சுசி கிருஷ்ணமூர்த்தி/ மறுபடியும் மறுபடியும் பிறக்கிறேன்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 44

காரை பார்க் செய்து விட்டு, லிஃப்ட் வரும் வரை காத்திருக்கப் பொறுமை இல்லாமல், படியில் ஏறி தன் கேபினை நோக்கி நடந்தாள் பூஜா. கேபினில் நுழைய, அங்கு அவளுக்காகவே காத்திருந்த லதா “என்ன பூஜா ! நேற்று ராத்திரி ரொம்ப நேரமாகி விட்டதா? காரியம் எல்லாம் முடியவே ஒன்பது மணி ஆகிவிட்டது என்று உன்னோட டீம் மேட் ரவி சொன்னான். அதக்கு பிறகு வீட்டில் போய் குளித்து எல்லாம் முடித்து ஏதாவது சாப்பிட்டியா, இல்லையா?”
அவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, ஜக்கில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரை கிளாசில் ஊற்றிக் குடித்தாள் பூஜா. பிறகுத் தன் சீட்டில் உட்கார்ந்து, மேஜை மேல் வைக்கப் பட்டிருந்த தன் பெற்றோர் படத்தின் மேல் இருந்த பழைய மாலையை எடுத்துவிட்டு, தன் கைப்பையில் கொண்டு வந்திருந்த சின்ன மல்லிப்பூ மாலையைச் சாற்றி விட்டு, ஒரு நிமிடம் கண்ணை மூடி பிரார்த்தனை செய்தாள் பூஜா.
பூஜா இதெல்லாம் பண்ணி முடிக்கும் வரை வாய் திறக்காமலிருந்தாள் லதா. அவளுக்குத் தெரியும், இதெல்லாம் முடிக்காமல் பூஜா வாய் திறக்க மாட்டாள் என்று. பிரார்த்தனையை முடித்து விட்டு பூஜா, லதாவைப் பார்த்து சின்னதாகச் சிரித்து விட்டு, “ ஆமாம் லதா! ரவி உன் கிட்டே சொன்னது போல் காரியம் எல்லாம் முடியவே மணி ஒன்பதாகி விட்டது. வீடு போய்ச் சேர பத்து மணி ஆகிவிட்டது. அப்புறமா குளியல் அது இது என்று முடிந்தவுடன், சமைக்க எங்கே நேரம். ஒரு கிளாஸ் பால், பழம் என்று டின்னரை முடித்துக் கொண்டு படுத்து விட்டேன். ஆனால் அவ்வளவு டயர்டா இருந்த போதிலும் தூக்கமே வரலை. அந்த ஆக்ஸிடென்டில் இறந்து போய் எங்க டீமால் இறுதிக்கடன் செய்யப் பட்ட அந்த பரிதாபத்திற்குரிய நபர்களொட முகங்களே ஞாபகத்திற்கு வந்து தூங்க முடியாமல் செய்து விட்டது.
இதையெல்லாம் கேட்ட லதா, பூஜாவை பார்த்து, “ நீ எதற்காக இவ்வளவு கஷ்டப்படறேன்னு எனக்குப் புரியவே இல்லை, பூஜா. உடம்பை வருத்திக் கொள்வது மட்டுமல்ல. . எங்கேயாவது இந்த மாதிரி செய்தி கேட்டால், நீ பாதி வேலையில் ஓடி விடுகிறாய் என்று, ஆபிஸில் வேறே கெட்ட பெயர் ஏதோ நம்ம பாஸ் கொஞ்சம் சமூக உணர்வு உள்ளவராக இருக்கிறார் என்பதால் ஏதோ நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் எவ்வளவு நாள் இப்படி ஓடும் என்று தெரியவில்லையே – உன்னை என்னால் புரிஞ்சுக் கொள்ளவே முடியவில்லையே” என்று கொஞ்சம் உரத்த குரலில் அலுத்தாற்போல் சொன்னாள்.
லதா சொன்னதைக் கேட்ட, பூஜா கொஞ்ச நேரம் அவளையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தாள். பிறகு ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டே” லதா ! நீ ஆக்சிடன்ட் நடந்த இடத்தில் வந்து பார்த்தால் தான் உனக்குப் புரியும். அங்குச் சிலருடைய உறவினர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் கதறலைப் பார்க்கும் பொழுது இன்னும் மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதனால் தான் இந்த மாதிரி சம்பவம் நடக்கும்போதோ, இல்லை பொறுப்பு எடுத்து இறுதிக்கடன் கூடச் செய்ய உறவினர்கள் இல்லாமல் இந்த உலகத்தை விட்டுச் செல்லும் துர்பாக்கியசாலிகளுக்கு நாங்கள் இருக்கிறோம் என்று ஓடுகிறோம். யாராவது செய்ய வேண்டாமா, லதா?” என்று கொஞ்சம் எரிச்சலுடன் கேட்ட பூஜாவைப் பார்க்கச் சிரிப்பு தான் வந்தது லதாவிற்கு.
புன்சிரிப்புடன் பூஜாவை பார்த்து “ கூல்டவுன், பூஜா. இதெல்லாம் பண்ணறதுக்கு ஆஸ்பத்திரி, போலீஸ் என்று எவ்வளவோ ஆட்கள் இருக்கிறார்களே. இந்த மாதிரி ஈமக்கிரியை போன்ற விஷயங்களுக்கு நம் ஊரில் ஆண்கள் தான் முன்னே செல்வார்கள். ஒரு வீட்டில் யாராவது இறந்து விட்டால் கூட, பெண்கள் வீட்டு வாசல்வரை தான் கூட செல்வார்கள். அதன் பிறகு ஆண்கள் தான் மற்ற காரியங்கள் எல்லாம் செய்வார்கள். அதுவும் மகன் இல்லாத சிலருக்கு, சகோதரர் மகனோ இல்லை சகோதரரோ இல்லை “ நான் காரியம் செய்கிறேன் – எனக்கு அவர் தந்தை போல் தான்” என்று தாமாக முன் வரும் ஆண்களோ தான் காரியம் செய்கிறார்கள்.
ஆனால் நீ ஒரு பெண்ணாக இருந்தாலும், எதற்கு இந்த மாதிரி காரியங்களை எல்லாம் முன் வந்து செய்கிறாய்? நிறையப் பேரால் ஒரு பெண்ணாக நீ செய்யும் இந்த மாதிரி ஈமக்கிரியைகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உன் பின்னால் நிறையப் பேச்சு பேசுகிறார்கள். நாட்டில் மற்றவர்களுக்கு உதவி செய்ய எவ்வளவோ வழிகள் இருக்கிறது. உன் டீமில் இருக்கும் ஆண்கள் செய்யட்டும். நீ பண உதவி இல்லை மற்றபடி ஈமக்கிரியைக்கு முன் செய்ய வேண்டிய எல்லா முன்னேற்பாடுகளையும் செய்யலாம், இல்லையா? ஏன் நீ கொள்ளி வைப்பது வரை எல்லாத்தையும் நீயே செய்யணும்னு பிடிவாதம் பிடிக்கிறாய்?” என்று கேட்க, பூஜா,
“ லதா ! நீ கேட்பதும் சரிதான். இன்னிக்கு நாடே இவ்வளவு முன்னேறி இருக்கும் போது, இந்த மாதிரி ஈமக்கிரியை எல்லாம் செய்வது ஆண்களின் உரிமையாகவே கருதப் படுகிறது. ஏதோ சில இடங்களில் மட்டும் இது மாறி வருகிறது. ஆனால் நான் இதைச் செய்வதற்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது. எங்கள் சமூகத்தில் ஆண்களுக்குத் தான் மதிப்பு அதிகம். ஆண் குழந்தை பிறந்தால் பெரிய கொண்டாட்டம் நடத்துவதும் , பெண் குழந்தை பிறந்தால் சோகம் கொண்டாடுவதும் தான் வழக்கம். நிறைய பெண் குழந்தைகளைக் கருவிலேயே அழிப்பதும் வழக்கம் தான். அந்த மாதிரி ஒரு குடும்பத்தில் தான் அதுவும் தவிர நான் பிறக்கும் பொழுது என் தாயாருக்குக் கர்ப்பத்தில் ஏதோ பிரச்சினை ஆகி, இனி அடுத்த குழந்தை பிறப்பது கடினம் என்று சொல்லி விட்டார்கள். என் பாட்டியோ என் தந்தையிடம் “ இதைப் பாரு ! உனக்குக் கொள்ளி வைக்க ஆப்பிளைப் பிள்ளை வேண்டாமா? இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ” என்று கூடச் சொல்ல ஆரம்பித்து விட்டாள். அந்த சமயம் என் தந்தை சொன்னது இதுதான். “என் மகள் தான் எனக்குக் கொள்ளி போடப் போகிறாள். ஆப்பிளைப் பிள்ளை தான் கொள்ளி போடாணும்னு எங்கேயாவது எழுதியிருக்கா என்ன?” .
இதைச் சொன்னதுடன் நிற்கவில்லை என் தந்தை . எனக்கு என்னவெல்லாம் கற்றுக் கொள்ள ஆசை இருந்ததோ அதையெல்லாம் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார். நான் நடனமும் கற்றுக் கொண்டேன். அதே சமயம் குதிரையேற்றமும் கற்றுக் கொண்டேன். ஆனால் அவ்வப்போது ஒன்று மட்டும் சொல்லிக் கொண்டே இருப்பார், அது “யார் என்ன சொன்னாலும் எனக்கும் அம்மாவிற்கும் கொள்ளி போடப் போவது என்னோட செல்லம் பூஜாதான்” என்று. ஆனால் என் பாட்டிக்குக் கொள்ளி வைத்தது என் தந்தைதான்.
கல்லூரி படிப்பு முடித்ததுமே எனக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்து விட்டது. நான் போவதற்குத் தயங்கினாலும், என் தந்தை பிடிவாதமாக என்னை அனுப்பி வைத்தார். ஆனால் அதுதான் நான் என் பெற்றோரைப் பார்ப்பது கடைசி முறை என்பது எங்கள் யாருக்குமே தெரியவில்லை.
நான் அமேரிக்கா சென்ற ஆறு மாதத்தில் உலகத்தையே ஆட்டி வைத்த கொரோனா இந்தியாவிற்கும் வந்து ஆண் பெண் வயது பேதமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைத்தது உனக்கும் தெரியும். ஆனால் அந்த அனைவரில் என் பெற்றோரும் உண்டு என்பது உனக்குத் தெரியாது. ஆமாம்! என் தாய் தந்தை இருவருக்கும் கொரொனா நோய் பற்றிக் கொண்டு அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்து இரண்டு நாட்களிலேயே இருவரும் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து போய்விட்டார்கள்.
செய்தி வந்ததும் என்னால் கதறி அழ மட்டும் தான் முடிந்தது, விமானச் சேவை எல்லாம் ரத்து என்பதால் என்னால் இந்தியா வர முடியவில்லை. வந்திருந்தாலும் என்னால் அவர்கள் கிட்டே கூட நெருங்க முடியாத நிலையில் என்னால் எப்படி என் தந்தை ஆசைப் பட்டபடி கொள்ளி வைத்திருக்க முடியும்?
அதன் பிறகு கொரோனா பீதி எல்லாம் அடங்கியதும் நான் இந்தியாவிற்கு மாற்றல் வாங்கிக் கொண்டேன். என் பெற்றோருக்குத் தான் கொள்ளி வைக்க முடியவில்லை. ஆனால் கொள்ளி வைக்கக் கூட உறவினர்கள் இல்லாதவர்களுக்கு நான் மகளாகக் கொள்ளி வைக்க முடியுமே? என் தந்தை நாட்டு வழக்கத்தை மாற்றி தனக்குப் பிறந்த மகள் தான் கொள்ளி வைக்க வேண்டும் என்று ஆசைப் பட்டார்.
நான் இப்பொழுது முகமறியாதவர்களுக்குக் கூட மகளாக மாறி கொள்ளி வைக்கிறேன். அந்த நேரம் என் பெற்றோருக்கு நான் மறுபடியும் மறுபடியும் மகளாகப் பிறப்பது போலவும் அவர்கள் என்னை ஆசிர்வதிப்பது போலவும் எனக்கு ஆறுதல் கிடைக்கிறது. இப்பொழுது புரிகிறதா, லதா” என்று கேட்ட பூஜாவின் கண்களில் கண்ணீர் – பேசமுடியாமல் தலையை ஆட்டிய லதாவின் கண்களிலும் கண்ணீர்.

ஆசிரியர் குறிப்பு

ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள், மங்கையர்மலர் போன்ற பல பத்திரிகைகளில் எழுதி தங்கம், லேப்டாப், மொபைல் டேப்ளட் என்று பல பரிசுகள் பெற்றவர். 50 வருடங்களாக எழுதிக் கொண்டிருப்பவர். இவருக்கு பல ரூபங்கள் உண்டு. குடும்பத்தலைவி, பொதுத் துறை நிறுவனத்தில் விஜிலன்ஸ் தலைமை அதிகாரி, என்பதுடன் கூட நாடகம் எழுதி தயாரிப்பதும் அதில் முக்கிய பாத்திரமேற்று நடிப்பதும் இவர் பொழுதுபோக்கு, .கேரம். செஸ், டேபிள் டென்னிஸ் என்ற விளையாட்டுக்களில் பங்கேற்று பரிசு வாங்குவதும் உண்டு. கடைசியாக இவருடைய தாரகமந்திரம் வாழ்க்கை வாழ்வதற்கு மட்டுமே!

அனுராதா ஜெய்ஷங்கர்/ உயிர்த்துளி – விருட்சம் நாளிதழ்

2 Comments on “சுசி கிருஷ்ணமூர்த்தி/ மறுபடியும் மறுபடியும் பிறக்கிறேன்”

Comments are closed.