
அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 45
சாமியானா பந்தலில் தொடங்கி வாசலில் போடப்படும் நாற்காலிகள் மற்றும் மயானச்
செலவுகள் எல்லாவற்றுக்கும் சேர்த்து 32400 ரூபாய் கேட்டாரகள். அது என்ன கணக்கு என்று தெரியவில்லை. ஆனாலும் சேகரன் சரியென்று சொல்லி முன்பணம் எவ்வளவு என்று கேட்டுக் கொடுத்துவிட்டான். சாவு சடங்கு முழுக்கவும் செய்து தருகிறோம் என்றும் சொல்லிவிட்டார்கள். உங்கள் முறையை மட்டும் சொன்னால் போதும் அதையும் சேர்த்து செய்து தருகிறோம் என்று பேசினார்கள்.
சட்டைக்கையை நன்றாகக் கயிறுபோல சுருட்டியும் கட்டுவீரியன் பாம்பைப்போல இடுப்பில் கைலியைச் சுருட்டியும் முழங்காலுக்குக் கீழே அரைமுழம் இறங்கியதுமாக இருந்தான். ஆட்டுத்தாடி வைத்திருந்தான். கருவிழிகள் நாவல்பழம் தோற்பதுபோன்ற கருமை. அட்டையைப் போன்ற புருவம். வலது கையில் மஞ்சள், செந்தூரம், சிவப்பு கலர்களில் கயிறு கட்டியிருந்தான். இடதுகைவிரலில் பரு துருத்தியதுபோல வெள்ளியில்
மோதிரம் போட்டிருந்தான். வைரவேலு சார் என்னோட பேர் என்று சொல்லிக்கொண்டான். நான் பாத்துக்கறேன் எல்லாத்தையும் நீ கவலைப்படாதே என்றான். திடீரென்று மோகனரங்கம் இறந்துபோவார் என்று யார் எதிர்பார்த்தார்கள்? மரணம் என்ன சொல்லிக்கொண்டா வருகிறது? எப்போதும் போல
நடைப்பயிற்சிக்குக் கிளம்பியவர் திரும்பும்போது ஆம்புலன்சில் உடம்பாக வந்தார். ஒரேயொரு மாற்றம் வழக்கமாக அவருடன் நடைப்பயிற்சிக்குப்போகும் முகம்மது மாமியார் இறந்துபோய்விட்டார் என்று ராமநாதபுரம் போய்விட்டார். இருந்தால் ஏதும் செய்திருப்பாரோ என்னவோ?
அரசுப்பணியில் உயர் அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் மோகனரங்கம். நேர்மை, நேரந்தவறாமை, கண்டிப்பு, வேலையில் சமரசமின்மை இவை மோகன ரங்கத்தின் வாழ்வியல் பண்புகள். அப்படித்தான் கடைசிவரை இருந்தார். ஆனால் அவருக்கு மூன்று மனைவிகள் என்பதுதான் கண்டறியப்படாத ரகசியமாக இருந்தது. இப்போது இருப்பது மூன்றாவது மனைவி ரேணுகாபாய் மட்டும்தான். சேகரன் முதல் தாரத்து பையன் வாரிசும்கூட. சேகரன் பத்தாவது படிக்கையில் அவன் அம்மா
இறந்துபோனாள். அதன்பின்னர் நீளாண்டுகள் கழிந்துதான் ரேணுகாபாயை விளம்பரப்படுத்திக் கண்டறிந்து கல்யாணம் செய்துகொண்டார். சித்திக்கொடுமை எல்லாம் சேகரனுக்கு இல்லை. ஆனால் தனித்தனித் தீவுகளில் வசிப்பதுபோல ஒரே வீட்டில் மோகனரங்கம், ரேணுகாபாய் ஒன்றாகவும் சேகரன் தனித்தும் வாழ்ந்தார்கள்.
மோகனரங்கத்தை அவ்வளவு எளிதில் யாரும் புரிந்துகொள்ளமுடியாது.
ஆனாலும் உறவுகளில் யாருக்கு எந்தப் பிரச்சனை சிக்கல் என்றாலும் தயங்காது எதையும் எதிர்பார்க்காது சென்று உதவி, தீர்வு கண்டு திரும்புவார். பதினைந் தாண்டுகளுக்கு முன்பு பைபாஸ் செய்துகொண்டார். எப்போதும் இயங்கிக் கொண்டே இருப்பார். நல்ல புத்திசாலி. அலுவலக நடைமுறைகள், பொதுவெளியில் புழங்குவது என்பனவற்றில் தேர்ந்தவர். எதையும் துல்லியமாகத் தவறின்றிச் செய்வார்.. சின்ன பிரச்சனை என்று அவரிடம் யார் சொன்னாலும் அதைப் பெரிதாக எண்ணிச்
செயல்பட்டு முடித்து வைப்பார். பெரும்பாலும் நண்பர்கள் கூடவே அவர்கள் வேலையாகவே அலைந்துகொண்டேயிருப்பார். பறவைகள் கூடடைவதுபோல இரவு மட்டுமே வீட்டுக்கு வந்தடைவார்.
எல்லோருக்கும் மோகனரங்கத்தைப் பிடிக்கும். வளவளவென்று பேசமாட்டார். சரியாகப் பேசுவார். ஆனால் வாழ்வில்தான் அவருக்கும் சேகரனுக்கும் முரணே நடுநாயகமாக செயல்பட்டதை ஒன்றும் செய்யமுடியவில்லை. தந்தை மகன் உறவு என்பது பற்றற்ற கயிறு கொண்டு ஒருவரை ஒருவர் பிணைத்துக் கிடந்ததுபோல் அமைந்துவிட்டது.
எதுவும் செய்வார். ஆனால் நிறைய கேள்விகள் கேட்பார். சேகரன் பதில் சொல்லமாட்டான். கேட்பதை வலியுறுத்துவான். பதில் சொன்னால் என்று சொர்ணாபாய் நாலைந்து முறை கேட்டுப் பதில்பெறமுடியாமல்
நிறுத்திக்கொண்டுவிட்டாள்.
ஒரு சமயம் நினைத்தான் தன்னுடைய முரணுக்கு அவள்தான் முழுக்காரணமோ. சாதுர்யமாகச் செயல்படுகிறாளோ என்றும் சேகரன் நினைத்தான்.
சரியான வேலை இல்லை. தானே அலைந்து திரிந்து கிடைத்த வேலையில் தன் தனித்திறனால் நிலைத்து இயங்கினான் சேகரன்.
அம்மா இல்லாத உலகில் சேகரனுக்கு நிறைய கேள்விகளும் நிறைய வருத்தங்களும்
மோகனரங்கத்தால் நிறைய காயங்களும் சூழ வாழ்ந்துகொண்டிருந்தான்.
அம்மா வழி உறவுகள் அவனுக்கு ஆறுதலாகவும் அதேசமயம் சுரண்டல் பேர்வழிகளாகவும் அமைந்தன.
தெரிந்தும் தெரியாமல் இருந்தான். காட்டிக்கொள்ளவில்லை. பேரன்பிற்கு ஏங்கவில்லை. குறைந்தபட்ச அன்பிற்காக சிலவற்றை இழக்கவும் செய்தான். அது பொருளாதார நிலையில் என்றாலும் தன்னின் திறன் தன்னைக் கைவிடாது என்கிற பெரிய நம்பிக்கையும் சேகரனை இந்த உலகில் வாழும் துணிவை உருவாக்கியிருந்தது. அம்மா அப்பாவுடன் இருந்தாள் என்று மட்டுமே சொல்லமுடியும்.
ஓராண்டல்ல பதினெட்டு வருடங்கள். அம்மா வாழவில்லை. அப்பாவுடனான வாழ்வில் இருந்தாள். அம்மாவின் உணர்வின் நிழல்கூட அப்பாவைப் பாதிக்கவில்லை. ஒரு சமயம் அப்பா வெளியூர் போயிருக்கையில் எரிவாயு தீர்ந்துவிட்டது. அப்போதெல்லாம் போய் எரிவாயு கம்பெனியில் பதிவு செய்துவிட்டு வரவேண்டும். அம்மா அன்றுதான் ஒட்டுமொத்த வாழ்வின் உச்ச மகிழ்ச்சியை உணர்ந்தாளாம். ஒரு ஆட்டோ எடுத்துக்கொண்டு போய் பதிந்துவிட்டு வந்தாளாம். சேகரனிடம்
பகிர்ந்திருக்கிறாள். நல்லவேளை உங்கப்பா ஊருக்குப் போயிருந்த நாளில் எரிவாயு தீர்ந்துபோனது பெரிய வரம். அன்று நான் ஆட்டோவில் வீட்டைவிட்டு வெளியேபோன அற்புதக் கணங்கள் ஒருபோதும் இனி என் வாழ்வில் இல்லை என்று. இப்போது நினைத்தாலும் சேகரனுக்குள் ஓர் அடக்கமுடியாத இயலாமையின்
கோபம் பொங்கிப் பொங்கி அடங்குகிறது. யாரேனும் உறவினர்கள் பத்திரிக்கை வைக்க வந்தால்.. அன்று அம்மாவை சினிமாவிற்கு அழைத்துப் போவார்களாம்.. அம்மா ஆசைப்பட்டு பதினெட்டு வருடங்களில் இரண்டு சினிமா பார்த்திருக்கிறாள்.. அம்மாவின் இறப்புதான் அவளுக்கான விடுதலையாக இருந்திருக்கிறது. அடிக்கடி மூச்சு திணறுகிறது.. என்னவோ பண்ணுகிறது என்பாள். ஒருகட்டத்தில் வீட்டைவிட்டு வெளியே வந்துவிட்டான். தெரிந்த நண்பர்களின் வீடுகள் இருந்தன..
சடங்குகள் தொடங்கின. உறவுகள், அக்கம் பக்கம் வீடுகளிலிருந்தவர்கள், நண்பர்கள் என்று மாலைகளுடன் வந்து திரும்பிக்கொண்டிருந்தார்கள்.
கிட்டத்தட்ட எல்லா உறவுகளும் வந்துவிட்டிருந்தார்கள். உள்ளே அழுதுகொண்டிருந்தார்கள். உடல் கிடத்தப்பட்டிருந்த ஹாலில் மட்டும் அழுகை ஒலித்துக்கொண்டிருந்தது.
குளிப்பாட்ட வெளியே தூக்கி வருவதற்குள் சேகரனை அழைத்தார்கள். தெருவின் கடைசியில் போய் முகத்தை மழித்துக்கொண்டு வந்தான். அங்கே சுடுகாட்டில் பழக்கமில்லையாம். எல்லாவற்றையும் வீட்டிலேயே முடித்தார்கள்.
அமரர் வண்டியில் (தங்க ரதம்) ஏற்றி அதில் நாலைந்துபேர்கள்..பின்னாலே இரு சக்கர
வாகனத்தில் கொஞ்சம் பேர்.. இரண்டு கார்களில் கொஞ்சம் பேர்.. சிலர் நடந்தே கிளம்பினார்கள்..
சுடுகாட்டுக்கு வராமல் அப்படியே ஊருக்குக் கிளம்பிப் பேருந்து நிலையம் போக.
எல்லாம் முடித்து சேகரன் கொள்ளி வைத்து குளித்துவிட்டுத் திரும்ப மணி மூன்றாகியிருந்தது. அப்புறம் சாப்பாடு முடிந்ததும் பேச்சு வார்த்தை கிளம்பியது. பதினாறாம் நாள் காரியம் பற்றி அல்ல.. மோகனரங்கம் வீட்டை யாருக்குத் தருவது என்று. சேகரன் மனைவி குடும்பம் விடுவதாக இல்லை. வீடு எல்லாமும் சேகரனுக்குத் தான் வரவேண்டும் என்று.
ரேணுகாபாயை எப்படிச் சும்மா விடமுடியும்? பாவம்? ரங்கத்தை நம்பி வந்தவ இல்லியா? என்றார்கள்.
கொஞ்மாவது கொடுக்கவேண்டும் என்றார்கள்.
பெரிய விவாதமே அக்கம் பக்கம் வீடுகளுக்குக் கேட்கும் அளவுக்கு உரத்த குரலில்
பேசிக்கொண்டிருந்தார்கள். எல்லாவற்றையும் அமைதியாக சேகரன் கேட்டுக்கொண்டிருந்தான்.
இறந்துவிடுவோம் என்று தெரியுமோ என்னவோ.. சாவதற்கு ஒருநாள் முன்னால் மோகனரங்கம் வங்கிக்குப்போய் இருந்த பணத்தை எல்லாம் துடைத்து எடுத்துக்கொண்டு.. வங்கி லாக்கரில் உள்ள பத்திரங்கள்.. கொஞ்சம் நகைகள் எல்லாவற்றையும் எடுத்து வந்து பீரோவில் வைத்திருக்கிறார்.
சேகரன் பீரோ திறக்கையில் எல்லாவற்றையும் பார்த்தான். எடுத்து வைத்துவிடலாம் என்று சொன்னார்கள்.
காரியம் முடியறவரைக்கும் எதையும் தொடக்கூடாது என்று கத்தினான்.
அமைதியாகிவிட்டார்கள். பீரோவை மூடி சாவியைத் தூக்கிப்போட்டான் திறந்த அலமாரியுள். பார்த்தார்கள். எதுவும் பேசவில்லை யாரும்.
என்னப்பா சேகரா எதுவும் பேச மாட்டேங்குறே.. என்று ஆளுக்காள் பேசினார்கள்.
கருமாதி முடியட்டும்.. எல்லாத்தையும் பேசிக்கலாம் என்று எல்லாவற்றையும் அடக்கி
நிறுத்தினான். கருமாதி வரைக்கும் வீட்டில் சேகரன் இல்லை. அலைந்து கொண்டே யிருந்தான். காரணம் கேட்டால் வேலையிருக்கிறது என்று சொல்லி அலைந்து கொண்டேயிருந்தான்.
கருமாதிக்கு முதல்நாள் மிகவும் தாமதமாக வந்தான். கையில் நிறைய பேப்பர்கள் வைத்திருந்தான். அவன் மனைவி கேட்டாள்.. என்ன பேப்பருங்க?
நாளைக்குச் சொல்றேன் என்றான் புதிர் விடுவிப்பதுபோல.
மறுநாள் கருமாதி சீக்கிரம் முடிந்தது. இருபத்திரண்டாயிரம் பேசி பத்தாயிரம் முன்பணத்தொகை வாங்கிப்போனான் வைரவேலு. இப்பவும் கணக்கு புரியவில்லை. என்றாலும் சொன்னபடி எல்லாவற்றையும் கச்சிதமாக முடித்துத் தந்தான். ஏனோ அவன் செயல்பாடுகளில் சேகரனுக்கு மன நிறைவாக இருந்தது. துளிகூட நேரத்தை வீணாக்காமல் சடங்குகளை ஒன்றன்பின் ஒன்றாக ரயில், பெட்டிகளை இழுத்துக்கொண்டு ஒடுவதுபோல சீராகச் செய்து முடித்தான். பால் தெளியலுக்கும்
இப்படித்தான் செய்து. சாம்பலையும் எலும்புகளையும் ராமேசுவரத்திற்கும் காவேரிக்கும் போக பீச்சில் போய் கரைத்துவிட்டு வாங்க என்று சரியாக பாகம் போட்டு பானையில் முடிந்து தந்தான். சேகரன் எதுவும் கேட்காமல் வைரவேலு கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டான்.
இரவில் நெருங்கிய உறவுகளும் சேகரனின் மனைவி குடும்பமும் இருந்தார்கள். மோகனரங்கத்தின் வழியில் அக்கா உறவுகள், தாய்மாமா உறவுகள் என பத்துபேருக்கு மேல் இருந்தார்கள்.
மறுபடியும் வீடு மற்றவை பற்றிப் பேச ஆரம்பித்தார்கள்.
எல்லாவற்றையும் கேட்டுவிட்டு சேகரன் சொன்னான். ரேணுகாபாய் ஒரு மூலையில் குத்துக்காலிட்டு அதில் முகத்தைப் புதைத்து மெளனித்திருந்தாள்.
அவளைச் சுற்றி அவள் உறவுகள் கொஞ்சம் உட்கார்ந்திருந்தார்கள்.
என்னப்பா சேகரா.. கருமாதி முடிஞ்சதும் சொல்றேன்னு சொன்னே.. சொல்லு என்றார்கள்.
மாப்பிள்ளை என்ன சொல்றது? முடிவு செஞ்சதுதானே.. வீடு மாப்பிள்ளைக்கு மட்டுந்தான்..
பணம், நகையும் மாப்பிள்ளைக்குத்தான்… மாப்பிள்ளை இஷ்டப்பட்டா கொடுக்கலாம். பென்ஷன் தொகையில பாதிப்பாதிதான்.. என்று சேகரனின் மனைவி குடும்பம் தீர்மானமாகப் பேசினார்கள்.
அதெப்படி.. பொண்டாட்டிக்குத்தானே பென்ஷன் போவணும்.. ரேணுகாபாய் உயிரோடத்தான் இங்க இருக்கா.. நாங்களும் அவ சொந்தம்னு உயிரோடத்தான் இருக்கோம்.. ரேணுகாபாய் பேசாமல் கண்கள் சிவக்க நிமிர்ந்து மறுபடியும் முகம் புதைத்தாள் மோகனரங்கம் புகைப்படத்தை ஒருமுறை பார்த்துவிட்டு.
ஆளுக்காள் ஒரு கருத்து சொன்னார்கள்.
சேகரன் சொன்னான்.. அப்பாவோட பென்ஷன் முழுக்க அவங்களுக்குத்தான்.. இனிமே அதுல வர்ற அரியர்ஸ் வரைக்கும் அவங்களுக்குத்தான்… வீடு இன்னிய தேதியில ஒரு கோடிக்குப் போவும்.. அதுலேயும் பாதிய அவங்களுக்குக் கொடுத்துடுறேன்.. ஆனா பணமா கொடுக்கமாட்டேன்.. என்று சொல்லி நிறுத்தினான்..
வீட்டுல பங்கா ? என்று சேகரன் மனைவி உறவுகள் பேசவந்ததை முகத்தாலே பேசாது
அடக்கினான்.. அடங்கினார்கள்..
ஆமாம்.. நல்லதோ கெட்டதோ எங்கப்பாவ நம்பி வந்தவங்க.. எங்கப்பாவோட வாழ்ந்திருக்காங்க..
எங்கப்பாவும் பிடிச்சுதான் வாழ்ந்தாரு.. எங்கப்பாவுக்குப் பிடிச்ச அவங்கள நான் தெருவுல விடமுடியாது..
பணமா கொடுத்தா சீக்கிரம் செலவழிஞ்சிப்போயிடும்.. யாரும் ஏமாத்திடுவாங்க.. நாளைக்கு எல்லாத்தையும் இழந்துட்டு தெருவுல நின்னா அது நான் எங்கப்பாவுக்கு செய்யற துரோகம்.. அதனால அவங்க பங்குக்கு ஒரு வீடா இங்கயே வாங்கிக் கொடுத்துடலாம்னு பார்த்து ஒரு வாரமா அலைஞ்சி வீடு பாத்துட்டேன்..
இங்கேர்ந்து நாலாவதுதெருவுல இருக்கு.. வீட்டை விலைபேசி முன்பணமும் கொடுத்திட்டேன்.. அவங்களுக்கு அந்த வீட்டைப் பதிவு செஞ்சு கொடுத்துடறேன்… இந்த வூட்டுல அவங்க இருந்துட்டு என் பாகத்துக்குப் பணம் கொடுக்க அவங்களால முடியாது.. அதனாலதான்.. அப்பா கடைசியா எடுத்துட்டு வந்து பீரோவுல வச்ச பணம், நகையிலேயும் சரிபாகம் தந்துடறேன்.. இது எங்கப்பாவுக்கு நான் செய்யற
கடமை.. என்னைப் பொருத்தவரைக்கும் எங்கப்பா எவ்வளவோ செஞ்சிருக்காரு.. அதுல நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு. இருந்துட்டுப்போகட்டும். இப்போ எனக்கு ரெண்டு புள்ளங்க இருக்கு.. நான் மகன் நிலையிலேர்ந்து அப்பா நிலைக்கு வந்திருக்கேன்.. ஒரு அப்பாவா நின்னு இந்த முடிவ எடுத்திருக்கேன்..
என்னோட அப்பா நேசித்தது எங்கேயும் துன்பப்படக்கூடாது அவ்வளவுதான் என்றான்.
ஆசிரியர் குறிப்பு
ஹரணி எனும் புனைப்பெயரில் எழுதும் முனைவர் க. அன்பழகன், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிப் பணிநிறைவுப் பெற்றவர். 1979 இலிருந்து 45 ஆண்டுகளாக எழுதுகிறா. தமிழாய்விலும் படைப்பிலக்கியத்திலுமாக இதுவரை 70 க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். பல பரிசுகள், விருதுகள் தம் படைப்புகளுக்காகப் பெற்றவர். இவருடைய படைப்புகள் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இவரது படைப்புகளில் எம்.ஏ ஆய்வுத்திட்டம், எம்ஃபில் ஆய்வுகள், முனைவர் பட்ட ஆய்வுகள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழில் வெளிவரும் இலக்கிய மற்றும் வெகுஜன வார, மாத, காலாண்டிதழ்களில். செய்தித்தாள்களின் இணைப்புகளில் இவரது கவிதைகள், சிறுகதைகள் வெளிவராத இதழ்களே இல்லையென்று கூறலாம். கவிதை, சிறுகதை, நாடகம், கட்டுரை, சிறுவர் இலக்கியம், இலக்கியம், இலக்கணம், மொழியாய்வு, அகராதி உருவாக்கம், அறிவியல் தமிழ், மொழி பெயர்ப்பு, பக்தி இலக்கியம், சைவ சித்தாந்தம் எனப் பல்துறையிலும் தன்னுடைய படைப்புகளைத் தந்து தனித்துவமாக விளங்குபவர். பேராசிரியராகப் பணியாற்றிய காலங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர், எம்ஃபில் மற்றும் முனைவர் பட்டங்களை இவரது வழிகாட்டலில் பெற்றவர்கள் அரசுப் பணிகளில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
சுசி கிருஷ்ணமூர்த்தி/ மறுபடியும் மறுபடியும் பிறக்கிறேன் – விருட்சம் நாளிதழ்
