
முகத்தில் சோகம்படர நாற்காலியில் உட்கார்ந்திருந்த
அம்மாவை “என்னாச்சு?”உமா கவலையுடன் கேட்டாள்.
“உனக்கு விஷயம் தெரியாதா?”
“என்ன விஷயம்”?
“உன் அண்ணன் ரகுவின் பெண்டாட்டி மீராவுக்கு உடம்பு சரயில்லையாம்”
“என்னவாம்?அண்ணா என்ன சொன்னான்?”
“சொல்லாததுதான் பிரச்சினை”
“அப்போவிஷயம் உனக்கு எப்படித்தெரிஞ்சுது?”
“அவங்க பக்கத்து வீட்டிலே இருக்கிற மீனா மாமியை நான்
கறிகாய் வாங்கப்போனபோது கடையில் பார்த்தேன்.அவங்க
சொன்னாங்க. எனக்கு எதுவுமே தெரியாதுன்னதும் ஆச்சரியப்பட்டாங்க
“அப்புறம் அண்ணாகிட்டே பேசினியா?”
“பண்ணாமல் இருப்பேனா? அவங்க ரெண்டுபேர் போனும் நாட் ரீச்சபிள்னு வரது”
“அப்போ அப்பாவுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லிட்டு
கிளம்பு நாம ரெண்டுபேரும் போய் பார்க்கலாம்”
“வேண்டாம் அவங்க வீட்டிலே இல்லேன்னா என்ன பண்ணுவோம்?”
“நான் மட்டும் போய் பார்க்கட்டுமா?”
“பார்த்து கேளு. மீராவுக்குநான் மாமியார். உன் அண்ணன் ரகுவுக்கு நான் அம்மாதானே? எனக்கு
போன் பண்ணி இதை சொல்லலாமே. அப்படி
சொன்னால் நான் என்ன பண்ணிடுவேன்? அவங்கமேல்
எனக்கும் பாசம் இருக்கும்னு ஏன் நினைக்கமாட்டேங்கி
றாங்க? உடனே ஓடிப்போய்என்னால் முடிஞ்ச உதவியை
நான் செய்யமாட்டேனா?
“அதனால்தான் உனக்கு சொல்லல்லே. “
வாசல்பக்கம் குரல்கேட்கவே உமாவும் அம்மாவும் பார்த்தார்கள்
ரகு வீட்டுக்குள் நுழைந்தவாறு சொன்னான் “அம்மா, நீ
ஏற்கனவே ஏகப்பட்ட வேலை செய்யரே. ஸ்கூல்லே டீச்சராக
வேலை பார்க்கிறே.எல்லாருக்காகவும் வேண்டிண்டு
கோயிலுக்குப்போயிட்டு வரே. ஏழை குழந்தைகளுக்கு ப்ரீயாக
பாடம் சொல்லிக்குடுக்கிறே.இத்தனைக்கும் நடுவிலே நாம
அம்மாவுக்கு சொல்லி தொந்தரவு குடுக்க வேண்டாம்னு
செக்கப் பண்ணிக்கிட்டு பிறகு சொல்லலாம்னு மீராதான்
சொன்னாள்.ஏற்கனவே அவளுக்கு உங்கூட இருக்கமுடியாமல்
ரெண்டுபேருடைய ஆபீசும் தூரத்தில் இருக்கிறதேன்னு குறை அதனால்தான் ஆபீசுக்கு பக்கத்திலேயே வீடு
பார்த்துண்டு தனிக்குடித்தனம் போகவேண்டி வந்தது
மனசை குழப்பிக்காதே. பைதவே ஒரு குட் நியூஸ்.நான்
அப்பாவாகப்போகிறேன். ஸ்வீட் இந்தா. “ரகு கையிலிருந்த ஸ்வீட் பாக்கெட்டைநீட்டினான்.
“என்ன நான் பாட்டியாகப்போகிறேனா ரொம்ப சந்தோஷம் குதூகலத்துடன் சொல்லி மகனை அன்புடன்
அணைத்துக்கொண்டாள் அந்த பாசமுள்ள தாய்.

Super story.It reflects modern day culture.