கே.ஆனந்தன்/குருஷேத்திரம்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 48

“என்ன முடிவு பண்ணிருக்கீங்க?..” எதிரில் அமர்ந்து இருந்தவன் கேட்டான்.தும்பை பூ வெள்ளையில் வேட்டி,சட்டை.உயரம்..உயரத்துக்கேற்ற உடல்வாகு.மேலே துண்டு.கழுத்தில் பத்து பவுனில் தடிமனான செயின்.கையின் அனைத்து விரல்களிலும் தலா ஒரு பவுனில் மோதிரம்.கட்சியின் ஒன்றிய செயலாளர்.சுற்றி ஏழெட்டு அடிப்பொடிகள்..
“கவர்ன்மென்ட் அனுமதிச்ச அளவுக்கு மீறி ஆற்றுல மணலை அள்ளி இருக்கீங்க.அதனாலதான் உங்க பர்மிட்டை ரத்து பண்ணி இருக்கேன்.மணல் அள்ளிக்கிட்டு இருந்த உங்களோட அம்பது லாரிகளையும் பிடிச்சுட்டு வந்திருக்கேன்.ஒரு தாசில்தாரா என்னோட வேலையை நான் சரியாத்தான் பண்ணி இருக்கேன்.”என்றேன்.
“ஓகே சார்.ஏதோ நடந்துடுச்சி.திரும்பவும் எனக்கு அனுமதி தரணும்.வண்டியை ரிலீஸ் பண்ணணும்.”
“கேஸ் நடக்கும்.கோர்ட்ல உங்க பக்கம் தீர்ப்பாச்சுனா எல்லாம் திரும்ப கிடைக்கும்..”
அந்த ஆளின் முகம் கோபத்தில் சற்றே சிவந்தது.
“கேஸா?..எனக்கேவா..கோர்ட்,கேஸ்னு அலைஞ்சா எத்தனை வருஷம் ஆகும்?.அது வரை வருமான இழப்பை எவன் தருவான்?.நீங்க நினைச்சா பண்ணலாம்னு தெரியும்.நீங்க நடவடிக்கை எடுத்து ரெண்டு நாள்தான் ஆகுது.நீங்க கேன்சல் பண்ண மணல் அள்ளற அனுமதியை திரும்ப எனக்கே தரணும்.வண்டியையும் விடச் சொல்லுங்க.”
“ஸாரி சார்.அதெல்லாம் என்னால முடியாது.”
“என்னாது முடியாதா?.அண்ணன் யார்னு தெரியுமா?..” எகிறியது ஒரு அடிப்பொடி..”
“டேய் சும்மா இர்றா.” இவனை அடக்கிய ஒன்றியம் ” வேணாம் சார்.ஆறு வருஷமா நாங்க இங்க அள்ளிக்கிட்டு இருக்கோம்.யாருக்கும் இல்லாத அக்கறை உங்களுக்கென்ன வந்தது?..சரி.சரி.நடந்தது நடந்துடுச்சி.ஓகே.நேரடியா விஷயத்துக்கு வரேன்.இதுக்கு என்ன எதிர்பார்க்கறீங்க?.பணம்?.பொருள்?.புரமோஷன்?.இல்ல வேற ஏதாவது?.என்ன வேணும் சொல்லுங்க..”
அவன் பேச பேச டென்ஷன் ஆனது எனக்கு..
“வில் யூ ப்ளீஸ் ஷட்டப்?.நீங்க பண்ணது அரசுக்கு,மக்களுக்கு எதிரான குற்றம்.அதுக்கு நடவடிக்கை எடுத்துருக்கேன்.என்னை விலைக்கு வாங்கப் பாக்கறீங்களா?.ஒரு தாசில்தாரா மக்களுக்கு நல்லது பண்ணத்தான் இங்க வந்து உட்கார்ந்திருக்கேன்.என் கடைமையை செய்ய விடாம ஏன் தடுக்கறீங்க?..”
“இதெல்லாம் நாங்க மேடையில பேசுனா கை தட்டுவாங்க சார்.நாங்க பேச வேண்டிய வசனம் இது.இப்போ ஃபைனலா என்ன சொல்றீங்க?.விட முடியுமா?.முடியாதா?..”
“முடியாதுங்க.” உறுதியாக சொன்னேன்.
“ஒரு ஆளும் கட்சி ஒன்றிய செயலாளர் நான்.நான் சொல்லியே கேக்க மாட்டேங்கறீங்க.இதோட பின் விளைவு எப்படி இருக்கும் தெரியுமா சார்?..”
“என்ன மிரட்டறீங்களா?.இதுக்கெல்லாம் பயப்படற ஆள் நான் இல்லை சார்.உங்களால என்னை என்ன பண்ண முடியும்?.நான் எல்லாத்துக்கும் தயாராத்தான் இருக்கேன்..”
“பார்த்தா சின்ன வயசா இருக்கீங்க.இள ரத்தம்ல.அதான் இப்படி பேசறீங்க.எங்க அனுபவத்துல உங்க மாதிரி எத்தன பேர பார்த்துருப்போம்?.இன்னும் ரெண்டு நாள் டைம் தர்றேன்.யோசிச்சு முடிவு பண்ணுங்க.டேய் வாங்கடா..” அவன் முன்னே செல்ல பின் சென்றது அடிப்பொடிகள் கூட்டம்.
வீட்டில் அப்பா செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு இருந்தார்.மனைவி விமலா சமையல் கட்டில் இருக்க,ஒரே மகன் அகிலாஷ் விளையாடிக் கொண்டிருந்தான்.நடந்த எல்லாமும் அப்பாவிடம் சொல்ல வேண்டும்.
அப்பாவிடம் இது வரை நான் எதையும் மறைத்தது இல்லை.எங்கள் இடையேயான உறவு எப்போதும் அப்பா மகன் உறவு போல இருக்காது.ஒரு நல்ல நண்பனை போலத்தான் என்னை நடத்துவார்.மனம் சஞ்சலமாகவோ,வருத்தமாகவோ,கவலையாகவோ,டென்ஷனாகவோ இருக்கும் சமயங்களில் நான் எல்லாவற்றையும் அப்பாவிடம் பகிர்ந்து கொள்வேன்.அதிசயமாக எல்லாவற்றிற்கும் அவரிடம் தீர்வு இருக்கும்.அவரிடம் பேசிய பிறகு மனது கண்ணாடி போல இருக்கும்.
என் அறைக்கு வந்தவர்,” என்னப்பா முகம் ஒரு மாதிரியா இருக்கே.ஏதாச்சும் பிரசினையா?..” என்னை படித்தவராய் கேட்டார்.
“ஆமாப்பா.நானே உங்க கிட்ட பேசணும்னு இருந்தேன்..”என்றவன் ஆபீசில் நடந்த எல்லாவற்றையும் சொன்னேன்.
“நீ செஞ்சதுதாம்பா கரெக்ட்.நாட்ல இவனை மாதிரி அரசியல்வாதிங்க எத்தனை ஆறுகளை,நீர் நிலைகளை ஒழிச்சுட்டாங்க தெரியுமா?.போதாததுக்கு ஆக்கிரமிப்பு வேற..”
“மிரட்டற மாதிரி பேசறாம்பா.என்ன தைரியம் இருக்கணும்?.”
“இவனுங்க அப்படித்தான் பேசுவாங்க.இதையெல்லாம் பார்த்து பயந்தா வேலை செய்ய முடியாதுப்பா.நீ மக்களுக்கு சேவை செய்யற பதவியில இருக்க.அப்போ இந்த மாதிரி மிரட்டல் எல்லாம் வரத்தான் செய்யும்.எதையும் கண்டுக்காதே.உன் பதவியை வச்சு மக்களுக்கு என்ன நல்லது பண்ண முடியும்னு மட்டும் யோசி.மனசாட்சியோட,நேர்மையா உன் வேலையை செய்.அது உன்னை காப்பாத்தும்.எக் காரணம் கொண்டும் மனசாட்சிக்கு விரோதமா,நேர்மையை கை விட்டு நடக்காதே..”
“அப்படிதாம்பா இருக்கேன்.”அப்பாவிடம் பேசியதில் டென்ஷன் போய் ஒரு தைரியமும்,தெளிவும் வந்திருந்தது.என்ன நடந்தாலும் சந்திக்கும் தைரியம் வந்திருந்தது.இதுதான் அப்பா..
இரண்டு நாட்கள் போயிருந்தது.ஏய ஃபைல் ஒன்றை புரட்டிக் கொண்டிருந்தபோது ப்யூன் எதிரில் வந்து நின்றார்.
“சார் அன்னைக்கு வந்திருந்தாரே அந்த ஒன்றிய செயலாளர்.உங்களை பார்க்கணும்னு வந்திருக்கார்..” என்றார்
“வரச் சொல்லுங்க..” சொன்னவன் பார்த்துக் கொண்டிருந்த ஃபைலை மூடி வைத்துவிட்டு உட்கார்ந்திருந்தேன்.உள்ளே வந்தது கூட்டம்.
“வணக்கம் சார்..”
“வணக்கம் ..உட்காருங்க..”எதிரே இருந்த சேரை காட்டினேன்.
“நேரா விஷயத்துக்கே வர்றேன்.என்ன முடிவு பண்ணிருக்கீங்க?..” கால் மேல் கால் போட்டுக்கொண்டு அதிகார தோரணையுடன் கேட்டான்.
“அதான் அன்னைக்கே சொன்னேனே..முடியாதுன்னு ..”
“நல்லா யோசிச்சுதான் சொல்றீங்களா?..”
“ஆமா.”
“பின் விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும் தாசில்தார் சார்..”
“எதுக்கும் நான் தயார்.என்ன பண்ண முடியும் உங்களால?.என்னை மிரட்ட முடியாது..”
“அப்படியா?.. ஒரு நிமிஷம்..” என்றவன் செல்லை எடுத்து ஏதோ நம்பரை அழுத்தினான்.முகத்தில் அவ்வளவு பணிவு.
“ஆமாம்ணே.நான்தான் வஜ்ரவேல் பேசறேன். ஆமாம்ணே..ஆமாம்ணே..அவரேதான்..நானும் ரெண்டு நாளா எவ்வளவோ கேக்கறேன்.செய்ய மாட்டேங்கறார்.ஆமாம்ணே..சரிண்ணே..சரிண்ணே..”எதிர் முனையில் லோக்கல் அமைச்சர் போல..அந்த பணிவே சொன்னது.
“இந்தாங்க சார்..பேசுங்க..” செல்லை வாங்கினேன்.அதற்குள் செல் மினிஸ்டர் கையில் இருந்து அவரின் பி.ஏ.கைக்கு மாறி இருந்தது.
“என்ன சார் பிரசினை?..”
“அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மீறி இவர் ஆற்றுல இருந்து மணல் எடுக்கறார் சார்.இப்படி எடுத்தா ஆறு மலடாயிடும்.நாம நம்ம வருங்கால சந்ததியினருக்கு ஆறு மாதிரி இயற்கை வளங்களை பாதுகாத்து கொடுக்க வேண்டிய கடைமை இருக்குதான?.இவரை விட்டா எல்லாத்தையும் அழிச்சுடுவார்.ஒரு மக்கள் சேவகனா என் மனசாட்சி,நேர்மையை விட்டுட்டு என்னால வேலை செய்ய முடியாது சார்..”
“பாருங்க.நீங்க நேர்மையா இருங்க அது பிரசினை இல்லை.இந்த விஷயத்துல அவருக்கு ஃபேவரா நீங்க நடந்துக்கணும்னு மினிஸ்டர் ஆசைப்பறார்.அந்த ஒன்றிய செயலாளர் சொல்ற மாதிரி பண்ணி கொடுங்க..”
“ஸாரி சார்..சட்டத்துக்கு புறம்பாகவும்,மனசாட்சிக்கு விரோதமாகவும் என்னால செய்ய முடியாது.நீங்க சொல்ற மாதிரி பண்ணா என் மனசாட்சியே என்னை கொன்னுடும்..”
“என்ன பேசறீங்க சுதாகரன்.மினிஸ்டர் சொல்லச் சொன்னார்..”
“யார் சொன்னாலும் என் முடிவு இதான் சார்.ஸாரி..”செல்லை கட் செய்தேன்.ஒன்றிய செயலாளர் முகத்தில் எள்ளும்,கொள்ளும் வெடித்தன.
“மினிஸ்டர் சொல்லியே கேக்க மாட்டேங்கற இல்ல.பார்த்துக்கறேன்..” உறுமினான் கோபமாக..
“போங்கய்யா..”
ஒரு வாரம் அமைதியாய் போயிருக்க,அன்று வழக்கம் போல அதிகாலை ஐந்து மணிக்கு வாக்கிங் கிளம்பினேன்.விடிந்தும்,விடியாத பொழுது அரை இருட்டாய் இருந்தது.அரை மணி நேரம் நடந்து இருப்பேன்.எதிரே வந்து நின்ற இரண்டு கார்களில் இருந்து ‘ திமு,திமு,’ வென வந்து இறங்கிய நபர்களால் கடத்தப்பட்டேன்.அரை மணி நேரம் கழித்து நின்ற காரில் இருந்து நான் இறக்கப்பட்ட இடம் எந்த ஏரியாவென தெரியவில்லை.கண்ணை கட்டி இருந்தார்கள்.ஐந்து நிமிடம் நடத்தி செல்லப்பட்ட பின் கண் கட்டு அவிழ்க்கப்பட்டு அந்த ஒதுக்குப்புறமான வீட்டில் எனக்கு முன் நான் பார்த்தது அந்த ஒன்றிய செயலாளரை.’அடப்பாவி.உன் வேலையா இது?..அதிர்ச்சியுடன் கோபமும் வந்தது.
“வாங்க சார்.இப்படி நடந்துக்கிட்டதுக்கு மொதல்ல என்னை மன்னிச்சுடுங்க.வேற வழி இல்லை.கடைசியா கேக்கறேன்.நான் கேட்டதை உங்களால பண்ண முடியுமா?..முடியாதா?.” பேச்சில் நக்கல்.
“முடியாது.உன்னால என்ன பண்ண முடியும்?..ட்ரான்ஸ்ஃபர்தான?..பண்ணிக்கோ..”கோபமாக சொன்னேன்.
“டிரான்ஸ்ஃபர்தான்.ஆனா உங்களுக்கில்ல.உங்க மனைவிக்கு.PWD ல சூப்பிரென்டென்ட்தான அவங்க?.பேரு விமலா.சரியா?.உங்கள டிரான்ஸ்ஃபர் பண்ணா ராஜா மாதிரி போயிட்டு ஜாலியா இருந்துட்டு வந்துடுவீங்க.உங்க மனைவியை டிரான்ஸ்ஃபர் பண்ணா..அதுவும் ராமநாதபுரத்துக்கோ,கன்னியாகுமாரிக்கோ.உங்கள விட்டுட்டு அவ்வளவு தூரம் தனியா போய் அவங்களால இருக்க முடியுமா?.இல்ல நாங்கதான் இருக்க விட்ருவமா?.யோசிங்க.இது ஃபர்ஸ்ட்.இதுக்கும் நீங்க மசியலைனா,உங்க மனைவிக்கே தெரியாம அவங்க டேபிள்ல பணத்தை வச்சுட்டு,லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை விட்டு செக் செய்ய சொல்வோம்.ஏதாவது ஒரு கான்ட்ராக்டரை பிடிச்சு உங்க மனைவி லஞ்சம் கேட்டதா பொய் சொல்ல சொல்வோம்.அப்புறம் உங்க மனைவி அரெஸ்ட், பேப்பர்ல பெரிசா நியூஸ்,அவமானம் இதெல்லாம் தேவையா யோசிங்க.நாங்க ஆளும் கட்சி.என்ன வேணும்னா செய்ய முடியும்.”அவன் சொல்ல சொல்ல திக்கென்று நிமிர்த்தேன்.கண்களில் தெரிந்த உறுதி ..இவன் என்ன வேண்டுமானாலும் செய்வான்.
‘அடப்பாவி.நேர்மையாக கடைமையை செய்ததற்கு தண்டணையா?.உண்மையாய்,எதற்பும் வளைந்து கொடுக்காமல் இருப்பவனுக்கு இதுதான் பரிசா?.நேர்மைக்கும்,உண்மைக்கும்,நியாயத்துக்கும் மரியாதையே இல்லையா?.’ வெறுப்புடன் அவனை பார்த்தேன்.
“சார் யோசிக்க ஆரம்பிச்சிட்டார் போங்கடா.அவரை யோசிக்க விடுங்க.”
“இப்போ நான் என்ன செய்யணும்?..”
“அது..நான் கேட்டதை எல்லாம் செஞ்சு கொடுத்து அந்த ஃபைல்ல ஒரு கையெழுத்து போட்டா போதும்..”
“சரி.இன்னைக்கு மதியம் வாங்க.” என்றேன்.
“அண்ணே ..இன்னைக்கு வேணாம்.நாள் சரியில்ல.நாளைக்கு நிறைஞ்ச அமாவாச..நல்ல நாள்.நாளைக்கு போட சொல்லுங்க..” என்றான் ஒரு அடிப்பொடி.
“அப்படியா.சரி..அப்டியே பண்ணிடுவோம்..” என்றவன் என்னைப் பார்த்து,
“சாருக்கு என்ன பத்தி நல்லா தெரியும்.போலீஸ் அது,இதுனு எதுனா யோசிச்சிங்க அப்புறம் ட்ரான்ஸ்ஃபர் ராமநாதபுரத்துக்கு இல்லை..மேலதான்..டேய்..சார பத்திரமா கூட்டிட்டு போய் எங்க ஏத்தினமோ அங்கயே எறக்கி விட்டுட்டு வாங்கடா..”என்றான்..
அப்பா முன் அமர்ந்திருந்தேன்.”எனக்கு வேற வழி தெரியலைப்பா.அவன் என்னை என்ன டார்ச்சர் பண்ணி இருந்தாலும் நான் தாங்கிட்டு இருப்பேன்.விமலாவை ட்ரான்ஸ்பர் பண்ணப் போறதா சொல்றான்.பொய் கேஸ் போட்டு அவமானப்படுத்தப் போறதா சொல்றான்.எவ்வளவு அவமானம் விமலாவுக்கு?.அப்புறம் அவளை உயிரோட பார்க்க முடியுமா?.எங்க அடிச்சா, எங்க அடிச்சா எங்க வலிக்கும்னு அவன் தெரிஞ்சு அடிக்கறான்.என்னை மன்னிச்சிடுங்கப்பா.அவன் கேட்டத எல்லாம் செஞ்சி கொடுக்கறதா சொல்லிட்டேன்.நான் தோத்துட்டேன்.நேர்மை,தர்மம்,பொது நலம் தோத்துடுச்சி..”கண்களில் கண்ணீர் வர சொன்ன என்னை பரிதாபமாக பார்க்க மட்டுமே முடிந்தது அப்பாவால்..
மாலை.ஆபீஸ் முடிந்து வந்து முகம் கழுவி அமர்ந்தவனிடம் வந்தான் மகன் அகிலாஷ்.”அப்பா.இன்னைக்கு தாத்தா மகாபாரத கதை சொன்னார்.நல்லவங்களான பாண்டவர்களுக்கும்,கெட்டவங்களான கௌரவர்களுக்கும் மத்தில போர் நடக்குதாம்.தர்மம் பாண்டவர் பக்கம் இருந்ததாம்.நிறைய பேர் இருந்தும் கௌரவர்கள் தோத்துட்டாங்களாம்.பாண்டவர்கள் ஜெயிச்சிட்டாங்களாம்.போர் முடிஞ்சி போச்சாம்..” என்றான்.எதிரில் அப்பாவும் இருந்தார்.
“இல்லைடா கண்ணா.குருஷேத்திரம் இன்னும் முடியல.இப்பவும் நடந்துகிட்டுதான் இருக்கு.ஒவ்வொருத்தர் வாழ்க்கைலயும் வேற வேற வடிவத்துல,வேற வேற முறையில,வேற வேற வழியில.இந்த நவீன குருஷேத்திரத்துல என்னதான் போராடினாலும் தர்மம் பக்கம் நிக்கற பாண்டவர்களால ஜெயிக்க முடியறதில்ல.”மனது வெம்பிப் போய் நான் சொல்லிக் கொண்டிருக்க செல் ஒலித்தது.பரந்தாமன் பேசினார்.
“சார்.விஷயம் தெரியுமா?.நம்மை மிரட்டினானே அந்த ஒன்றிய செயலாளர்.அவன் குரூப்போட காலி சார்.மோசமான ஆக்சிடென்ட்.ஏதோ மீட்டிங்னு அவனும்,குரூப்பும் கார்ல போய் இருக்காங்க.எதிர்ல வந்த லாரிக்காரன் மோதிட்டான்.கார்ல இருந்த எட்டு பேரும் ஸ்பாட் அவுட்.இப்பதான் நியூஸ் வந்தது.”அவர் சொல்ல,சொல்ல அதிர்ச்சியாக இருந்தாலும், ஏனோ இனம் புரியாத நிம்மதியும்,மகிழ்ச்சியும் மனதில் பரவ ஆரம்பித்தது.செல்லை கட் செய்தவன்,அப்பாவிடம் விஷயம் சொன்னேன்.
“குருஷேத்ரம்தான்பா..அதுல மட்டுமில்ல.எந்த போர்லயுமே தர்மமும்,நீதியும்,உண்மையும் தோத்ததா சரித்திரம் இல்ல சுதாகரா.அப்டியே சில சமயம் ஜெயிச்சாலும் ரொம்ப நாள் நீடிக்காது.ஒப்புக்கறியா?..” என்றார்.
”சரிதான்பா..” என்றேன் ..

ஆசிரியர் குறிப்பு

47 வயது.
ஒசூரில் கம்பெனி ஒன்றில் மேலாளர் பணி. கூக்கடப்பட்டி. தருமபுரி மாவட்டம்.
இதுவரை எழுதியவை :500 க்கும் மேற்பட்ட ஒரு பக்க கதைகள் & 200 க்கும் அதிகமான சிறுகதைகள்,10 நாவல்கள்

ஸ்ரீரங்கம் இரம.முரளி/தாய்மை – விருட்சம் நாளிதழ்

One Comment on “கே.ஆனந்தன்/குருஷேத்திரம்”

Comments are closed.