ஆனந்த்/உன் குரல்

20.05.2025 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்வில் வாசித்த பிறர் கவிதைகள்

வீட்டுப் படியிறங்கி நடந்து
தெருக்கள் பல தாண்டி
பொருட்கள் கடலாய்க் கிடக்கும்
கடைவீதியைக் கடந்து
நெடிதுயர்ந்து நிற்கும்
அந்த நிலைவாசலைத்
தாண்டிய பின்னும்
சில ஓசைகள்
காதில் விழுகின்றன.

உலகின் குரல்கள் சற்றே அடங்கிய
வெளிப்பிரகாரத்து வெளிச்சம் விட்டு
உள்பிரகாரத்து
அறையிருளில் செல்லும்போது
மூதாதையரின் குரல்கள்
காதருகில் மெல்ல
ரகசியங்கள் சொல்கின்றன.

கர்ப்பக் கிருகத்து முழு இருளில்
புகுந்த பின்னர் உள்ளிருந்து
ஒரு இருள் வண்ண நிசப்தம்
வெளியே பொருட்கள் மீது
மிகவும் மெளனமாக
ஒளியாய்
எதிரொலிக்கும் நேரங்களில்
நீ என்னுடன்
எங்கும் இருப்பதாக
உணர்கிறேன்

கைகள் மடியின் மேல்
ஓய்ந்திருக்கக் கண்ணெதிரே
வீணையில் ஒரு கானம்
தானாக இழைகிறது.

நண்பர்களுடன் பேசும்போது
சடாரென உன் குரல்
ஒரு வாக்கியத்தை உதிர்க்கிறது.

பழகிப் போனது
போல் தெரிந்தாலும்
அதிசயம் சிறிதும் குறையவில்லை
நம் உறவில்.