மஞ்சுளா சுவாமிநாதன்/மீண்டும் ஒரு முறை!

“இந்த வருஷம் எனக்கு என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் கூப்பிட்டு கிராண்டா பர்த்டே கொண்டாடியே ஆகனும். ஃபிரோசன் பிரின்சஸ் தீம்ல.” என்றாள் பத்து வயது நேத்ரா.
“அம்மா அப்பா ரெண்டு பேரும் வேலைக்குப் போறோம். ஏற்கனவே நிறைய பர்த்டே கொண்டாடியாச்சு. சாதாரணமா ஒரு ஸ்வீட் பண்ணி கோயிலுக்கு போலாம் கண்ணு, அடம் பிடிக்காத!” என்றாள் சுவாதி இதமாக.
“முடியவே முடியாது! என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் மத்த ஃப்ரெண்ட்ஸ கூப்பிட்டு, மேஜிக் ஷோ செஞ்சு, ரிடர்ன் கிஃப்ட்ஸ் கொடுத்து கொண்டாடும் போது எனக்கு மட்டும் ஒண்ணும் கிடையாதா?” என்று பாதி அழுகை மற்றும் ஆங்காரத்துடன் கையில் அவள் வைத்திருந்த பிறந்தநாள் புத்தாடையை தூக்கி வீசி எறிந்துவிட்டு உள் அறைக்கு சென்று சுவாதி முகத்திற்கு எதிரே படார் என்று கதவைச் சாத்தினாள்.
சுவாதிக்கு கோபம் கொப்பளித்தது. அவள் மகளின் அடத்தைப் பார்த்து என்ன செய்வதென்றே புரியவில்லை. கோபத்தில் அவளை ஓங்கி ஓர் அரை கொடுத்து ‘ பிறந்தநாளும் கிடையாது, ஒரு மண்ணும் கிடையாது’ என்று சொல்ல கையும் வாயும் பரபரத்தது. உடனே அவள் அப்பாவின் முகம், சலனமற்ற அமைதியான அந்த முகம் அவள் மனக்கண்ணில் தோன்றியது. சட்டென அவள் மனம் சாந்தம் அடைந்தது.
ஒருமுறை சுவாதி வயிற்று வலியால் கஷ்டப்பட்டபோது அவள் அப்பா அவளிடம் நீட்டிய எலக்ட்ரோலைட் தண்ணீரை டம்ளருடன் கோபத்தில் தூக்கி விசிறி எறிந்தது நினைவுக்கு வந்தது. ‘என்னது உனக்கு இவ்வளவு திமிறா!’ என்றபடி அம்மா அடிக்க கை ஓங்கிய போது, ‘விடு ராதா அவளுக்கு ஒடம்பு முடியல, ஏதோ கோபத்துல அப்படி பண்ணிட்டா,’ என்று அம்மாவை அவர் தடுத்தார். அப்போது சுவாதிக்கு வயது பதினான்கு.
அப்பாவின் நினைவு வரும்போதெல்லாம் அவள் மனம் நெகிழ்ந்தது. நாளையோடு அவர் அவளை விட்டுப் பிரிந்து ஒரு வருடம் ஆகிறது. விழியோரம் தேங்கிய நீரைத் துடைத்துக் கொண்டு, சாத்தி இருந்த அறையை வெளியிலிருந்து திறந்து உள்ளே சென்றாள். “ நேத்ரா, மேஜிக் ஷோ பண்ண எல்லாம் நம்ம கிட்ட வசதி கிடையாது. பெருசா ஒரு இருபது பேரை கூப்பிட்டு கொண்டாடவும் அம்மாவுக்கு பொறுமை இப்போ இல்ல. ஒரு டீல் பண்ணிக்கலாம். கேக் வாங்கி நம்ம நாலு பேரும் வெட்டுவோம், அப்புறம் நம்ம சேர்ந்து நைட் பீஸா சாப்பிடலாம்.” என்றாள் சுவாதி. சிறிது நேரம் யோசித்த நேத்ரா அந்த ஒப்பந்தத்திற்கு ஒத்துக்கொண்டாள்.
அன்று அவளும் குழந்தைகளும் எடுத்துச் சென்றிருந்த டிஃபன் டப்பாக்களை எல்லாம் அடுக்களை தொட்டியில் போட்டு தேய்க்க ஆரம்பித்தாள் சுவாதி. அப்பாவின் நினைவுகள் அகற்றமுடியாமல் அவளை ஆட்கொண்டன. அப்பாவின் முகமும், சிரிப்பும், அவர் டீ வி பார்க்கும் தோரணையும், ஒரு நாளைக்கு ஐந்து முதல் ஆறு காபி குடிக்கும் அவரது பழக்கமும் ஒன்றன் பின் ஒன்றாக மனதில் தோன்றின.
“அப்பா பிளீஸ்… நான் சொல்றதைக் கேட்டுட்டு என்ன திட்டக் கூடாது!” என்று தயங்கியபடி கணேஷின் குரல் கூடத்திலிருந்து ஒலித்தது. இது போல தயக்கத்துடன் அவன் பீடிகை போட்டாலே எதாவது தவறு செய்திருப்பான் என்று அவளுக்குத் தெரியும். கணேஷ், நேத்ராவை விட மூன்று வயது பெரியவன். ஆனால், சுபாவத்தில் அவன் இன்னுமே குழந்தையாக இருப்பதாகத் தான் அவளுக்கு தோன்றும். எனவே அவள் தாயுள்ளம் எப்போதும் கணேஷை பாதுகாக்க முந்திக் கொள்ளும். அவ்வப்போது கணேஷை காப்பாற்ற அவள் செல்லும்போது கூட அவள் தந்தையின் நினைவு தான் வரும். ஒருவேளை அவளது அறியாமையை பாதுகாக்க தான் அப்பா எப்போதும் ஓர் அரணாக இருந்து அவளைக் காத்தாரோ? என்று ஐயமும் கூடவே எழும்.
“என்னடா! இன்னிக்கு என்ன பிரச்சனை?” என்று சற்று கடுமையாக கேட்டார் செந்தில். சுவாதியும் கூடத்திற்கு சென்று கணேஷின் அருகில் நின்றுகொண்டு அவன் தோளை ஆதரவாக தொட்டபடி, “சொல்லு பா, பயப்படாத சொல்லு, என்ன ஆச்சு?” என்றாள்.
“இன்னிக்கு நானும் என் ஃப்ரெண்ட்ஸ்ஸும் சைக்கிள் ஓட்டிட்டு இருந்தோம்… அப்ப…அப்ப… ப்ரேக் உடஞ்சு போயிடுச்சு,” என்றான் மெதுவாக கணேஷ். அந்த கடைசி வார்த்தைகள் அவன் தொண்டை குழியிலேயே தங்கிவிட்டன.
“அதுக்குள்ள உடச்சு ஓடு பொறுக்கியாச்சா? இனிமேல் நான் அதை ரிபைர் பண்ண மாட்டேன். நீ ஒண்ணும் சைக்கிள் ஓட்டி கிழிக்கத் தேவையில்லை,” என்றார் கோபத்துடன் செந்தில்.
“ அடி ஏதாவது பட்டுதாப்பா? நான் அப்பா கிட்ட பேசறேன், சொல்லு?” என்று கனிவாக அவள் பேச, கணேஷ் கண்களில் நீர் மல்க, “ சாரி அப்பா இனிமேல் அப்படி பண்ண மாட்டேன்,” என்றான் பயத்துடன் செந்திலை பார்த்த படி.
“செந்தில் அவனுக்கு காலுல இரத்தம் வருது பாரு, கை முட்டியில வேற சிராய்ச்சுட்டு இருக்கான், இப்போ சைக்கிள் ரொம்ப முக்கியமா?” என்றாள் சுவாதி பதைபதைப்புடன். அந்த காயங்களை கவனித்த செந்திலும் சுதாரித்துக் கொண்டார். “ சரி, போய் கை கால் அலம்பிட்டு வா, டாக்டர் கிட்ட போய் ATC இன்ஜெக்சன் போட்டுக்கலாம். நான் சைக்கிள் பார்த்து ரிபைர் பண்ணித் தரேன், அழாத கிளம்பு,” என்று கணேஷை சமாதானம் செய்து ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் சென்றார் செந்தில்.
மீண்டும் சுவாதியின் மனம் பல வருடம் பின்னோக்கிச் சென்றது. ஒரு முறை கணக்கு டியூஷன் முடிந்து அவள் கோயிலுக்குச் சென்ற போது, வெளியில் நிறுத்தி இருந்த அவள் சைக்கிள் திருட்டுப் போனதும், அவள் எந்த தயக்கமும் இன்றி அருகில் இருந்த கடையிலிருந்து வீட்டிற்கு அழைத்து அப்பாவிடம் விவரத்தைச் சொன்னதும், அடுத்த பத்தாவது நிமிடம் அப்பா என்ற ஆபத்பாந்தவன், சமயசஞ்சீவி அவரது மொப்பெட்டில் வந்து அவளை அழைத்துச் சென்றதும், ஆதரவாக அவளோடு வந்து போலீஸ் ஸ்டேஷனில் கம்பிளைண்ட் கொடுத்ததும், அடுத்தடுத்து அவள் நினைவில் கோர்வையாக தோன்றியது. அவளால் எந்த தயக்கமும் இன்றி அவள் அப்பாவிடம் சைக்கிள் திருட்டுப் போன விஷயத்தை சொல்ல முடிந்ததை எண்ணி ஆச்சரியமாக இருந்தது. ‘கடவுள் எவ்வளவு நல்ல மனிதரை எனக்கு அப்பாவாக கொடுத்திருந்தார்!’ என்று வியந்து அவள் மனம் பெருமிதம் கொண்டது.
சரியாக ஒரு வருடம் முன்பு அதே நாள் அப்பாவும் அம்மாவும் அவளது வீட்டிற்கு வந்திருந்தனர். அன்றைக்கு ஏதோ ஒரு காரணத்தால் அவளுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு சேர விடுப்பு இருந்தது.
“உங்களைப் பார்க்கணும் போல இருந்தது, அதான் வந்தேன்,” என்றார் அப்பா குஷியாக. அப்பா அம்மாவைப் பார்த்த சந்தோஷத்தில் விடுமுறை நாளான அன்று சோம்பிக்கிடந்த சுவாதி பரபரப்பாக அப்பாவுக்கு பிடித்த சின்ன வெங்காய சாம்பாரும், உருளைக் கிழங்கு வருவலையும் செய்தாள்.
“வர வர நீ ரொம்ப பிரமாதமா சமைக்கற, உங்க அம்மாவையே சமையல்ல மிஞ்சிட்ட…” என்று அவர் பெருமையாக கூறிக்கொண்டே சாப்பிட்ட அந்த காட்சியை அவளால் இன்றும் மறக்க முடியவில்லை.
அன்று அப்பா கிளம்பும் போது வழக்கம் போல மின்தூக்கியின் கதவருகில் சென்று அவர்களை சுவாதி வழியனுப்பினாள். ஏனோ அவளுக்கு அன்று அந்தத் தானியங்கி கதவுகள் மூடும் சமயத்தில் அப்பாவை ஒரு முறை அணைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆனால், அதற்கு வாய்ப்பு இருக்கவில்லை. மறுநாள் அவரை அணைக்க அவர் உயிருடன் இல்லை. திடீர் மாரடைப்பு. அப்பாவோடு சேர்ந்து எத்தனையோ பொக்கிஷமான அனுபவங்கள் இருந்தும் அவளுக்கு அன்று அவரை துரத்திச் சென்று அணைக்க வில்லையே என்ற வருத்தம் மட்டும் மறையவில்லை.
இரவு சாப்பாட்டுக்கடையை முடித்து, அடுப்பையும் மேடையையும் துடைத்து, அயர்ந்து போய் அவள் சோஃபாவில் அமர்ந்த போது உடலின் சோர்வை விட உள்ளத்தின் சோர்வு மேலோங்கி இருந்தது. “அம்மா ஏன் உன் முகமே சரியில்ல? தாத்தா ஞாபகம் வந்துடுச்சா?” என்று கேட்டுக் கொண்டே அவளருகில் அமர்ந்தான் கணேஷ்.
“ஆமாம் டா கண்ணு, நாளையோட ஒரு வருஷம் ஆகப்போறது,” என்று அவன் தலையை வருடியபடியே கூறினாள் சுவாதி.
“ தாத்தா சாகறத்துக்கு ஒரு நாள் முன்னாடி நம்ம வீட்டுக்கு வந்திருந்தார்ல? அன்னிக்கு அவர் என் கிட்ட ரூம்ல ரொம்ப நேரம் பேசினார். நான் தான் ரொம்ப பேசாத தூங்கிப் போயிட்டேன். அன்னிக்கு நான் தாத்தா கூட பேசிருக்கலாம் அம்மா, அதுக்கு அப்புறம் எனக்கு அவரோட பேச வாய்ப்பே கிடைக்கல…” என்றான் நா தழுதழுக்க கணேஷ்.
“உனக்கு மட்டும் இல்லடா கண்ணு, நம்ம எல்லாருக்குமே தாத்தாவோட நாம இருந்த அந்த கடைசி நிமிஷத்தை மீண்டும் ஒரு முறை, ஒரே ஒரு முறை வாழ்ந்தா நல்லா தான் இருக்கும்,” என்ற சுவாதி கணேஷை ஆதரவாக அணைத்துக்கொண்டாள்.

4 Comments on “மஞ்சுளா சுவாமிநாதன்/மீண்டும் ஒரு முறை!”

Comments are closed.