இசான் முசாகரி/அபரி

இடுகையைப் பார்க்க

ஆங்கிலத்தில் : ஜெய்காந்த சர்மா
தமிழில் : இராம. குருநாதன்

போடோ சிறுகதைகள் – 5

அபரிக்குப் பதினெட்டு வயது வந்துவிட்டது, இந்த வயது அவளுக்கு மங்கைப்பருவம். பார்ப்பதற்கு இப்போது அவள் கொள்ளை அழகு, நாணமும், ஆடை அணிவதில் கவனமும் கொள்ளடிருந்தாள், அந்தக் கிராமத்து மக்கள் குளித்துவிட்டு ஒருவித பரபரப்பான களிப்பில் ஆழ்ந்திருந்ததோடு, அந்த நல்ல நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந் தனர். அபரி மட்டும் அமைதியற்றிருந்தாள். என்ன செய்வது என்று தெரியாமல் அவள் மனம் அலைக்கழித்துக் கொண்டிருந்தது. அவள் இது போன்ற சூழ்நிலையில் மற்றவர் பார்வையிலிருந்து தன்னை மறைத்துக்கொண்டாள். பலர் முன்னிலையில் தென்படவும் அவளுக்கு என்னவோ போல் இருந்தது.
அவளுடைய அண்ணன் உலி அன்றைக்குச் சிலரிடம் பேசி யிருந்தான். திகா கிராமத்திலிருந்து அவளைப் பெண் பார்க்க வரக் கூடும். கடந்த மூன்று நாட்களாக அபரி குழப்பத்தில் இருந்தாள். சாப்பிடும் போதும், நீர் அருந்தும்போதும் நாள் முழுவதும் அவள் ஒரே சிந்தனையால் பாதிப்புக்குள்ளாயிருந்தாள். வருபவன் எப்படிப் பட்டவனோ, அவனது நிறம் எப்படியோ என்ற நினைவில் ஆழ்ந்த போனாள். எதிர்காலத்தைப் பற்றிய எண்ணத்தில் இருந்தவளுக்குத் தீ நிமித்தங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் வந்துகொண்டிருந்தன. அவளுடைய இதயம் கங்குகளாகக் கனன்று கொண்டிருப்பதை அவள் மட்டுமே உணர்வாள்.
ஒரு நாள் திகா கிராமத்திலிருந்து சிலர் அவளைப் பெண் பார்க்க வந்திருந்தனர். அவர்கள் அவசரப்படுவதற்கான காரணத்தை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. விருந்தினர்களைக் கவனிப்பதில் மும்முரமாக இருந்த அம்மா, பையனின் குறைபாடுடைய முகத்தைக் கவனிக்கவில்லை. பிறகுதான் அவளுக்குத் தெரிந்தது- அவன் முடமானவனும், கூன் விழுந்தவனும் என்று. வீட்டிற்கு அவன் வீணான சுமை. ஒன்றுக்கும் இலாயக்கற்றவன். அவள் மறுப்புத் தெரிவித்தாள்.
அபரி பற்றியும் கிராமத்தார் விசாரித்தார்கள். “மணப்பெண் எப்படியோ அப்படியே மாப்பிள்ளையும். ஆண்களில் தாழ்வுணர்ச்சி எங்கிருந்து வந்தது?” மூத்தவர்களின் அறிவுரையை ஏற்று, அபரியின் அண்ணன் உலி, மாப்பிள்ளை வீட்டார் தந்த கைவளையலை வாங்கிக் கொண்டான். (போடோ வழக்கப்படி ஆண் வீட்டார், பெண் வீட்டாருக்குக் கைவளை கொணர்ந்தால், திருமணத்திற்கு இசைவு தெரிவிப்பதாகும்)
அந்தப் பையனைப் பற்றி அனைத்தும் அறிந்துகொண்ட அபரி, கடவுளை வேண்டிக் கொண்டாள். “கடவுளே! மற்றவர்களைப் போல அல்லாமல், பிறப்பிலேயே எனக்குக் கால் ஊனத்தை அளித்தாய். இன்றைக்கோ, எனக்கு அமையவிருக்கும் வாழ்க்கைத் துணையிலும் கூட இப்படிக் கஷ்டத்தைத் தரப் போகிறாயே!’ என் ஒரு கால் ஊனமாக இருந்தாலும், நான் நடப்பதற்குக் கூட இயலாமல் போயிருப்பேன். என்னை அறியாமையில் தள்ளி ஒன்றுக்கும் உதவாதவளாய் ஆக்கி விட்டாயே! என் மனம் விரும்பாத ஒருவனைக் கல்யாணம் செய்து கொண்டு எப்படி மகிழ்ச்சியாக இருக்கமுடியும்? நான் என் சொந்தக் காலில் நிற்க இயலாதா? அவனைத் திருமணம் செய்துகொள்வது சரியாக இருக்குமா? கைவளையலைத் திருப்பித் தருவதுதான் உசிதமாக இருக்கும்.”
அப்படி ஒன்றும் அபரி முடமானவள் என்று சொல்லிவிட முடியாது. சிறு வயதாக இருந்த போதே, அவளது ஒரு காலில் கட்டி ஒன்று இருந்தது. அதைக் கவனிக்காமல் விட்டுவிட்டதால் அது கடினப் பட்டுக் கட்டியாக நின்றுபோனது. அது புரையோடிக் கால் கோணலாகப் போனது. வீட்டு வேலைகளுக்கு அது ஒன்றும் இடைஞ்சலாக இல்லை. துணி துவைப்பது, தண்ணீர் மொண்டு வருவது, தறி நெய்வது போன்ற வற்றைச் செய்து வந்தாள். ஒரு சமயம் கைத்தறி பின்னல் போட்டியில் முதல் பரிசு பெற்றிருந்தாள். சிலரது விருப்பத்திற்கிணங்க, ஏன் அவள் ஒரு திருமணப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்? எந்தப் பெண்ணும் அவளுக்கு வரக்கூடிய கணவன் தன்னைக் காட்டிலும் எல்லா வகையிலும் சிறப்பாக இருக்கவேண்டும் என்று தானே நினைப்பாள். அவள் மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்?
2
மூன்று கோடைக்காலங்கள் அமைதியாய்க் கழிந்தன. அதற்கிடையே கிராமத்தில் அபரியைக் காட்டிலும் வயதில் இளயவர்களாக இருந்தவர்களுக்குத் திருமணம் ஆகியிருந்தது. ஒரு சிலருக்கே திருமணம் ஆகாதிருந்தது. இப்போது அபரிக்குத் தோழியர்கள் அவர்கள் மட்டுமே. அவளுடைய சகோதரி மைத்ரிக்கும் திருமண வயது வந்ததுவிட்டது. அபரியின் மனம் மெல்ல மெல்ல வேறுவிதமாக மாறிப்போயிருந்தது. மற்றவரிடமிருந்து விலகியே இருந்தாள். மௌனத்தைக் கடை பிடித்தாள்.
ஒருநாள், ஐஜிகுரி கிராமத்திலிருந்து ஆறேழு பேர் மைத்ரியின் திருமணத்திற்குப் பாக்கு நறுக்குவதற்காக அவளது வீட்டுக்கு வந்தனர். அபரியின் நிலை பற்றிய தகவல் இன்னும் அவளுக்குத் தெரியவில்லை. வேறொரு கூட்டம் அவளைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறது என்று நினைத்து ஆச்சரியப்பட்டாள். அந்த வீட்டைப் பொறுத்தவரை அவள் தான் இப்போது மூத்த பெண். அவள் எதிர்பார்ப்பிலும், நம்பிக்கையற்ற நிலையிலுமாக இருந்தாள்.
வந்திருக்கும் மாப்பிள்ளை வீட்டாரிடம்- பாக்கு நறுக்க வந்தோரிடம் கைவளை அளித்தவரிடம் அவளுக்கு எரிச்சலும், வேண்டா வெறுப்பும் உண்டாயின. தனக்கு வரவிருப்பவன் வசதியானவனா, அழகா இருப்பானா என்று தன்னிடம் சொல்வார்கள் என்ற எண்ணத்தில் அவளுக்கு நம்பிக்கை இல்லை.
அபரிக்காக மாப்பிள்ளை வீட்டார் அளித்த கைவளையை அண்ணனும், அம்மாவும் மைத்ரிக்காக வைத்துக்கொண்டனர். குழப்பத் தில் ஆழ்ந்தவளாய், அவள் அம்மாவைப் பார்த்து, “கைவளையலை ஏன் வைத்திருக்கிறீர்கள்? எங்கிட்ட கூட இதெ பத்தி ஒண்ணும் கேட்கலையே? அந்தப் பையனை நான் மறுத்துட்டேனா என்னாகும்?” ஆலங்கட்டியால் வீழ்த்தப்பட்ட புறாவைப்போல அம்மா வாய் மூடி மௌனமானாள். அபரியின் கேள்விக்கணை அம்மாவின் இதயத்தை ஊடுருவியது. அவள் தனக்குள் சொல்லிக்கொண்டாள். “தப்புதான். அவ்வாறு செய்தது. கைவளையலை வாங்கிக்கொண்டு மூத்த பெண் இருக்க, இளையவளுக்குத் திருமணம் முடிக்க நினைத்தது, பாவம் தான் அவ்வாறு செய்ய நினைத்தது. தப்பான செயல்தான். நடந்தவற்றை அவளிடம் கேட்டுக்கொண்டு செய்யாதது குற்றந்தான். உண்மையில் அவளுக்கல்லவா முதலில் திருமணத்தைச் செய்திருக்கணும்.”
அம்மா தன்னிடம் எதையும் சொல்லாதது கண்டு, அபரி மிகவும் வேதனைப்பட்டாள். என்றாலும் அவள் அம்மாவைப் பார்த்து, “ஏம்மா, பதில் பேசாம இருக்கீங்க? நான் கேட்ட விதத்தில் கேட்கக்கூடாததைத் தப்பா ஏதாச்சும் கேட்டுட்டேனா?” மூச்சுவாங்கியபடியே அவள் அம்மா, தொண்டையை ஈரப்படுத்திக் கொண்டு, “அந்தப் பையன் அழகா. ஆங்கில நடுநிலைப்பள்ளி வரை படிச்சவனா இருந்தான். அதனால” என்று அம்மா விடை சொன்னாள்.
“நல்லது. அவனோட குணமும் தோற்றமும் எப்படி?”
அந்த விஷயத்தை அத்தோடு முடிக்க நினைத்தவளாய், அம்மா அவளிடத்துச் சொன்னாள்: “நீயே பின்னாலே புரிஞ்சுக்குவே.”
சொந்த மகளிடத்து ஒரு நாடகம் நடத்திவிட்டு அம்மா மௌனியானாள். அபரி ஒரு கெட்டிக்காரி. அவளுக்குச் சந்தேகம் வலுத்தது. அம்மாவும், அண்ணனும் சேர்ந்து கொண்டு செய்த அந்தத் தந்திரத்தைப் புரிந்துகொண்டாள். அவளுக்காக அல்ல கைவளை பெற்றது. மைத்ரிக்காக என்பதைப் புரிந்துகொண்டாள். அவர்கள் அதனை வெளிப்படுத்த மாட்டார்கள் என்பதைச் சூசகமாக அறிந்து கொண்டாள். அதனை அறிந்து கொண்டதும் அபரியின் உதட்டளவில் கட்டுப்படுத்திக் கொண்ட ஒரு சிரிப்பு. தலை குனிந்துகொண்டாள்.
3
“அபரி ஏன் அப்படி இ ளைத்துப் போய்விட்டாள்? எலும் பெல்லாம் வெளியே தெரிகிறதே!” அவளது உடல் நிலையைப் பற்றிக் கிராம மக்கள் கிசுகிசுத்தனர். இளமையில் ஒளி வீசிய எழில் முகம் வாடிப்போய் இருந்தது. கன்னங்களும் சுருங்கிவிட்டன. கண்களும் ஒளி மங்கி இருந்தன. அவள் ஒருநாள் தலை சீவினால், ஒருவாரம் முழுதும் கலையாமல் இருக்கும். இப்போது தலை எண்ணெய் கண்டு நாளாயிற்று. விதிவிலக்காக யாரேனும் அது பற்றிக் கேட்டுவைத்தால், அமைதியான முறையில் ஒருவித மறுப்புடன், “நானே என்னை அலங்கரிக்கிற வயசில்லே. இப்ப அது பார்க்க அழகற்றதாக இருக்கும்” என்பாள். கிராமத்துக்கு வந்த மருமகள்களிடம் அவ்வளவாக அவள் கலந்து பழகவில்லை. ஏற்கெனவே அம்மாவாகி இருந்தவர்களிடம் தோழமை கொண்டிருந்தாள். எல்லாவித மகிழ்ச்சியையும், கேளிக்கையையும் தவிர்த்தாள். இயந்திரம் போல, அவள் வீட்டு வேலைகளைச் செய்யத் தொடங்கினாள். இளைய சகோதரரிடம் சகோதரிகளிடமும் அவள் நடந்துகொண்ட முறையில் மாற்றம் தெரிந்தது. கெட்ட பேச்சுகளில் பங்கேற்பதை வெறுத்தாள். இன்பம் என்ற ஒன்று வருமானால், அது அவள் வாழ்க்கையில் மின்னொளி போல வந்தால்தான் உண்டு.
ஒரு சிறு நிகழ்ச்சி அவளது இதயத்தில் அடிக்கடி ஊடுருவி இருந்தது. அவளது மனக்கண்ணாடியில் ஒரு முகம் அடிக்கடி எதிரொலித்தது. அவள் வெட்கினாள். செயலற்றவளாக இருந்தாள். இதயம் எதையோ தேடியது. ஆனால், உதடு இறுக்கமாகியது.
மைத்ரி திருமணம் விமரிசையாக நடந்தது. அவள் இப்போது அவளுடைய கணவன் வீட்டில் இருந்தாள். அடுத்த வீட்டுத் தோழியர் திருமணங்களில் அவள் கலந்துகொண்டு பரிகசித்ததுபோல, அபரி தன் தங்கை திருமணத்திலும் சிறிது அதனை வெளிப்படுத்தியது போலக் காணப்பட்டாள். சில நாள்களுக்குப் பின்னர், அவளது முகம் மாறி விட்டது. இதயம் வெற்றிடமாகிப்போனது. திருமண வாழ்க்கையே தனக்கு அமையாமல் போய்விடும் என்று எண்ணி ஆச்சரியப்பட்டாள்.
அபரியின் அண்ணன் கைவளையை மாப்பிள்ளை வீட்டாருக்குத் திருப்பித் தந்ததைக் கிராம மக்கள் குறை கூறினார்கள். அந்தப் பழி அபரியின் பொருட்டு அவனுக்கு வந்து சேர்ந்தது. அவன் சொன்னான்: “வீட்டிலும், வெளியிலும் வசவுகளும், அவமானமும் உன்னால் அல்லவா எனக்கு வந்து சேர்ந்தது. விட்டு விலகு அல்லது ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்” என்றான். அந்த வார்த்தைகள் அவளை வருத்தத்திற்கு உள்ளாக்கின. அந்த வீட்டின் புனிதத்தை நிலை நிறுத்த இயலாமல் போய்த் தோல்வியுற்ற நிலையில் அவள் கீழே விழுந்தாள். வீட்டை விட்டு எங்கும் வெளியே செல்ல மனமின்றி, ஒரடி எடுத்து வைக்கவும் திடமின்றி, அம்மாவை இழக்கப் போகிறோமே என்ற சிந்தனையும் சேர்ந்துகொண்டது.
அடுத்த கோடை வந்தது. அபரியின் மனம் திருமண எண்ணத்தி லிருந்து முற்றிலும் மாறி இருந்தது. திடீரென்று அவளிடத்து நம்பிக்கைக் கீற்று ஆற்றின் மடியிலிருந்து வரும் உரத்த ஓசையாய் எழுந்தது. சிமலுகுரி கிராமத்தில் இருந்த இளைஞன் ஒருவன் அவளைத் திருமணம் செய்துகொள்ளதாக இருப்பதாக அறிந்தாள். அவன் அழகானவன். ஒரு திருமணத்தில் அவளை அவன் பார்த்திருக்கிறான். அவள் அவனை விரும்பியதற்காக அல்ல. அவனது யோசனை அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அவன் அவளை வீட்டை விட்டுத் தன்னோடு ஓடிவந்துவிடுமாறு சொன்னான்.
அபரி மெல்லத் தீ.மானித்தாள். அது அவளுக்கு வெட்கம் கெட்ட செயலாகத் தெரியவில்லை. அவள் சுயமாக முடிவெடுத்தாள்.
ஒரு நாள், நல்ல தருணத்தில், அபரி, கழுத்தில் நெக்லஸுடன், கைகளில் வளையலுடன், மூக்கில் வளையத்துடன், அந்த இளைஞன் வீட்டைச் சென்றடைந்தாள். மகிழ்ச்சியும் இன்பமும் அவளிடத்து நிறைந்தன.

மங்கல் சிங் கசோவாரி/அருகிலும் தொலைவிலும் – விருட்சம் நாளிதழ்