ஆர்க்கே/போடோ சிறுகதைகள்

சாகித்ய அகாடமியின் ” போடோ சிறுகதைகள்”சிறுகதைத் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஜெய்காந்த் சர்மா இதைத் தமிழில் மொழி பெயர்த்தவர் இராம குருநாதன். முதல் பதிப்பு
2012ல். இதன் ஆங்கில மொழிபெயர்ப்பாளரான ஜெய்காந்த சர்மா தைனிக் அஸ்ஸாம் நாளிதழின் இணையாசிரியராக இருந்தவர்.

தமிழ் மொழிபெயர்ப்பாளரான இராம. குருநாதன் பச்சையப்பன் கல்லூரி பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். ஐந்து மொழி பெயர்ப்பு நூல்கள் இரண்டு நாவல்கள் பன்னிரண்டு கட்டுரைத் தொகுதிகள் இதுவரை படைத்துள்ளார்.

போடோ -கச்சாரிசு என்று அழைக்கப்படும் போடோ, இந்தோ -மங்கோலாய்ட், அல்லது இந்தோ திபெத்திய இனமான மங்கோலாய்ட் குடியினராவர். போடோ மொழிக்கும் அசாமிய மொழிக்கும் இலக்கண ஒப்புறவு உண்டு. பேச்சு மொழியாகவே இருந்த போடோ மொழி பின்னர் பயிற்று மொழியானது.

மொத்தம் பதினோரு சிறுகதைகள் உள்ளடக்கிய இந்த போடோ சிறுகதைகள் தொகுப்பில் அருகிலும்,தொலைவிலும் நான்காவது சிறுகதையாகும். இதை எழுதியவர் மங்கல் சிங் கசோவாரி. ஐந்து சிறுகதைத் தொகுதிகள் வெளியிட்டவர். 1954ல் பிறந்த இவர் அஸாமின் காக்ரச்காரில் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் முதல்வராக பணி புரிந்தவர்.

கதையின் நாயகி பிலய். அவளது கணவன்
ரமௌன். ரமௌனுக்கு பி ஏ முடித்ததும் தான் வசிக்கும் பக்கத்து ஊரிலிருந்த ஒரு அலுவலகத்தில் குமாஸ்தா வேலை. பிலயும் ஒரு மெட்ரிக்குலேட். இருக்கும் நிலபுலங்களும் அலுவலக வேலையும் குடும்பம் நடத்தப் போதுமானது.

காதல் திருமணம். பிலய்க்கு மாமியார் இல்லை. மாமனாரிடம் மரியாதையாக நடக்கும் பிலய்க்கு நல்ல பெயர்.

கதை பிலய் பார்வையில் நகருகிறது.
முதல் வரியிலியே துவங்கி விடுகிறது கதை முடிச்சு.

//இரவின் நடுநிசி. பிலய் கனவு கண்டதும் படுக்கையில் கணவனைத் தேடிப்பார்த்தாள்.
வெளியே போயிருப்பதை அறியவில்லை. அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது //

விளக்கை ஏற்றி அறை முழுவதும் தேடியும் ரமௌன் இல்லை. வெளியே தெற்குப்புறமாக வேலியில் சாய்ந்தபடி எதையோ வெறித்தபடி சிகரெட் பிடித்தபடி நிற்கும் கணவனைப் பார்த்த பிலய் வந்த சுவடு தெரியாமல் வந்து உறங்கி விடுகிறாள்.

தினம் இதே தொடர்கிறது.

ஒரு செவ்வாய்க் கிழமை. இரவு ஒன்பது மணியாகியும் அவன் வரவில்லை. கணவனில்லாமல் அவள் சாப்பிட்டதில்லை.
கணவன் கையில் கோப்புக் கட்டுக்களோடு வீட்டுக்குள் நுழைகிறான்.

அவனுக்கு இரவு உணவு தந்து விட்டு வீட்டுப் பணிகள் முடிந்து உறங்கப்போகும் பிலய்க்கு இன்றும் அதே நிலை தொடர இம்முறை தன்னுடன் மகிழ்வாக இல்லாமல் அவன் இருப்பதன் காரணத்தைக் கண்ணீர் மல்க கேட்கிறாள்.

“நான் ஒருத்தியை விரும்பியிருந்தேன். ” என்கிறான் ரமௌன்.

மெல்ல தன் மனக்கலக்கத்தைச் சொல்கிறான்.

அம்மாவிற்குப் பின் அவள்தான் தன்னை வளர்த்தவள். அவள் பெயர் ஜரௌ. ஆதாமும் அவளும் காதலித்து அவள் அப்பாவின் சம்மதத்துடன் கல்யாணமாகி அவன் மீண்டும் ராணுவத்தில் சேர ஒரு விபத்தில் ஆதாம் இறந்து போன தகவல் வருகிறது ஜரௌவிற்கு

மனமுடைந்த ஜரௌ காணாமல் போனதாக தகவல் வர எங்கும் தேடியும் பலனில்லை.

ஒரு மழை இடி இரவில் அரச மரத்தில் கறுப்பு உருவம் தொங்கியதைக் காண்கிறான்.
அது வேறு யாருமல்ல ஜரௌதான்.

அடுத்து வரும் பிலயின் கேள்வியான “ஒங்க ஞாபகத்தைப் பற்றிக் கொண்டிருக்கும் அவள் யார்?!” எனும் கேள்விக்கு ரமௌனின்
பதில் “அவள் வேறு யாருமில்லை. என்னுடைய மூத்த சகோதரிதான்!”

தன் செயலுக்கு வெட்கி வருந்தும் பிலய் ரமௌனிடம் மன்னிப்புக் கேட்கிறாள்.

பிலயின் முகத்தை இலேசாகச் செல்லமாய் தட்டிவிடும் ரமௌன் “அது குற்றமில்லே.
ஒன்னைப் பொறுத்தவரை ஒரு தவறுமில்லை.
சாதாரணமா ஒரு பொண்ணுகிட்ட இருக்கிற இயல்பான குணம்தான் . நான் ஒன்னை மன்னிச்சுட்டேன் .” என முடிக்கும் இடத்தில் கதைநாயகியின் சந்தேகம் விலகி புரிதல் உலகம் புலப்படுகிறது.

ஆண் பெண் உறவுதனின் உளச்சிக்கலை மையப்படுத்தி எழுதப்பெற்ற கதை. அதீத வர்ணனைகள் இல்லாமல் கதைக்குள் அநாவசிய கதாபாத்திரங்கள் புழங்காமல் எளிய வார்த்தைகளில் சீராக நடக்கிற கதை.

சூழல்களைச் சரிவர புரிந்து கொள்ளாத பரபரப்பும் தவறாக புரிந்து கொள்ளப்படும் படபடப்பும் கதையில் சிக்கலின்றி பின்னப்பட்டிருப்பது ஆசிரியரின் திறமைக்கு சான்று. ஆங்கில மொழிபெயர்ப்பும் தமிழ் மொழி பெயர்ப்பும் மூலக்கதையின் வீரியத்தைச் சிதைத்திருக்காது என்று நாமும் உணரும்படி இருக்கிறது.

இரவின் நடுநிசி எனத் துவங்கும் முதல் வரி
//பொழுது புலர்ந்தது. பறவைகளின் கீச்சொலி சுற்றும் முற்றும் கேட்டது. சூரியன் வெளிக்கிளம்பவும் கப்பி இருந்த இருள் மறைந்தது//என முடிவுற்றிருப்பது ஒரு முழுமைப்பயணக் குறியீட்டு வெற்றி.


—!