அனுராதா ஜெய்ஷங்கர்/ உயிர்த்துளி

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 43

“ராகவ், குழந்தை அழறான். போய் பாருங்களேன். நான் பாலை காய்ச்சி எடுத்துட்டு வந்துடறேன்”.
சமையல் அறையிலிருந்து காவியா குரல் கொடுக்க வெளியே உணவு மேசையில் அமர்ந்தபடி அலைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்த ராகவ் அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டுத் திரும்பவும் அலைபேசியில் கவனம் செலுத்தினான்.
குழந்தை அழுகிற குரல் தெளிவாகக் காவியாவிற்குக் கேட்க அவளுக்குக் கோபம் தலைக்கு மேலிட்டது.
அதே சமயம் அறைக்குள் இருந்து அவள் அப்பா வெளிப்பட்டார்.
” என்னம்மா?”
” ஓ,அப்பா நீங்க இருக்கிறீர்களா? குழந்தையை பார்க்கத்தான் வேகமா வந்தேன். நீங்க இருக்கிறதே மறந்துட்டேன்ப்பா. கொஞ்சம் தட்டி தூங்க பண்ணுங்க” என்று சொல்ல அவள் அப்பா ஒன்றும் சொல்லாமல் அறைக்குள் திரும்பிப் போனார்.
“ஒரு நிமிஷம் உக்காரு காவ்யா”.
அவனை முறைத்தபடி நின்றாள்.
” போய் பாலை காய்ச்சணும். நீங்க மட்டும் காபி குடிச்சா போதுமா?”
நகர முற்பட்டவளின் தோள்களை அழுத்திப் பிடித்து நாற்காலியில் உட்கார வைத்தான். அவளுக்குப் பின்புறமாக நின்று மெதுவாக அவள் தோள்களைப் பிடித்து விட்டான்.
” காவியா..ரெண்டு நிமிஷம் கண்ணை மூடிக்கோயேன்”.
“என்ன சொல்லுங்க?”
கைகளை அவள் நெற்றியின் மேல் வைத்து மென்மையாக அழுத்தி விட்டான்.
“கொஞ்சம் ரிலாக்ஸ்மா “.
காவியா திடீரென அவன் கைகளைத் தட்டி விட்டாள். அவள் முகத் தசைகள் இறுகின. நாற்காலியைத் தள்ளிக் கொண்டு வேகமாக எழுந்தாள். எழுந்த வேகத்தில் திரும்பவும் அமர்ந்தாள். இரு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டாள். ராகவ் மெல்ல அவள் முதுகைத் தடவி விட்டான். சில வினாடிகளிலேயே தசைகள் இளகுவதும் உடல் மெல்லத் துவளுவதையும் அவனால் உணர முடிந்தது. காவியா மேசை மேல் கவிழ்ந்து பெரிதாக அழ ஆரம்பித்தாள்.
“ஐயோ, என் குழந்தையை நானே கொன்னுட்டேனே. நான் ஒரு அம்மாவா? கடவுளே, நீ கொடுத்த தங்கத்தை என்னால சரியா பார்த்து வளர்க்க முடியலையே? எனக்கு இன்னும் ஒன்றும் ஆகாமல் இருக்கே. என்னைச் சாக விடுங்களேன் ப்ளீஸ் ” கதறி அழுதாள்.
அவள் சத்தம் கேட்டு அவள் அப்பாவும் உள்ளிருந்து விரைந்து வர இருவரும் சேர்ந்து அவளை நிதானப்படுத்த முயன்றார்கள்.
” காவியா, ப்ளீஸ்மா . ரிலாக்ஸ். நீ எந்த தப்பு பண்ணலடா. சொல்றத கேளு “.
இருவரும் மாற்றி மாற்றிச் சொல்ல எதுவுமே அவள் காதில் விழவில்லை.
” நீங்க ஆபீசுக்கு கிளம்புங்க மாப்பிள்ளை. நான் பார்த்துக்கிறேன்”.
” இல்ல மாமா. இந்த நிலைமையில் இவளை விட்டுட்டு என்னால போக முடியாது. எனக்கு இவள் நினைவாகவும் குழந்தை நினைவாகவுமே இருக்கு” என்றான் ராகவ் பரிதாபமாக.
” ஒரு மாசம் ஆச்சு. நீங்க மனச தேத்திக்கனும் மாப்பிள்ளை. நீங்கத் தைரியமாக இருந்தால்தானே இவளைச் சமாளிக்க முடியும். எனக்கும் ஊருக்கு போகணும். போட்டது போட்டபடி ஓடி வந்தேன். வேலையெல்லாம் முடிச்சிட்டு நான் வந்து கூட இருக்கேன். பத்து நாள் மட்டும் நீங்க லீவு போட முடியுமான்னு ஆபீஸ்ல கேட்டுப் பாருங்களேன்”.
” உங்களால பாத்துக்க முடியுமா?”
” நான் பாத்துக்குறேன். நீங்க லீவுக்கு ஏற்பாடு பண்ணிட்டு வாங்க”.
அரைகுறை மனதோடு அவர் முன்னாலேயே அவளின் நெற்றியில் மெல்ல முத்தமிட்டு விட்டு ராகவ் கிளம்பினான்.

                                                     ***********

“ராகவ், என்னை மன்னிப்பீங்களா?”
படுக்கையில் அவள் சாயும்படி தலையணையை சரி செய்த ராகவ் நெருங்கி உட்கார்ந்து அவளை அணைத்துக் கொண்டான்.
” நீ தப்பு பண்ணல காவியா”.
” இல்லை. அஞ்சு நாளா ஜுரமா கிடந்த குழந்தையின் பக்கத்துல இருந்த நான் தூங்கி இருக்கலாமா? அந்த அஞ்சு நிமிஷத்துலதானே அவனுக்கு ஃபிட்ஸ் வந்தது. நான் கவனமா இருந்திருந்தா உடனே ஆஸ்பத்திரி போய் இருக்கலாமே. என் கையிலேயே என் உயிர் என்னை விட்டு போறதை நான் தடுத்திருக்க முடியுமே. எப்படி எனக்கு தூக்கம் வந்திருக்கும்? நான் ஒரு அம்மாவா? ” என்று திரும்பவும் அழ ஆரம்பித்தாள்.
“காவியா, உலகத்துல நடக்குற எல்லா விஷயத்துக்குமே நல்லதோ, கெட்டதோ ஒரு கருவி வேணும். நாம எல்லாருமே கருவிகள்தான். ரெண்டு வருஷம்தான் அவனுக்கு இந்த உலகத்தில் இருக்கணும், தன்னோட கர்மாவ கழிச்சிட்டு போகணும்னு இருந்திருக்கு. அது நிகழறதுக்கு ஒரு கருவி வேணும், அவ்வளவுதான். உன்னோட தப்பு எதுவும் இல்லைம்மா”.
ஆதுரமாக அவன் பேசப்பேச அவன் மார்பில் சாய்ந்து அழுதழுது அடங்கிப் போனாள் காவியா.
***
இரண்டு மாதங்கள் சென்றிருக்கும். காவியாவும் ராகவும் மருத்துவரின் முன் இருந்தார்கள்.
“உங்களுக்கு எங்கள் குழந்தை பிரிந்தது தெரியும் டாக்டர். இன்னும் இவளால் அதிலிருந்து வெளிவர முடியலை. ஆனாலும் இந்த பத்து நாள்ல ரெண்டு மூணு முறை மயக்கம் போட்டு விழுந்துட்டா. அதான் காமிச்சிட்டு போகலாம்னு வந்தோம்”.
மருத்துவர் அவளை அழைத்துச் சென்று பரிசோதித்தார்.
” உங்களுக்கு ஒரு நல்ல விஷயம் சொல்லப் போறேன். காவ்யா கர்ப்பமாகி இருக்காங்க. வாழ்த்துகள். உங்க குழந்தையே உங்களுக்குத் திரும்பி வரப் போகிறான். இனிமே சந்தோஷமா இருக்கணும் காவியா” என்றார் மருத்துவர்.
ராகவ் ஒளி போல் தன்னுள் நிரம்பிப் பாய்ந்த சந்தோஷத்துடன் காவியாவின் கைகளை இறுகக் கோர்த்துப் பிடித்துக் கொண்டான் .
“தேங்க்யூ டாக்டர் . என்ன கவனம் எடுத்துக்கணும், மாத்திரை மருந்து எல்லாம் எழுதிக் கொடுத்துடுங்க”. காவியாவை புன்னகையுடன், நிம்மதியுடன் திரும்பிப் பார்த்தான். அவள் சிலையாக அமர்ந்திருந்தாள்.
“கிருஷ்ணாவே நமக்கு வரப் போறான்”
பதில் பேசாமல் நாற்காலியைத் தள்ளிக் கொண்டு எழுந்து வேகமாக அறையை விட்டு வெளியே சென்றாள்.
“டாக்டர், நாங்கள் வர்றோம் “. மருந்து சீட்டை கையில் எடுத்துக் கொண்டு அவள் பின்னாடியே ஓடினான். தங்களது காரை கவனிக்காமல் தாண்டி நடந்து கொண்டிருந்தவளை இழுத்துப் பிடிதது காரில் ஏற்றினான். அவன் கேள்விகள் எதற்குமே அவள் பதில் சொல்லாமல் இருக்க மௌனமாகவே வீடு வந்து சேர்ந்தார்கள்.
வீட்டிற்குள் நுழைந்ததும் காவியா ஆரம்பித்தாள்.
” எனக்குத் தெரியாமல் இது எப்படி நடந்தது ராகவ்? என் குழந்தை போயி இன்னும் ஆறு மாசம் கூட ஆகல. எப்படி என்னால இதுக்கு உடன்பட முடிஞ்சது? திரும்பத் திரும்ப நான் ஒரு நல்ல அம்மா இல்லை என்கிறதை நிரூபிச்சிட்டே இருக்கேன். எனக்கு இது வேண்டாம்..ஐயோ கடவுளே” என்று தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.
ராகவ் திகைத்துப் போனான். திட்டமிடாமல் நடந்திருந்தாலும் எதிர்பாராத இந்தச் செய்தி அவளுக்கு ஒரு ஆறுதலைக் கொடுக்கும், அவள் மனதைக் கொஞ்சம் திசை திருப்பும் என்றெல்லாம் எண்ணிக்கொண்டு காரை ஓட்டிக் கொண்டு வந்தவனுக்கு அவள் சொல்வது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. உள்ளே சென்று ஒரு டம்ளரில் தண்ணீரை எடுத்துக் கொண்டு வந்தான்.
“இதைக் குடி காவியா”.
தண்ணீரைக் குடித்தவள் திரும்பவும் புலம்பினாள்.
” நான்தான் பைத்தியமா இருக்கேன். நீங்க தெளிவாதானே இருக்கீங்க, உங்களுக்குத் தெரிய வேண்டாமா? எப்படி இது நடக்க முடியும்? இப்பவே என்னை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போங்க. எனக்கு இன்னொரு குழந்தையை பெத்துக்கிற அருகதை இல்ல. கொடுத்த குழந்தையை வளர்க்கத் தெரியாதவளுக்கு இன்னொரு குழந்தை எதுக்கு? என் குழந்தை போய் ஆறு மாசத்துக்குள்ள இன்னொரு குழந்தையை நான் உருவாகி இருக்கேன்னா நானெல்லாம் ஒரு அம்மாவா?” என்றபடி திரும்பவும் அரற்றத் தொடங்கினாள்.
காவியாவிற்கு தன உடலை விட்டு நகர்ந்து விட வேண்டும் போன்று இருந்தது. “இந்த அளவிற்கு சுய நினைவு இல்லாமல் இருந்து இருக்கிறேனா? ஒவ்வொரு நாளும் சாப்பிடக் கூட பிடிக்காமல் இவர்களின் வற்புறுத்தலால் உயிர் வாழ்வதாக நினைத்துக் கொண்டு இருப்பது பொய்யா? என் குழந்தை போன இடத்திற்கே நானும் போக வேண்டும் என்று சர்வ காலமும் எண்ணுவது பொய்யா? கண்ணை மூடினாலும் திறந்தாலும் அவனேயே காண்பது மாயமா? நான் ஒரு சராசரி பெண் ஜென்மமாகி விட்டேனா?” நினைத்து நினைத்து மறுகியதில் உயிரையே உருக்குலைத்து விடும்படியாக அவளது அடி வயிற்றிலிருந்து ஒரு கேவல் எழும்பியது. பயந்து போனான் ராகவ்.
அவளிடம் எப்படிச் சொல்வது? இதற்கு தன்னைவிட அவள்தான் காரணம் என்பதை அவளிடம் சொல்ல முடியுமா? அழுது அழுது புலம்பி நெகிழ்ந்து தளர்ந்து, இளகிக் கிடந்த ஒரு நேரத்தில், அவளையும் அறியாமல் தனக்குள் அவள் ஒடுங்க விழைந்ததை, தனக்குள் அவள் பரவிக் கரைய முயன்றதை, வேறு வழியில்லாமல் அவளுக்காக இருவரும் ஒன்றாய் சங்கமித்ததை இப்போது அவளிடம் எப்படிச் சொல்ல முடியும்? அந்த நிமிடம் அவள் ஆற்றுப்பட்டதை, அவளுக்குக் கிடைத்த நிம்மதியை இப்போது எப்படி உணர்த்த முடியும்?அதைச் சொன்னால் அவள் குற்ற உணர்ச்சி இன்னும் அதிகரித்து விடுமே என்று தவித்தான் ராகவ்.
“காவியா “
“கிட்ட வராதீங்க ப்ளீஸ்”.
எதுவும் பேசாமல் அவளிடம் இருந்து சற்றுத் தள்ளி உட்கார்ந்தான் ராகவ். காவியா அழ ஆரம்பித்தாள். அவளையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். தனிமைப் போர்வைகள் அவர்களைச் சூழ்ந்தன. இருள் மட்டுமே துணைக்கு இருந்தது. காலம் கரைந்து கொண்டிருந்தது. இரவும் பகலும் மாறி மாறிச் சென்றன. இந்த நொடிதான் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத ஒரு நேரத்தில் அவளது கைவிரல்கள் அவன் விரல்களைத் தேடிக் கோர்த்துக் கொண்டன. அவளது இடக்கை அவன் வலது கையை மெல்ல இழுத்துச் சென்றது. சேர்ந்த இடம் மிருதுவாக இருக்க, ராகவ் கண்களைத் திறந்து பார்த்தான். அவள் முகத்தைப் பார்த்தான்.
உலகின் அனைத்து ஜீவராசிகளையும் தோற்றுவிப்பவளாக, தனது சக்தியை அனைத்திற்கும் செலுத்தி வாழ வைப்பவளாக, அனைத்து உயிர்களையும் தனக்குள் இருத்தி அரவணைப்பவளாக, அண்டச் சராசரத்தின் ஆதார சக்தியாய் ஆகிவிட்டவளாக, அசாதாரண சாந்தத்துடனும் அழகுடனும் பொலிந்தாள் காவ்யா.
அவன் கையை தன் வயிற்றின் மேல் வைத்துக் கொண்டாள். ராகவுக்கு அவளது குழந்தையாய் தானும் மாறி விட்டது போன்று இருந்தது. அவள் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான். அறைக்குள் வெளிச்சம் மெல்லப் படர்ந்தது.

ஆசிரியர் குறிப்பு

வயது: 54

அனுராதா டிஸ்லெக்ஸியா ( dyslexia) எனப்படும் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான சிறப்பு ஆசிரியராக சென்னையில் பணிபுரிந்து வரும் பொறியியல் பட்டதாரி.
குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத் தினரின் மனநலன் மற்றும் கல்வியில் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது கதைகள் கலைமகள் நடத்திய கி. வா.ஜா நினைவுச் சிறுகதைப் போட்டி, அவள் விகடன் வெள்ளி விழா சிறுகதைப் போட்டி, குவிகம் குறும்புதினம் போட்டி , எழுத்தாளர் இராம. சுப்பையா நினைவுச் சிறுகதைப் போட்டி , எழுத்தாளர் இராஜகுரு நினைவுச் சிறுகதைப் போட்டி உள்ளிட்ட பல போட்டிகளில் பரிசுகள் பெற்று இருக்கின்றன. புதுப்புனல் என்கிற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டு இருக்கிறார். முகநூலில் இயங்கும் எழுத்துக் குழுமங்களில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

பெஷாரா/ இப்போதில் அவள் அறை – விருட்சம் நாளிதழ்

3 Comments on “அனுராதா ஜெய்ஷங்கர்/ உயிர்த்துளி”

  1. மேடம்,
    உங்கள் கைவண்ணத்தில் உருவான உளவியல் சிறுகதை.காவியாவின் மன நிலையை அழகாக படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள்.அது உண்மையும் கூட.
    வாழ்த்துக்கள்.
    சுந்தர மணிவண்ணன்.

  2. மனதின் ஆழத்தில் புதைந்த எண்ணங்களை வார்த்தைகளாக வெளி கொணர்ந்து அழகாக எழுதி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

Comments are closed.