
அந்தியின் முகத்தை
இரவு மூடுவது போல
கால வீதியில்
எதுவும் நடக்கலாம்.
தளர்நடைக் காலத்தில்
தளிரெனத் தோன்றும் கனவுகள்
அகாலத்தில்
அகல் விளக்கின்
கடைசிப் புகையென
காற்றில் கலக்க
தன் நிழல்
தன்னுடன் நின்றுறைய
எரியும் ஊதுபத்தி வாசனை
எங்கும் வியாபித்தலைய
எட்டு கால்கள்
எட்டப் போய் வீசி வரலாம்.
நிழலென தொடர்ந்தவையெல்லாம்
மூழ்கி எழுந்து
புத்தாடை உடுத்தி
திரும்பி நடக்கும் காலம்
நித்திய இருப்பின் வாசனை
நிரம்பித் தழும்ப
தளிர் நடையொன்று
தன்னிருப்பை
எழுதிக் கடக்கும்.
