முகத்தை இலேசாகச் செல்லமாய்த் தட்டிவிட்டுச் சொன்னான்: “அது குற்றமில்லே. ஒன்னைப் பொறுத்தவரை ஒரு தவறு மில்லை. சாதாரணமா ஒரு பொண்ணுகிட்ட இருக்கிற இயல்பான குணம்தான். நான் ஒன்னை மன்னிச்சுட்டேன்.”
ரௌமன் அவளை அணைத்தான். ஒரு வித விம்முதலோடு அவனிடத்து நெருங்கினாள். அவன் மார்பில் தன்னைப் புதைத்துக் கொண்டு தானடைந்த வெட்கத்தை மறைத்தாள்.
பொழுது புலர்ந்தது. பறவைகளின் கீச்சொலி சுற்றும் முற்றும் கேட்டது. சூரியன் வெளிக்கிளம்பவும் கப்பி இருந்த இருள் மறைந்தது.

பந்து ராம் பசுமதாரி/இருட்டின் வலை – விருட்சம் நாளிதழ்

One Comment on “மங்கல் சிங் கசோவாரி/அருகிலும் தொலைவிலும்”

Comments are closed.