
சென்னபட்டணத்தில் விச்வேச்வர ஸ்வாமி கோவிலுக்காகத் தர்மகர்த்தாவைப் பொறுக்கி எடுக்க வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருந்தது.
அதற்காக நின்ற அபேக்ஷகர்கள் இருவர். அதில் ஒருவர் வீரமணி செட்டியார். மற்றவர் அழகானந்தம் பிள்ளை. செட்டியாருடைய முன் சரித்திரத்தைக் கவனித்துப் பார்த்தால் அவரைவிட அழகானந்தம் பிள்ளையே நிச்சயம் எவ்விதத்திலும் சிறந்தவராக இருக்கவேண்டுமென்று தோன்றிற்று. ஆனால் செட் டியாருடைய தேர்தல் அறிக்கை (Election Mani- festo) மூலம், பிள்ளை அவர்களுடைய பூர்வ விருத்தாந் தங்களை அறியும் காலத்தில் செட்டியாரே தேவலை என்று தோன்றிற்று. இருந்தும் இந்த எலெக்ஷன் ஏற்பாட்டில் ஒரு பெரிய நல்ல அம்சம்: இவ்விருவரில் ஒருவர் மாத்திரமே ஐயித்து அதிகாரத்தைக் கைப்பற்றுவார்; அந்த மட்டும் நலமென்று ஸ்ரீ விச்வேச்வர ஸ்வாமிக்கு நன்றி செலுத்த வேண்டியிருந்தது அச்சமயத்து நிலைமை.
இவ்வித எண்ணங்களுடன் அன்று மாலை வெளி வந்த பத்திரிகையின் பக்கங்களை நான் புரட்டுகையில் அடியில் காணும் விளம்பரத்தை வாசிக்கலானேன்:-
ரூபாய் 50 இனாம்
சென்ற 8-5-1935-ல் பட்டப்பகலில் விச்வேச்வர ஸ்வாமி கோவிலின் ஷராப்பின் மேஜையிலிருந்த 1000 ரூபாய் பை ஒன்றைத் துணிகரமாய்த் திடீரென்று கைப்பற்றி ஓடின இருளன் என்னும் திருடன் இன்றைத் தினம் அகப்பட்டுவிட்டான். ஆனால் இந்த மூன்று தினங்களுக்குள் பணத்தை அவன் எவ்விடத்திலோ ஒளித்துவிட்டான். அதைக் கண்டுபிடிக்கக் கூடிய துப்பை அடியில் சொல்லும் விலாஸத்திற்கு அனுப்புபவருக்கு ரூ. 50 இனாம் கொடுக்கப்படும்-பத்திரிகை விலாஸம் பார்த்து, எக்ஸ். ஓய். 308-ஆம் நம்பர்.
இதை ஸ்வாரஸ்யத்துடனும் சந்தோஷத்துட னும் படித்தேன். எனக்கு ஒரு யோசனை தோன் றிற்று. என்னுடைய சிநேகிதர்கள், “உன் பெயர் ‘கொனஷ்டை’; உன் காரியங்களும் அவ்விதமே” என்று அடிக்கடி சொல்லுகிறார்கள். இந்தத் தடவை அவ்விதமான துர்க்குணம் ஒன்றும் இல்லாமல் பரோபகாரத்தை மாத்திரம் கருதினேன். அவ்வபேகர் இருவரும் போட்டியின் மும்முரத்தினால் ஸதா எலெக்ஷன் கவலையாயிருந்தார்கள். ஓர் ஐந்து நிமிஷ மேனும் வேறு விஷயத்தில் மனத்தைச் செலுத்தி, அதனால் உண்டாகும் சந்தோஷத்தை அவர்கள் அநு பவிக்கும்படி செய்ய எண்ணினேன். இந்த உத்தே சத்துடன் கீழ்க்கண்ட விதம் ஒரு கடிதம் எழுதலானேன்:-
மகா. ரா. ரா. ஸ்ரீ வீரமணி செட்டியார் அவர்களுக்கு அநேக நமஸ்காரம். என்னை இதுவரையில் தாங்கள் அறியாததனால் நான் யார் என்பதை முதலில் தெரிவித்துக்கொள்ளுகிறேன். நான் ஒரு மகா பாதகன்; விச்வேச்வர ஸ்வாமி கோவில் பணத்தை ஷராப்பின் மேஜையிலிருந்து திருடின இருளன்; நல்ல ஸ்திதியில் இருந்தவன். துஷ்ட சகவாசத்தினால் இந்த நிலைமையை அடைந்திருக்கிறேன். ஆனால் அதைப்பற்றி இனிமேல் சொல்லிப் பிரயோஜனமில்லை. பொழுது பிடிபட்டுப் போலீஸ் லாக்-அப்பில் இருக்கிறேன். நான் அந்தஸ்துடன் இருந்த காலத்தில் எனக்குச் சிநேகமான ஒரு கான்ஸ்டேபிளினுடைய உதவியினால், வெளியில் நடக்கும் விஷயங்களை அறியவும், இந்தக் கடிதத்தை உங்களுக்குத் தபாலில் அனுப் பவும் சாத்தியமாயிற்று. நான் திருடின பணத்தை ஒளித்து வைத்திருக்கும் இடத்தை அறியத் துப்புக் கொடுப்பவர்களுக்கு ரூ. 50 இனாம் கொடுப்பதாக நோட்டீஸ் இன்று சாயந்திரம் பத்திரிகைகளில் போட்டிருக்கிறதாம். பணத்தைக் கண்டுபிடிக்காத வரையில் என் பேரில் கேசு ருஜுவாகாது என்று நினைக்கிறேன். இச்சமயத்தில் தேவஸ்தானத்திற்கு உதவிசெய்து என்னையும் ரக்ஷிப்பதற்குத் தங்களுக்குச் சமானமான மகான் யாரும் இல்லை. இதற்குள் எலெக்ஷன் முடிவடைந்து தாங்களே ஐயம்பெற்றுத் தர்மகர்த்தா ஸ்தானத்தை வகித்திருப்பீர்களென்பது நிச்சயம். ஆகையாலே இக்கடிதத்தைத் தங்களுக்கு எழுதுகிறேன். கோவிலினுடைய பணப் பையை ஊரெல்லாம் தேடுவார்களே ஒழியக் கோவிலுக்குள்ளேயே தேடமாட்டார்களென்பது எனக்கு நிச்சயம் தெரியும். ஆகையால் அதைக் கோவிலின் கீழண்டையிலுள்ள பெரிய வாசலில் நுழைந்தவுடன் முதல் பிராகாரத்தில் தென்கிழக்கு மூலையிலுள்ள குட்டிப்பிள்ளை யாரின் பீடத்திற்கு அடியில் புதைத்து வைத்திருக் கிறேன். தர்மப் பிரபுவாகிய தாங்கள் அந்தப் பையை எடுத்து விஷயத்தை வெளிப்படுத்தாமல் 950 ரூபாயைக் கோவிலின் உண்டியில் செலுத்திவிட்டு மீதி 50 ரூபாயை மாத்திரம் இந்தத் துப்பைத் தெரிவித்ததற்காக எனக்கே ‘சாங்க்ஷன்’ செய்யவேண்டுமென்று மிகவும் பிரார்த்திக்கிறேன். இன்னும் மூன்று தினத்தில், ஒரு கான்ஸ்டேபிள் தங்களிடம் வந்து வேறொன் றும் சொல்லாமல் “ஊழியன் அனுப்பினான்” என்று 50 மாத்திரம் தெரிவிப்பான். அவனிடம் அந்த ரூபாயைக் கொடுத்தால் என்னுடைய வக்கீலுக்குப் பீஸ் கொடுக்கவும் கான்ஸ்டேபிளுக்குப் பிரதி உபகாரம் செய்யவும் உபயோகப்படும்.
இப்படிக்குத்
தங்களுடைய ஊழியன்,
இருளன்.
இதை முடித்தவுடன் இதே மாதிரி அழகானந்தம் பிள்ளைக்கும் ஒரு கடிதம் எழுதினேன். ஆனால் கீழண்டை வாசலுக்கும் தென்கிழக்கு மூலைக்கும் பதிலாக மேலண்டை வாசலும் வடமேற்கு மூலையும் என்று இந்தக் கடிதத்தில் மாற்றி எழுதினேன். இரண்டு கவர்களையும் மேல் விலாஸம் எழுதி மேஜையின்பேரில் வைத்தேன்.
“தபாலில் போட்டுவிடட்டுமா?” என்று வேலைக் காரன் கேட்டான்.
“உம், சற்று இரு. கையோடு இன்னும் ஒரு கடிதமும் எழுதித் தருகிறேன்” என்று சற்று ஆலோ சித்துச் சொன்னேன்.
மறுநாள் இரவு வழக்கத்தைவிடச் சற்று முன்னதாகவே போஜனத்தை முடித்துவிட்டுக் கையில் ஓர் எலெக்ட்ரிக் டார்ச்சுடன் புறப்பட்டேன். எட்டு மணி அடிக்கும் தருணத்தில் விச்வேச்வர ஸ்வாமி கோவிலிற்குச் சென்று கோபுரத்திற்குள் மேலே செல் லும் படிவழியாக மேலே ஏறினேன். மூன்றாவது நிலையில் பலர் இருந்தனர். “யார் அது?” என்று அதிகாரத் தொனியுடன் ஒருவர். கேட்டார். நான் என் விளக்கின் ஸ்விட்சை அழுத்தினேன். எனக்கு அறிமுகமான சகாராம் என்கிற போலீஸ் சப் இன்ஸ் பெக்டர் ஒரு டஜன் ஜவான்களுடன் இருட்டில் உட் கார்ந்திருந்தார்.
“நான்தான் கொனஷ்டை. இங்கே தீவட்டிக் கொள்ளை நடக்கப் போகிறதா? பட்டாளமாக வந் திருக்கிறீர்களே?” என்று கேட்டேன்.
“வாருங்கள்” என்று அவர் சொன்னார்; “நீங்கள் எ எங்கே இந்தச் சமயத்தில் இங்கே வரும்படி நேர்ந்தது?”
“நானா? நான் வான சாஸ்திரம் படிக்கிறேனென்று உங்களுக்குத் தெரியாதா? அதற்காகத்தான். அதுவும் ஒரு குற்றமாகுமோ உங்களுடைய தர் பாரில்?”
“அதற்குக் கோபுரத்தின்மேல் ஏறுவானேன்?”
“என்னவோ கொஞ்சத்திற்குக் கொஞ்சம் சமீபத் சென்று நக்ஷத்திரங்களைப் பார்க்கலாமே என்று
இந்தமாதிரிப் பதிலை நானே ஊகித்துக்கொண்’ டிருக்கலாம்” என்றார்;
“நான் உங்களைக் கேள்வியே கேட்கவில்லை, என்னை நீங்கள் கேட்காமல் இருந்தால் போதும். சந்தடியில்லாமல் உட்கார்ந்துகொண்டு நக்ஷத்திரங்களையெல்லாம் பாருங்கள். முடியுமானால் சூரியனையும் இப்போதே பாருங்கள்.”
நாங்கள் சுமார் ஒரு மணி நேரம் அங்கே இருந்தோம். அப்பொழுது ஜன்னல் வழியாய் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு ஐவான் ஸலாம் செய்து, “தென்கிழக்கு மூலையில் பளிச்சுப் பளிச்சென்று டார்ச்சு மாதிரி தெரிகிறது, ஸார்” என்றான்.
அப்பொழுது ஸப் இன்ஸ்பெக்டர் ஒரு ஜவானை மாத்திரம் அவ்விடமே நிறுத்திவிட்டு மற்றவர்களுடன் கீழே இறங்கப் புறப்பட்டார். நானும் புறப்பட்டேன்.
“எங்கே வருகிறீர்கள்?” என்று கேட்டார்.
“இப்பொழுது பூகோள சாஸ்திரம் ஆராய்ச்சி செய்யப் போகிறேன்” என்று சொல்லிக் கூடவே கிளம்பினேன்.
பிராகாரத்தின் தென் கிழக்கு மூலைக்கு மெல் லெனச் சென்றோம், எங்கள் பக்கம் முதுகைத் திருப்பிக்கொண்டு ஓர் ஆசாமி பெருமூச்சுடன் பிள்ளையாரைப் புரட்டிக் கொண்டிருந்தார். சப் இன்ஸ்பெக்டர் தொண்டையைக் கனைத்துக்கொள்ளவும் அந்த ஆசாமி திடுக்கிட்டுக் குதித்தார். உடனே இன்ஸ்பெக்டர் அவர்மேல் டார்ச்சை வீசினார். வீரமணி செட்டியார் நாக்குழற நடுநடுங்கினார். அவருக்கு இருந்த பயத்தில் அவர் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.
“இங்கே என்ன செய்கிறாய்!” என்று சப் இன்ஸ்பெக்டர் கேட்டார்.
“நான் ஒன்றும் பணத்தை எடுத்துக்கொள்ளுகிறதாக எண்ணவில்லை… நல்ல எண்ணத்துடன் தான், ரகசியமாய்-”
“இந்தமாதிரி நல்லெண்ணத்துடன் திருடுகிற கதையெல்லாம் நாளைக்குக் காலையில் மாஜிஸ்ட்ரேட்டுடன் சொல்லிக்கொள். நாங்கள் எல்லாரும் வந்து கேட்கிறோம்” என்றார் சப் இன்ஸ்பெக்டர்.
“நான் யாரென்று நினைத்தீர்கள்? நான் வீரமணி செட்டியார்—”
“அந்தக் கதையும் மாஜிஸ்ட்ரேட்டிடம் சொல் லிக்கொள். செட்டியார் திருடன்மாதிரி ராத்திரி வேளையில் கோவிலில் புகுந்து பிள்ளையார் களைப் புரட்டுவது வழக்கமென்று மாஜிஸ்ட்ரேட்டு நம்பி னால் குசாலாக நம்பட்டும்.”
இதற்குள் மற்றொரு ஜவான் கோபுரத்திலிருந்து கீழே இறங்கிவந்து ஸலாம் செய்து, “வடமேற்கு மூலையில் பளிச்சென்று வெளிச்சம் தெரிகிறது, ஸார்” என்று சொன்னான்.
நாங்கள் எல்லோரும் அவ்விடம் சென்றோம். அங்கே கண்டதையும் நடந்ததையும் சொல்ல அவ சியமுண்டோ? அங்கே ஓர் ஆசாமி மற்றொரு பிள்ளையாரைப் புரட்டிக்கொண்டிருந்தார்.
மற்றொரு கைதி வீரமணி செட்டியாருக்குப் பதிலாக அழகானந்தம் பிள்ளை என்று திருத்தி வாசிக்க வேண்டியதுதான். மற்றவை யெல்லாம் இங்கே நடந்ததுபோலவேதான் நடந்தன. அதே கேள்வி, அதே பதில், அதே சம்பாஷணை. ஆனால் இந்தத் தடவை ஒரு ஜவான் அதிகப்படி. தவிர ஒரு சாக்ஷியும் அதிகப்படி. அதாவது வீரமணி செட்டியார்.
மறுநாள் காலையில் இந்த வேடிக்கையின் இரண் டாவது காட்சியையும் பார்க்கலாமே என்று கோர்ட் டுக்குப் போனேன். இரு கைதிகளும் தங்களால் இயன்றமட்டும் சிபார்சுகள் செய்து பார்த்தார்கள். சப் இன்ஸ்பெக்டர் அசைகிற பேர்வழி அல்ல.
“உங்களுக்காக வேண்டுமென்றால் முதல் கேசாக 11 மணிக்கே கோர்ட்டில் கூட்டம் கூடுவதற்குமுன் நடத்தி விடுகிறேன். மற்றவையெல்லாம் கோர்ட்டில் சொல்லிக்கொள்ளுங்கள். உங்கள் பாடு, மாஜிஸ்ட் ரேட் பாடு” என்றார். இதனால் அவர்களுக்குத் தைரி யம் ஒன்றும் அதிகரிக்கவில்லை. ஏனென்றால் அந்த மாஜிஸ்ட்ரேட் முதலியாரவர்கள் சத்யசந்தர், சிபார்சு தாக்ஷிண்யத்திற்கு இடம் கொடுக்காதவர் என்பது பிரசித்தம்.
சரியாக 11 மணி அடிக்கையில் கச்சேரி வேலை தொடங்கிற்று. செட்டியாரும் பிள்ளையவர்களும் தங் களுடைய அந்தஸ்து, நல்ல எண்ணம், தர்மசிந்தனை இவற்றைப்பற்றி வெகு தூரம் பேசினார்கள். அவர் கள் இரண்டுபேரும் இறந்துபோயிருந்தாலுங்கூட அதற்காகக் கூடிய கூட்டத்தில் அவர்களுடைய நண் பர்கள் இவ்வளவு புகழ்ச்சிகளைப் பேசியிருக்க மாட்டார்கள். முடிவில் இவ்விருவரும் தங்களுக்கு இருளனிடமிருந்து வந்த கடிதங்களையும் காட்டினார்கள்.
மாஜிஸ்ட்ரேட் இதற்கெல்லாம் மௌனமாயிருந் தார். கடைசியில் ஒரு கேள்வி கேட்டார். “நீங்கள் யோக்கியர்களானால் இந்தக் கடிதங்களைப் போலீ சாரிடம் ஒப்பிக்காமல், நீங்களே ஏன் பிள்ளையா
ரைப் புரட்டுகிற உத்தியோகத்தில் தலையிட்டீர் கள்?” என்றார். இதற்குப் பதில் இல்லை. அதன்பேரில் மாஜிஸ்ட்ரேட் சப் இன்ஸ்பெக்டரைச் சாக்ஷிப் பெட் டியில் ஏற்றி விசாரித்தார்.
“அந்த இருளனிடத்தில் இந்தக் கடிதங்களைப் பற்றி விசாரித்தீரா?”
“இல்லை.”
ஏன்?”
“இருளன் இல்லை.”
“என்ன சொல்லுகிறீர்?”
“இருளன் என்ற பெயருடன் போலீஸார் வசம் ஒரு கைதியும் இல்லை.”
“பொய்ப் பெயரோ என்னவோ?”
“விச்வேச்வரர் கோவிலில் திருட்டே போக வில்லை.”
“அப்படியானால் பத்திரிகையில் அந்த மாதிரி நோட்டீஸ் எவ்விதமாய்ப் புறப்பட்டது?'”
“அவ்விஷயத்திற்காக அந்தப் பத்திரிகையின் விளம்பர மானேஜரை ஸம்மன் செய்திருக்கிறேன்.”
“அவரைக் கூப்பிடும்.”
விளம்பர மானேஜர் ஒரு பருமனான கணக்குப் புஸ்தகத்துடன் சாக்ஷிப் பெட்டியில் ஏறினார். பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
“முந்தாநாள் தினம் உங்களுடைய பத்திரிகையில் எக்ஸ்-ஓய் – 308-ஆம் நம்பர் விளம்பரம் அச்சிடப் பட்டதல்லவா?”
“ஆம்.”
“அதனுடைய வரவு செலவுப் பக்கத்தை உங்களுடைய கணக்குப் புஸ்தகத்தில் எடுங்கள்.”
“எடுத்திருக்கிறேன்.”
“அந்த நோட்டீஸ் சம்பந்தமான பதிவை வாசியுங்கள்.’
“வாசிக்கிறேன் – விச்வேச்வரர் கோவில் நோட் டீஸ் – வரவு ரூபாய் 5—அனுப்புதல் வீரமணி செட்டியார் அண்டு அழகானந்தம் பிள்ளை – கோவில் பக்தர்கள்.’
“அப்படியா! இதை யார் எழுதினது?”
“எங்களுக்கு வந்த கடிதத்திலிருந்து இதை நான் தான் இப்புஸ்தகத்தில் பதிவு செய்தேன்.’
“அக்கடிதம் எங்கே?”
“இதோ” என்று மானேஜர் நீட்டினார். மாஜிஸ் ட்ரேட் அதை உற்றுப் பார்த்தார்.
“இதைப் பார்த்தீர்களா, சப் இன்ஸ்பெக்டர்? இதில் ஒரு விசேஷம் இருக்கிறது. இந்தக் கடிதமும் அவர்களுக்கு இருளன் அனுப்பினதாகச் சொல்லும் இரண்டு கடிதங்களும், ஆக மூன்றும் ஒரே கையெழுத்தாகக் காணுகின்றன. இவ்விருவர்களுடைய
யோக்கியதையும் இவ்வளவுதான் என்று சரிவர அறிந்து அதை வெளிப்படுத்த எண்ணி, எவனோ ஒருவன் இம்மூன்று கடிதங்களையும் அனுப்பி, இவர்க ளுடைய பேராசையைத் தூண்டிவிட்டு, இவர்களுக்காக ஒரு குழியைப் பறித்திருக்கிறான். தங்களுக்குப் புதையல் அகப்படப்போகிறதென்று எண்ணி இருவரும் அக்குழியிலேயே குதித்திருக்கிறார்கள்” என்று மாஜிஸ்ட்ரேட் சொன்னார்.
இவ்விதமெல்லாம் அவருக்கு யோசனை தோன்றினால் அஸௌகரியத்திலல்லவா முடியும்? ஆகையால் சப் இன்ஸ்பெக்டரின் காதைச் சற்றுக் கடித்தேன். தனக்குத் தோன்றாத ஊகம் மாஜிஸ்ட்ரேட்டுக்கு உண்டாகவா என்று அவரும் நான் சொல்வதைக் கேட்டார். பிறகு தொண்டையைக் கனைத்துக் கொண்டு கோர்ட்டாருக்கு ஒரு ஸலாம் செய்து பேசத் தொடங்கினார்:
“சில வருஷங்களாகவே நம்முடைய கோவில்களிலிருந்து குட்டிப்பிள்ளையார்கள் முதலிய சின்னப் புராதனப் பதுமைகள் ஜெர்மனி முதலான தேசங்களுக்கு விசேஷ ஏற்றுமதி ஆகின்றன.
கோர்ட்டாரவர்களுக்கு இது தெரியாத விஷயமல்ல. இங்ஙனம் இவ் வீரண்டு பிள்ளையார்களையும் திருடி ஜெர்மனிக்கு அனுப்பும் உத்தேசத்தில்தான் இவர்கள் வந்திருக் கிறார்கள். ஒருகால் அகப்பட்டுவிட்டால் என்ன சால் ஜாப்புச் சொல்லலாம் என்று இம்மாதிரிக் கடிதம் எழுதித் தங்களுக்கே போஸ்ட் செய்துகொண்டிருகிறார்கள் போலிருக்கிறது. ஒரே சமயத்தில் தங்க ளிருவரையும் போலீஸார் பிடித்துவிடுவார்களென்றாவது பத்திரிகை ஆபீசிலும்போய் விசாரிப்பார்களென்றாவது அவ்வளவு தூரம் இவர்கள் எதிர்பார்க்கவில்லை போலும்!” என்றார்.
“எப்படியாவது இருக்கட்டும். இது மிகவும் வெட்கக்கேடான விஷயம். இருந்தாலும் திருட்டு நிறைவேறாதபடியாலும், இதற்குமுன் இவர்களுக்கு சிக்ஷையாயிராதபடியாலும், 562-ஆம் செக்ஷன் பிர காரம் இவர்களை ‘முதல் தடவைக் குற்றவாளி’களாகப் பாவித்து இனி நன்னடத்தைக்காக இவர்களுடைய சொந்த ஜாமீன் பேரில் (ஆளுக்கு 5000 ரூபாய் ஜாமீன்) விடுதலை செய்கிறேன். ஆனால் இனிமேல் தர்மகர்த்தா, கவுன்ஸில் மெம்பர், பக்தர், இந்தமாதிரி ஒரு ‘நான்ஸென்ஸும்’ பேசக்கூடாது. ஜாக்கிரதை! போங்கள். அடுத்த கேஸ்!” என்றார் மாஜிஸ்ட்ரேட்,
கோர்ட்டு ஹாலைவிட்டு வெளியே புறப்பட்டேன். என் தோளின்மேல் யாரோ கை வைத்தார். திரும்பிப் பார்த்தேன். என்னுடைய சிநேகிதர் மௌனி என்று சொல்லுகிற இன்ஸ்பெக்டர் சந்திரமௌளீச்வரையர் தம் தலையை இரு பக்கமும் அசைத்துக்கொண்டு நின்றார்.
“நீங்கள் எங்கே வந்தீர்கள்?” என்று கேள்வியில் முந்திக்கொண்டேன்.
“நீங்கள் இங்கே வந்த விஷயம் நிற்க, நான் கோர்ட்டுக்கு வந்ததுதான் ஒரு விசேஷமா? ஹாலின் மூலையில் இருந்துகொண்டு இந்தக்கேசு முழுவதையும் கேட்டுக்கொண்டிருந்தேன். நான் மாஜிஸ்ட்ரேட்டா யிருந்தால் இவர்களுக்கு ரூ.5-3-9 அபராதம் விதித் திருப்பேன்” என்றார்.
“அந்தக் காசினால் சர்க்காருக்கு என்ன பிரமாத லாபம் சேர்ந்துவிடப் போகிறது?” என்று கேட் டேன்.
“லாபத்திற்காக இல்லை. சிரமப்பட்டு இவ்வளவு காரியம் செய்திருக்கிற குறும்புக்காரச் சிறு பிள்ளைக்கு அவனுடைய செலவைத் திருப்பிக்கொடுக்க வேண் டாமா? எத்தனை செலவு பாருங்கள்: பத்திரிகையில் நோட்டீசுக்காக ரூ. 5, இருளன் கடிதம் இரண்டு, சப் இன்ஸ்பெக்டருக்குக் கிடைத்திருக்க வேண்டிய மொட்டைக் கடிதம் ஒன்று, ஆக மூன்றுக்கு ஸ்டாம்பு ரூ.0-3-9.இந்தப் பணத்திற்கு ஓர் இன்ஜின் வண்டி வாங்கி, பாக்கியிருக்கும் சில்லறைக்குப் பெப்பர் மிண்டு வாங்கிக்கொடுக்கலாமே! என் கைப் பணத்தை இட்டாவது அவற்றை வாங்கிக் கொடுக்கவேண்டு மென்று தோன்றுகிறது.”
“எந்தச் சிறு பிள்ளை இந்தக் காரியம் செய்திருக் கக் கூடும்?”
“சிறு பிள்ளை என்றால் நான் வயசை நினைத்துப் பேசவில்லை. மொத்தம் குணத்திலும் சேஷ்டையிலும் சிறு பிள்ளை.”
“இனிமேல் அவன் யார் என்று நீங்கள் கண்டு பிடித்தல்லவா, இன்ஜின் வண்டியும் பெப்பர்மீண்டும் வாங்கிக் கொடுக்க வேண்டும்?”
“அது அவ்வளவு கஷ்டமாயிருக்கும் என்று னக்குத் தோன்றவில்லை. உங்களுக்கு எந்தத் தினுசுப் பெப்பர்மிண்டில் அதிகப் பிரியம்?”
