
அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 47
…………………………… என்னவோ பெத்த தான் பிள்ளங்கன்னு நெனக்கற பெண்டுக மத்தியில இவ வித்தியாசமானவ…
அப்ப நாங்க இரயில்வே காலனில குடியிருந்தோம். அதுவும் பெரிய காலினில. எங்கப்பாரு கார்டு.
அந்தம்மா ஞானத்தோடு வீட்டுகாரர் ஸ்டேஷன் மாஸ்டர்.அந்த அம்மாவுக்கு மூணு பிள்ளக.மூத்தவ உத்ரா கல்யாணமாகி பட்டணம் பாக்க போயிட்டா. இரண்டாவது ஒரு மகன் சாமிநாதன் அவன் மேல இந்த மனுஷிக்கு கொள்ளப் பாசம்.அந்தப் பயல அப்பனுக்கு தெரியாம, சிறு வோட்டு காசுலேந்து எடுத்து சினிமா பாக்க அனுப்பி வைப்பா.அந்தப் பய கமல் மேல பைத்தியமா திரியரவன்.பய பாக்க மூக்கு முழியுமா இருப்பான். அதனால சினிமா ஸ்டார்ன்னு ஒரு நெனப்பு. படிக்க மனசில்ல ஊர் சுத்திவந்தான். கெட்ட சகவாசம் ஒரு நா அந்தப் பய வெளியூருக்கு வேலைக்கு போறேன்னு போனவன் தான் திரும்பவே இல்ல.தேடாத இடம் இல்ல. அம்மா பாசம் தோத்து போச்சு.
திருச்சியில பாத்தேன், கோயம்புத்தூரல பாத்தேன் அப்படின்னு ஆளுக்கு ஆள் சரடு விட்டாங்க ஆன பிரச்சினை தான் விடியல. பாவம் அந்த மனுஷிதான் வேதனய சொமந்தா.
இருந்தாலும் மூணாம் மக ரேணு ஆறுதலா இருந்தா.
இந்த சமயத்துல ஒரு அதிசயம் நடந்திச்சி.விடுவானா அந்த ஆண்டவன். ஒரு நா விடிய காலேல இருக்கும், ஒரே ஒரு ஆண் நாய்குட்டி வீட்டு வாசல்ல கத்திக்கிட்டு இருந்திச்சு.அப்பத்தான் இந்தம்மா வாசத் தெளிக்க வந்தா,
வ்வன்னு வவ்ன்னு பிஞ்சுக் குரல் அவளுக்கு அந்த இருட்டுல விளங்கல.
கோலத்த போட்டு எந்திருச்சா அவ பொடவய கவ்வி இழுத்திச்சு அந்த குட்டி ஜிவ ராசி.ஞானத்தம்மா பிடி குடுக்கல.திரும்பபவும் செல்லச் சிணுங்கல்.ரேணு பாதிதூக்க கலக்கத்துல எழுந்து வந்தவ அள்ளி எடுத்து கிட்டா. அப்பவும் அந்தம்மா கண்டுக்கல.அடிபட்டவ அதனால் இப்ப அவகாசம் தேவப்படுது. குட்டி பைய்யான்னு ரேணு தான் கொஞ்சிக்கிட்டுருந்தா.”அம்மாவ் இங்க பாரும்மா இவன” என்றாள்.திரும்பவும் அவள் பால் வாங்கற சமயத்துல செல்லமா சிணிங்கி புடவை ய கவ்விச்சி அந்த குறும்புக் குட்டி.அப்ப லேசா பாத்தா அவன் மாசு மருவில்லாத வெள்ள நிறம். பொதுவா அவளுக்கு இந்த மாதிரி ஜிவராசிகள வீட்டுல வளத்து பழக்கமில்ல. அது ஏன் தான் பெத்த மக்களகூட ரொம்ப கொஞ்ச மாட்டா. பையன் மேல பாசம் உண்டு ஆனா காட்ட மாட்டா .அப்படியே அந்த வெள்ளக் குட்டிய வெறிக்க வெறிக்க பாத்தப்ப தான் அவ புரிஞ்சி கிட்டா ,இந்த குட்டிய பெத்தப்போட்டு தாய் ஓடி போயிடுச்சு.
இதுவும் ஆண்டவன் அள்ளிக் கொடுத்ததுதான் என நெனச்சி பாசம் காட்ட ஆரம்பிச்சா. ஏகாதசி அன்னிக்கு வந்ததால ரங்கா அப்படின்னு பேர்சூட்டி அக்கம் பக்கம் அழைச்சி விருந்து போட்டா.எதோ ஓடி போன மகன் மனம் திருந்தி வந்திட்டான் மாதிரி விருந்து. பலரும் நல்ல மூக்கு முட்ட சாப்பிட்டுட்டு அவ ஒரு மாதிரி ஆயிட்டான்னு குசு குசுன்னு பேசினாக.நன்றி கெட்ட மனுசங்க.
ஆனா அவ அதைப்பத்தி கவல படல.
பாச மழையில ரங்காவும் ஞானமும் நனைஞ்சாங்க.அந்த மனுஷிக்கு இப்ப ஒரு பிடிப்பு கிடைச்சிடுச்சு. ரேணு, ரங்கா மேல பொறாமை பட்டா.அவ்வளவு ஏன் லீவுக்கு வந்த உத்ராவுக்கு ஆச்சரியம் என் அம்மாவா இவ? இருபத்து நாலு மணிநேரமும் ரங்கா பாராயணம் செய்யராளே என்ன ஆச்சு இவளுக்கு? பெத்த பையன தொலைச்சிட்டு…
ரங்காவுக்கு அவன் அம்மாதான் எல்லாம், யாரையும் அண்ட விடமாட்டான். அம்மா எங்க போனாலும் ரங்காவும் கூட போவான்.
அம்மா சமையல் செய்யும் போதே எனக்கு குடு குடுன்னு கேப்பான் அம்மாவும் குடுத்திட்டு அவன் சாப்படறத அன்போட பார்ப்பாள். ஒரு சமயம் ஞானத்திற்கும் அவங்கவீட்டுகாருக்கும் வாய்தகராறு எல்லாவீட்டிலேயும் உள்ளததுதான் அன்னிக்கு என்ன நெனப்பல இருந்தாரோ தெரியல சட்டுன கைநீட்டிட்டார்.அவ்வளவுதான் இது பாத்த ரங்கா பாஞ்சிப்போய் அவரோடகைய கவ்விட்டான்.தன்னோடஅம்மாவுக்கு ஆபத்து அப்படின்னா சும்மா இருப்பானா அந்தச்சுட்டிப்பய. ஒரு நிமிஷம் அப்படியே ஆடிபோய்ட்டார்.அப்புறம் சுதாரித்து கைய உதறினார்.ரங்கா உறுமலோட இதுக்கு மேல எங்கம்மாவ தொட்டுப்பாருன்னு சவால் விடறா மாதிரி நெட்டு கிட்டு நின்னுக்கிட்டு இருந்தான். ஞானம்மா “டேய் ரங்கா வெளிய போடா அப்படின்னு ஒரு அதட்டல் போட்டா அவ்வளவுதான் ரங்கா முனகலோட ஆனா அவங்க வீட்டுக்காரர் ஒரு முறைப்போட பாத்தமாதிரி சத்தமில்லாம அவன் இடத்துலே போய் படுத்து கிட்டான்.அம்மா வருவாங்க தன்ன வழக்கம்போல வருடி கொடுத்து சாப்பாடு போடுவாங்கன்னு நெனச்சது வீணா போனது.ஞானத்தம்மா கண்ணீரோடு போய் படுத்துட்டாங்க.ரங்கா இரண்டு தடவ சத்தம் போட்டு பாத்தான், பிறவு ரேணு தான் சோறுபோட்டா ஆனா ரங்கா தொடல.அவன் மட்டுந்தானா அவனோட அம்மாவுந்தான்.
பத்து மாசம் சொமந்த பிள்ளைகளே ஆணும் பெண்ணும் இரண்டுமே சொத்த பிடுங்கறத்துக்கும்,காவயிறு கஞ்சூத்த மனசில்லாம திரியின் இந்த கேடு கெட்ட உலகத்துல தானா வலிய வந்து பாச மழை பொழியற இந்த ஜிவன் எங்கே…
இப்பிடி ஏதேதோ நெனச்சிகிட்டே ஞானம் தூங்கி போய்டாங்க… ஆனா ரங்கா கண்கொட்டாம இருந்தான்.அடுத்த நாள் ரேணு பள்ளிகூடத்திலிருந்து வந்ததும் அம்மாவ தேடினா எங்கேயும் காணல அவளுக்கு பக்ன்னு இருந்திச்சு. அப்புறம் கொல்லப்பக்கம் போய்பாத்தா அங்க வாழ மரத்து கிட்ட ரங்காவ அனணச்சா மாதிரி அவனுக்கு சோறு ஊட்டிக்கிட்டு இருந்தா.ரங்காவுக்கு ஒரே குஷி ரேணுவை பாத்த உடனே வேகமா வாலாட்டினான். அவனோட மைண்ட் வாய்ஸ் “பாத்திய நாதான் அம்மா செல்லம்” அப்படின்னு சொல்லாம சொன்னான்.ரேணுவுக்கு ஒரே வியப்பு.அம்மாவுக்குள்ள இத்தனை அன்பு உண்டா என்று நினைத்தவாறு வீட்டினுள் போனாள். அன்றுதான் ஞானத்தம்மா தனக்கென்று ஓர் அன்புலகத்தை உருவாக்கினாள்.
இப்படி நாளு வேகமா கடந்து போச்சு. ரங்கா தான் அந்த வீட்டுக்கு எல்லாம்ன்னு இருக்கிற சமயத்துல நம்ம கிறுக்கு பயக சும்மா இருப்பானுகளா? ரங்கா இரண்டு நாளா சாப்பிடல அம்மாவையே ஏக்கத்தோடு சோர்வா பாத்துகிட்டு இருந்தான்.ஆன கண்ணுல மட்டும் ஒரு சோகம்.ஞானம் பதறித்தான் போனா.
“பாவிப்பயலுக எம் மகன் வாய கட்டிடானுகளே” அப்படின்னு புலம்பினா.அவளுக்கு கையும் ஓடல காலும் ஓடல.ரங்காவ மடில போட்டு அவனுக்கு பிடிச்ச பால் சோறு, பிஸ்கட் குடுத்து பாத்தா ஒன்னும் கதைக்காகல.
பக்கத்துல உள்ள மாட்டாஸ்பத்திரி டாக்டர் வந்தாரு, உசுரு போய்டிச்சுன்னு போய்ட்டாரு.ஞானம் மட்டும் நம்பிக்கையா இருந்தா. ஆனா படைச்சவன் வேற திட்டம் போட்டான்.ரங்கா அந்த மனுஷிய தவிக்க விட்டு போய்ட்டான்.பிறவு நாங்கெல்லாம் சேர்ந்து வாழ மரத்துகிட்ட விபுதி,உப்பு எல்லாம் நிரப்பி குழியில பொதச்சோம்.அதுக்கப்புறம் அந்த மனுஷி யாரோடையும் பேசல.தன்னோட ரங்கவோட மட்டும் பேசுவா.ஆன வீட்டு வேல மட்டும் செய்வா அதுவும் ரங்காவோட பேசிகிட்டும் கொஞ்சி கிட்டும்.இப்படி இருக்கையில ஒரு நா அந்த வீணாப்போன சாமிநாதப்பய தாடியோட அலங்கோலமா வந்து சேர்ந்தான். ஏதோ சென்னையில வேல பாத்தானாம். திடீர்னு கம்பெனி நட்டத்துல போனதால இவனுக்கு வேல போய்டுச்சாம் அப்படின்னு ஏதோ அவன் அப்பாகிட்ட சொல்லிகிட்டிருந்தான்.அப்பாவுக்கும்,ரேணுவுக்கும் சந்தோசம். ஆனா ஞானம் மட்டும், தான் பத்து மாசம் பெத்த மகன கணடுக்கல. அவன் வேத்து மனுஷன் போல வெறிக்க பாத்தா.அந்த பார்வையில ஓராயிரம் அர்த்தம் இருந்திச்சி.இப்ப அந்த மனுஷிக்கு புத்தியில கோளாறுன்னு இரயில்வே காலனி முழக்கப் பேச்சு. ஒரு நாள்அந்த ஞானத்தோட வீட்டுக்காரர் ரிட்டையராகிட்டார்.அப்ப ரேணு ப்ளஸ் டூ படிச்சிகிட்டிருந்தா அவங்க குவார்ட்ஸ காலி பண்ணிகிட்டு இரயில்வே தண்டாவாளம் பக்கத்துல உள்ள சிவாஜி நகருக்கு போயிட்டாங்க. அந்த மனுஷிக்கு தோணும் போது, இரயில்வே தண்டவாளத்த தாண்டி இங்கிட்டு குவாடர்ஸுக்கு வந்து, வாழமரத்தாண்ட தனக்கு தானே ரங்காவோட பேசி சிரிச்சிகிட்டிருப்பா.நேரமாயிடும் பிறவ நாங்க அவ வீட்டுக்கு கொண்டு போய் விடுவோம். ஒரு நா விபரீதம் நடந்து போச்சு.அந்த ஐயா வீட்டுல அசந்த போது, ஞானம் வெளிய கிளம்பிட்டா .வேற எங்க ? ரங்கவோட பேசத்தான்.சாமிப்பய வேலக்கு போயிட்டான்.ரேணு ஸ்கூலுக்கு போய்ட்டா. அது பகல் நேரம் சன்ட்டிங் இன்ஜின் அப்படி இப்படி போயி கிட்ட இருந்திச்சி இவ அத பாக்காம தண்டவாளத்த தாண்டினா ஒரு தட்டு தான், பிறவு என்ன ? அப்படியே பின் மண்ட தண்டவாளத்து பக்கத்துல உள்ள ஜல்லில மோதி உசுறு போய்டிச்சு.
அப்புறம் அவளுக்கு பல விசயம் முடிஞ்சு வீட்ல போய் கிடத்தினாங்க. மொகத்துல இது வர இல்லாத அமைதி.
இப்ப இருப்பத்தஞ்சு வருசம் கழிச்சு என் பிரெண்ட் ஆனந்த (பள்ளிகூடத்துக்கு மட்டம் போடற பய )பாத்து பேசிக்கிட்டு இருந்தப்ப அவன் சொன்னான் “டேய் அன்னிக்கு ஞானத்தம்மா தண்டவாளத்தல விழுந்து கிடந்தப்ப ஒரு வெள்ள நாய் குட்டி அவள சுத்தி சுத்தி வந்திச்சி நாங்க விரட்டி விட்டுட்டோம்…”
இத காதுல கேட்ட போது எனக்கு என்னவோ போல ஆயிடிச்சு…..
மனசு கனத்து போச்சு
அந்த நாய் குட்டி அவளுக்கு மகன் தானே.
ஆறறிவு உள்ளவன காட்டிலும் இந்த ஜீவனுக்கு அம்மாவாக இருப்பது ஒரு வரம்….
உறவுகள் இன்னும் உலர்ந்து போகல அப்படின்னு ஒரு நம்பிக்கைய வெதச்சிட்டு போயிட்டா அந்தத் தாய்.
ஆசிரியர் குறிப்பு
இரம.முரளி (61 வயது)
மத்திய அரசின் ஊடகப் பிரிவில் பணியாற்றி உதவி இயக்குநராக பணி நிறைவு பெற்றவர்.
ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
ஒலி மற்றும் ஒளி ஊடகங்களுக்கு எழுதிய அனுபவம் உண்டு.
ஆனால் அச்சு ஊடகத்தில் இதுவே முதல் முறை.
சிறந்த காந்தி சிந்தனைகள் குறித்து ஒலிபரப்பியதற்கு விருது வழங்கப்பட்டது.
தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் பிரஞ்சு மொழிகள் அறிந்தவர்.

One Comment on “ஸ்ரீரங்கம் இரம.முரளி/தாய்மை”
Comments are closed.