
காலை நேர பரபரப்பில் எனது மகனது சீருடையில் இருந்த டை-ஐ சரி செய்து, மகளுக்கு தலை வாரி, இருவருக்கும் தண்ணீர் பாட்டில் நிரப்பி, அவர்களை குடியிருப்பின் வாயிலுக்கு பள்ளி வாகனத்தை பிடிக்க அனுப்புவதற்குள் எனக்கு போதும்போதுமென்று ஆகிவிட்டது. அதற்குள் எனது வாட்ஸ்அப் செயலியில் பள்ளி வாகனத்திற்கு என இருந்த குழுவில் ஓட்டுநர் ஷேர் செய்திருந்த லொகேஷன் காட்டும் மேப்பில் ஏற்கனவே என் குடியிருப்பு வாயிலுக்கு பஸ் வந்துவிட்டதாக காண்பித்தது. பதறிப்போய் எனது பலகணி வழியாக எட்டிப்பார்த்த போது என் குழந்தைகள் வண்டியை பிடித்திருந்தார்கள். அப்போது தான் நான் தூங்கி எழுந்ததிலிருந்து சுமார் இரண்டு மணி நேரம் கழித்து, காலை 8 மணியளவில் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.
அப்படியே இயந்திர கதியில் பலகணிக்கு வெளியே கட்டியிருந்த கொடியில் உலர்த்தப்பட்ட காய்ந்த துணிகளை எடுத்துக் கொண்டிருக்கையில், “ அடடா! அல்வாத் துண்டு இடுப்பு உன் இடுப்பு!” என்ற பாடல் வரி லேசாகக் கேட்டது. உடனே எனது மூளையில் டெலி விஷன் வீட்டிலிருந்து தான் சத்தம் வருகிறது என்ற செய்தி வந்தது. இதற்குள் டெலி விஷன் என்றால் தொலை காட்சி தானே? எனது வீட்டு பலகணியிலிருந்து சும்மார் 50-அடி தொலைவில் நேரெதிரே தெரியும் பலகணியின் வழி நான் தினமும் காணும் ஒரு வீட்டின் ராட்சஸ தொலைக் காட்சி பெட்டியில் தான் அந்த பாட்டு ஓடுகிறது என்றால் அது தொலை காட்சி தானே? என்று நான் என்னை நானே வியந்து கொண்டேன்.
எனது குடியிருப்பில் நான்கு ப்ளாக்குகள் உள்ளன. நான் இருப்பது முதன் முதலாக பில்டர் கட்டிய ஏ – பிளாக். டி.வி வீடு ஐந்து வருடங்களுக்கு பிறகு, கொரோனா தொற்றால் இழுத்தடிக்கப்பட்டு கட்டப்பட்ட டி – பிளாக். அந்த பிளாக்ககின் வளர்ச்சியை பார்த்திருக்கிறேன். ஆனால், அதில் வசிப்பவர்கள் பலரின் பெயர்கள் கூட எனக்குத் தெரியாது. டி – பிளாக் , 5ஆம் தளத்தில், மூன்றாம் எண்ணில் குடியிருப்பவர்களின் பெயர்கள் எனக்கு சத்தியமாகத் தெரியாது . ஆனால், ஒரு தாத்தா மற்றும் பாட்டி இருக்கிறார்கள். அவர்கள் அவ்வப்போது பலகணிக்கு வருவார்கள், பார்த்திருக்கிறேன். அவர்கள் வீட்டில் இருப்பதற்கு அடையாளமாக அவர்கள் வீட்டிலிருக்கும் ராட்சஸ, 55 இன்ச் தொலை காட்சி பெட்டி காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரைக்கும் ஓயாமல் ஓடும். நானும் எனது மகனும் அதன் அளவு 50 இன்சா, அல்லது 55 இன்சா என்று மண்டையை கசக்கி யோசித்து இருக்கிறோம். ஆனால், எங்கள் அனைவரது வீடும் எறத்தாழ ஒரே அளவில், ஒரே வடிவமைப்பில் இருப்பதால் 55 இன்ச்சாகத்தான் என்று அவன் தீர்மானமாக கூறிவிட்டான்.
அவர்கள் டி.வி யில் பார்க்கும் நிகழ்ச்சிகளை வைத்துக் கொண்டு அவர்களைப் பற்றி சில விஷயங்கள் தெரிந்து கொண்டோம். அவர்கள் வீட்டில் இணையத்தின் மூலம் இயங்கும் ஸ்மார்ட் பெட்டி இல்லை. செட் டாப் பெட்டி பொருத்திக் கொண்டு தமிழ் அலைவரிசைகள் தான் பார்க்கிறார்கள். அநேகமாக தமிழர்கள் தான். சன் டி.வி, K டி.வி, சன் மியூசிக், ஸ்டார் விஜய், புதிய தலைமுறை, தந்தி, ஐ.பி.எல் காலத்தில் மட்டும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசைகள் பார்ப்பார்கள். டி.வி யை யாரும் பார்க்காத சமயத்திலும் அது ஓடிக்கொண்டே இருக்கும். அவர்களது சுப்ரபாதமே தந்தி அலைவரிசையில் மணிக்கு மணி நமது இரத்தக் கொதிப்பை ஏற்றும் வண்ணம் படபடப்பான பின்னணி இசையில் வரும் தலைப்புச் செய்திகள் தான். காலை நேரங்களில் சினிமாப் பாடல்கள் ஓடும். மாலை வேளைகளில் பெரும்பாலும் சீரியல் தான். எனக்கு காலை 8 மணியிலிருந்து பிற்பகல் வரை அவர்கள் கேட்கும் சினிமாப் பாடல்கள் எனது பலகணி கதவைத் திறந்து வைத்தாலே துல்லியமாகக் கேட்கும்.
ஒரு முறை அவர்கள் வீட்டில் காலை தொலை காட்சிப் பெட்டியை போடவில்லை. மதியம் ஒரு மணியளவில் எனக்கு பயமே வந்து விட்டது. பெரியவர்கள் வேறு தனியாக இருக்கிறார்களே, கதவைத் தட்டி விசாரிக்கலாமா என்று. ஆனால், மறுநாள் தொலை காட்சிப் பெட்டியை தொலைவிலிருந்து கண்டவுடன் நிம்மதி பிறந்தது. ஊருக்கு எங்கேயாவது போயிருப்பார்கள் என்று சால்ஜாப்பு சொல்லிக் கொண்டேன். அவர்களது வீட்டுக் கதவைத் தட்டி அவர்களை அறிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு முறை தோன்றியதுண்டு. ஆனால், பலகணியில் இருந்து தொலை காட்சி பார்க்கும் சுவாரசியம் கெட்டு விடுமோ என்று அந்த எண்ணத்தை விட்டு விட்டேன்.
அவர்கள் வீட்டை மட்டும் தான் பார்ப்பேனா என்றால் கிடையாது, அவர்கள் வீட்டிற்கு மேலே உள்ள பலகணியில், தொலை காட்சியே தெரியாத அளவிற்கு மூன்று அடுக்காக கொடிகள் கட்டி மறைத்து வைத்திருக்கிறார்கள். அந்த வீட்டு மாமா தான் எப்போதும் துணி உலர்த்தி, எடுப்பார். மழை வரும் போது நான் அவசரமாக துணிகளை எடுக்கும் போது அவரைப் பார்ப்பேன். டி.வி வீட்டிற்கு வலது புறம் இருக்கும் வீட்டிலிருந்து ஒரு வாலுக் குழந்தை சாமான்களை எல்லாம் பலகணியிலிருந்து கீழே போட்டுக் கொண்டே இருக்கும். ஒரு குண்டு ஆண்ட்டி அந்த குழந்தையின் பின் ஓடியபடி இருப்பார். இடது பக்கம் இருக்கும் வீட்டில் இரண்டு சிறு பெண்களும் , சிறிய கருப்பு நாய் ஒன்றும் இருக்கும். அந்த நாயின் பெயர் குக்கி. எனது மகளுக்கு குக்கி என்றால் மிகவும் இஷ்டம். நாங்கள் எங்கள் வீட்டிலிருந்து அதன் பெயரைக் கூப்பிட்டால் அது எங்களைத் தேடும். மனிதர்களை விட நாயின் கேட்கும் திறன் அதிகம் என்பதை நாங்கள் தினமும் அவ்வாறு சோதிப்போம். டி.வி வீட்டின் கீழ் இருக்கும் பலகணியல் அவ்வப்போது யாராவது வந்துவிட்டு போவார்கள். அது அவர்களுடைய கோடை பங்களா மாதிரி, சென்னை குடியிருப்பாக இருக்கும் என்று யூகித்துக் கொண்டேன்.
இதையெல்லாம் நான் சிந்தித்து முடிப்பதற்குள் “சலக்கு சலக்கு சரிகை சேலை” பாட்டு முடிந்து அடுத்த பாட்டு ஆரம்பித்திருந்தது. பிரபுதேவா நடித்த படத்திலிருந்து அந்த பாடல். பஞ்சகச்சம் ஒன்றும், மேலங்கி, தலையை சுற்றி ஒரு துண்டு கட்டிக் கொண்டு வளைந்து வளைந்து அவர் பாணியின் ஆடிக்கொண்டிருந்தார். இம்முறை சத்தம் கேட்கவில்லை. சன்னமாக அதன் பின்னணி இசையில் ஒரு வரி மட்டும் கேட்டது. அதனை யோசித்தால் வீட்டு வேலை கெட்டுப் போய்விடுமே என்று நினைத்தபடி குளித்து, சுவாமி விளக்கு ஏற்றி, வழக்கமாக சொல்லும் சில ஸ்லோகங்களை சொல்லிய போது, “வாடி.. வாடி… நாட்டுக் கட்டை, வசமாய் வந்து மாட்டிக்கிட்ட “ என்று அந்த பாடல் வரி நினைவிற்கு வந்து என்னை துன்புறுத்தியது. அதனை மறக்க முயற்சி செய்தபோது பல்லவி, சரணம் எல்லாமே நினைவில் வந்து விட்டது. தினமும் கூறும் சஷ்டி கவசம் கூட அவ்வப்போது குழம்பிவிடுகிறதே என்று வேதனையுடன் கடவுளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டே தீபாராதனை காட்டினேன்.
