
அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 42
காற்றின் உரசலில் கிசுகிசுத்துக் கொண்டிருந்தன வேப்பமரத்து இலைகள். பல்வேறு வகை பறவைகளின் கீதம் மென்மையாக ஊடுருவி எதிர்வீட்டு ஜன்னலில் தொங்கிக் கொண்டிருந்த வெண்ணிற திரைச்சீலையை அவ்வப்போது தொட்டுத் தொட்டு விளையாடிக் கொண்டிருந்தது. ஜன்னலின் வலது பக்க ஓரத்தில் ஒரு மரத்தினாலான மேஜை. அதன் மீது ஒரு பேனா ஸ்டேண்ட். பேனாக்களும் கூர்மையாக்கப்பட்ட ஒரு சில பென்சில்களும் எரேசருடன் மாலை வெய்யிலின் தழுவலில் இளைப்பாறிக் கொண்டிருந்தன. வசீகரிக்கும் மணத்துடன் அறையை நிரப்பிக் கொண்டிருந்தன மண் குடுவையில் இருந்த ரோஜா மலர்கள்.
அது ஒரு சின்னஞ்சிறிய அறை. ஒருவர் மட்டும் விஸ்தாரமாக புழங்கத் தேவையான இடமும் ஒற்றை மரக்கட்டிலும் ஒரு மரபீரோவும் எனத் தூய்மையாக இருந்தது. பழங்காலத்து வடிவமைப்புடன் ஒரு மர நாற்காலி மேஜையின் முன்பு அமைதியாக வீற்றிருந்தது. கொஞ்சமாக திறந்திருந்த கதவின் முன் வாசலில் இருந்த இளம்நீல வண்ண திரைச்சீலையில் வாடாத நித்திய சிகப்பு மஞ்சள் வெள்ளை மலர்கள் லேசாக அசைந்து கொண்டிருந்தன. அறை முழுவதும் அமைதியும் மெதுவாக வீசும் காற்றும் ஒரே சீராக தவழ்ந்து கொண்டிருந்தன. ஜன்னலின் வெண்ணிற திரைச்சீலையின் நடன அசைவில் திறந்து திறந்து மூடிக்கொண்டிருந்தன அருகருகே வைக்கப்பட்டிருந்த நாட்குறிப்பும் கையேடும்.
0
நிசப்தத்தின் மொழியில் தம்மை ஒன்றுடன் ஒன்று அறிமுகப்படுத்திக் கொண்டன நாட்குறிப்பும் கையேடும்.
கையேடு சொன்னது நான் அவளின் வாழ்க்கைக் குறிப்புகளில் முதல் இடம் வகிக்கிறேன். அவளுக்குத் தேவையான காரியங்களை செய்வது குறித்து என்னில்தான் தினமும் பதிவு செய்வாள். எப்போதும் என்னை தன்னுடைய கைப்பையில் பத்திரமாக வைத்திருப்பாள். இதனை நான் மிகவும் பெருமையாக உணர்கிறேன்.
மிக மிக மெல்லிய நகைப்புடன் நாட்குறிப்பு கூறியது. ஆம், என்னால் உந்தன் பகிர்வை புரிந்து கொள்ள முடிகிறது. அவளின் அன்றாடத்தின் பதிவுகள் சிறு குறிப்புகளாக உன்னில்தான் எழுதப்படுகின்றன. ஆனால் நான் அவளின் ஆரம்பமாக இருக்கிறேன்.
சிறு ஆதங்கத்துடன் கையேடு வினவியது. முதலுக்கும் ஆரம்பத்திற்கும் என்ன வித்தியாசம், இரண்டும் ஒன்றுதானே.
ம்ம்ம்ம்ம் எனச் சற்றுநேரம் யோசித்து நாட்குறிப்பு பதிலளித்தது. ஆங்கிலத்தில் முதல் என்றால் first என்றுதானே அர்த்தம். எதை எப்படி எப்போது செய்ய வேண்டும் என தினசரி வாழ்வின் நிகழ்வுகளை சிறுகுறிப்புகளாக குறித்து வைத்துக் கொள்வதால் அன்றைய பொழுதை முடிந்த மட்டும் உபயோகமாக நகர்த்த முடிகிறது. ஆனால் ஆரம்பம் என்பது the beginning என்பதாகும். அவளின் பிறப்பு முதல் தற்போதைய வாழ்வின் நிகழ்வுகளுடன் வருங்கால தேவைக்குரிய அத்தியாவசியமான மாற்றங்கள் குறித்தும் அலசல்களையும் கருத்துகளையும் என்னில் எழுதி வைப்பதால் கடந்தகாலம் நிகழ்காலம் வருங்காலம் என முக்காலங்களின் தொகுப்பும் ஆரம்பத்தின் பிரதிகளாக பதிவுறுகின்றன, தெரியுமா.
சற்று நேர அமைதிக்குப்பின் கையேடு, நமக்குள் நாம் நம்மைப்பற்றியே பெருமைப்படுவதை தவிர்த்து இந்த மானுட வாழ்வின் பரபரப்பான இயக்கத்தில் எதை இந்த மனிதர்கள் முக்கியம் எனக் கருதி வாழ்நாள் முழுமையும் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்று கேள்வி கேட்டது.
நாட்குறிப்பு சொன்னது, தாமாகவே தோற்றுவித்துக் கொள்ளும் அநுமானங்கள்தான் வாழ்வின் சிக்கலின் முதல் முடிச்சாகத் தோன்றுகிறது என நான் நினைக்கிறேன். அம்முடிச்சைப் பிரிப்பதற்கான முயற்சியில் ஒருசிலர் புதியன கற்றல் என்று கவனத்தைச் செலுத்தி அதில் இருந்து நல்ல புரிதலுடன் வெளியேறவும் செய்கின்றனர். பலர், தான் என்பதை பெரிதாக்கி மேலும் மேலும் புதிய சிக்கல்களாலான முடிச்சுகளுக்குள் மூழ்கவும் செய்கின்றனர். சிக்கலின் முடிச்சவிழ்க்கும் முறையில் தேடல் துவங்குகிறது. தேடலில் அலையும் மனம் விடுபடல், தொலைதல் என இருவகையான செயல்பாட்டின் கட்டுக்குள் வருகிறது என்றது.
கையேடு ஆச்சரியத்துடன் அப்படியானல் மனித மனம்தான் அனைத்து விதமான வாழ்வியல் முறைமைகளுக்கும் அடிப்படை ஸ்தானம் ஆகிறது என்கிறாயா எனக் கேட்டது.
ஒரு விதத்தில் நீ சொல்வது போல்தான் என்றது நாட்குறிப்பு. கை சொடுக்கும் நேரம் கூட மனம் தனித்து இருப்பதில்லை. எப்பொழுதும் எண்ணங்களின் தொடர் ஓட்டத்துடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு இருக்கிறது இவர்களிடம்.
தியானத்தில் மட்டும் ஏதேனும் ஓர் இலக்கில் தன்னை பதித்துக்கொள்கிறது மனித மனம். அப்போது எண்ணங்களை ஒருவழிப்படுத்தி கட்டுக்குள் கொண்டுவரும். மனதை ஓர்நிலை கொண்டு வரும் மானுடம் அகத் தேடலில் லயித்து புறவாழ்வின் தொடர்பு துண்டித்துக் கொள்ளாமலே உள் அமைதியை எய்தும். தனது எண்ணங்களின் வழி சிந்தனையில்லாமல் செயல்படும் மானுடம் தன் சுயத்தை தொலைத்துத் தாமாகவே பிரச்சனைகளின் பிறப்பிடமாய் மாறிவிடும்.
ஓஹ், இத்தனை விஷயங்கள் மனிதர்களிடம் உள்ளனவா என்ற கையேடு, எண்ணமும் சிந்தனையும் மனதில் உதிக்கும் செயல்கள், இருந்தும் எத்தனை வேறுபாடு உள்ளது இல்லையா என்றது.
ஆம் நீ சொல்வதும் நிஜம் என்ற நாட்குறிப்பு, எண்ணம் அறுபடாத தொடர் சங்கிலி போல் கடந்த, நிகழ்விலுள்ள, இனி நிகழ உள்ள என ஓர் பெரிய பிரிபடாத வலைக்குள் உழன்று கொண்டிருக்கும் தன்மை உடையது. இத்தகு நிலை மனதை புரிபடாத புதுப்புது சஞ்சலங்களுக்கு ஆட்படுத்தும். ஆனால் சிந்தனை அப்படியல்ல. தேவை, தேவையற்றது என பிரித்துப் பார்க்கும் இயல்புடையது. இது மனதை ஒருமுகப்படுத்த உதவுவதால் சற்று நிதானத்துடன் செயல்பட முடிகிறது.
நிதானம் அமைதியை உருவாக்கும். சஞ்சலம் எப்போதும் தர்க்கத்தின் வழியை கையாண்டு தான் மிகவும் அறிவுப்பூர்வமாய் இருப்பதாக மாயத் தோற்றம் தரும். நிதானம் அவ்வாறில்லாமல் பிசகில்லாத செயல் வழியை மட்டும் சரியான சமயத்தில் புரிதலுடன் செயல் படுத்தும்.
மானுடத்தின் தோற்றத்தில் மனம் எப்படியிருக்கும் எங்கிருந்து செயல்படுகிறது என்னும் புதிர், எனக்குள் எப்போதும் இருக்கும் என்றது கையேடு.
மனம்.. என்று பதிலளித்த நாட்குறிப்பு, அது ஓர் மிகப் பெரிய திறந்தவெளி. ஒவ்வொரு மானுடத்தின் மனமும் வெவ்வேறு கோணத்தில் கண்ணுக்குப் புலப்படாத இருப்பில் செயல்படும். மனித மனம் ஓர் அதிசயம். சில எண்ணங்களினால் வாழ்வில் அற்புதமான உயர்வை உண்டாக்கும். சில சமயம் யோசித்தே பார்க்க முடியாத அழிவையும் ஏற்படுத்தும். மானுடத்தைத் துயரங்களில் இருந்து தடுத்தாட்கொள்வதும் தடுக்கி விழ ஏதுவாக இருப்பதும் மனம்தான்…
0
திறந்திருந்த வாசல் கதவின் வழியே அவள் உள்ளே வந்தாள். மின் விளக்கை எரியவிட்டு மெதுவாக அறையினுள் ஊடுருவிய இருளை விலக்கி வைத்தாள். ஜன்னலின் அருகில் வந்து நின்று மேக மூட்டத்தின் அழுத்தத்தில் இருந்து திமிறிக் கொண்டு வெளியே வந்து புன்னகைத்த முழுநிலவைக் கண்டு மென்னகைத்தாள். தூரத்து மலைகளின் பகல் நேர இளம் பசும் போர்வை இரவின் நிலவொளியில் கரும்பச்சைக் கம்பளியில் சுருண்டிருந்ததைப் பார்த்தபடி ரொம்ப நேரம் நின்றிருந்தாள்.
உறக்கத்தினூடே சிணுங்கும் சிறு குழந்தைபோல் சிறகுகளை படபடத்துத் துயில் கொள்ள முனையும் பறவைகளின் ஓசை இவள் ரசிக்கும் தினசரி இசை. எதிரில் இருந்த மரத்தை ஒட்டி இருந்த நீள் சாலையில் ஓரிரு வாகனங்கள் எதிரும் புதிருமாக பயணித்துக் கொண்டிருந்தன. சாலையின் மறுபக்கம் வரிசையாக இருந்த வீடுகளின் முன் பக்கம் பூத்திருந்த போகன்வில்லா மற்றும் பவளமல்லி மலர்கள் உதிர்ந்து சாலையின் ஓரங்களை அலங்கரித்திருந்தன.
0
அவளின் வருகையால் கையேடும் நாட்குறிப்பும் தமக்குள் பகிர்தலை நிறுத்தி மெளனமாகிப் போயின. அவள் அடுத்தநாள் குறித்த தன் வேலைகளை சுருக்கமாகப் பதிவு செய்யக் கையேட்டைத் திறந்தாள். அலைபேசி அழைக்க, அலைபேசியில் தன் உறவுகளுடன் உரையாடியபடியே கதவைத் தாளிட்டு நீர் பருகினாள். உறங்கச் செல்வதற்கு முன் நாட்குறிப்பில் சில பக்கங்களை நிரப்பினாள். மின் விளக்கை அணைத்து நிலவொளியின் அணைப்பில் உறங்கிப் போனாள்.
0
அழுத்தம் கூடிய மழைமேகங்கள் கூடி நிலவை மறைத்து சட்டென சடசடவென பெருந்துளிகளை உதிர்க்கத் துவங்கியது மழை. அதிரடியாக பட்டாசு வெடிப்பது போல் இடியும் எதிபாராத மின்னலின் நடனமும் இரவின் இருளை அடர்ந்து பரவச் செய்தன.
மின்சாரமும் நின்று போனது. இருப்பினும் மழைச் சாரலால் அறையுள் குளுமை படர்ந்தது. இருளின் ஆதிக்கம் கூடுதலாக ஆனது.
நாட்குறிப்பு கையேட்டிடம் மெல்லோசையில் சொன்னது: இந்த இருளை இவள் என்னில் எழுதும் போது தாயின் கருவறையில் இருப்பது போலுள்ளது; மண்ணறையின் இருளும் குளிர்ச்சியும் இப்படித்தான் இருக்கும் போல என்றே எழுதுவாள்.
படைப்பில் உருவாகும் அனைத்து உயிருள்ள உயிரற்ற எல்லாவற்றிற்கும் ஓர் அகாலம் உண்டு என்று உரையாடலை முடித்து அமைதியானது கையேடு.
0
மொழியற்ற நிசப்தம் மட்டும் வெளியில் படர்ந்தது. நடுநிசி மெல்ல மெல்ல கரையத் துவங்கியது.
ஆசிரியர் குறிப்பு
இயற்பெயர் அஷ்ரஃப் பேகம் (பி 1956). இவர் ஒரு இல்லத்தரசி மற்றும் NLP PRACTITIONER. சேலத்தில் வசித்து வருபவர்.
ஐம்பதுகளின் பிற்பகுதியில் எழுத முனைந்தவர்.
கவிதைகளை சிறகா என்ற பெயரிலும் உரைநடை, கதை போன்றவற்றை பெஷாரா என்ற பெயரிலும் தொடர்ந்து எழுதி வருபவர்.
இவருடைய படைப்புகள் மலைகள்.காம், குவிகம் இணைய இதழ்களிலும் நவீன விருட்சம், சொற்கள், காலச்சுவடு போன்ற அச்சு இதழ்களிலும் வெளிவந்துள்ளன.
இவருடைய குறுநாவல் ஒன்று குவிகம் பரிசுப் போட்டியில் வென்றது குறிப்பிடத் தக்கது.

One Comment on “பெஷாரா/ இப்போதில் அவள் அறை”
Comments are closed.